07 November 2016

கிளையெங்கும் கசியும் காதல்

உயர்ந்து வளர்ந்த மரமொன்றின்
தனித்த கிளை நான்
சிறகு விரித்தபடி வந்தமர்ந்த
சிறு பறவை நீ

அலகு தவிர்த்து
கண்களால் கொத்துகிறாய்
கிளையெங்கும் கசிகிறது காதல்

பட்டுப்போன மரம்
துளிர்விடத் தொடங்குகிறது
உன் பார்வை பட்டுப்போன
நொடியிலிருந்து

இளைப்பாற வந்த பறவையின்
சிறகுக்குள் இளைப்பாறுகின்றன
மரமும் கிளைகளும்

ஒற்றை மரத்திற்கான ஈரம்
பாய்கிறது மொத்த வேர்களுக்குள்

இறுதியில் உந்திப் பறக்கிறாய்
காய்ந்து உதிர்ந்த இலையொன்று
உயிர்த்தெழுகிறது


21 October 2016

ஒரு கவிதை சொல்

நீண்ட காலம் கழித்து ஊடகத்தின் வழியே
பேசிய என்னிடம் என் அடையாளத்தை மறக்காமல்

"ஒரு கவிதை சொல்" என்கிறாய்
எதைப்பற்றி எனக் கேட்டால்
என்னைப்பற்றி என்கிறாய்

உன்னைப்பற்றி
ஒரு கவிதையில்
சொல்லிவிட முடியுமா என்ன?


05 October 2016

மின் இதழ்-பதிப்பு -5

வளர்ந்த , வளர்ந்து வரும் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாய் முகநூலில் #படைப்பு என்னும் குழுமம் மாதம்தோறும் சிறந்த கவிதைகளைத் தேர்வு செய்து அந்த கவிதைகளை சிறந்த முறையில் மின்னிதழாய் வெளியிடுகிறார்கள். இது எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு உந்துதலையும் இன்னும் நிறைய படைக்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் கொடுக்கிறது.

செப்டம்பர் மாதத்திற்கான 
(மின் இதழ்-பதிப்பு -5) மின்னிதழில் எனது கவிதையையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.

அன்பின் நிழலெனவும் 
பிரியங்களின் நிகழ்வெனவும் 
சந்தோச நிமிடங்களில் மிதக்கிறது மனம்.

வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்களில் ஒன்றாய் இந்தநாளையும் இணைத்தமைக்கு நன்றிகள்.

என் கவிதையை தேர்வு செய்தவர்களுக்கு நன்றிகளும் மற்ற  கவிதையாளர்களுக்கு வாழ்த்துக்களும் ...! 




27 August 2016

ஒரு முத்தம்


11 August 2016

இந்தியாவும் ஒலிம்பிக்கும்





ஒலிம்பிக் எல்லா விளையாட்டு வீரர்களும் தூக்கி சுமந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய கனவு. உலக நாடுகளின் பெருமையை, வீரத்தை,திறமையை, பங்களிப்பை வெளிப்படுத்த நான்கு ஆண்டுகளுக்கு  ஒருமுறை கிடைக்கும் அறிய வாய்ப்பு.

இந்தியாவும் அதில் பங்கேற்று விளையாடி பல விமர்சனங்களை எதிர்கொள்ளும் இந்த வேளையில், பதக்கப்பட்டியலில் இன்னும் இந்தியாவின் பெயர் வராததற்கு காரணம் இந்த வீரர்கள் மட்டும் தானா என ஒவ்வொரும் இந்தியனும் தனக்குள் எழும் கேள்விகளுக்கு விடை சொல்லவோ அல்லது விடை தேடவோ கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தியா ஆரம்பத்திலிருந்தே வீரமும் திறமையும் நிறைந்த நாடுதான், வெறும் அகிம்சையை மட்டுமே கையாண்டு வெள்ளையனை வெளியேற்றிய நம் தலைவர்கள் வீரத்தையும் கோவத்தையும் கையாளத் தெரியாமல் இல்லை. தன் வீரத்தாலும் திறமையாலும் படையெடுத்து உலகையே வென்று தன் காலடியில் வைத்து ஆட்சி செய்த மன்னர்களும் இங்கு உண்டு என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.

ஆனால் இப்போது ..?

