14 December 2010

அடம்



உன் விரல் பிடித்து நடக்க
அடம் பிடித்துக்கொண்டே இருக்கிறது
இந்த அடங்காத அலைகள் ....

புகைவண்டி



உன்னை சுமந்து
செல்லும் புகைவண்டி
வெளிவிடுவது புகையல்ல .....
புன்னகை..!!!

உன் பெயர் சொல்லியே....


இமைகளின் அரவணைப்புக்காக
இரவு வருகிறது ...
என் இதயத்தின் துடிப்புக்காக
உன் நினைவு வருகிறது ...
தூரத்து வானம்
தூவும் மழைத்துளிகள் எல்லாம்
உன் பெயர் சொல்லியே
உடைந்து போகிறது ...
என் எல்லா இரவுகளும்
உன் பெயர் சொல்லியே
விடிந்து போகிறது ....

யாரிடமடா சொல்லித்தொலைப்பது..?


புள்ளிகளை மட்டும் வைத்துவிட்டு ...
கோலம் போடாமல் திரும்புகிறேன்

பிரஸ்சில் பேஸ்ட்டை எடுத்துக்கொண்டு
வெறும் விரலால்
பல் தேய்க்கிறேன்......

குளிக்கவே இல்லை
தலை துவட்டுகிறேன்......

நெற்றியில் வைக்க வேண்டிய
ஸ்டிக்கர் பொட்டை
மூக்கில் வைக்கிறேன் ......

கல்லூரி போகிறவள்
தம்பியின் ஏழாவது
புத்தகங்களோடு பயணிக்கிறேன் .......

தோழிகள் என்று நினைத்து
மரங்களுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்.......

கோவிலுக்கு சென்றால்
பிரகாரத்தை
பின்பக்கமாக சுற்றுகிறேன்...

வெறும் தட்டிலேயே
வயிறு நிறைய சாப்பிடுகிறேன்.....

மெத்தையில்
தலையணையை வைத்துவிட்டு
தரையில் படுக்கிறேன்....

என்னுள்
இவ்வளவு மாற்றங்களையும்
ஏற்படுத்தியவன்
நீதானென்பதை
நான் யாரிடமடா
சொல்லித்தொலைப்பது
இப்போது....?

ஆசை....


மழையோ வெயிலோ
குடை பிடிக்க ஆசை.....
உன் கடிதம் சுமந்து வரும்
தபால்காரனுக்கு ......!

ஒப்புக்கொள்கிறது மனசு ...!


அறுந்து போன பட்டம் போல
அந்தரத்தில் ஊசலாடுகிறது வாழ்க்கை ...

வெயிலோ ..மழையோ ...
எதுவாக இருப்பினும் ...
நிழலோ ..குடையோ ..
ஒரு சிலருக்கே வாய்க்கிறது...!

அலாரங்களுக்கு முன்பாகவே எழுந்து ...
அவசரங்களின் ஊர்வலங்களில் கலந்து ...
ஏதோ ஒன்றின் பின்னால் இருட்டுக்குள் ஓடி ..
வெளிச்சத்தில் தொலைந்து போகிறோம் ...!

இடையில் கால் தடுக்கிய இடத்தில் நின்று
திரும்பிப்பார்த்தால் ....
நேற்றைகளின் சமாதி
நெடுந்தூரம் நீள்கிறது ...!

பின்பு ...
அழுக்கு படிந்த காற்றுக்குள்
பயணித்து... பயணித்து...
புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கிறோம் ..!

எல்லோரும் அவரவர் வீடுகளில்
அடைபட்டவுடன் ஒப்புக்கொள்கிறது மனசு ..
உலகம் உருண்டையென்று...!

கெஞ்சல் மொழி.....!


நாம் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில்
தெரிந்தே உன்னை"போடி" என்று
சொல்லிவிட்டேன் ஒருமுறை ...

நீ முறைத்துப்பார்த்து திட்டுவாய்
என நினைத்தால்...
"நீ சொன்னது அழகாய் இருந்தது
இன்னொருமுறை சொல் "என கெஞ்சினாய் ...

அப்பொழுது காதல் நம்மை
கொஞ்சிக்கொண்டிருந்தது ...!

விரதமிருக்கிறாய் ....


உன் சாயங்கால நேரத்தின்
தேநீராய் நான் இருக்கிறேன் ......

