21 March 2018

உலக கவிதை தினம்"
தீர்ந்துவிடாத சொற்களால் நிரம்பித் ததும்புகிறது மொழி..!
கவிதையாய் கடந்துவிட வேண்டும்... இன்னுமொரு வாழ்க்கை..!"
எட்டாவது படிக்கும்வரை கவிதையின் வாசனை கூட தெரியாது. தேநீர் வாங்கப்போகும் போதெல்லாம் கன்னித்தீவுக்காக மட்டுமே தினத்தந்தி புரட்டுவேன். அவ்வப்போது வரும் அம்புலிமாமா கதைகளுக்காக குடும்பமலர் கொஞ்சம் பிடிக்கும். காலத்தின் கைகள் பள்ளியிலிருந்து துண்டித்து என்னை பட்டறைக்குள் அடைத்தபோதெல்லாம் இயந்திரங்களின் சத்தங்களில் எழுத்துக்கள் தொலைந்துபோகத் தொடங்கின. சமயங்களில் பஜ்ஜி, வடை வாங்கி சாப்பிடும் பொட்டலங்களில் இருக்கும் எண்ணெய்ப் பிசுக்கு எழுத்துக்களையும், சிப்ஸ், காரப்பொரி கட்டித்தரும் காகிதங்களில் மசாலா நெடிக்குள் மயங்கிக்கிடக்கும் எழுத்துக்களையும், பரோட்டா கட்டிவந்த காகிதங்களில் கிழிந்துபோன பத்திகளையும் படித்து படித்து தான் எழுத்துக்களிடம் மீண்டும் நெருங்கினேன்.
வாரமலரோ, வாரக்கதிரோ கிழிந்துவிடாத பக்கங்களோடு கிடைக்கும் புத்தகங்களில் என்னை புதைத்து எழுத்துக்களில் தொலைந்துபோவேன். ராஜேஷ்குமார் நாவல்களை பயந்துகொண்டே படித்த நாட்களில் மொழி எனக்கு தடையில்லாமல் படிக்க கைவசப்பட்டது. அந்நாட்களில் எனக்கும் பேனாவுக்குமான தூரம் வாங்கிய சம்பளத்திற்கு கையெழுத்து போட மட்டுமே. பின்னாளில் கொஞ்சம் எழுத வேண்டிய இடத்தில் கிடைத்த வேலையில் நிறைய படிக்கவும் வாய்ப்பிருந்தது. அங்குதான் எனக்கு கவிதைகளும் கவிஞர்களும் அறிமுகமானார்கள். வார இதழ்களில் வந்து குவியும் குட்டி குட்டி கவிதைகளால் ஈர்க்கப்பட்டவன் எந்தப் புள்ளியில் கவிதைகள் எழுதத் தொடங்கினேன் என்பது இப்போதும் தெரியவில்லை. அப்போது எழுதியதெல்லாம் கவிதைகள் தானா என்பதும் புரியவில்லை.
நாளிதழ்கள், மாத - வார இதழ்களன்றி தனித்தனியாய் கவிதைகளுக்கென புத்தகங்கள் இருக்கிறதென எனக்கு உணர்த்தியவை அந்த நாட்கள் தான். நான் வாங்கிய முதல் கவிதைப்புத்தகம் "கவிதை அல்ல காதல்" பொன்.சுதா அவர்கள் எழுதியது. அதன் பிறகுதான் தேடித்தேடி புத்தகங்கள் வாங்கத்தொடங்கினேன். மனதில் இடம் பிடித்த கவிஞர்கள் என் வீட்டிலும் புத்தகங்களாய் இடம்பிடித்தார்கள். புதுப்புது சொற்களால் வைரமுத்துவும், மென்கவிதைகளால் பா.விஜயும், காதல் கவிதைகளால் பழனிபாரதியும், நட்புகவிதைகளால் அறிவுமதியும், சமூகக்கவிதைகளால் அப்துல் ரகுமானும், புரட்சிக்கவிதைகளால் மு.மேத்தாவும், இன்னும் பலதரப்பட்ட கவிதைகளால் பல கவிஞர்களோடு நான் நேரிலும் கவிதைகளிலும் கைகுலுக்கினேன்.
