18 October 2017

தொலைந்துபோன_தீபாவளிகள்


பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் ஊருக்கு ஊர் மாறுபட்டாலும் இந்தியா முழுவதும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. மற்ற பண்டிகைகள் விதவிதமாய் கொண்டாடினாலும் தீபாவளியை மட்டும் பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் முறையும் மகிழ்வும் கூட. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் கொஞ்சம் சவாலும் கொஞ்சம் பயமும் கலந்தே இந்த பண்டிகை கடந்து போகும். பெரிய அளவில் செலவு வைக்கும் பண்டிகைதான் ஆனாலும் நினைவுகளில் எப்போதும் பொழிந்துகொண்டிருக்கும் ஒரு தீராத மத்தாப்பைப்போல வெளிச்சங்களால் நிரம்பியவை.

திரியைக்கிள்ளி தீ வைத்தவுடன் சத்தமிட்டு வெடிக்கும் வெடியைப்போல தீபாவளி என்ற சொல்லுக்குள் தான் எத்தனை வெடிகள் எத்தனை சத்தங்கள் புதைந்து கிடக்கின்றன. எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள பல கதைகளையும், நினைத்து நெக்குருக பல நினைவுகளையும் சில தீபாவளிகள் கொடுத்திருக்கும். வளர்ந்து படித்து முடித்து பட்டம்வாங்கி கல்யாணமும் முடித்து குழந்தை பேரன் பேத்திகளையும் பார்த்த பின்பு நினைத்துப்பார்க்கும் தீபாவளிகளை விட பால்யத்தின் பரணில் வெடிக்காத பட்டாசுகளைப்போல தப்பிவிட்ட தீபாவளிகள் தான் கைகளில் ஒட்டிக்கொண்ட மருந்துகளைப்போல பிசுபிசுப்பாய் எப்போதும் நினைவுகளில் இருந்து அகலாதவை.

அவரவர் கொண்டாடி, சந்தோஷித்து, திளைத்து, இழந்து, களைத்து, மறந்து, வெறுத்து ஒதுக்கிய பண்டிகைகளும் , இப்படி கொண்டாட வேண்டுமென  பலநாட்கள் திட்டமிட்டு எல்லாம் வாங்கி குவித்து எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த நாளுக்குமுன் எதிர்பாராமல் உறவுகளில் ஒருவர் இறந்துவிட அத்தனை கனவுகளும் நொடியில் உடைந்து துக்கம் வந்து அப்பிக்கொண்ட பண்டிகைகளையும் அவரவர்களால் தான் சொல்லிக்கொள்ளவோ நினைத்துப்பார்க்கவோ முடிகிறது. அப்படி சொல்லிக்கொள்ள பத்தாயிரம் வாலா போல என்னிடமும் பல கதைகள் நீண்டுகொண்டே போனாலும் கேட்பதற்கு காதுகள் இல்லாத காரணத்தால் நினைத்துப்பார்க்கிறேன்.

நிச்சயமாய்… தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த வயதுகளில் பட்டாசு சத்தம் கேட்டு அதைவிட சத்தமாய் அழவோ, அல்லது அந்த திடீர் சத்தத்தில் திடுக்கிட்டு எழவோ செய்திருப்பேன். ஆனால் இது தீபாவளி , இது பட்டாசு, இதை இப்படி வெடிக்கணும், இந்த மத்தாப்பை இப்படி பிடிக்கணும் என தெரிந்து கொண்ட வயதிலிருந்து இன்று வரை எத்தனையோ தீபாவளிகளைக் கடந்துவந்த பின்னும் அந்த சிறுவயதின் கொண்டாட்டக்கனவுகள் இப்போதும் துளிர்க்கின்றன. பத்த வெச்ச நெலபுருசு போல பொங்கி மேலெழும்புகின்றன சந்தோசங்கள்.