நீயோ ...

என்னைத்தொடாமல் ஏன்
விரதமிருக்கிறாய் ....?

நாட்டியமேடை

புகைவண்டி நிலையத்தின் நடைமேடை
நாட்டியமேடையானது ....

நீ  நடந்துகொண்டிருக்கும் பொழுது ...!


அடம் ...!


சின்ன வயதில் சிலேட்டு பென்சில்
வாங்கித்தரச்சொல்லி அம்மாவிடம்
அழுது அடம் பிடித்தது போல் ..
இப்பொழுது
அழுது அடம் பிடிக்க வேண்டும்போல் உள்ளது ...
என்னைக்கடந்து போகும்
உன்னை வாங்கித்தரச்சொல்லி ...!

விடுதலை செய்....!.


காதல்
ஒரு பகடைக்காய்
அது என்னை உருட்டிவிட்டு சிரிக்கிறது ...
நீயோ ..
உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறாய் ...

என்னை புல்லாங்குழலாக்கி
இசைக்க நினைக்கிறது
நீயோ.....
கண்மூடி காது பொத்துகிறாய்...
உதடு நிறைய
புன்னகை நிரப்ப பார்க்கிறது
நீயோ .......
மௌனத்தை கெட்டியாக
பிடித்துக்கொண்டிருக்கிறாய்

ஆனந்த மழையால்
நம்மை நனைக்க நினைக்கிறது
நீயோ.........
தடை என்னும்
குடை பிடிக்கிறாய் ....

காதல்
ஒரு கவிதையாய்
என்னை எழுதி இருக்கிறது
நீயோ.......
எழுத்துப்பிழைகளைத் தேடுகிறாய்

சிரிக்கும் பனித்துளியே
இந்த கவிதைக்கு
ஒரு முத்தம் கொடுத்து
முற்றுப்புள்ளி வை.....

உன் வெட்கங்களை
விடுதலை செய்.....

உயிரெல்லாம் உன்னெனப்பு..!


ஒத்தையடிப் பாதையிலே
ஒய்யாரமா போறவளே...
என் எதிரே நீ வந்தா
என்னென்னவோ பண்ணுதடி...!

தண்ணிகுடம் சுமந்துகிட்டு
தளும்பாமல் போறவளே
உன் இடுப்புல ஒரு குடமா
நான் உட்கார வேணுமடி ...!

புத்தகத்த எடுத்துகிட்டு
பூப்போல போறவளே...
உன் புத்தகத்தில் ஒரு எழுத்தா
நான் மாற வேணுமடி...!

கண்ணாலே வலைவீசி
கதைபேசி போறவளே...
உன் காலோடு கொலுசாக
நான் மாற வேணுமடி ...!

இரவெல்லாம் தூக்கமில்ல
இருந்தாலும் துக்கமில்ல...
கொஞ்சநேர கனவுலயும்
நீ தாணடி வந்து போற...!

கண்ணுக்குள்ள உன்னவெச்சி
கலங்காமல் பார்த்துக்கறேன் ...
கண்ணே உன்மனசெல்லாம்
எனை நிரப்பி வெச்சுக்கடி...!

சீக்கிரம் வந்துவிடு ......!


மீண்டும்
உன் வருகைக்காக காத்திருக்கிறது
என் வீடு ......

முதல் நாள் நீ வந்த போது
வீட்டுக்குள் பரவிய வெளிச்சம்
இன்னும் இறைந்து கிடக்கிறது
எல்லா அறைகளிலும் ...

உன் மெளனங்கள்
அலைந்து கொண்டிருக்கிறது
நான் செலவழித்த வார்த்தைகளைத்தேடி.....

நான் வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம்
என்னை வரவேற்பது
நீ விட்டுச்சென்ற
வெட்கங்கள் தான் ....

நீ அணிந்து அழகு பார்த்த
என் சிகப்பு கலர் சட்டை
சிறைபிடித்து வைத்திருக்கிறது
உன் வாசங்களை .....

நீ முத்தமிட்ட என் புகைப்படம்
பொக்கிசமாய் வைத்திருக்கிறது
உன் உதட்டு ஈரங்களை.....

நீ பேசிய ஒரு சில வார்த்தைகளும்
உட்கார்ந்துகொண்டு எழுந்து வர மறுக்கிறது
என் வீட்டு அலமாரியில் இருந்து ...

