Showing posts with label காதல் துளிகள். Show all posts
Showing posts with label காதல் துளிகள். Show all posts

24 November 2017

நுரைப்பெண்


குடம் தீர்க்கும் தாகமெனக்கு
நீ சங்கடையில் நீட்டுகிறாய்

கரும்புதின்ன வந்தவனிடம்
பல்குச்சியை திணிக்கிறாய்

பெரும்பசியில் இருப்பவனுக்கு
ஒரு பருக்கை கொடுக்கிறாய்

அடைமழைக்கு காத்திருப்பவனுக்கு
பன்னீர் மட்டும் தெளிக்கிறாய்

வார்த்தைகளில் நனைய வந்தவனுக்கு
மெளனக்குடை பிடிக்கிறாய்

உதடுகள் குவிந்த நொடியில்
முத்தத்தடை விதிக்கிறாய்

சுமக்கமுடியா காதலும்
எழுதமுடியா கவிதைகளுமாய்
நிரம்பி வழியும்
நானென்ற கோப்பைக்குள்
நீ நுரையாய்த் ததும்புகிறாய்....!


தீராத முத்தங்கள்


என் தலையணை உறைக்குள்
நிறைந்து கிடக்கும் முத்தங்களில்
நேற்றைய கனவில் நீ கொடுத்ததை
தேடி எடுத்தேன்

உன் உதடுகளின்
ஈரப் பிசுபிசுப்பில் இன்னும்
உறையாமல் இருந்தது அம்முத்தம்

இதையெனக்கு கொடுத்தபோது
எத்தனை விதமான வெட்கத்தில்
நீ இருந்தாய் என நானறிவேன்

உன் கண்களில் விழுந்து
கழுத்தடியில் தொலைந்து
உயிர்ப்பள்ளத்தில்
நான் காணாமல் போனதை நீயறிவாய்

உதடுகள் பிரிந்த அந்த நொடியில்
உள்ளுக்குள் வயதின் பெருங்காடொன்று
பற்றியெரிந்ததை நாமறிவோம்

கொடுக்க கொடுக்க தீராத
முத்தங்கள் உன்னிடத்திலும்
தின்ன தின்ன பசியாறாத உதடுகள்
என்னிடத்திலும் இருக்கின்றன

முத்தங்களின் நினைவுகளை
எடுத்துப்பார்க்க இரவுகளும்
எழுதிப்பார்க்க கவிதைகளும்
இருக்கும் வரை நீயும் நானும்
நாமாகவே இருப்போம்.


நனையும் மனம்



உன் முத்தங்களைப் போலவே
பொசுக்கென பொழியும் மழையில்
நனைகிறது மனம்

இரவில் பொழியும் மழையில்
நீ அருகில் இல்லை
முந்தானை குடை பிடிக்க

ஜன்னலில் தெறிக்கும் துளிகளில்
சிதறுகிறது உன் சிரிப்பை போல
சில குட்டி மழைகள்

கன்னத்தில் விழுந்து
கழுத்திலிறங்கும்
ஒரு துளி பயணிக்கிறது

உன் விரல்களைப்போல
உன்னை நனைக்கும் மழைத்துளிகள்
தேனாய் மாறலாம்
என்னை நனைக்கும் மழைத்துளிகள்
நீயாய் மாறலாம்

இருளில் மிதக்கும் இரவைப்போல்
உன் நினைவில் மிதக்க வைக்கிறது
இந்த மழை...!

வாசித்துப் போ

ரோஜாக்களாலும்
சந்தனத்தாலும் செய்த
துளைகளற்ற இரட்டைப் புல்லாங்குழல்
உன் உதடுகள்

நான் வாய் வைத்து ஊதுகையில்
சங்கீதத்தோடு சேர்ந்து வெளிவருகிறது
உன் வெட்கமும்

வாசிப்பவன் திறந்திருக்க
புல்லாங்குழல் கொண்ட பூ உடலே
நீ ஏன் கண் மூடுகிறாய்

ராகங்கள் தடுமாறி
பாதைகள் தடம் மாறினாலும்
சம்மதம்

ஒருமுறை என்னைப் புல்லாங்குழலாக்கி
உன் உதடுகளால் முழுமையாய் வாசித்துவிட்டுப் போ ...!