காலம் திருப்பிவிட்ட பாதையொன்றில் பலவருடங்கள் கழித்து கல்லூரிக்குள் கால் பதிக்கிறேன். கல்லூரியில் நடக்கும் கவிதைப்போட்டிகளில் பலமுறை முதல் பரிசு வாங்குகிறேன் அப்போதெல்லாம் கிடைத்த பாராட்டுகளின் கைதட்டல்கள் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன. என்னை நோக்கி நீட்டப்படும் ஆட்டோகிராப் நோட்டுகளை கவிதைகளால் நிரப்புகிறேன், காதலிக்கு கொடுக்க கவிதைகளை கடன்கேட்டு வரும் நண்பர்களுக்கும் எழுதிக்கொடுக்கிறேன், தினத்தந்தியில் வந்த என் கவிதையைப் பாராட்டி முகம் தெரியா யாரோ ஒருத்தரிடமிருந்து பாராட்டுக்கள் சுமந்த முதல் கடிதம் கல்லூரி முகவரிக்கு வருகிறது, குடும்பமலர் கவிதைப்பகுதியில் வந்திருந்த என் கவிதையைப் படித்துவிட்டு வேறொரு கல்லூரியில் படித்த நண்பன்
"உன் கல்லூரி வாசலில்
நானொரு மரமாய்க் காத்திருக்கிறேன்
தினமும் ஒருமுறையாவது என்மீது
சாய்ந்துவிட்டுப்போ
என் காதல் உன்மீது
பூக்களாய்ப் பொழியும்...! "
என்னும் இந்தக்கவிதையின் வரிகளை மறக்காமல் ஒப்பித்த போது கால்கள் தரையிலில்லை. கவிதையெழுத தொடங்கும் பெரும்பாலானோர் காதல் கவிதைகளில் இருந்து தொடங்குவது தான் வழக்கம். நான் மட்டும் விதிவிலக்காய் எழுதிவிடப்போகிறேனா என்ன?
நீ நடந்து செல்லும் பாதையில்
பூக்களைத் தூவ ஆசைதான்
பூக்கள் பட்டு உன் பாதங்கள்
கசங்கிவிடுமோ என்றுதான்
தயங்குகிறேன்
என்னும் இந்த முதல் கவிதை எழுதி பதினைந்து வருடங்களுக்குமேல் ஆகிறது. ஆனாலும் இன்னும் இதயத்தின் அடி ஆழத்தில் குத்திவிட்ட பச்சையைப்போல அப்படியே இருக்கிறது. பிறந்தநாள் பரிசுகளாய் கவிதைப்புத்தகங்களையே கொடுத்து நேசத்தில் நிறைகிறார்கள். படங்களை ஒட்டி ஒட்டி எழுதிய கவிதை நோட்டுகளை சுழற்சி முறையில் படிக்கிறார்கள், பிடித்த வரிகளை அடிக்கோடிட்டு அனுபவிக்கிறார்கள். என்னை எல்லோருமாய் சுமந்து அடுத்த தளத்தில் வைக்கிறார்கள். இதெல்லாம் கனவுகள் போல இருந்தாலும் அந்த கல்லூரிக்காலம் என்பது நான் வாங்கிய வரங்களில் ஒன்று.நடைபழக உதவும் நடைவண்டிபோல நான் எழுதிப்பழக உதவியவை கவிதைகள் தான். இப்போதும் எழுதிப் பழகிக்கொண்டே இருக்கிறேன். கவிஞர் என்ற தளத்தில் என்னை வைத்து ரசிப்பவர்களை நேசிக்கும் அதே வேளையில் அதற்கு நான் தகுதியானவன் தானா என்று என்னை நானே சுயபரிசோதனை செய்துகொண்டிருக்கிறேன். கவிதைகளோடு சேர்த்து கட்டுரைகளையும் எழுதிப்பழகுகிறேன். வாழ்வில் கடந்துபோகும் காட்சிகளை, மனதில் நிற்கும் மனிதர்களை, பயணிக்கும் தூரங்களை, பாதித்த சம்பவங்களை, ரசித்த குழந்தைகளை, தோற்ற காதலை, அனுபவிக்கும் சுக துக்கங்களை, தோல்விகளோடு கொஞ்சம் வெற்றிகளை, கூட்டத்தில் இரைச்சலை, தனிமையில் மெளனத்தை, எப்போதாவது வரும் கண்ணீரை, எப்போதும் இருக்கும் நம்பிக்கையை, ஆகச்சிறந்த இந்த அழகிய வாழ்க்கையை என பார்க்கும் எல்லாவற்றையும் கவிதைகளால் கடக்கவே ஒவ்வொரு காலையும் கண் விழிக்கிறேன்.
கவிதைதினமொன்றில் கவிதைகளைக் கொண்டாடும் கணத்திலிருந்து என்னை நானே திரும்பிப் பார்க்கிறேன். கடந்துவந்த காலத்தை கவிதைகளோடு பயணித்து வந்ததைப்போலவே காத்திருக்கும் காலங்களையும் கவிதைகளோடும் எழுத்துக்களோடும் வாழ்த்துவிடவே நினைக்கிறேன்.