05 February 2017

பவானி ஜமக்காளங்கள்


கோவில் திருவிழாக்கள் பற்றி பெரியவர்கள் கலந்தாலோசிக்கும் பேச்சு வார்த்தைகள், திருமண வீடுகளில் தாம்பூல தட்டுகள் மாற்றும் நிகழ்வுகள், நாட்டாமைகள் அமர்ந்து தீர்ப்பு சொல்லும் ஆலமர பஞ்சாயத்துகள், பூப்பு நன்னீராட்டு விழா வளைகாப்பு விழாக்களில் தட்டுகள் நிறைந்திருக்கும் பரந்த இடம், விசேச வீடுகளில் பந்தியில் அமரும் இடமென எல்லா இடங்களையும் இன்னும் இன்னும் அழகாய் அலங்கரிக்கின்றன பவானி ஜமக்காளங்கள்.

ஜமக்காளங்கள் எங்கள் ஊரின் மிகப்பெரிய அடையாளம். எங்களூரில் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரங்களில் பல ஊர்களிலும் அதை தயாரிக்கிறார்கள். ஏறக்குறைய எல்லா தெருக்களிலும் வகை வகையான ஜமக்காளங்கள் நெய்யும் தறிப்பட்டறைகள் இருக்கும், எல்லா வீடுகளிலும் வகை வகையான ஜமக்காளங்கள் இருக்கும். ஜமக்காளம் எங்கள் அடையாளம் மட்டுமல்ல அது எங்கள் வாழ்வோடும் வாழ்வாதாரத்தோடும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வேர் மறந்த வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்புடையது.

எங்கள் ஒட்டுமொத்த வாழ்வின் முதல் பட்டதாரியாக அண்ணனை உருவாக்கியதில் இந்த ஜமக்காள நெசவுக்கு முக்கிய பங்குண்டு. அம்மா பிறந்த ஊரில் ஐந்து வயதிலேயே வேலைக்கு சேர்க்கப்பட்டவர். பதினைந்து வயதில் பவானிக்கு வந்தவர் வெவ்வேறு வேலைகள் செய்து ஜமக்காளம் நெய்வதில் நிலைத்து நின்றவர். எங்கள் சிறு வயதில் அம்மா பல்வேறு பட்டறைகளில் வேலை செய்திருக்கிறார் அதன் மூலமாகவே எங்களை பட்டதாரிகளாகவும் ஆக்கினார்.

சீனாமுதலியார் கொட்டாய் (நெசவு பட்டறை), திருவேணி கொட்டாய், பழனியம்மாள் கொட்டாய், அலமேலு கொட்டாய் , அருணகிரி குமரேசன் கொட்டாய், கந்தன்கடை, கோபால் கொட்டாய் என பல இடங்களில் வேலை செய்தவர் கடைசி எட்டு வருடங்கள் சொந்தமாக தறி போட்டு ஜமக்காள சேம்பல் தடுக்கு நெய்தார். சேம்பல் தடுக்கு, சதுரம், சர்கோடு, பந்திபாய், நடுத்தரம், கட்டில் ஜமக்காளம், ஹால் கார்பெட், பட்டு ஜமக்காளம், டபுள் ஜக்கார்டு, உல்லன் ஜமக்காளம் என விதவிதமான வகைகளில், விதவிதமான அளவுகளில் நெய்யப்படும் ஜமக்காளங்கள் எத்தனையோ வகைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

