24 May 2020

இசை கசியும் கடிகாரம்


வாழ்க்கையின் அதீத ஓட்டத்தில் மனிதர்களோடு சேர்ந்து காலத்தைப்போலவே பொருட்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பொருட்களில்லாத வீட்டையும், வீடுகளற்ற பொருட்களையும் நினைத்துப் பார்க்கும் நேரங்களில் மனமெங்கும் வெறுமையின் பிசிபிசுப்பும் வறுமையின் கசப்புகளும் வந்து அப்பிக்கொள்கின்றன. வாசல் முதல் மாடிவரை, குடிசை முதல் கோட்டை வரை இடங்களை அடைத்துக்கொண்டு ஏதோவொன்றை தன்னுள்ளே வைத்திருக்கும் பொருட்களின் இருப்பு எல்லா வீடுகளிலும் தேவைகளைச் சுமந்தும் ஆடம்பரத்தை அணிந்தும் காட்சியளிக்கின்றன.

தேவைக்கென காசு கொடுத்து வாங்கிய காலங்கள் கடந்து இலவசமென வீட்டுக்குள் நுழைந்த பொருட்களும், வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பொருட்களும் கலந்தே இன்றைய வீடுகள் எல்லாவற்றையும் சுமக்கின்றன.
எண்பதுகளின் நடுவில் எங்கிருந்தோ வீதிகளுக்குள் வந்த அந்நிய மனிதர்கள் மக்களுக்கு தேவையான பொருட்களையும் அவர்களிடம் திணிப்பதற்கு தேவையற்ற ஆசைகளையும் கொண்டு வந்தார்கள். தவணை முறை திட்டத்தில் தேவையோ இல்லையோ பக்கத்து வீட்ல இருக்கு, எதிர்வீட்ல இருக்கு, மேல் வீட்ல இருக்கு நம்ம வீட்லயும் ஒன்னு கிடக்கட்டுமே என டேப் கட்டில், பிளாஸ்டிக் நாற்காலி, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், ரேடியோ பெட்டி, அடுப்பு என ஏதோ ஒன்றை வாங்கி வைப்பார்கள். வாரம் ஒருமுறை வந்து காசு வாங்கிக்கொண்டு போகும் அவர்கள் எல்லா பொருட்களையும் விற்ற பிறகு வேறு ஊருக்கு போய்விடுவார்கள். வாங்கிய பொருட்கள், வேறு ஒன்றை வாங்குமளவுக்கு போய்விடும்.

எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வந்திராத காலமொன்றில் எங்கள் வீட்டிலும் சிம்னி விளக்கு எரிந்திருக்கிறது. குட்டி சிம்னியில் மண்ணெண்ணெய் ஊற்றுவதற்கு முன்னால் நன்றாக துடைத்து, திரியை சொருகி அது நன்றாக மேலும் கீழும் ஏறி இறங்குகிறதா என திருகியில் சரி செய்து பார்த்து திரி எங்கேயும் சிக்கிக்கொள்ளவில்லை என்பதை உறுதி செய்தபின், மண்ணெண்ணை ஊற்றி அதை இப்போதைய பிறந்தநாள் கேக் மேல் இருக்கும் மெழுகுவர்த்தியை பற்ற வைப்பது போல ரசித்து பற்ற வைத்து காலங்களில் இருந்து ஒரு சிறு வெளிச்சம் மண்ணெண்ணை வாசத்தோடு தெரிகிறது. மண்ணெண்ணைக்கும் வசதியற்ற இரவுகளை விட்டில் பூச்சிகள் வராத மெழுகுவர்த்திகள் கடத்தியிருக்கின்றன. வைதேகி காத்திருந்தாளில் வரும் வசனம் போல பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமான்னு தேவைப்பட்ட ஒன்றை வாழ்க்கை அத்தனை எளிதாய் வழங்கிவிடவில்லை.



