25 June 2012

நண்பன்



அம்மா , காதல் என்ற சொல்லுக்கு அடுத்த படியாய் இந்த உலகில் உள்ள எந்த மொழியில் உச்சரித்தாலும் இனிக்கும் இன்னொரு சொல் நண்பன்.....! மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் எப்போதும் இருக்கும் உறவு இந்த நண்பன் உறவு. நண்பர்களாய் வருபவர்கள் நம் வாழ்க்கையை கடந்து போவார்கள் இல்லையென்றால் கற்றுக்கொடுத்து விட்டுப்போவர்கள். எனக்கு கிடைத்த ஒரு நண்பன் வாழ்க்கையை கற்றுக்கொடுத்து விட்டுப்போனான். அவன்தான் இந்த படத்தில் இருக்கும் துரைராஜ்.

நான் படித்த SSM டிப்ளமோ கல்லூரியில் ஒரு பெட்டிக்கடைக்காரரின் மகனாய் எனக்கு கிடைத்தவன், எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்தவன். டிப்ளமோ கல்லூரிகளில் முதல் வருடம் இரண்டு  அல்லது மூன்று வெவ்வேறு துறைகளைச்சேர்ந்த மாணவர்களை ஒன்றாக அமரவைத்து பாடம் நடத்துவது ஒரு சில கல்லூரிகளில் வழக்கம், அப்படித்தான் எங்கள் கல்லூரியிலும். நான் எலெக்ட்ரிக்கல் இவன் கம்ப்யூட்டர் பிரிவு, எங்கள்  நட்பு ஆரம்பித்தது ஒரு சண்டையில் தான், ஆனால் அதுதான் முதலும் கடைசி சண்டையுமாய் இருந்தது. அப்போது எங்கள் கல்லூரியில் வகுப்புகள் பற்றாக்குறையின் காரணமாய் ஒவ்வொரு பாடப்பிரிவு ( PERIOD) முடிந்தவுடன் வேறு வகுப்பறைக்கு செல்ல வேண்டும். செய்முறை வகுப்புக்கு போய்விடும் மற்ற மாணவர்களின் வகுப்புகளில் நாங்கள் சென்று அமர்ந்து கொள்வோம், இது எப்போது நடக்கக்கூடிய ஒரு வாடிக்கை, 

அப்படி ஒரு நாள் நான் வகுப்பு மாறும் வேளையில் இரண்டாவது பெஞ்சில் அமர்ந்து விட்டேன்.( அப்போது யார் வேண்டுமானால் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம் காரணம் அது கல்லூரியில் சேர்ந்த முதல் மாதம். ஆனால் அவர்கள் எப்போதும் இரண்டாவது பெஞ்சில் தான் உட்காருவார்கலாம், அது எனக்கு தெரியாது. ) இவன் தன் இன்னொரு நண்பனோடு (அருள் (DD&W) ) வந்து இது எங்கள் இடம் எழுந்திருங்கள் என்று கேட்டனர் அதற்கு நான் முடியாது நான் முதலில் வந்தவன் அதனால் நீங்க வேற சீட்ல போய் உக்காருங்கன்னு சொல்லிட்டேன். அவர்களும் என்னிடம் அதிகம் சண்டை போடாமல் எனக்கு  பின்னால் இருந்த சீட்ல போய் உக்காந்துட்டாங்க. இடைவேளையில் எல்லோரும் எழுந்து போகும்போதுதான் அதைகவனித்தேன், இவனுக்கு ஒரு கால் இல்லை, கட்டைக்கால் பொருத்திக்கொண்டு மெதுவாய் என்னைகடந்து  போனான் நான் இடிந்து போனேன். இவனிடமா சண்டை போட்டேனென மனசு குறுகிப்போனது. பிறகு அவன் திரும்பி வந்த போது மன்னிப்பு கேட்டு அவனை இரண்டாவது பெஞ்சில் அமரவைத்து நான் அவனுக்கு பின்னால் அமர்ந்து கொண்டேன். அப்போது அறிமுகமாகி நல்லா நண்பர்கள் ஆனோம், அன்று முதல் அவன் இரண்டாவது பெஞ்சிலும் நான் மூன்றாவதிலும் அமர்ந்தோம், அன்று இவனிடம் கற்றுக்கொண்டேன் எந்த சூழ்நிலையிலும் நாம் எதையாவது விட்டுக்கொடுத்தால் நமக்கு நல்லது நடக்குமென.