ஒருவர், இருவர் மட்டுமல்லாமல் ஹால் கார்பெட் ஜமக்காளங்களை மூன்று பேர்வரை நெய்வார்கள், களைப்பு தெரியாமல் இருக்க யாரோ ஒருத்தர் பாடும் பாடல்களுக்கு தறியில் ஓடும் நாடாக்கள் இசையமைக்கும், கூடாரங்களில் தொட்டிலில் தூங்கும் குழந்தைகளுக்கு தறிச்சத்தமே தாலாட்டு பாடும். தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்திராத அந்த காலத்தில் தார் குச்சிகள் தான் எங்களின் விளையாட்டு பொருட்களாய் இருக்கும், ஒருபுறம் நீண்டிருக்கும் பாவு சுருங்க சுருங்க மறுபுறம் கலர் கலர் நூல்களால் ஜமக்காளம் உருவாகும். மழை பெய்த ஒரு மாலை வேளையில் கூடாரத்தின் ஓடுகளில் வழிந்த துளிகளை தீண்டியபடியே சூடாய் பஜ்ஜியும் தேநீரும் உள்ளிறங்கிய நிமிடங்கள் இன்னும் பசுமையாய் இருக்கின்றன. ஆயுதபூஜைக்கு அடுக்கிவைக்கும் நாடாக்களின் நடுவே தார் குச்சியில் செய்த எங்கள் பேனாக்களும் இடம்பிடிக்கும்.

பவானியின் பெரும்பாலான குடும்பங்களின் பின்புலம் நெசவினூடே பிணைந்திருக்கும், கடந்த தலைமுறையின் கால்கள் தறியின் மிதி பலகையை மிதித்ததினால் தான் இந்த தலைமுறையின் கைகள் கணினியின் விசைப்பலகையை தட்டிக்கொண்டிருக்கின்றன. தறியடித்து நெசவு செய்த கைகள்தான் இன்று தங்கள் மகன்களையும் மகள்களையும் பேனா பிடிக்கவும் மவுஸ் பிடிக்கவும் வைத்திருக்கின்றன. கடந்த தலைமுறை அப்பா அம்மாக்கள் தினக்கூலியாய் வாங்கி வரும் சொற்ப காசுகளில் தான் பெரும்பாலான குடும்பங்களின் தேவைகள் அரைகுரையாய் தீரும்.

படிப்பின் வாசனையறியாத நெசவாளிகளும் பாட்டாளிகளும் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் வேலைக்கு அனுப்பிவைத்து விட்டனர், நெசவில் தேய்ந்த கைகளைப்போலவே உலகப்புகழ் பெற்ற ஜமக்காள தொழிலும் தேயத்தொடங்கியுள்ளது. விவசாயம் போலவே இந்த தொழிலும் நலிவை சந்திக்கிறது, தங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே இந்த தொழிலையும் அதை நம்பியிருக்கும் தொழிலாளிகளையும், பவானியின் அடையாளத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அத்தனை அவசியமே.

பிளாஸ்டிக் பாய்களின் வரவுகள் ஜமக்காளங்களை சிதைத்தபோதும் இன்னும் தயாரிக்கும் முறையாலும் தரத்தாலும் பவானி ஜமக்காளங்கள் நிலைத்து நிற்கின்றன. எத்தனை விதமான மெத்தைகளில் தூங்கி எழுந்த போதும் ஜமக்காளங்கள் கொடுத்த உறக்கத்தை எந்த மெத்தையும் கொடுப்பதில்லை. மணமக்களின் பெயர் எழுதிய ஜமக்காளங்களை மணப்பெண்களுக்கு சீதனமாகவும் கொடுக்க தவறுவதில்லை. அது எங்களுக்கான அடையாளம் மட்டுமல்ல எங்கள் ஊருக்கான பெருமையும் கூட.


டிசம்பர் மாத மின் இதழ்-8

படைப்பு குழுமம் வெளியிட்ட
டிசம்பர் மாத மின் இதழ்-8 ல்
எனது கவிதையும்.
தேர்வுக்குழுவிற்கும் 
மிக அழகாய் வடிவமைத்த 
கமல் காளிதாஸிற்கும் அன்பும் நன்றிகளும்


கடவுளுக்கு உயிர் வந்தது

உடைந்து கிடந்த 
சாக்பீஸ் துண்டுகளால் 
தெருவோரத்தில் வரையத் தொடங்குகிறான் 
அவன் ஒரு கடவுளை