 அரசியல் ,துரோகம், வன்மம் , வெறுப்பு ,பொறாமை ,பழியுணர்ச்சி என இன்னும் எத்தனையோ ஜீரணிக்க முடியாத விஷயங்களால் திணறிக்கொண்டு தான் இந்தியா இந்த 70 ஆவது சுதந்திரதினத்தை கொண்டாட தயாராகி வருகிறது. பல காலங்களாக நடந்து வரும்  ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியலில் நம் நாட்டின் பெயர் வந்தாலும் கூட நாம் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை வலியோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

இதற்கு காரணம் சூழ்நிலையெனவோ , முழுதும் அரசியலெனவோ , திறமையில்லையெனவோ சொல்லி அவ்வளவு எளிதாய் நகர்ந்து விட முடியாது. கடந்த தலைமுறை பிள்ளைகளைப்போல இந்த தலைமுறை பிள்ளைகள் இல்லை , அவர்களின் விளையாட்டுகளும் சந்தோஷங்களும் நான்கு சுவர்களுக்குள்ளும் ஒரு கைப்பேசிக்குள்ளும் அடங்கிவிட்டது அல்லது அடக்கி அவர்களிடம் கொடுத்து விட்டோம்.

 இதற்கு முந்தைய தலைமுறையில் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் புத்தகப்பையை வைத்துவிட்டு சீருடையை கூட மாற்றாமல் வீட்டை விட்டு வெகுதூரம் போய் விழுந்து விழுந்து விளையாடிய குழந்தைகளுக்கு தெரியும் மாலை நேரமென்பது எத்தனை வரமென்று,

திறந்தவெளி மைதானத்தில் நண்பர்களோடு விளையாடும் அத்தனை விளையாட்டுகளின் வெற்றியும் ஏதோ ஒரு திறமையை சார்ந்தே இருந்தது. அவர்களை ஊதாரி , வீட்டுக்கு அடங்காதவன் , சோம்பேறி , முட்டாள் என வலிநிறைந்த சொற்களால் முடக்கி விட முடியாது.

இந்த தலைமுறையில் குழந்தைகளை விளையாட விடாமலும் அவர்களுக்கு பிடித்த துறையில் அவர்களை வளரவிடாமலும் இருப்பதற்கு தொலைக்காட்சி சேனல்களுக்கும், பெற்றோரின் பிடிவாதத்திற்கும் மிகப்பெரும் பங்கு இருக்கிறது, அதை இல்லை என்று மேம்போக்காக மறுத்துவிட முடியாது.

திறமைகள் முழுவதும் மழுங்கடிக்கப்பட்டு எத்தனையோ குழந்தைகளை மிகச் சரியாய் ஐந்தாவது மாடி பால்கனிக்கு பேப்பர் போடும் பையனாக, இருபது லிட்டர் தண்ணீர் கேனை 6 மாடி தூக்கிச்செல்லும் பையனாக , மிகப்பெரிய கண்ணாடிக்கு கட்டிடத்தில் கயிற்றில் ஒரு கட்டையைக் கட்டிக்கொண்டு அதில் உக்கார்ந்து கண்ணாடி சுத்தம் பண்ணும் பையனாக , சீறிவரும் வாகனங்களுக்கு நடுவே வேகவேகமாய் நுழைந்து சிக்கனலில் பிளாஸ்டிக் பொம்மைகள் விற்கும் பையனாக , வரிசைகட்டி நிற்கும் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பையனாக , மிகச் சரியான ஒழுங்கில் மிக அழகாய் பூத்தொடுக்கும் பெண்ணாக , 10 வயதில் தன்தலைமேல் 15 செங்கற்களை சுமக்கும் பெண்ணாக ,கடற்கரையில் பலூன் விற்கும் பெண்ணாக , தீப்பெட்டி தொழிற்சாலைகளில் கருகும் குறுத்துக்களாக மாற்றி வைத்திருப்பது சமுதாயம் மட்டுமல்ல நீங்களும் நானும் தான் ஏனெனில் நீங்களும் நானும் சேர்ந்தது தான் இந்த சமுதாயம்.

பாதுகாப்பு முக்கியம் தான் ஆனாலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் உங்கள் குழந்தைகளை விளையாட விடுங்கள் , தோல்வியைத்தாங்கும் பக்குவத்தையும் வெற்றிக்கு போராட நம்பிக்கையையும் விதையுங்கள் , சிறுவெற்றிக்கு கூட பெரிதாய் பாராட்டுங்கள் , தோல்வியை தள்ளிப்போன வெற்றியென தட்டிக்கொடுங்கள் எதிர்வரும் காலத்தில் உங்கள் குழந்தையும் ஒலிம்பிக்கில் சாதிக்கலாம்.

