30 April 2017

ஊருக்குள் இவர்கள் இருந்தார்கள்


தடித்த கண்ணாடி சுவர்களால் உயர்ந்திருக்கும் அந்த பெரிய பேரங்காடிக்குள் நுழைந்த போது சந்தோசத்தைவிட எதையோ தொலைத்துவிட்டதின் ஏக்கமே அதிகமாய் இருந்தது. தனித்தனி பிரிவுகளாய் எல்லாமுமே ஒரே குளிர்சாதனக்கூரையின் கீழ் கிடைப்பது மகிழ்வுதானெனினும் அவையெல்லாம் நல்லவைதானா? சரியான விலைதானா? என்ற கேள்விகளின் குழப்பங்களுக்கு பெரும்பாலும் பதில், "இல்லையென்பது" தான் எதார்த்தம்.

நீண்டதொரு குளுகுளு பெட்டிக்குள் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தயிர் பாக்கெட்டுகளும், நெகிழியில் சுற்றிய குச்சி ஐஸ்களும்,  சிறு பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களும்  இன்ன பிற இத்யாதிகளும் எத்தனை நாளாய் இருக்கின்றன என ஆராய்ந்து அதன் முதுகு திருப்பி விலை, விஷமாகும் தேதியென எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி, நீளும் வரிசையில் நின்று, விலைக்கு மேலே சேவை வரியென ஒரு தொகையை செலுத்தி வீடுவந்து சேர்வதற்குள் இந்த "டெக்னாலஜி வாழ்க்கை" வரமா சாபமா என்பதை ஒருமுறையாவது நம்மை நாமே கேட்டிருப்போம்.

பூவே உனக்காக படத்தில் "பாட்டும் நானே பாவமும் நானே" என பாடும் மீசைக்காரரைப்போல் எங்கள் ஊரில் ஒருவர் இருந்தார், ஆறடி ஆஜானு பாகுவான ஆள் பெரிய மீசை வைத்திருப்பார். அவரது இளவயதில் கதாநாயகனாய் பல பெண்களின் தூக்கத்தை நிச்சயம் கெடுத்திருப்பார். வீட்டிலேயே தயாரித்து தயிர் மோர் விற்பது அவர் தொழில், தினமும் காலையில் சைக்கிளில் கட்டிய இரண்டு பெரிய கேன்களுடன் ஊருக்குள் வருவார், அவர் விற்கும் தயிரைப்போலவே அத்தனை கெட்டியான வெள்ளை புன்னகை சுமப்பவர், மதியத்திற்குள் எல்லாம் விற்று தீர்க்க சைக்கிளை மிதித்தபடி வீட்டுக்கு போவார், அவர் ஊருக்குள் வராத நாட்களில் நாங்கள் அவர் வீட்டுக்கே போய் மோர் வாங்கி வருவோம். பிசுக்கென அவர் தரும் கொஞ்சூண்டு மோர் அத்தனை ருசியாக இருக்கும். கடுமையான உழைப்பாளி, சிறந்த மனிதர். அவர் பெயர்கூட நினைவிலில்லை, இப்போது உயிரோடு இருக்கிறாரா என்பது கூட  உறுதியில்லை.

ஊருக்குள் திருவிழா, கல்யாணம், சீர், காது குத்து, கெடா வெட்டு, பிறப்பு, இறப்பு என எப்போதுமே நல்லது கெட்டது இருந்து கொண்டே இருக்கும் சொந்தங்கள் கூடிக் கும்மாளம் அடித்துக்கொண்டே இருக்கும். இது மனிதர்கள் மட்டுமே வாங்கிவந்த வரங்களுள் ஒன்று. அப்படிப்பட்ட "குடி" மிகுந்த தருணங்களில் உறவுகள் குடித்துவிட்டு ஒதுக்கிய காலி மதுபாட்டில்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து பதுக்கி வைப்போம், விடுமுறை நாட்களில் வரும் ஐஸ் வண்டிக்காக. ஐஸ் விற்பவர்கள் பெட்டியோடு கூடவே ஒரு பெரிய சாக்குப்பையையும் கொண்டு வருவார்கள், பழைய இரும்பு, காலி பாட்டில்களுக்கு ஐஸ் கொடுப்பார்கள். அப்படி வாங்கி தின்ன ஜவ்வரிசி, சேமியா ஐஸ்களின் சில்லிப்பு அடிநாக்கில் இன்னும் இனித்துக்கிடக்கிறது . இப்போதெல்லாம் ஊருக்குள் ஐஸ் வண்டிக்காரர்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. அந்த வெயில் உழைப்பாளிகளின் வாழ்க்கைத்தரம் எந்த அளவு உயர்ந்திருக்கும் என்பதை யாரும் அத்தனை எளிதில்  கணித்துவிட முடியாது.