நீ முகம் பார்த்த கண்ணாடி
உன்னை முழுதாய் படம் பிடித்து வைத்துக்கொண்டு
அடம் பிடிக்கிறது தரமாட்டேன் என்று ...

வேண்டுமென்றே நீ மறந்து விட்டுப்போன
கைக்குட்டை அழகாய்
அலங்கரித்துக்கொண்டிருக்கிறது
என் அலமாரியை .....

இன்னும் திகைப்பிலிருந்து
மீளாமல் இருக்கிறது
நீ உதடு வைத்து குடித்த
தேநீர் கோப்பை....

நீ படித்த என் கவிதை புத்தகம்
உன் பெயர்தான் கவிதை என்று
புலம்பிக்கொண்டிருக்கிறது ....

உன் வெட்கங்களோடும்...
உன் வாசனைகளோடும் ...
வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறேன்....

நீ எப்படி வருவாய் .....
எப்போது வருவாய்....என்று
எதிர்பார்ப்பதில்லை நான் ......

எப்படியும் வந்து விடுவாய் என்ற
நம்பிக்கை இருப்பதால் ......

இருந்தாலும் ......

சீக்கிரம் வந்துவிடு ....!

பிறந்த நாள் ..!


ஆங்கிலேயர் ஆட்சி செய்ததுமுதல்..
அமெரிக்கா வல்லரசானது வரை
நினைவில் இருக்கிறது ....

உலககோப்பை வென்ற
இந்திய அணியின் சரித்திர வருடம்
நியாபகம் இருக்கிறது ..

கமலின் முதல் படமும்
ரஜினியின் நூறாவது படமும்
தூக்கத்தில் கேட்டாலும்
சொல்லிவிட முடியும் ...!

பல வருடங்களுக்கு முன்பு பெற்ற காதல் கடிதம்
அந்த நாளின் நிமிடம் முதல் நொடி வரை
அனைத்தும் சேகரித்து சிரிக்கிறது
நாட்காட்டியில்...!

நண்பர்களோடு சுற்றிய தினம் ..
சுதந்திர தினம் ..
ஆசிரியர் தினம் ..
காதலர் தினம் ...
குழந்தைகள் தினம் ...
எல்லாம்..எல்லாம் நினைவிருக்கிறது ....!

ஆனால் ...

பல பேரிடம் வேண்டியமட்டும் விசாரித்தும் ...
பல ஆண்டுகள் பின்னோக்கி தோண்டிப்பார்த்தும் ..
இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை ...

என் அம்மாவின் பிறந்த நாளை ...!

எப்போது தருவாய் ...!


நான் உனக்கு கொடுத்த கடிதங்கள் ...
கவிதை புத்தகங்கள் ...
பிறந்த நாள் பரிசுகள் ... என
எல்லாவற்றையும் என்னிடமே
திருப்பிக்கொடுத்து விட்டாய் ....

எப்போது தரப்போகிறாய் ..?
உன்னைப்பார்க்கும் போதெல்லாம்
நான் கொடுத்த முத்தங்களை ..?

உன் நினைவுகள் மட்டும்....


இதுவரை.....
நான் நடை பழகிய தெருக்கள் ...
மண்டிபோட்டு குண்டு
விளையாடிய மைதானங்கள் ...
முண்டியடித்து முதல் காட்சி பார்த்த
திரையரங்குகள் ...
என் நிழலில் ஓய்வெடுத்த மரங்கள் ...
நான் குதித்து குளித்த நதிகள் ....
எட்டி உதைத்தாலும்
ஏற்றுக்கொள்ளும் மிதிவண்டி ...
என்னை தொலையாமல்
பார்த்துக்கொண்ட புத்தகங்கள் ...
என்னை தொல்லை செய்யும் தோழிகள் ....
என்னை தூங்க வைத்த தூளிகள் ..
என்னை தாங்கிக்கொண்ட நாற்காலிகள் ..
தமிழ் கற்றுக்கொடுத்த பள்ளிக்கூடம் ...
அன்பு கற்றுக்கொடுத்த அம்மா ...
அனைத்தும் கற்றுக்கொடுத்த நட்பு ....
எல்லாத்தையும் ...
எல்லாத்தையும் .....
விட்டு.... விட்டு...
வந்துவிட்டேன் .... ஆனாலும் ...
உன் நினைவுகள் மட்டும்
என்னை விட்டு விடாமல்
என் நிழல் போல கூடவே வருகிறது ......!!!