என்னவாகும் வார்த்தைகள்


உன் குழிவிழும் கன்னத்தில்
இட்டு நிரப்ப நிறைய
முத்தங்கள் சுமந்து வருகிறேன்
நீயோ சிரிக்க மறுக்கிறாய்

உன் மடிமீது உறங்குமொரு
தருணத்தை நோக்கி தவமிருக்கிறேன்
நீயோ வரம் தராமல் விரதமிருக்கிறாய்

யாருமற்ற சாலையில்
உன் விரல் கோர்த்தபடி
நெடுந்தூரம் நடக்க நினைக்கிறேன்
நீயோ எதிர் திசையிலேயே பயணிக்கிறாய்

கவிதைகளோடு நானும்
கவிதையாய் நீயும்
பேச நினைக்கையில்
நீ மௌனத்தை துணைக்கு அழைக்கிறாய்

சொற்கள் நிறைந்த ஒரு சூழலில்
பிரியங்களின் விரல் பிடித்தபடி
உன்னை நானும்
என்னை நீயும்
தேடுமொரு நாளில்
நம் இருவருக்குமே நாம் கிடைக்காமல் போகலாம்
அப்போது சேர்த்துவைத்த வார்த்தைகள் என்னவாகும்...???


புதிதாய்க் கட்டியிருக்கும்
உன் வீட்டிற்குள் நுழைந்த எல்லோரும்
வீட்டை சுற்றிப் பார்த்து
சந்தோசப்படுகையில்
நான் மட்டும் வருத்தப்படுகிறேன்

நீ சுற்றிச் சுற்றிப் பார்க்கும்
அந்த கண்ணாடியாய்
நான் இருந்து தொலைத்திருக்கக்கூடாதா ...?


ரொம்ப நேரமாக
யோசனை செய்தும்
எழுதவே முடியவில்லை
உன்னைவிட அழகான
ஒரு கவிதையை


சின்ன வயதில்                                                                                                                  
பலூன் வாங்கித்தரச்சொல்லி                                 
அழுது அடம்பிடித்ததுபோல்

இப்போது அழுது
அடம்பிடிக்க வேண்டும்போல் உள்ளது
என்னைக்கடந்து போகும்

உன்னை வாங்கித்தரச்சொல்லி ...!


23 November 2017

தூரத்தில் நாம் இருப்போம்

தூரத்தில் பெய்யும் 
மழையின் சாரலாய் 
எப்போதும் மனதை ஈரமாகவே 
வைத்திருக்கிறது உன் நினைவுகள் ....!

அறை முழுவதும்  நிறைந்து கிடக்கும் 
அமைதியை அறுக்கும் 
கடிகாரத்தின் முட்களைப்போல
எப்போதும் இசைத்துக்கொண்டிருக்கிறது 
உன் மௌனங்கள் ....!

இருளை விரட்டும் 
மெழுகுவர்த்தியின் வெளிச்சம் போல் 
உறக்கத்தை விரட்டி 
உட்கார்ந்து விடுகிறது 
கண் வழி புகும் உன் கனவுகள் ...!

யாருமற்று தவிக்கும் தனிமையில் 
என்னோடு பேசியபடி 
நிழலாய் கைகோர்த்து நடக்கிறது 
உன் விரல்கள் ...!

தேனில் நனைந்து 
பூக்களில் தவழ்ந்து 
காதுக்குள் வந்து குதிக்கிறது 
காற்றில் மிதந்து வரும் 
 உன் குரல்கள்...!

என் வாழ்க்கைப்  புத்தகத்தின் 
எல்லா பக்கங்களிலும் 
பிழையில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது 
உன் பெயர் ....!

நேசிக்கவும் வாசிக்கவும் 
நானிருக்கிறேன் .....
காதல் தொட்டுக்கொண்டே இருக்கும் 
தூரத்தில் நாம் இருப்போம்...!


கா ... த ...ல்



உன்னை நனைத்து
என்னை துவட்டுகிறது ...

நீ நடக்க
எனக்கு குடைவிரிக்கிறது ...

உன்னை கவிதையாக்கி
என்னை மொழிபெயர்க்கிறது ...

நீ உறங்க
எனக்கு தாலாட்டுகிறது ...

உன்னை சிரிக்கவைத்து
என்னை நிரப்புகிறது ...

நீ சிவக்க
எனக்கு சிலிர்க்கிறது ...

உன்னைப் படைத்து
என்னைப் படுத்துகிறது ...

உன்னில் தொடங்கி
உன்னிலே முடியும்
ஒரு வாழ்வின் மீதிப் பாதியில்
இன்னும் மிச்சமிருக்கிறது ...