மேல் மூடி தொலைந்து கீழ் மூடி உடைந்து போன ஒற்றை சோப்பு டப்பாவில் ஒரே ஒரு லைபாய் சோப்பு குடும்பமே மாதக்கணக்கில் பயன்படுத்தியும் கூட கரைந்து கரைந்து குறைந்து தான் போயிருக்கும். மிக நீளமாய் வாங்கி வந்து அறுத்து வைத்துக்கொண்ட அழுக்கு சோப்புதான் துணிகளைத் துவைக்க, பாத்திரம் கழுவ, சாமி விளக்கு கழுவ, குடங்கள் கழுவ என எல்லாவற்றுக்கும். ஒரே சோப்புதான் ஒட்டுமொத்த குடும்பமும் குளிக்க. ஒரே சோப்பு டப்பாதான் குளிக்கும் சோப்பையும், துவைக்கும் சோப்பையும் சுமக்க. இப்போது அப்படி இருந்துவிட முடிகிறதா.? இந்த இரண்டாயிரமாவது ஆண்டில் எங்கள் வீட்டில் பனிரெண்டு சோப்பு டப்பாக்கள் தினப்புழக்கத்தில் உள்ளன,  எல்லோருமாக சேர்ந்து  விதவிதமான வண்ண வண்ணமான எட்டு வகையான சோப்புகளை பயன்படுத்தறோம்.
பாத்ரூம் கழுவ ஒரு கலர் ஆர்பிக், டாய்லெட் சிங்க் கழுவ ஒரு கலர் ஆர்பிக், பாத்திரங்கள் கழுவ ஒரு சோப்பு, துணிகள் துவைக்க ஒரு சோப்பு, வாசிங்மெசினில் போட ஒரு சோப்புத்தூள் அதில்லாம ஒரு லிக்விட். என பாத்ரூம்கள் சோப்புகளாலும், சோப்பு டப்பாக்களாலும் நிறைந்திருக்கின்றன. இது போக வேப்பங்குச்சியை துரத்திவிட்டு பல வண்ண டூத் பிரஸ்கள், அதற்கு இணையாய் செங்கல் தூள், கருவேலம் பல்பொடி, கோபால் பல்பொடிக்கு மாற்றாக பல பேஸ்ட்கள். அரப்பையும், நல்லெண்ணெய்க் குளியலையும் மறந்துவிட்டு பல வண்ண டப்பாக்களில் வழுவழுப்பான ஷாம்புகள். காலம் எங்கிருந்து எங்கு கூட்டி வந்து நிறுத்தியிருக்கிறது என்பதை மெல்ல அசைபோட்டால் மாற்றம் மட்டுமே மாறாமல் இருப்பது உண்மைக்குள் உரைக்கிறது.

வீடுபெருக்க வைத்திருக்கும் ஒற்றை விளக்கமாரில் வீடு, வராண்டா, திண்ணை, கொள்ளப்பக்கம், வாசல்ன்னு எல்லாத்துக்கும் பயன்படுத்திய நாமதான் இப்போ சமையல் ரூமுக்கு, சாமி ரூமுக்கு, வாசலுக்குன்னு தனித்தனியா விளக்கமாருகள் வாங்கி வெச்சிருக்கோம். அதில்லாம சாமி படங்கள் வைக்கும் அலமாரிகளுக்கு கிளீனிங் பிரஸ்கள் வேற. "ஆத்துக்கு போற குண்டா"ன்னு பேர் வெச்ச ஈய குண்டா பெருசா ஒன்னு இருக்கும், அழுக்கு துணிலாம் துவைக்க ஆத்துக்கு எடுத்துட்டு போற குண்டா. பேருக்கு ஏத்த மாதிரி நல்லா "குண்டா" இருக்கும், ஒரு 30 , 40 லிட்டர் தண்ணி பிடிக்கும். ஆத்துக்கு போக, குளிக்க, வாசல் தெளிக்க, கவுத்து போட்டு உக்கார, மழை நீர் பிடிக்க, குழந்தைகளை குளிக்க வைக்க, ரேஷன் பொருட்கள் வாங்கன்னு அந்த ஒரு குண்டாவை பல வேலைகளுக்கு பயன்படுத்துவோம். இப்போ ஒவ்வொரு பாத்ரூம்லயும் மூனு பிளாஸ்டிக் பக்கெட்டுகள் இருக்கு. அந்த ஆத்துக்கு போற குண்டாவும் ஒன்னு இன்னும் ஓரமா இருக்கு. அதே மாதிரி தான் வாட்டர் பாட்டிலும் ஏதாவது விசேஷத்தில், விருந்தில் கிடைக்கும் கூல்ட்ரிங்ஸ் பாட்டில் தான் ஒன்னு ரெண்டு இருக்கும், இப்போ 10க்கு மேல டப்பர்வேர் தான் இருக்கு, சாதாரண கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை பெனாயில், மண்ணெண்ணை, மோட்டார் வேஸ்ட் ஆயில் ஊத்தன்னு பல வேலைகளுக்கு பயன்படுது.

