28 June 2021

உதைபடும் கணங்கள்

இணையத்தில் உலககோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் போடப்பட்ட வெற்றிக்கான கோல்களென ஒரு வீடியோ பார்வைக்கு கிடைத்தது. கடந்த உலக கோப்பை முதல் 1930ல் நடந்த உலகக்கோப்பை போட்டிகள் வரையான தொகுப்பு. என்னதான் கலர்கலராய் பல போட்டிகளை பார்த்தாலும் கருப்பு வெள்ளை காலங்களில் நடந்த போட்டிகளை பார்ப்பது அலாதி சுகம். இப்போது போல அப்போதெல்லாம் அத்தனை பாதுகாப்புகளில்லை. கோல் போஸ்ட் பின்னாடியே கூட்டம் கூட்டமாய் உட்கார்ந்திருக்கிறார்கள். தங்கள் அணி கோல் போட்டதும் ஓடிப்போய் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தென கொண்டாடுகிறார்கள். பின்ன உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு என்றால் சும்மாவா.? இந்த மாதிரியான வீடியோக்களை, நடு இரவில் நடக்கும் போட்டிகளைக் கொட்ட கொட்ட விழித்திருந்து பார்க்கும் போதெல்லாம் கால்பந்து வ விளையாட்டின்  நினைவுகள் என்னை பந்தாக்கி உதைக்கின்றன.


பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புக்கான கட்டிடங்கள் கட்டத்தொடங்கியிருந்த போது இடவசதி இல்லாத  காரணத்திற்காக ஆறாம்வகுப்பில் சேரும் மாணவர்களுக்காக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மாடியில் சில வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.  விளையாட்டு பீரியட்களில் பெண்கள் பள்ளி மைதானத்தில் விளையாட மட்டும் அனுமதியில்லை. அதற்காக பெண்கள் பள்ளியிலிருந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து போக வேண்டும். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவுள்ள அந்த பள்ளி மைதானத்திற்கு போக இரண்டிரண்டு பேர்களாய் நிற்கவைத்து, வரிசைப்படி பெயர்வாசித்து நடக்க வைத்து கூட்டிப்போவார்கள் அதிலேயே பாதி நேரம் ஓடிவிடும். ஒருவழியாக ஆண்கள் பள்ளி மைதானத்திற்குள் நுழைந்தால் தாடி வாத்தியார் என்று அழைக்கப்படும் PT வாத்தியார் கையில் பிரம்போடு காத்துக்கொண்டிருப்பார். சீருடை போடாதவனுக்கு, வரிசையில் வராதவனுக்கு, முடி ஒழுங்கா வெட்டாதவனுக்குன்னு செமத்தியா அடி விழும். அவரை பார்த்தாலே பாதி பேர் பயப்படுவாங்க அவ்ளோ டெரர்ரான வாத்தியார்தான் ஆனா நல்ல மனிதர்.


PT பீரியட் வந்ததும் மைதானத்திற்கு போகும்போதே டீம் பிரித்துவிட்டு போவோம், கால்பந்து யார் யாருக்கு, கிரிக்கெட் பேட் யாருக்கு, ஹாக்கி யாருக்கென போகும் வழியிலேயே முடிவு செய்துவிட்டு போவோம், கோல் போட்டு கத்தி, சிக்ஸர் அடித்து கொண்டாடி , சட்டையை கழட்டி சுற்றியென எல்லாம் கற்பனைகளில் மிதக்கும். ஆனால்.. அப்போது தெரியாது எங்கள் கற்பனைக்குள் அத்தனை பெரிய ஓட்டை விழுமென்று. மைதானத்தை அடைந்ததும் ஆசிரியர் மீண்டும் பெயர் பட்டியல் படிப்பார், வரும் வழியில் யாராவது ஓடிவிட்டால் சிக்குவார்களாம். பெயர் பட்டியல் படித்ததும் எங்களை பல குழுக்களாக பிரிப்பார். நாங்களும் விளையாடத்தான் இப்படி பிரிக்கிறார் என நம்பி பிடித்த நண்பர்களோடு கூட்டு சேர்ந்து பல குழுக்களாக பிரிந்து கம்பீரமாய் நிற்போம். ஆசிரியர் எங்களைப்பார்த்து "நீங்க அந்த மூலையில் போய் புல்லு புடுங்குங்க, இந்த பக்கமா நிறைய முள்ளுங்க இருக்கு நீங்க போய் அதையெல்லாம் சுத்தம் பண்ணுங்க, நீங்க அந்த கோல் போஸ்ட் பக்கத்துல இருக்குற கல்லெல்லாம் பொறுக்குங்க, நீங்க போய் கிரவுண்ட்ல இருக்கிற பேப்பர், பிளாஸ்டிக் காகிதங்களையெல்லாம் பொறுக்குங்கன்னு" சொல்லி எங்களை செம்மையா பிரிப்பார்.