கையில் கடாயுதத்தோடு 
நிற்கும் கடவுளை
கைப்பேசியில் தற்படம் எடுப்பவர்கள் 

கவனமாய் தவிர்த்து விடுகிறார்கள் ஓவியனை

வேகமாய் விரைந்து செல்பவர்கள்
வீசிவிட்டு செல்கிறார்கள்
சில சில்லறைகளை

ஒரு வழியாய் கோடுகளால்
முடிவுக்கு வந்த கடவுள்
மகிழ்ச்சியில் உதிர்க்கிறார்
பெருமூச்சொன்றை

ஓவியத்தை கடக்கும் முன்
குழந்தை ஒன்று கையெடுத்து
கும்பிட்ட போதுதான் உயிர் வந்தது
கடவுளுக்கு ...!




உலக மூச்சி நின்னு போச்சி

இந்த பொங்கலில்
அப்படியொன்றும் சிறப்பில்லை
ஏறு பூட்டிய நிலத்தையெல்லாம்
கூறு போட்டு வித்தாச்சி 
வாங்கிய கடனுக்கு
வட்டி மடங்கு பத்தாச்சி
மழை, தண்ணி இல்லாம
வெள்ளாம நின்னாச்சி
விவசாயிங்க பலபேர
தற்கொலைன்னு கொன்னாச்சி
கரும்புக்கு கூலி கேட்டு
கால் கடுக்க நடந்தாச்சி
அடிக்கரும்பு கடிக்கும் வர
ருசி அப்படியே கொடுத்தாச்சி
ரேஷன் கார்டுக்கு
கூடுதல் தாள் ஒட்டியாச்சி
இலவச வேட்டி சேலையில
இப்பவே சாயம் போயிருச்சி
ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கி
என் இனமே எதிரியாச்சி
பலர் போராட வந்ததால
போன மூச்சி திரும்பியாச்சி
எங்க வீட்டு பொங்க பான
இந்த வருஷம் ஊமையாச்சி
நாங்க இழந்ததையெல்லாம் இனி
திருப்பி தரப்போவது எந்த ஆட்சி..?
பொங்கலுக்கு வாழ்த்துகளை
சொல்லி சொல்லி என்ன ஆச்சி
கடைசி உழவனும் செத்தான்னா
உலக மூச்சி நின்னு போச்சி :(



கசியும் கலர் பொடிகள்

பனி பொழியும் இரவில் 
தெருவடைத்து  
பெண்கள் போடும் கோலங்களை 
இன்னும் அழகாக்குகிறது 
குழந்தைகளின் விரல்களிலிருந்து 
கசியும் கலர் பொடிகள்

எல்லா வாசல்களையும்
நடந்து கடந்து விமர்சிக்கும் 
பெண்களால் நிறைகிறது
அர்த்த ராத்திரி வீதி

தூரத்தில் கேட்கும் சிரிப்பொலியில்
சிலிர்த்து புரள்கிறது
வெட்கத்தில் ஒரு கோலம்
காதலை கலக்கி
யாரோ ஒருத்தி போட்ட
கலர் கோலத்திலிருந்து
உயிர்ப்பெற்று நடக்கத் தொடங்குகிறது
ஒரு மயில்