வகுப்பில் மற்ற எல்லோரையும் விட இவன் மீது அன்பும் நட்பும் அதிகமானது, எல்லாவற்றையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம் நட்பு இவ்வளவு அழகானது என்பதை இவன்தான் கற்றுக்கொடுத்தான். சினிமா, ஓட்டல், வீடு, ஆற்றுப்பாலம், என எல்லா இடத்திற்கும் என்னோடு வருவான், என்னை இவனுக்கு மிகவும் பிடித்துப்போனதால் கம்ப்யூட்டர் துறையில் இருந்து எலெக்ட்ரிக்கல் துறைக்கு மாற்றம் கேட்டான் ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. பொதுத்தேர்வு வந்தது, எனக்கு பிடிக்காத, புரியாத பாடங்கள் இரண்டு, கணிதம் 1&2 மற்றும் டெக்னிக்கல் டிராயிங் ஆனால் அந்த இரண்டையும் அவ்வளவு பொறுமையாகவும் தெளிவாகவும் கற்றுக்கொடுத்தான்,நன்றாக கணக்கு போடும் மாணவர்கள் கூட தோற்றுப்போக நான் எல்லா பாடத்திலும் பாஸாயிட்டேன் அதுக்கு காரணம் இவன்தான்.அப்போது நமக்கு தெரிந்த நல்ல விசயங்களை  மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை இவனிடம் இருந்த கற்றுக்கொண்டேன்.

தேர்வு முடிந்த மதியம் கில்லி படத்துக்கும் ஒருவாரம் கழித்து ஊட்டியும் போய் வந்தோம், இன்னும் சில நாட்களில் கல்லூரி திறந்து விடும் இரண்டாம் வருடம் அடி எடுத்து வைக்கப்போகிறோம் என்ற நினைப்பில் இடியை இறக்கியது அந்த செய்தி, இவன் காலைத் தின்று பசியாறாத புற்று நோய் மீண்டும் பரவத்தொடங்கி விட்டது என்பதை ஜீரணிக்க முடியவில்லை, என்னென்ன வைத்தியம் செய்தும் இவன் உடல் நலம் தேறவில்லை, பணக்கஷ்டம் வேறு, நான் கல்லூரி முதல்வரின் அனுமதியோடு எல்லா மாணவர்களிடமும் கொஞ்சம் கொஞ்சம் பணம் சேர்த்து இவன் அம்மாவிடம் கொடுத்தேன் அந்த நிலையிலும் இவன் " எதுக்கு மச்சி இதெல்லாம்" என சிரித்தான்  அப்போது என்னால் அழத்தான் முடிந்தது, மருந்து செலவுக்காவது ஆகட்டும் என சொல்லி வந்தேன். எந்த நிலைமையிலும் அடுத்தவர்களிடம் கை ஏந்தக்கூடாது என்பதை அன்று கற்றுக்கொடுத்தான்,

எவ்வளவோ  முயற்சி செய்தும் கடைசியில் இதே நாள் (ஜூன் 26) இறந்து போனான், பதறியடித்து ஓடி இவன் உடலை மட்டும் பார்த்த போது கதறித்துடிக்கத்தான் முடிந்தது, அன்று சிந்திய கண்ணீர் அளவில்லாமல் போனது, 
இத்தனை நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள ஒரே ஒரு நிலவு காணாமல் போனால் எப்படி இருக்குமோ...
இவ்வளவு பெரிய உலகிற்கு ஒளி கொடுக்கும் ஒரே ஒரு சூரியன் காணாமல் போனால் எப்படி இருக்குமோ...
அப்படி இருந்தது அந்த நாள், இவன் உடல் மீது அடுக்கப்பட்ட ஒவ்வொரு விறகும் இவனுக்கான கனவுகளாகவே எனக்குத் தோன்றியது,
எல்லாம் சாம்பலாய்ப் போனது.

எவ்வளவோ விசயங்களை கற்றுக்கொடுத்த இவன்தான் கடைசியில் இழப்பின் வலி எப்படி இருக்கும் என்பதையும் கற்றுக்கொடுத்தான்.
இன்று இவனது எட்டாவது வருட நினைவு நாள், இன்னும் இவன் என் நிழலோடு இருக்கிறான் என்பதை ஒரு உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவன் இன்று இருந்திருந்தால் நான் வேறு ஒரு ஆளாய் வெற்றி பெற்றிருப்பேன், இழப்புகள் வாழ்க்கையில் இயல்புதான், ஆனால் ஒரு சில இழப்புகள் ஒவ்வொரு நொடியும் வலி தரக்கூடியவை, அப்படித்தான் இவனும்.