ஞாயிற்றுக்கிழமைகளின் சாயங்காலங்கள் சொர்க்கத்தின் நகலெடுத்து செய்யப்பட்டவை ஒரு காலத்தில். விடுமுறைநாளின் முடிவு நெருங்கும் அந்த நேரங்களில் எத்தனையோ விதமான தின்பண்டங்கள் சுமந்து வந்து ஊருக்குள் விற்றுச் செல்வார்கள் விடுமுறையற்ற உழைப்பாளிகள். சாயங்காலத்தின் வெயில் மங்கும் வேளையில் விழும் பெரிய நிழலில் கயிற்றுக் கட்டிலை போட்டு பெரியவர்கள் அமர்ந்திருக்க நாங்கள் பம்பரமோ கோலிகுண்டோ விளையாடிக்கொண்டிருக்கும் தருணத்தில் ஆட்டோக்களில் இருப்பதைப்போன்ற ஒலிப்பான்களை அழுத்தியபடி தெருவுக்குள் நுழைவார்கள் பொரி விற்பவர்கள். முனைகள் சுருட்டிய ஒரு பெரிய மழைக்காகிதத்தில் நிரம்பி வழியும் பொரியை அவ்வப்போது உள்ளுக்குள் தள்ளிவிட்டுக்கொண்டே இருப்பார்கள். சின்ன சின்ன கவர்களில் வைத்திருக்கும் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பூந்தியென எல்லாவற்றோடும் கலந்து கொடுக்கும் செயலை அத்தனை லாவகமாய் செய்வார்கள். கிழிந்துபோன கால்ச்சட்டையில் உள்ள பைகளில் பொரியை நிரப்பிக்கொண்டு விளையாடும் நேரங்களில் சாப்பிட்டதும், மீதமான பொரியை அடுத்தநாள் காலையில் தேநீரில் முக்கி ஊறவைத்து சாப்பிட்ட நாட்களும் இனி எப்போதும் திரும்ப வரவே வராது.

வெய்யில் காலம் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே ஊருக்குள் தள்ளிக்கொண்டு வந்துவிடுவார்கள் சர்பத் வண்டியை, வரிசையாய் அடுக்கிவைக்கப்பட்ட பாட்டில்களின் உள்ளே கலர் கலராய் நிரம்பியிருக்கும் நன்னாரி சர்பத்கள். நிமித்தி வைக்கப்பட்ட ஐஸ் கட்டியின் மேல் கத்தி சொருகிய ஒரு கருவியை வைத்து சரக் சரக்கென உரச ஐஸ் கட்டி தூள் தூளாய் அவர் கைகளில் வந்து விழும் அதை ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு நீளமான சேமியாவை கொஞ்சம் சேர்த்து நாம் சொல்லும் கலரில் நன்னாரி சர்பத்தை கலந்து நிரப்பி கொடுப்பார். அதுதான் அந்த வயதுக்கான அமிர்தமாக இருந்தது. இப்போதிருக்கும் எந்த ஐஸ்கிரீமும் பலூடாக்களும் அதன் பக்கத்தில் கூட நெருங்க முடியாது.