இப்போது காலம் வளர்ந்து நேரம் சுருங்கிவிட்ட காரணங்களால் சின்ன சின்ன குழந்தைகளைக்கூட துணிக்கடைகளுக்கு அழைத்துப்போய் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி போட்டுப்பார்த்து ரெடிமேடாக எடுத்து வந்துவிடுகிறோம். ஆனால் எங்கள் பால்யத்தில் அந்த வாய்ப்புகள் இல்லை ஆனால் அதைவிட அழகான, வார்த்தைகளால் உணர முடியாத, சொல்லிப் புரியவைத்துவிட முடியாத பல சந்தோசங்கள் கொட்டிக்கிடந்தன. அப்போதெல்லாம் இத்தனை ரெடிமேடு துணிகள் கிடையாது, துணி எடுத்துதான் தைக்க வேண்டும். எங்களிடம் எதுவும் கேட்காமலேயே அவர்களாகவே துணிகளை எடுத்துவந்துவிடுவார்கள். எனக்கும் அண்ணனுக்கும் ஒரே நிறத்தால் பேண்ட்டும் வெவ்வேறு நிறத்தில் சட்டை துணியும் வாங்கிவருவார்கள். தங்கைக்கு தைப்பதென்றால் பட்டுப்பாவாடை-சட்டை, ரெடிமேடெனில் வெல்வெட் ஆடை. ஒருமுறை எங்கள் இருவருக்கும் நல்ல அடர்மஞ்சள் நிறத்தில் பேண்ட் துணியும் எனக்கு சிகப்புகலர் சட்டை துணி அண்ணனுக்கு பச்சைகலர் சட்டை துணியும் வாங்கிவந்தார்கள். அதைக்கொண்டு போய் டெய்லரிடம் கொடுத்து அளவு கொடுக்க நின்ற போது அவர் மேலும் கீழும் ஒரு மாதிரியாய் பார்த்துவிட்டு “தீபாவளியே உங்களுக்குதான்டா" என்றார், அந்த வயதில் அந்த வார்த்தைகள் வெட்கத்தை மட்டுமே கொடுத்தன. இப்போது அந்த காம்பினேஷனில் உடை அணிந்தால் எப்படி இருக்குமென நினைத்துப்பார்த்தால் பல மாடுகளும் சில மனிதர்களும் தெறித்து ஓடும் காட்சி அப்பட்டமாய் கண்களுக்குள் வந்து போகிறது.

துணியை தைக்க கொடுத்துவிட்டு வந்த அடுத்த நாளிலிருந்து நினைப்பெல்லாம் டெய்லரிடமே இருக்கும். "இந்நேரம் நம்ம துணியை எடுத்திருப்பாரா? அண்ணனுக்கு முதல்ல தெப்பாரா இல்ல எனக்கா? ஐயையோ சட்டைக்கு என்ன கலர் பட்டன் வைக்கணும்னு சொல்ல மறந்துட்டமே, ஒருவேளை தீபாவளிக்குள்ள சட்டை தைக்கலைன்னா நாம என்ன பண்றது?" என்னும் விதவிதமான கேள்விகள் சங்கு சக்கரம்போல சுழன்றுகொண்டே இருக்கும். ஒருவழியாய் துணிகள் தைத்து வீட்டுக்கு வந்ததும் போட்டுப்பார்ப்போம், யாராவது "உன்னுடையதை விட அண்ணனுது நல்லா இருக்குன்னு" சொல்லிட்டா வரும் பாருங்க ஒரு கோவம் வீடு ரணகளமாகும் கடைசியில் அடிவாங்கி என் உடம்பு ரணமாகும்.

வழியும் எண்ணெய் காதுக்குள் குறுகுறுக்க, தலையில் தேய்த்த அரப்பு வாய்க்குள் புகுந்து கசக்க குளித்துவிட்டு வந்து போட்ட புதுத்துணியை எல்லோர்கிட்டையும் காட்டனும்ல, ஒவ்வொரு நண்பர்கள் வீடு சொந்தக்கார வீடாக போய் காட்டிவிட்டு அவர்களின் வாசலில் ஒரு பட்டாசைப் பற்றவைத்துவிட்டு, அவர்கள் கொடுக்கும் இனிப்பை மென்றுகொண்டே  நோம்பிக்காசு கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வந்தால் குளித்துவிட்டு வந்திருக்கும் பாட்டி நாங்கள் கேட்காமலேயே தன் சுருக்குப்பையிலிருந்து "நோம்பிக்காசு" என்னும் பெயரில் எடுத்து நீட்டும் ஐந்துரூபாயோ பத்துரூபாயோ இனி எத்தனை ஜென்மமெடுத்தாலும் சம்பாதித்துவிட முடியாதவை. அந்த தீபாவளிகள் தான் புகையை விட அதிகமாய் நினைவுகளையும் சத்தங்களைவிட அதிகமாய் சந்தோஷங்களையும் நிரப்பிவைத்தவை. தனித்தனி குடும்பங்களாய் வாழ்வதை பெருமையாய்க் கூறிக்கொள்ளும் இன்றைய வாழ்வில் கைப்பேசியில் வந்துவிலும் ஜிப் பைல்களில் வெடிக்கின்றன டெக்கனாலஜி பட்டாசுகள்.