19 June 2012

பாப்பு பாட்டி...!

 பாட்டி .....!

அம்மா என்ற மூன்று எழுத்துக்குப்பிறகு மனித உறவுக்கு  முதுகெலும்பாய் இருக்கும் இன்னொரு மூன்றெழுத்து 
 அக்கா ,தங்கை , மனைவி , மகள்,பேத்தி என எல்லா  மூன்றெழுத்து  உறவுகளும் உள்ளடக்கியதாய் உள்ள இன்னொரு தாய்.

எங்கள் பாட்டியை நாங்கள் பாட்டி என்று அழைத்ததில்லை ,ஒரு உறவு முறைகுறித்த அறிமுகப்படுத்தலுக்கு மட்டுமே அந்த வார்த்தையை உபயோகிப்போம், மற்றபடி அம்மா என்றே அழைப்பது வழக்கமாய் இருந்து வரும் பழக்கம்.
 அப்பாவுடைய அம்மா எப்போதும் எங்களுடன்தான் இருப்பார், இருப்பார் என்பதைவிட இருந்தார் என்பதுதான் இங்கு சரியாய் இருக்கும்.

நான் சின்ன வயசில் இருந்தபோது பாட்டியிடம் அவ்வளவு நெருக்கமில்லை, எல்லாமே அம்மாவுடன்தான். என் பள்ளிப்படிப்பு முடிந்த போது பாட்டியுடனான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமானது. இறக்கும் அன்று கூட பாட்டி வேலைக்கு சென்றுவிட்டு வந்தார் என்பதை இப்போது நினைத்தாலும் என் பாட்டியின் மீதான மதிப்பு கூடுகிறது. விடாமுயற்சி, உழைப்பு , நம்பிக்கை, சேமிப்பு என எல்லாவற்றையும் பாட்டியும் அம்மாவும்தான்  நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

விடியக்காலையில் சூரியனுக்கு முன்பாய் எழுந்து விடும் பாட்டி எங்கள் தெருவில் இருக்கும் எல்லா ஜமக்காலக் கடைகளையும் கூட்டி தெளித்து , கோலம் போட்டு  சுத்தம் செய்வார் அதன்பின் காமாட்சியம்மன் கோவிலுக்குள் தொடங்கும் வேலை மதியம் வரை தொடரும். பெரும்பாலும் பாட்டியின் காலை உணவு ஒரு டீ யுடன் முடிந்து விடும். எப்போதும் தன் வேலைகளை தானே செய்துகொள்வார். மதிய உணவுக்குப்பிறகு ஓய்வெடுப்பது பாட்டிக்குப்பிடிக்கும். பாட்டியின் சாயங்கால சந்தோசங்கள் எங்கள் வீட்டு தொலைக்காட்சிப்பெட்டிக்குள் இருந்தது சீரியல்களாய்.

பண்டிகை தினங்களில் பாட்டி ஆசிர்வதித்துக்  கொடுக்கும் அந்த ஒரு நூறு ரூபாயை இனி எந்த காலத்திலும் சம்பாதிக்க முடியாது.
பாட்டியின் சுருக்குப்பைக்குள் தான் இருந்தது அதற்க்கான சுகம். நாலணா எட்டணா காசுகளோடு சலசலக்கும் அந்த பத்து பைசா இருபது பைசா செல்லாக்காசுகளோடு பாட்டி நடந்து வந்தால் ஒரு பழைய தேர் தானாய் வருவதுபோல் தோன்றும். 

எதிரிக்கும் சிரிப்பை மட்டுமே பரிசாய் கொடுத்தவள் என் பாட்டி. ஊரில் புதிதாய் பிறந்த குழந்தைகளை பாட்டி குளிப்பாட்டி விடுவது வழக்கம், ஒரு சிலர் தங்கள் குழந்தையை எங்கள் பாட்டிதான் குளிக்க வைக்கவேண்டுமென காரில் வந்து கூட்டிபோவதும்  உண்டு.
அப்படி ஒரு சுகம் பாட்டியால் குளிக்க வைக்கப்படுவது. தீபாவளி திருநாளில் எங்களுக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு பாட்டி குளிக்கவைத்தால் பண்டிகையை விட நல்லா இருக்கும்.