தலையில் குட்டு வைத்து நிறுத்தும் அலாரம் கிளாக்குகள் தான் அப்போதெல்லாம், ட்ரிங்ன்னு தொடர்ந்து சத்தமெழுப்பும் கடிகாரத்தை எழுந்து தான் அணைக்க முடியும், இப்போது கைபேசி அலாரத்தைப்போல "ஸ்னூஷ்" பண்ண முடியாது, அந்த மாதிரி அலாரம் கிளாக் ஒன்னுதான் வீட்ல இருந்தது இப்போதும் கூட ரிப்பேர் ஆன நிலைமைல அது இருக்கு. எங்க தாத்தா வீட்ல மாமா புதுசா ஒரு பெரிய சதுர கடிகாரம் வாங்கிட்டு வந்தப்போ அவ்ளோ ஆச்சரியமா பார்த்தோம், அது கடிகாரம் என்பதற்காக அல்ல, ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு இசை வரும்னு சொல்லி எங்களை உசுப்பேத்தி வெச்சிருந்தாங்க, சின்ன வயசு தான் எதைச் சொன்னாலும் கொஞ்சம் அதிகமாவே நம்பும்ல, அந்த மாதிரிதான் இதையும் அதிகமா நம்பிட்டு இருந்தோம். தெருவுல விளையாடிக்கிட்டு இருக்கும் போது ஒவ்வொரு மணி முடியும் போதும் அந்த கடிகாரம் அழகா ஒரு இசையெழுப்பும் அது கேக்க அவ்ளோ அருமையா இருக்கும், அந்த கடிகாரத்தை கருப்பு வெள்ளை போட்டோக்களோடு சேர்த்து சுவர்ல ரொம்ப உயரத்துல மாட்டி வெச்சிருப்பாங்க அந்த சத்தம் வரும் போதெல்லாம் அப்படியே வாய போலந்துகிட்டு பாப்போம். நைட்லாம் அந்த சத்தம் தூக்கத்துலயும் காதுல கேட்டுகிட்டே இருக்கும். இப்போலாம் எங்க திரும்பினாலும் விதவிதமான சுவர் கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள், கைபேசி கடிகாரங்கள், உடற்பயிற்சி கடிகாரங்கள், தண்ணிக்குள்ள போட்டாலும் ஓடும் கடிகாரங்கள்ன்னு எத்தனையோ வந்துடுச்சு ஆனாலும் அந்த பழைய கடிகாரத்தோட இசையை இப்போ கேக்க முடியறதில்லை.
கைபேசிகளில் கதறும் அலாரத்தை ஆப் பண்ணிட்டோ இல்ல ஸ்னூஸ் பண்ணிட்டோ மறுபடியும் தூங்கிடறோம்.