பெரிய பெரிய ஷாப்பிங் மால்களுக்கு போகும்போது நமக்கு வேண்டியவைகளை எடுத்துப்போட ஒரு பிளாஸ்டிக் கூடை வைத்திருப்பார்களே அப்படியான ஒரு கூடை இப்போதும் எங்கள் வீட்டில் இருக்கிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் அந்தக்கூடை முழுவதும் பட்டாசு வந்துவிடும். சிறுவயது என்பதால் வெடிகள் கொஞ்சமாகத்தான் இருக்கும். அண்ணனும் நானும் வெடிகளை பிரித்துக்கொண்டு வெடியில்லாத பட்டாசுகளையும் மூன்றாக பிரித்து தங்கைக்கென ஒரு பங்கு கொடுத்துவிடுவோம். அவள் வெடிக்க பயப்படும் நேரங்களில் அதையும் நாங்களே வெடிக்கவும் செய்வோம். துப்பாக்கிகளில் சுருள் கேப்பை போட்டு இப்படி வெடிக்கவேண்டுமென சொல்லித்தரும் சாக்கில் அதையும் பெரும்பாலும் நானே வெடித்துவிடுவேன். முக்கால்வாசியை தீபாவளிக்கு முந்தைய இரவே வெடித்துவிட்டு என் பங்கை தீபாவளி அன்று இரவு எடுத்து அவர்களுக்கு தராமல் வெடித்து அவர்களை வெறுப்பேத்துவதில் வரும் ஆனந்தம் இப்போது எத்தனை கோடிக்கு பட்டாசு வாங்கி வெடித்தாலும் கிடைக்காத ஒன்று.

சரமாய் வாங்கிவரும் பட்டாசுகளை தனித்தனியாய் உதிர்த்து திரிகளைக்கிள்ளி வைத்துக்கொண்டு கையில் பிடித்து தூக்கிப்போடும் ஊசிப்பட்டாசுகள் கொடுத்த உற்சாகத்தை இப்போது வெடிக்கும் பத்தாயிரம் வாலாக்கள் , ஐயாயிரம் வாலாக்கள் கொடுத்துவிடுவதில்லை. மதிய நேரத்தில் தெருத்தெருவாய் சுற்றி வெடிக்காத பட்டாசுகளைப் பொறுக்கிவந்து அதிலுள்ள மருந்துகளை மட்டும் தனியே சேர்த்து ஒரு காகிதத்தின் நடுவில் கொட்டி நாலு பக்கங்களிலும் நெருப்பு வைத்து அந்த நெருப்பு மருந்தின் கிட்டே வரும்போது தொற்றிக்கொள்ளுமொரு பரபரப்பு, மருந்தில் நெருப்பு பட்டவுடன் பொங்கிவரும் "புஷ்வானம்" என இந்த தலைமுறைக் குழந்தைகள் நெருங்கிவிடாத ஒரு சந்தோசத்தின் உச்சியில்தான் மிதந்தன எங்கள் தீபாவளிகள். பட்டாசு வாங்க வசதியில்லாத குழந்தைகள் ஏக்கத்தோடு பார்க்கும் தருணங்களில் அவர்களிடம் கொடுக்கும் சில கொள்ளு பட்டாசுகளிலும் சில மத்தாப்புகளிலும் எங்களைவிட அவர்கள் அதிகமான சந்தோசத்தை உணர்வார்கள். ஒருகாலத்தில் நாங்களும் பட்டாசுகள் வாங்க முடியாமல் தூரத்தில் வெடிப்பவர்களைப் வேடிக்கை பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்ட தீபாவளிகளும் உண்டு. மிச்சமிருக்கும் பட்டாசுகளை கார்த்திகை தீபத்தன்று வெடிக்க வேண்டுமென எடுத்து பத்திரப்படுத்திவிட்டு கார்த்திகை தீபம் எப்போ எப்போ என கேட்டு நச்சரித்த நாட்களின் நினைவுகள் பாம்பு பட்டாசு போல சுருள் சுருளாய் பொங்கிவருகிறது. சிறிய அணுகுண்டு ஒன்றை பற்றவைத்துவிட்டு சத்தத்திலிருந்து தப்பிக்க காது பொத்தியபோது ஊதுபத்தியால் சுட்டுக்கொண்டது , பட்டாசிலிருந்து தெரித்துவிழுந்த நெருப்புத்துண்டு புதுசட்டைக்குள் புகுந்து வயித்தில் காயமானது, எங்கோ பார்த்துக்கொண்டு பிடித்த மத்தாப்பின் மருந்து எரிந்து முடிந்து கையைச்சுட்டு கொப்பளமானது, கல்லுவெடியை வாங்கிக்கொண்டு வெடிக்கத்தெரியாமல் வெடித்து சிதறிய கற்களால் சுரீரென அடிவாங்கியதென எத்தனை எத்தனை நினைவுகள் பிஜிலி வெடிகளைப்போல விட்டு விட்டு வெடிக்கின்றன.