கா ... த ...ல்

25 June 2017

புதுப்பித்த பழைய புன்னகை

இத்தனை
வருடங்களுக்குப் பிறகு
நீ வந்தபோது நெகிழ்ச்சியால்
நிரம்பியது என் வீடு

உள்நுழைகையில்
நீ எந்தக்காலெடுத்து வைத்தாயோ தெரியாது என்கால்கள் தரையிலில்லாமல்
இருந்ததை நீ பார்த்திருக்க மாட்டாய்

நீ குடித்துவிட்டு வைத்த பழச்சாற்றின் கடைசிச்சொட்டில் நூற்றுக்கணக்கான முத்தங்கள் மிதந்ததை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஆட்டோகிராப் நோட்டில்
அடைப்புக்குறிக்குள் நீ எழுதித்தந்த வார்த்தைகளை அதே வெட்கத்துடன்தான் இப்போதும் படித்தாய்

புரட்டிப்பார்த்த புகைப்பட தொகுப்பில்
உன்படத்தில் கசிந்த நினைவுகளின் மேல்  புதுப்பிக்கிறாய்
பழைய புன்னகையை

விடைபெற்று வீடுதிரும்ப
பேருந்தில் புறப்பட்டபோதுதான்
புரிந்துகொண்டேன்
போய்க்கொண்டிருப்பது
நீ மட்டுமல்ல என்பதை...!


24 May 2017

கடைசி சொட்டு

புன்னகையின்
கடைசி சொட்டில் மொட்டவிழும் வெட்கத்தில்
பூக்கிறது உன் சம்மதம்

மீண்டுமெப்போதென கேட்குமென்
விழிகளுக்கு அடுத்த நொடியென
பதில் கூறுகிறது உன் இமைகள்

யாருமிழுக்காமல் அழகுத்தேராய்
அத்தனை அசைவுகளோடும்
நடக்கிறது உன் உடல்

கடந்து செல்லும் காற்றை
கிறுக்கு பிடித்து சுத்த விடுகிறது
மயில் தோகையாய் உன் கையசைப்பு

ஏகாந்த மழையும்
பகல் நட்சத்திரங்களும்
பழுத்த நிலவுகளும்
கணக்கில்லாமல் பொழிகிறது என்னுள்...!



13 May 2017

யாழ்

யாரும் மீட்டாத
யாழென நீயும்
யாரும் திறக்காத
புத்தகமாய் நானும்
ஒரே கூரையின்
இரு மூலைகளில்
சிறையிருக்கிறோம்

நீயிருக்கும் கண்ணாடி
பேழைக்குள்ளும்
நானிருக்கும்  அலமாரிக்குள்ளும்
படிந்துகிடக்கும் எச்சத்தில்
இன்னும் மிச்சமிருக்கக்கூடும்

அருகருகே அமர்ந்து
கூடிக்களித்த பொழுதுகளின்
புதைக்க முடியா நொடிகள் ...!


05 February 2017

வனாந்தரத்தின் திசை

அந்த வனாந்தரத்தின்
திசையெங்கும் வீசும் காற்றில்
பரவிக்கிடக்கிறது உன் வாசம்

மகரந்தப் பூக்களின் இதழ்களில்
ஒட்டியிருக்கும் சிவப்பு
உன் இதழ் பட்டு வந்தவைதாம்

உன் விரல்கள் தடவிப்போன 
மயக்கத்தில் ஊதா நிறப்பூவை 
உயிர்ப்பித்திருந்தது ஒரு கரும்பாறை

உன் முந்தானை பட்ட நொடியில்
பற்றி எரியத்தொடங்கியது
ஒரு பச்சை மரம்

மயிலொன்று நடந்து வருதென
ஓடி மறைந்தன
சில மான்குட்டிகள்

உன்னால் நிகழ்ந்த எல்லாவற்றையும் 
கண்டுபிடித்த போதுதான் உணர்ந்தேன்
நான் தொலைந்து போயிருந்ததை..!


பொம்மை

நீ
நொண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது 
சிதறிய உன் அழகையெல்லாம் அள்ளிவந்து 
பொம்மையொன்று செய்தேன்

நீ
கண்ணாமூச்சி ஆடும்போது உன்
கண்களில் கட்டிய துணியை 
அந்த பொம்மைக்கு ஆடையாக்கினேன்

நீ
பல்லாங்குழி விளையாடிய போது
குழிகளில் நிரம்பிய உன் வெட்கத்தை 
அந்த பொம்மைக்கும் ஊட்டி விட்டேன்

நீ
ஊஞ்சலாடிய மரத்தடியில்
விழுந்து கிடந்த உன் சிரிப்புகளை
கொலுசுகளாக்கி பொம்மைக்கு
மாட்டி விட்டேன்
உன்னுடைய எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டு நீயாகவே 
மாறிப்போயிருந்த அந்த பொம்மை

இப்போது
என்னை பொம்மையாக்கி
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ...!