ஒரு பக்கம் வாறு பிஞ்சி போய் பின்னூசி குத்தி வெச்சிருக்கும் செருப்புதான் இருக்கும். பள்ளிக்கூடம், கல்யாணம், கோவில் திருவிழா, வெளியூர், ஆறு, குளம், மளிகை கடை, மார்க்கெட், விளையாட்டு, சினிமான்னு எங்க போனாலும் அந்த செருப்பு மட்டும் தான் போட்டுட்டு போவோம். கூட்டமா செருப்பு இருக்கும் இடங்களில் நம்ம செருப்பை ஈஸியா கண்டுபிடிச்சிடலாம் ஏன்னா, யாரும் தூக்கிட்டு போய் இருக்க மாட்டாங்க எப்படி விட்டோமோ அப்படியே இருக்கும். இப்போலாம் அப்படி இல்லை, பாத்ரூம்க்கு ஒரு ஜோடி, ஆபீசுக்கு ஒரு ஜோடி, வெளிய போனா ஒரு ஜோடி, வீட்டுக்குள்ள ஒரு ஜோடி, ரன்னிங் ஷு, கேசுவல் ஷு, பார்மல் ஷு, எக்ஸ்டரா ஷு ன்னு செருப்பு வைக்க மட்டும் தனியா பெரிய ஸ்டாண்ட்டே தேவைப்படுது. தீபாவளிக்கு மட்டும் தான் புதுத்துணி எடுத்து தருவாங்க, எப்பவாவது ஒரு வருஷம் பிறந்தநாளுக்கு புதுத்துணி கிடைக்கும், எனக்கு தீபாவளி நேரத்துல தான் பிறந்தநாள் வரும், ஒரு செட் துணிதான் எது முன்ன வருதா அதுக்கு முதல்ல போட்டுட்டு ரெண்டாவதா வரதுக்கும் அதையே தான் போட்டுக்கணும் புதுசுலாம் கிடைக்காது அப்போ, ஆனா இப்போ அப்படியா இருக்கோம், வாரம் ஒருமுறை அல்லது மாசம் ஒருமுறை கூட ஷாப்பிங் பண்ண முடியுது. நாலு செட் துணிகள் கூட ஒண்ணா வாங்க முடியுது. இது ஆடம்பரமா அத்தியாவசியமான்னு தெரியாமலே பல பொருட்களை வாங்கி குவிக்கறோம். ஆன்லைன்ல ஆபர்னா அடிச்சி பிடிச்சி வாங்கிடறோம், வாங்குற எல்லா பொருட்களையும் நல்லா பயன்படுத்தறோமா அதுவும் இல்ல, அப்பறம் பெருமை வேற. நாம பொருட்களை பயன்படுத்தியது போய் இப்போ பொருட்கள் நம்மை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன, இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது, பல குடும்பங்கள் பிழைக்கிறது என்பது மட்டுமே ஆறுதலான விஷயம். இந்த மாதிரி இன்னும் எத்தனையெத்தனை பொருட்கள் நம்ம தேவைக்கும், சௌகரியத்திற்கும்  மாறிக்கொண்டு நம் வாழ்வோடு கலந்தே இருக்கின்றன. 

பயன்படுத்திவிட்டு பழசாகிப்போனாலோ, உடைந்து போனாலோ அதை உதறிவிட்டு புதிய ஒன்றை சுலபமாக வாங்கிக்கொள்ள முடிகிறது ஆனால் அதன் நினைவுகளை முற்றிலும் அழிப்பதென்பது முடியாத காரியம். நாம் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் உடைந்த நிலையில், அறுந்த நிலையில், சிறு கீரலோடு, கொஞ்சம் கோணலோடு மனக்கிடங்கின் மூலையில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதை கையிலெடுத்து தூசு தட்டி, அணைத்துக்கொள்ள, யாருக்கும் தெரியாமல் பிடித்த பொருளுக்கு ஒரு முத்தமிட, அதன் உழைப்பை நினைத்து கொஞ்சம் கண்ணீர்விட, அதன் நினைவுகளோடே உறங்கிப்போக ஒரு கனவையேனும் சுமந்து வரணும் ஏதோ ஒரு இரவு.