வாரம் வாரம் ஒரே ஆரவாரமாய் இருக்கும், சிலரெல்லாம் இந்த புல்லு புடுங்கும் வேலையை அத்தனை சிரத்தையோடு செய்வார்கள் என்னமோ கவர்மெண்ட் கோப்புகள்ள கையெழுத்து போடறமாதிரி அத்தனை பெருமிதம் அவர்கள் முகங்களில் தவழும். அப்போதெல்லாம் பத்தாவது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தான் கால்பந்து,  ஹாக்கி, கிரிக்கெட்ன்னு கொடுப்பார்கள். மற்ற மாணவர்களை நன்றாக "பயன்படுத்திக்கொள்வார்கள்". நானும் சில நண்பர்களும் எங்கள் வேலையை பார்த்துக்கொண்டே கால்பந்து விளையாடும் சீனியர்களை ஏக்கத்தோடு பார்ப்போம், எப்போதாவது பந்து நாங்கள் இருக்கும் பக்கம் வந்து விழுந்தால் அதை எடுக்க அத்தனை போட்டி போடுவோம். இப்போது இருப்பதைப்போல பல வண்ணங்களில் கால்பந்தெல்லாம் அப்போது இல்லை, பென்டகன் வடிவில் கருப்பு வெள்ளையில் மட்டுமே இருக்கும். அதை எடுப்பதற்கு,  தொட்டுப்பார்ப்பதற்கு அத்தனை போட்டிகள் நடக்கும். எப்போதாவது PT வாத்தியார் விளையாட்டு உபகரணங்கள் வைத்திருக்கும் அறைக்குள் அழைத்தால், பசியில் இருப்பவன் மிகப்பெரிய ஓட்டலுக்குள் அழைக்கப்பட்டதுபோல, நிர்வாணமாய் அழைந்தவனுக்கு மிகப்பெரிய துணிக்கடை கிடைத்ததைப்போல, நரகத்திற்கு செல்லும் வழியில் கால்தடுக்கி சொர்க்கத்தில் விழுந்ததைப்போல அத்தனை சந்தோஷமும், ஆச்சரியமும் மனம் முழுவதும் நிரம்பியிருக்கும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் மெடல்களையும், கோப்பைகளையும், கேடயங்களையும் பார்க்கும்போது நாமளும் நல்லா விளையாடி இந்த மாதிரி நிறைய வாங்கணும்னு நரம்பெல்லாம் ஒரு வெறி ஓடும். ஆனால்... பள்ளிக்கூடம் விட்டதும் கோலிகுண்டோ, கில்லியோ விளையாடி அம்மாகிட்ட விளக்கமாத்தாள அடிதான் வாங்குவேன்.


ஏழாவது படிக்க ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்துவிட்டோம். அப்போதும் எங்களுக்கு கால்பந்து கிடைக்காது. எப்போதாவது வாய்ப்பும் நேரமும் கிடைக்கும்போது பசங்கெல்லாம் காசு போட்டு சின்னதா ஒரு ரப்பர் பந்து வாங்கி கால்பந்து, லெக் கிரிக்கெட்னு விளையாடுவோம். கால்களின் விரல்களுக்கு நடுவே பந்தை மெட்டி எடுத்துவிடலாம், அத்தனை சிறிய பந்துக்கு அவ்ளோ பெரிய கோல் போஸ்ட் இருக்கும். கடினமான மேலுறையால் ஆன கால்பந்தொன்று யார்மூலமோ எப்போதோ கிடைத்தது, அதை வைத்து பந்தா காட்டிக்கொண்டு மழை வெய்யிலென பார்க்காமல் விளையாடி கால் வீங்கிய அனுபவங்களும் பலவுண்டு. ஷுக்கள் அணியாத வெறும் கால்களில் விளையாடி குத்திய முட்களும், பாதங்களை கிழித்த கற்களும் இன்னும் நினைவுகளில் தொக்கி நிற்கின்றன. கால்பந்து விளையாடவே பிறந்தது போல விளையாடும் நண்பர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. எல்லா விளையாட்டுகளுக்கும், எல்லா பதவிகளுக்கும் ரிட்டையர்மெண்ட் இருப்பதுபோல இந்த மாதிரியான நினைவுகளுக்கும் ரிட்டையர்மெண்ட் என்று ஒன்று உள்ளது அதை காலம் மறதி என்னும் சொல்லில் ஒளித்து வைத்திருக்கிறது.