கிளையிலிருந்து வேர்வரை

பள்ளிப் பருவத்தின் போது படிப்பின் மீது அத்தனை ஆர்வமிருக்கவில்லை ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் நாட்களைக்கடத்த பொசுக்கென படிப்போடான தொடர்பு துண்டித்துப்போக நீண்ட நாட்களுக்குப் பிறகு படிப்பின் நிறம் மணம் திடம் மூன்றும் விளங்கியது. சிப்ஸ் சாப்பிட்ட காகிதம் பொரி, போண்டா வாங்கி சாப்பிட்ட காகிதங்களில் உள்ள எழுத்துக்களை வாசிக்க தொடங்கிய போது எழுத்துக்களும் என்னை நேசிக்கத் தொடங்கியதாகவே நினைக்கிறேன்.
எழுத்துக்களின் மீதான நேசம் நிறைய வாசிக்க சொன்னது. வயதின் கோளாறு நிறைய காதல் சார்ந்தே வாசிக்க வைத்தது. வைரமுத்துவும் பா.விஜய்யும் காதலையும் தாண்டி சில விஷயங்களை வாசிக்க தந்தார்கள் அண்ணண் அறிவுமதி நட்பை வாசிக்க தந்தார். இப்படி பலதரப்பட்ட எழுத்தாளர்கள் சினிமாவின் பின்னணியில் இருந்தவர்கள் மிக எளிதாய் படிக்க கிடைத்தார்கள் இவர்களையெல்லாம் தேவ தூதர்களாக நினைத்து போதுதான் இதற்கு குறைவில்லாத சொல்லப்போனால் நிஜத்தை சுமந்து வரலாறாய் மாறிக்கொண்டிருக்கும் மனிதர்களை எழுத்துக்களின் வழியே எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் சில எழுத்தாளர்கள் அந்த வகையில்
#கதிர் அண்ணா மிக முக்கியமானவர்.

ஷான் அண்ணா,ராஜு முருகன், மாரி செல்வராஜ், கார்த்திக் புகழேந்தி, வக்கீல் பாலமுருகன் என இன்னும் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் எளிய மனிதர்களை பற்றி எழுத அவர்களை இன்னும் அழகாக்கி நம் முன் கொண்டுவந்த நிறுத்த.கதிர்அண்ணாவின் #கிளையிலிருந்துவேர்வரை படித்த போது ஒரு சிறந்த புத்தகத்தை படித்த ஆத்ம சந்தோசம் கிடைத்தது அத்தனை புதிய வார்த்தைகள் அத்தனை புதிய மனிதர்கள் அந்த புத்தகம் முழுவதும் நிரம்பி இருந்தார்கள்.

இதோ #கசியும் மெளனத்திலிருந்து
உருண்டு வந்த வார்தைகளால் ஒரு #பெயரிடப்படாதபுத்தகம்,
அன்பை, அழகியலை, வாழ்வை, நம்பிக்கையை சுமந்து பயணிக்கும் #உறவென்னும்திரைக்கதை என்னும் இந்த இரண்டு புத்தகங்கள் மனதின் ஆழத்தையும் வீட்டு புத்தக அலமாரியையும் அலங்கரிக்க போகின்றன. எத்தனையோ வெளியீட்டு விழாக்களுக்கு சென்றிருந்தாலும் இந்த புத்தக வெளியீட்டு விழா மிகுத்த ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களாக கதிர் அண்ணாவைப்பற்றிய நிறைய பதிவுகள் வாழ்த்துகள் முகநூல் போன்ற ஊடகங்களில் வருவதை பார்க்கும் சிலர் அப்படியென்ன பெரிதாக எழுதுகிறார் என நினைக்கலாம் அவர்கள் இவரின் எழுத்துக்களை ஒரு முறை வாசித்தால் அவர்களையும் வசியம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
இது தனிப்பட்ட முறையில் ஒருவரை புகழ்வதற்கல்ல, கால மாற்றத்தில் மறந்துபோன உறவுகளை பிரிந்துபோன காதலை தொடர முடியாத நட்பை மனதின் ஆழத்தில் புதைந்து போன சில முகங்களை ஒரு சொல்லில் ஒரு வரியில் மீட்டெடுத்து வந்து கண்முன் நிறுத்தும் ஒரு எழுத்தாளருக்கான ஒரு எளிய மனிதனுக்கான சிறு பாராட்டு அவ்வளவே.
எனக்குள் ஒரு கவிஞனோ எழுத்தாளனோ இருக்கிறான் என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியாது, எளிய மனிதர்களை அவர்களின் எழுத்துக்களை நேசிக்கும் தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகன் எப்போதும் இருக்கிறான். என் போன்ற வாசகர்களை கதிர் அண்ணா போன்றவர்கள் எப்போதும் திருப்திபடுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையோடு அள்ள அள்ள குறையாத அன்பையும் வாழ்த்துக்களையும் சொல்வதைத்தவிர வேறொன்றுமில்லை என்னிடம்.