தீபாவளி முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நாளன்று தீபாவளிக்கு எடுத்த புதுத்துணியை போட்டுவரலாம் என கொடுத்திருக்கும் சிறப்பு சலுகைக்காகவே  இன்னுமொரு பண்டிகைபோல அந்தநாள் இனிப்பாய் விடியும். தெருவெங்கும் புத்தகப்பை சுமந்துபோகும் பள்ளிக்கூட பிள்ளைகளை அந்த ஒருநாள் மட்டுமே கலர் துணிகளில் பார்க்கமுடியும். அடுத்த தீபாவளி வரும் வரை  கல்யாணம், காதுகுத்து, கோவில் பண்டிகை என காத்திருக்கும் அத்தனை நல்ல விசேஷங்களுக்கும் அந்த புது துணிதான். அதைப்போட்டுக்கொண்டு உருண்டு, பெரண்டு, அழுக்காக்கி, கரையாக்கி அந்த ஒற்றை புதுத்துணியோடு வருடம் முழுவதும் விடியும் இரவுகள் இனி எந்த விடியலிலும் கிடைக்காது.

தீபாவளிக்கு இரண்டுநாள் முன்பே எல்லோருக்கும் சேர்த்து பலகாரங்களும், முறுக்குகளும் சுடும் அத்தைகளையும், சித்திகளையும் இப்போது பார்க்கமுடியவில்லை. ஊருக்குள் வந்து நிற்கும் தள்ளுவண்டியை ஆக்கிரமித்து தங்கள் தாவணி பாவாடைகளுக்கோ சேலைகளுக்கோ மேட்சாக வளையல்கள், கிளிப்புகள், ரிப்பன்கள், ஹேர்பின்கள் என வேண்டியதைத் தேடும் அக்காக்களையும், மருதாணியை அரைத்துக்கொடுத்துவிட்டு சிவந்துகிடக்கும் அம்மிக்கல்லுகளையும் பார்க்கமுடியவில்லை. தீபாவளிக்கு ரிலீசாகும் தங்கள் தலைவர்களின் படங்களில் அவர்கள் உடுத்தும் உடைகளைப்போலவே உடுத்திக்கொண்டு கொத்தாக கிளம்பும் நண்பர்கள் இப்போது தங்கள் குழந்தைகளின் புது துணிகளுக்கு மஞ்சள் வைத்துக்கொடுக்கும் வேலையை சலித்தபடி செய்கிறார்கள். கடந்து வந்திருக்கும் காலம் மிகச்சிறியதுதான் ஆனால் இழந்துவிட்ட சந்தோசங்கள் மிகப்பெரியவை. எப்போதும் வற்றாமல் நினைவுகளில் தேங்கி நிற்கும் இந்த தொலைந்துபோன தீபாவளிகளைப்போல.

இத்தனை வருடங்களைக் கடந்துவந்தபின்னும் இன்னும் மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் பெண்களும் சமையலறைகளும்தான். பண்டிகைகள் வந்துவிட்டால் என்ன சமைக்கணும், யார் யாருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, எதைச்செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள், என்ன செய்து அசத்தலாம் என அம்மாக்களின் யோசனைகளிலேயே பாதி தீபாவளி முடிந்துவிடும். காலையிலேயே குளித்து முடித்துவிட்டாலும் சமையலை சாக்காக வைத்து புது சேலையக் கூட கட்டமாட்டார்கள், சிறப்பு பட்டிமன்ற பேச்சுக்களை காதில் கேட்டபடி சமையல் வேலைகளை முடித்துவிட்டு மதியத்திற்கு மேல் கொஞ்சநேரம் கட்டிவிட்டு அவர்கள் தீபாவளியை சமையலறையோடு முடித்துக்கொள்வார்கள். அவர்களைப்போன்ற அம்மாக்களும், பெண்களும் திளைத்துக் கொண்டாடும் விதமாகவும், முடிந்த அளவு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, யாருக்கும் காயமாகாத தீபாவளியாய் இந்த தீபாவளி அமையட்டும்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ...!

---தனபால் பவானி
13.10.2017




#HAPPY_DIWALI #HAPPY_FESTIVAL #DIWALI_2017
#DIWALI #SAFE_DIWALI