  (படம்:கூகுள்)



உலகில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். எனக்கு கிரிக்கெட்டை விட கால்பந்து ரொம்ப பிடிக்கும். ஆனா எதையுமே நம்ம ஆட்கள் செய்தால் குறை சொல்லியும் வெளிநாட்டு ஆட்கள் செய்தால் பூரித்தும் போய் பேசிக்கிடக்கும் மனநிலை எனக்குமுண்டு. ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு. அந்த அணியின் கேப்டன் யாரு? பயிற்சியாளர் யாரு? வீரர்கள் யார் யார்?கடைசியா வென்ற போட்டி எது? இந்த விளையாட்டின் விதிமுறைகள் என்னென்ன? போன்ற பல விஷயங்கள் தெரியாத இந்தியர்களில் நானும் ஒருவன். இதை சொல்லும் போதும் எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது ஆனாலும் பல வருடங்களாய் மனதில் ஊறிக்கிடக்கும் ஒரு விளையாட்டை நகர்த்திய வைத்துவிட்டு புதிதாக ஒன்றை உட்கார வைப்பதில் சில சிரமங்களும், ஒவ்வாமையும் இருக்கவே செய்கின்றன.


உலகக்கோப்பை கால்பந்து போலவே நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் "ஈரோ கால்பந்து" போட்டிகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வருடம் நடக்க வேண்டியிருந்த போட்டித்  தொடர் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த வருடம் நடந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டும் விளையாடும் போட்டிகள் என்பதால் உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான மெஸ்ஸியின் ஆட்டத்தை இந்த விளையாட்டில் பார்க்க முடியாதது வருத்தம் தான்.  பீலே,மரடோனா,ரொனால்டோ,ரொனால்டினோ போன்ற சிறந்த வீரர்களின் வரிசையில் இப்போது மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். அதேசமயம் இந்த வரிசையில் தான் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியும் இருக்கிறார். சமீபத்தில் ஒரு அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருப்பவர் போர்ச்சுகலின் ரொனால்டோ. யூரோ கோப்பையின் நடப்புச் சாம்பியன் போர்ச்சுகல் இந்தமுறை காலிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. உலகின் தலை சிறந்த வீரர்களைக் கொண்டிருந்தாலும் எதிர்பாராத சில நொடிகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும் வல்லமை இந்த விளையாட்டிற்கு உண்டு.


அடுத்த வருடம் நடக்க இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு இப்போது அடையும் வெற்றிகள் நல்ல அனுபவங்களாக இருக்கும். இப்போது அடையும் தோல்விகள் நல்ல பாடமாக இருக்கும். எதிர்பார்க்காத குட்டி அணிகள் கூட பெரிய பெரிய அணிகளைத் திணறவைக்கின்றன. அடுத்தடுத்த கட்டங்களில் பல சுவாரஸ்யங்கள் ஒளிந்திருக்கின்றன. இந்த ஆட்டங்கள் பெரும்பாலும் இந்திய நேரப்படி நள்ளிரவுகளில் தான் நடக்கும் அது ஒன்றுதான் நேரலையில் பார்க்கமுடியாததன் குறை. இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது யூரோ கால்பந்து தொடர். ஜுலை 12ல் நடக்கும் இறுதிப்போட்டியில் கோப்பை யாருக்கென்பதை ஓடும் கால்களும் போடும் கோல்களும் தீர்மானிக்கும். 


அந்த வீடியோ லிங்க் :)


https://www.facebook.com/mensxp/videos/2555969481095985/