வனாந்தரத்தின் திசை

அந்த வனாந்தரத்தின்
திசையெங்கும் வீசும் காற்றில்
பரவிக்கிடக்கிறது உன் வாசம்

மகரந்தப் பூக்களின் இதழ்களில்
ஒட்டியிருக்கும் சிவப்பு
உன் இதழ் பட்டு வந்தவைதாம்

உன் விரல்கள் தடவிப்போன 
மயக்கத்தில் ஊதா நிறப்பூவை 
உயிர்ப்பித்திருந்தது ஒரு கரும்பாறை

உன் முந்தானை பட்ட நொடியில்
பற்றி எரியத்தொடங்கியது
ஒரு பச்சை மரம்

மயிலொன்று நடந்து வருதென
ஓடி மறைந்தன
சில மான்குட்டிகள்

உன்னால் நிகழ்ந்த எல்லாவற்றையும் 
கண்டுபிடித்த போதுதான் உணர்ந்தேன்
நான் தொலைந்து போயிருந்ததை..!


பொம்மை

நீ
நொண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது 
சிதறிய உன் அழகையெல்லாம் அள்ளிவந்து 
பொம்மையொன்று செய்தேன்

நீ
கண்ணாமூச்சி ஆடும்போது உன்
கண்களில் கட்டிய துணியை 
அந்த பொம்மைக்கு ஆடையாக்கினேன்

நீ
பல்லாங்குழி விளையாடிய போது
குழிகளில் நிரம்பிய உன் வெட்கத்தை 
அந்த பொம்மைக்கும் ஊட்டி விட்டேன்

நீ
ஊஞ்சலாடிய மரத்தடியில்
விழுந்து கிடந்த உன் சிரிப்புகளை
கொலுசுகளாக்கி பொம்மைக்கு
மாட்டி விட்டேன்
உன்னுடைய எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டு நீயாகவே 
மாறிப்போயிருந்த அந்த பொம்மை

இப்போது
என்னை பொம்மையாக்கி
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ...!


நாட்காட்டியின் கடைசி தாள்

கிழித்து கசக்கி எறிய
காத்திருக்கிறது கூர் நிறைந்த
ஆணியில் அறையப்பட்ட
நாட்காட்டியின் கடைசி தாள்
கடிகாரத்தின் நொடிமுள் சுழற்சியில்
மெல்ல மெல்ல இறந்து
கொண்டிருக்கிறது நிகழ்காலம்
ஒரு வருடத்தையே
வழியனுப்பி வைக்க பரபரப்பாய்
ஓடிக் கடக்கின்றன
உலகின் கால்கள்
காயங்களை..., இழப்புகளை...,
சோகங்களை..,தோல்விகளை...
இந்த கடைசி பக்கத்தில்
எழுதிவிட்டு நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்
பிறக்கும் புத்தாண்டு சிறக்கும்...!


தராமல் போன முத்தங்கள்

மார்கழி மாதத்தின்
அதிகாலைக் குளிராய்
எங்கும் வியாபித்திருக்கிறாய்
நீ
இழுத்து போர்த்திக்கொள்ளும்
கம்பளியாய்
ஆவி பறக்க பருகும்
தேநீரின் குடுவையாய்
பருவம் தப்பிப் பொழியும்
மெல்லிய மழையாய்
உரசிய கைகளுக்குள்
உண்டாகும் இளம்சூடாய்
இருப்பதும் நீயேதான்
நீளும் கனவிலும்
விடியத்தொடங்கும் இரவிலும்
இன்னும் மிச்சமிருக்கிறது உறக்கம்
நீ தராமலே போன
முத்தங்களைப்போல ....!!!