இப்போது எப்படி இருப்பாய் நீ ....?


ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும்
ஒவ்வொரு நாளின் முடிவிலும்
உன் பெரிய புன்னகையோடும்
என் சின்ன கோபத்தோடும்
நகர்ந்த நாட்கள்
உனக்கு நினைவிருக்கிறதா ..?

என் மிதிவண்டி சத்தத்திர்க்காக நீயும் ...
உன் கொலுசுகளின் ஓசைக்காக நானும்....
காத்திருந்த காலங்கள்
உனக்கு நினைவிருக்கிறதா ..?

என் கவிதை புத்தகங்களை நீயும்
உன் கல்லூரி புத்தகங்களை நானும்
மாறி மாறி படித்த
மறக்க முடியாத நாட்கள்
உனக்கு நினைவிருக்கிறதா ..?

காலம் நம்மை பகடைக்காயாய்
உருட்டி விளையாடியதில்
திசை தொலைத்த காற்றாய்
காணாமல் போனோம் ...
உருண்டோடிய காலத்தின் ஒரு நாளில்
ஒரு பேருந்து நிறுத்தத்தில்
உன்னை கண்ட போது...

கழுத்தில் தாலியும் ..
கையில் குழந்தையுமாய்
ஒரு பழைய கவிதையாய்
பாவமாய் நின்றாய் ....

ஆனாலும் ...

சந்தோசம் அதிகமாகவே இருந்தது
உன் குழந்தையின் முகத்தில் ....!

இதுவரை எத்தனையோ கண்கள்
என்னைக்கடந்து போய்விட்டது
இருந்தாலும் ...
உன் முதல் பார்வை
இன்னும் பத்திரமாய் இருக்கிறது
என் கண்களுக்குள் ....

இதுவரை எத்தனையோ
உதடுகள் என் பெயரை
உச்சரித்துப் போயிருக்கிறது
நீ உச்சரித்தது மட்டும்
இன்னும்
எதிரொலித்துக்கொண்டிருக்கிறது...

இன்னும் பல
காலங்கள் கடந்து விட்டது...
உன்னை பார்த்தும் பல காலங்கள்
ஆகிவிட்டது ....

இப்போது நீ
எப்படி இருப்பாய்..?

எங்கிருந்தாலும் ..
எப்படி இருந்தாலும் ...

நீ நன்றாக இருக்க வேண்டும்
என்பதே என் இப்போதைய
கனவும் கூட ...

நீ என்னை மறந்திருந்தாலும் சம்மதம்
நான் நினைத்துக்கொள்கிறேன் ...
உன் குழந்தையின்
முகத்தில் பார்த்த சந்தோசம்
உன் முகத்திலும் வந்திருக்குமென .....!

பொம்மைகள் ....!

 

 

அமைதி இறந்து கிடக்கும் வீட்டில்
உயிரோடு இருக்கின்றன ....
குழந்தைகள் வைத்து
விளையாடும் பொம்மைகள் ....!

கடிதம்.....!!!

       
ஒரு முறைக்கு பல முறையாய்
படித்துப்பார்க்க ....

புத்தகங்களுக்குள் வைத்து
கல்லூரிக்கு எடுத்துச்செல்ல ....

வீடு மாற்றும் போதேல்லாம்
பத்திரமாய் பாதுகாக்க ...

செல்லரித்துப்போன இடங்களில்
சொல் நிரப்பி காப்பாற்ற ....

கையெழுத்தின் அழகில்
சில நேரம் மயங்கிக்கிடக்க ....

எழுத்துப்பிழையான இடங்களை
சுட்டிக்காட்ட ....

எழுதிய தேதியில் இருந்து
இன்றைய தேதி வரை கணக்கிட ....

படித்துக்கொண்டிருக்கும் வேளையில்
யாராவது வந்துவிட்டால்
பதற்றமடைந்து மறைத்து வைக்க ...

ஒவ்வொரு எழுத்தின் இடைவெளியிலும்
உன் முகம் பார்த்து ரசிக்க .....

இதுவரை என்னிடம் இல்லை ...
நீ எழுதியதாய் ஒரு கடிதம் கூட .....!