அடிபட்டு வந்தால் மருந்து போட்டு தேய்த்து விடுவதும், அசந்து வந்தால் மடியில் போட்டு தூங்க வைப்பதுமாய் பாட்டி எங்களுக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்திருக்கிறாள். நினைத்தாலே கண்ணிரண்டும்  நீரில் மூழ்குகிறது. ஜனவரி 6 2012 சொர்க்கவாசல் திறப்பன்று 
பாட்டி தூக்கத்திலேயே இறந்து போனாள், துக்கம் விசாரிக்க வந்தவர்கள் பாட்டி சொர்கத்திர்க்கே போய்  விட்டார் என சொன்னார்கள், அவர்களுக்கு தெரியாது ஒரு சொர்க்கம் எங்களை விட்டுப்போனது.

பாட்டியில்லாத வீடு சாமி இல்லாத கோவிலாய் தெரிகிறது, 
பண்டிகை நாட்கள் நெருங்கும் போதும்,
எங்கோ ஒரு சுருக்குப்பை திறக்கிற போதும் ,
தெருக்கூட்டும் சத்தம் கேட்க்கும் போதும்,
யாரோ ஒரு வயதான பாட்டி காசுக்காக கையேந்தும் போதும்,
காவி கலர் புடவை கட்டிய ஒரு பாட்டியை பார்க்கும்  போதும்.
அந்த காமாட்சியம்மன் கோவிலை கடக்கும் போதும் 
பாட்டியின் நினைவு வருவதை தவிர்க்கமுடிவதில்லை.....!
===========================================





10 June 2012

நிராகரிப்பு



சில நேரங்களில் அன்பு கூட 
ஐந்து பைசா, பத்து பைசா போல 
செல்லாக்காசாகிவிடுகிறது ....

சின்ன சின்ன கோபங்கள் எல்லாம் 
குட்டி போட்டு... குட்டி போட்டு 
குடும்பமாய் வாழ ஆரம்பித்து விட்டால் 
சமாதானம் கூட சங்கடத்தில் போய் 
முடிகிறது....

இதயத்திற்கு நெருக்கமானவர்களின் 
தற்காலிக நிராகரிப்பு தான் 
நிரந்தர வலியைத்தருகிறது ....
அவை காயமில்லாமலே 
தழும்புகளைத் தந்துவிடுகிறது ....

தொலைந்துபோன சந்தோசங்களைக்கூட
ஒரு நாள் தோண்டியெடுக்க முடியும் 
நிராகரித்த நிமிடங்களை...????
===================================

07 June 2012

இடம் பெயர்தல்



இடம் பெயர்தல் என்பது எப்போதுமே மனதில் ஒரு நிரந்தர வலியைத்தந்துவிடுகிறது.
தாயின் கருவறையை விட்டு பூமிக்கு இடம்பெயர்வதைத்தவிர....

பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் மாறுவதும், கல்லூரிகளில் வருடங்கள் மாறுவதும் ஒருவகை இடம் பெயர்தல் என்றாலும் அவை அவ்வளவு வலியைக்கொடுப்பதில்லை.

பல வருடங்களாய் குடி இருந்த தெரு, ஊர் , மாநிலம் என மாறும்போது மனசு ஒரு குறிப்பிட்ட
இடத்தில் உட்கார்ந்து கொண்டு எழுந்து வர மறுக்கும். 

என் ஊரில் 15  வருடங்களாய் சொந்த வீட்டில் வாசித்துவிட்டு 15 வருடங்கள்  பக்கமுள்ள தெருக்களில் மட்டுமே மாறி மாறி குடி பெயர்ந்தோம். அதனால் நெருங்கிய சொந்தங்கள் , நட்பு வட்டாரம், டீ கடை , மளிகை கடை, பரோட்டா கடை, சினிமா தியேட்டர், கோவில்கள், திருவிழாக்கள், சாமி ஊர்வலங்கள்,கரகாட்டம், பாட்டு கச்சேரிகள், சில நேர சண்டைகள்,எதிர் வீட்டு பெண்கள் , மொட்டை மாடி சாயங்காலங்கள், நூலகம், பேருந்து நிறுத்தம் என எல்லாமே கைக்குள்ளே இருப்பதாய் ஒரு உணர்வு இருந்தது.வேலை காரணமாக சென்னைக்கு இடம்பெயர்ந்த போதோ பெங்களூருக்கு   இடம்பெயர்ந்த போதோ இத்தனை வலிகள் இல்லை, காரணம் விடுமுறையில் வந்து போவது அதே இடம் என்பதால்.