தராமல் போன முத்தங்கள்

மார்கழி மாதத்தின்
அதிகாலைக் குளிராய்
எங்கும் வியாபித்திருக்கிறாய்
நீ
இழுத்து போர்த்திக்கொள்ளும்
கம்பளியாய்
ஆவி பறக்க பருகும்
தேநீரின் குடுவையாய்
பருவம் தப்பிப் பொழியும்
மெல்லிய மழையாய்
உரசிய கைகளுக்குள்
உண்டாகும் இளம்சூடாய்
இருப்பதும் நீயேதான்
நீளும் கனவிலும்
விடியத்தொடங்கும் இரவிலும்
இன்னும் மிச்சமிருக்கிறது உறக்கம்
நீ தராமலே போன
முத்தங்களைப்போல ....!!!

உதடுகளால் அடிக்கோடிடு

மொழிகள் தயாரித்த வார்த்தைகளை
கடன் வாங்கி கோர்க்கிறேன்
நீ கவிதையென ரசிக்கிறாய்

முற்றுப்புள்ளியில்
முடிந்துவிடுமென நினைத்தேன்
நீ முத்தம் வைத்து தொடர்கிறாய்

தலைகோதியதாய்
சிலிர்க்கிறது என் கவிதைகள்
நீ தொடுதிரையில்
தொட்டுத் தொட்டு படிப்பதால்

உனக்கு பிடித்த வார்த்தைகளை
உதடுகளால் அடிக்கோடிடு

பிடிக்காத வார்த்தைகளை
விரல்களால் தடவிக்கொடு...!!!


07 November 2016

கிளையெங்கும் கசியும் காதல்

உயர்ந்து வளர்ந்த மரமொன்றின்
தனித்த கிளை நான்
சிறகு விரித்தபடி வந்தமர்ந்த
சிறு பறவை நீ

அலகு தவிர்த்து
கண்களால் கொத்துகிறாய்
கிளையெங்கும் கசிகிறது காதல்

பட்டுப்போன மரம்
துளிர்விடத் தொடங்குகிறது
உன் பார்வை பட்டுப்போன
நொடியிலிருந்து

இளைப்பாற வந்த பறவையின்
சிறகுக்குள் இளைப்பாறுகின்றன
மரமும் கிளைகளும்

ஒற்றை மரத்திற்கான ஈரம்
பாய்கிறது மொத்த வேர்களுக்குள்

இறுதியில் உந்திப் பறக்கிறாய்
காய்ந்து உதிர்ந்த இலையொன்று
உயிர்த்தெழுகிறது


21 October 2016

ஒரு கவிதை சொல்

நீண்ட காலம் கழித்து ஊடகத்தின் வழியே
பேசிய என்னிடம் என் அடையாளத்தை மறக்காமல்

"ஒரு கவிதை சொல்" என்கிறாய்
எதைப்பற்றி எனக் கேட்டால்
என்னைப்பற்றி என்கிறாய்

உன்னைப்பற்றி
ஒரு கவிதையில்
சொல்லிவிட முடியுமா என்ன?


03 June 2016

பேசிக்கொண்டிருக்கும் நிழல்கள்




வெற்றிடம் நிரம்பித் ததும்பும்
மனதின் இருளடர்ந்த பக்கங்களில்
ஒரு சிறு வெளிச்சமென வந்து
முகம் காட்டு

யாரொருத்தியைப் போலவும்
இல்லாமல் நீ
நீயாக மட்டும் நிஜம் சுமந்து வா

உனக்கான கனவுகளையும்
எனக்கான ஆசைகளையும்
கலந்து செய்வோம்
நமக்கானதொரு காதலை

உன் அன்பின் எடைக்கு
என் காதலையும்
என் காதலின் எடைக்கு
உன் முத்தங்களையும்
பரிமாறிக்கொள்வோம்

உன்னோடு நானும்
என்னோடு நீயும்
அவரவர் வீடு திரும்பும் வேளையிலும்
கைகோர்த்தபடி அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கட்டும்
நம் நிழல்கள் ...!!!