19 December 2010

திருத்தம்



சரிந்து விழுந்த தாவணியை
சரி செய்தாய் ...
சரியாய் இருந்த மனது
சரிந்து விழுந்தது ....!

தவிப்பு



எங்கே தொடங்கி
எங்கே முடியவேண்டுமென
தெரியாமல் தவிக்கிறது
என் கவிதை ...

நம் முத்தங்களைப்போல ...!

பிச்சை



குழந்தைகள் தின
சிறப்பு நிகழ்ச்சி
உள்ளூர் தொடர்வண்டிகளில்
எடுக்கிறார்கள் ...

பேட்டியல்ல... பிச்சை ...!

நீர்க்குமிழி



குழந்தைகள் ஊதிவிடும்
நீர்க்குமிழிகளைப்போல்
ஓடிவருகிறது என் காதல்

உன் பாதம் பட்டு உடைவதற்காக...! 

உறக்கம்



இன்று இரவு உறக்கம்
வராது குழந்தைக்கு ...
மழை நனைத்துவிட்டுப் போயிருக்கிறது
பொம்மைகளையும் ....!
குழந்தையின் கனவுகளையும் ....!

தவணைமுறை இறப்பு



ஒருநாளைக்கு மூன்றோ நான்கோ
மொத்தமாய் இருபது நிமிடங்கள்
இறந்துபோகலாம் ....!

செலவழிக்கும்போது சில்லரைதான்
சேர்த்துப்பார்த்தால் சில நூறுகள்
தீர்ந்துபோகலாம் ....!

பகலில் உறுமலும் ...
இரவில் இருமலும் ...
சொல்லாமல் வந்துபோகலாம் ....!

செவ்வகப்பெட்டிக்குள்
சிறையிருப்பவைதான் உன்னை
சவப்பெட்டிக்குள் தள்ளிப்போகலாம் ....!

நுரையீரல் முழுவதும்
புகையீரலாய்
மாறிப்போகலாம் ....!

கைவிரல் அளவுதான்
சிகரெட் ஆகலாம்
அது ஊர் உனக்கு வைக்கும்
கொள்ளிக்கு நீயே ஒத்திகை
பார்ப்பதாகலாம்....! 

எதுவுமே நடக்கவில்லை ..!



படுக்கைதலையணைகள்
கலையவில்லை ....

அலமாரி புத்தகங்கள்
கிழியவில்லை ...

பொம்மைகள் இடம்
மாறவில்லை .....

சுவற்றில் புதிய
கிறுக்கல்கள் இல்லை ...

பலூன்கள் வெடிக்கவில்லை ...

டம்ளர் தண்ணீர்
கொட்டவில்லை ...

பூக்கள் பறிக்கப்படவில்லை ....
கைப்பேசிகள் வீசப்படவில்லை ...

இப்படி எத்தனையோ இல்லைகள் ...
இன்னும் சில நாட்கள்
இப்படித்தான் இருக்கும் ....

ஆம் ...
எங்கள் வீட்டு இளவரசி
ஊருக்குப் போயிருக்கிறாள்....!

படகு



எப்படிப் பயணித்தாலும்
கடைசியில் நீ என்ற
கரையில் தான் வந்து நிற்கிறது
நான் என்ற படகு ....!

தாகம்



தினமும்தான் குடிக்கிறேன்
உன் நினைவுத் தண்ணீரை...
ஆனாலும் ....
அடங்குவதில்லை
என் தனிமை தாகம் ...!

புன்னகை



அடுக்கி வைத்த ஆப்பிள்களைப்போல் 
அழகாய்த்தான் இருக்கிறது ...
உன் உதடுகளின் உச்சத்தில்
இருக்கும் புன்னகை ...!