தேவதைக் கதை

"ஒரு கதை சொல்றீங்களா?"
"ம்...ஒரு ஊர்ல ..."
"ஒரு பாட்டி வடை சுட்டாங்களா?"
"இல்ல ஒரு குட்டி தேவதை இருந்தாளாம்"
"ம்ம் அப்பறம்"
"அந்த தேவதை ரொம்ப குறும்பாம்"
"என்னைமாதிரியேவா ...?"
"ம்.. அந்த குட்டி தேவதையை எல்லாருக்குமே பிடிக்குமாம், அவளுக்கு சாக்லேட்டனா ரொம்ப பிடிக்குமாம், பிங்க் கலரும் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். ஸ்கூல் போய்ட்டுவந்து ரொம்ப சேட்டை பண்ணுமாம்"
"ஸ்கூலா ..? அந்த தேவதைக்கு யாரு பாடம் சொல்லித்தருவா?"
"இன்னொரு பெரிய தேவதை தான்"
"ஓ..அந்த குட்டி தேவதை வீடு எங்க இருக்கு?"
நிலவை வெட்டிய வெளிச்சத்தில்
நட்சத்திரங்கள் தலையிலிடிக்கும்
வானவில் திருப்பத்தில்
அன்புக்கூரை வேய்ந்த
சங்கீத படிகளை கொண்ட
அழகான முதல் மாடியில்
 சொல்லி முடிப்பதற்குள்...
தேவதைக் கதை கேட்டபடி
உறங்கிப்போனவளின்
விரிசல் விழாத கனவுகளில் சிறகு விரித்தபடி
சில தேவதைகள் வரக்கூடும்
அவள்தான் அந்த குட்டி தேவதையெனவும்
அது அவள் வீடுதானென்பதையும்
அவள் கனவுகளைக் காயப்படுத்தாமல்
 அவளுக்கு எப்படி புரியவைப்பது...?

பூ சுமக்கும் புன்னகை


நகரின் சாலையோர சாயங்காலத்தில்
நடைபாதையில் அமர்ந்து
பூ கட்டி விற்றுக்கொண்டிருந்தாள்
சிறுமியொருத்தி
மொட்டுவெடிக்கத் தொடங்கும்
தன் கவலைகளை விரலிடுக்கில் அடுக்கி
சுருக்கிக்கொண்டிருந்தாள் பூ கட்டும் கயிறால்
உடைகளில் தெரியும் வறுமையை
யாருக்கும் தெரியாமல் விரட்ட முனைகிறாள்
விற்கும் பூ வாசத்தால்
தன்னைக்கடக்கும் கால்களை நிராகரித்து
நீளக்கூந்தல்களை கவனிக்கிறாள்
பூவற்ற தலைகளை திருப்ப
பூப் பூவென கூவுகிறாள்
கூடை நிறைந்த பூக்களை
யாராவது வாங்கிவிடுவார்கள்
என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாள்
யாருமே விலைபேசிவிட முடியாத
தன் புன்னகையைச் சுமந்தபடி ...!!!

உதடுகளால் அடிக்கோடிடு

மொழிகள் தயாரித்த வார்த்தைகளை
கடன் வாங்கி கோர்க்கிறேன்
நீ கவிதையென ரசிக்கிறாய்

முற்றுப்புள்ளியில்
முடிந்துவிடுமென நினைத்தேன்
நீ முத்தம் வைத்து தொடர்கிறாய்

தலைகோதியதாய்
சிலிர்க்கிறது என் கவிதைகள்
நீ தொடுதிரையில்
தொட்டுத் தொட்டு படிப்பதால்

உனக்கு பிடித்த வார்த்தைகளை
உதடுகளால் அடிக்கோடிடு

பிடிக்காத வார்த்தைகளை
விரல்களால் தடவிக்கொடு...!!!