உச்சபட்ச அலங்காரங்களோடு உச்சியில் கைதட்டும் பொம்மையோடு ஒருவர் சுமந்து வருவார் ஜவ்வுமிட்டாய் மூங்கிலை. பாட்டுப்பாடியபடியே கொடுக்கும் காசுக்கு தகுந்தபடி கைக்கடிகாரம், நெக்லஸ், மோதிரம், பிரேஸ்லெட் என விதவிதமாய் செய்துகொடுத்து பொசுக்கென மீசையாய் ஒட்டவைத்துவிடுவார் சிறு மிட்டாயை. நீண்ட நேரமாய் அதை வைத்துக்கொண்டு அதன் ரோஸ் கலர் சாயம் கைகளிலும் நாக்கிலும் அப்பிக்கொள்ள ஊர் சுற்றிய அந்த தருணங்கள் எல்லோர் மனதிலும் இன்னும் பிசுபிசுப்பாய் நிச்சயம் இருக்கும்.

உப்பு மிளகாயில் ஊறவைத்த நெல்லிக்காய் , மாங்காய், கெளாக்காய்களென என நாக்கூறும் தீனிகளை பள்ளிக்கூடங்களின் வாசலில் கடைபோட்டு விற்பவர்கள், இட்லி பணியாரங்களோடு கூடவே கொழாப்புட்டு செய்து விற்பவர்கள், எலந்தவடை , தேன்மிட்டாய் , கம்மர்கட் என பால்யத்தின் ஆசைகளை பூர்த்திசெய்த பெட்டிக்கடைகாரர்கள், வெகு தொலைவிலிருக்கும் கிராமத்திலிருந்து ஒற்றை மாட்டுவண்டியில் கொண்டு வந்து நுங்கு விற்றவர்கள், சேலை தலைப்பை சிம்மாடாய் சுருட்டி ஒருக்களித்த பானையில் பதனி விற்றவர்களென பழைய வாழ்வில் எளிய மனிதர்களின் பங்கும் அவர்களின் உழைப்பும் எப்போதும் இருந்தது. வியாபாரம் முடிந்ததும்  வியர்வையில் நனைந்த  முகங்களை ஒரு பழைய துண்டாலோ அல்லது சேலையின்  முந்தானையாலோ துடைக்கும்போது அவர்களின் முகங்களில் தெரியும் பூரிப்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

வருடங்கள் ஓடி, தெருக்கள் மாறி, வசதிகள் கூடி மனிதர்களும் பெருமளவு மாறிவிட்டனர். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் அத்தனை உணவுகளிலும் ருசி இருக்கிறதோ இல்லையோ அந்நிய நாடுகளின் பணப் பசியும் நம்மை நமக்கு தெரியாமலே அடிமைகளாக்கும் வியாபார தந்திரமும் மிகுந்திருக்கிறது. இதைவிட்டு வெளியே வந்து பழைய வாழ்க்கைக்குள் திரும்பும் கதவுகள் அனைத்தும் எப்போதோ மூடப்பட்டுவிட்டன, அப்படி ஒருவேளை அது திறந்தாலும் அதன் நுழைவுவாயிலை நிச்சயம் நாம் நிராகரிக்கத்தான் போகிறோம்.

கிராமங்களில் , நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்து பெருநகரங்களில் தங்களை புகுத்திக்கொண்டு தங்கள் குழந்தைகளையும் எதிர்கால எந்திரங்களாக்க முயற்சித்துக்கொண்டிருப்பவர்களே இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளை உங்கள் ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள் அங்கே எளிய மனிதர்களின் வாழ்க்கையை பக்கத்திலிருந்து காட்டுங்கள், அவர்கள் தோள் மீது கைபோட்டு நலம் விசாரியுங்கள், அன்போடு கைகுலுக்குங்கள்,  அவர்கள் விற்கும் பொருள்களில் கொஞ்சம் வாங்குங்கள். அதிகமாய்  பணம் வாங்கிக்கொண்டு ஏ சி அங்காடிக்குள் இருந்து செயற்கையாய் கிடைக்கும் சிரிப்பை விட வெய்யிலில் உழைப்பவர்களின் வியர்வை விலைமதிப்பற்றது.

#உழைப்பாளர் தின வாழ்த்துகள்