இப்போது இடம் பெயர்ந்திருக்கிறோம், அதே ஊர் தான் என்றாலும் அந்த 2 கீ மீ தூரம் எனக்கு சீனப்பெருஞ்சுவராய் தெரிகிறது. பழகிய எல்லாவற்றையும் தொலைத்து விட்டு புது இடத்திருக்குப்போனதாய் பொருந்த மாட்டேன்கிறது மனது. வேரோடு பிடுங்கிய மரத்தை வேறு இடத்தில் நட்டால் எப்படி வளரும்? புது இடம், புது மனிதர்கள், புது தெரு என எல்லாமே புதிதாய் இருக்கிறது.

தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை அம்மாவைத்தேடுவது போல் 
மிகவும் பிடித்த பொம்மையை தொலைத்த குழந்தைப்போல் 
முதன் முதலாய் காதலி கொடுத்த பரிசை தொலைத்த காதலன் போல் 
முதல் மதிப்பெண்ணை தவறவிட்ட மாணவனைப்போல்  
கடைசி பேருந்தை தவறவிட்ட பயணியைப்போல் 
பரிதவிக்கிறது மனசு பிரிந்த வந்த தெருவை எண்ணி....

எங்களுக்குப்பரவாயில்லை பைக் எடுத்தால் பத்து நிமிஷம் 
சைக்கிள் எடுத்தால் இருபது நிமிடம் அந்த தெருவை அடைய....

ஆனால் அம்மாவுக்கு....?
தினமும் வாசல் தெளித்து கோலமிடும் அம்மாவை இனி அந்த வாசல் காணப்போவதில்லை..
பால்காரரிடம் இருந்து  இனி அந்த அழைப்பு மணி வராது...
மொட்டை மாடி கொடிக்கம்பிகள் இனி எங்கள் துணிகளை உலர்த்தப்போவதில்லை ...
சோறெடுக்க வரும் காகம் ஏமாந்து போகுமே.... 
பக்கத்து தெருக்கோயில் அம்மாவுக்கு அந்நியமாகிவிட்டது...
எதிர் வீட்டு தோழிகளோடு இனி தாயம் ஆட முடியாது....
பாப்பாவுக்கு ஊஞ்சல் கட்டிய இடம் இனி எங்களுக்கு  இல்லை...
பழைய பாடல் கேட்டு , பழங்கதை பேச இனி அந்த திண்ணை கிடைக்கப்போவதில்லை...
இப்படி எத்தனையோ இழப்புகள் இருக்கிறது இடம் பெயர்தலின் காரணமாக......!

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறிவிட்டோம் என்ற போதிலும் 
சொல்ல முடியாத சோகங்களால் சுமையாகி இருக்கிறது மனசு....
அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வர சில காலம் பிடிக்கும்...!
==========================================================

05 June 2012


கேள்விகளால் நிரம்பிய இருளில் 
கிடக்கிறேன்...

பதில் வெளிச்சம் எங்குமே இல்லை ...
ஒரு தீக்குச்சியேனும் கொளுத்திப்போடுமா 
உன் விரல்கள் ...!


எல்லா பெண்களும் 
ஒவ்வொரு வாசத்தை வைத்திருக்கிறார்கள் 
நீ மட்டும் தான் வைத்திருக்கிறாய் 
தேவதையின் வாசத்தை ....!


குழந்தைகளின் உறக்கம் போல் 
ஒரு நாள் கூட விடிவதில்லை...   
அடுத்த நாளைப்பற்றிய 
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ...!



எல்லா கவலைகளையும்
மறக்க வைத்து விடுகிறது
குழந்தைகளின் புன்னகை....!  

பல வருடங்களாய் 
உபயோகப்படுத்திய 
மின்னஞ்சல் முகவரியின் 
கடவுச்சொல் மாறிவிடுகிறது 
சில நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட 
குழந்தையின் பெயரில்...!