திறமையானவர்களை அரசும் , தகுதி உள்ளவர்களை அரசியல்வாதிகளும் , வெற்றிக்கான ஊக்கத்தை பெற்றோரும் , நம்பிக்கைகளை நண்பர்களும் , வேண்டிய வசதிகளை சமூகமும் கொடுத்து அடுத்த தலைமுறை குழந்தைகளை ஊக்கப்படுத்தி முன்னிறுத்தினால் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் கூட வரக்கூடும்.

இதோ.. எல்லோரும் தொட பயந்த ஜிம்னாஸ்டிக்கை தன் 6 வயதில் தொடங்கி, தட்டையான கால்களை வளைக்க தினமும் 6 மணி நேரம் பயிற்சி செய்து ,எல்லாவிதமான போட்டிகளிலும் சேர்த்து 77 பதக்கங்களில் 67 தங்கப்பதக்கங்களை வென்று ,ஜிம்னாஸ்டிக் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தீபா கர்மாகர். இவர் பதக்கம் வாங்கவில்லையெனிலும் இந்தியாவிற்கு பெருமைதான் பதக்கம் வாங்கிவிட்டால் அந்தப் பதக்கத்திற்க்கே பெருமை.

தோல்விகளைச்  சொல்லி புலம்புவதை விடுத்து வெற்றிகளை நினைத்து பெருமைகொள்ளுங்கள். இந்த ஒலிம்பிக்கில் எதிர்வரும் நாட்களில் இந்தியா சில பதக்கங்களை வெல்லும் அப்போது வாழ்த்துவதற்கு வார்த்தைகளையும் தட்டுவதற்கு கைகளையும் தயாராய் வைத்திருங்கள். வாழ்த்துக்கள் இந்தியா.


06 August 2016

நண்பர்கள்தின வாழ்த்துகள்




பால்யம் தொடங்கி
ஆகச்சிறந்த தருணங்களில் எல்லாம்
நட்பு உடனிருப்பது வாழ்வின் வரம்

புத்தகங்களுக்குள் நிறைந்திருக்கும்
எழுத்துக்களென
கடக்கும் நாளெல்லாம் நட்பின் நிழலிருப்பது சுகம்

எதிரியில்லா
வாழ்க்கையைக்கூட கொடுக்கும் காலம்
நட்பில்லா நாளைக்கூட கொடுப்பதில்லை

தூரங்கள் விலக்கி வைத்த நட்பை
தொடுதிரை கைப்பேசிகள்
இன்னும் தொடர்பில் வைத்திருக்கின்றன

குட்மார்னிங் என்ற குறுந்தகவலை
முதலில் வாட்சப்பில் வந்து கொட்டுவது
நட்புடையது தான் என்பது எத்தனை உண்மையோ

வாழ்வின் இறுதியில்
உடலெரியும் வரை உடன்வருவதும்
நட்புதான் என்பதும் அத்தனை உண்மையே

#நண்பர்கள்தின வாழ்த்துகள்

04 August 2016

நிம்மதி கொள்


நடுங்காதே மனமே
தூரத்தில் தெரிவது
வேறு யாருமல்ல
தேனின் தித்திப்பென அடி நாக்கில்
ஒட்டிக்கிடந்த ஒரு உறவுதான் அது

பக்கம் நெருங்கி உன்னை
கடந்து போகும் போது
உடைந்து போகாதே
உன்னைப்போலவே அந்த உறவும்
தேனீர் அருந்தவோ
பசி போக்கவோ வந்திருக்கலாம்

உன் சந்தோசத்தின் மீதொரு
பார்வைக் கல்லெறிந்தோ அல்லது
உண்மையில் பார்க்காமலே கூட
உன்னைத் தாண்டிப் போயிருக்கலாம்

கடந்த காலத்தின் நினைவுகளை
கண்களில் கொண்டுவந்து
ஆறிப்போனதாய் நினைத்துக் கொண்டிருக்கும்
காயங்களின் தழும்புகளைத் தடவிப்பார்க்காதே

கூண்டைத் திறந்துவிடும்
கைகளென மென்மையாக விலகு
சிறகுவிரிக்கும் பறவையென
அவளோ / அவனோ பறக்கட்டும்
அந்த சந்தோசத்தில்
உன் சந்தோஷமும் இருக்கிறதென நிம்மதி கொள் .....!!!

02 August 2016

ஆடி 18




ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்புவரை வற்றிப்போன விவசாயிகளின் வயிறுகளைப்போல வறண்டு கிடக்கும் எங்கள் ஊர் பவானி காவிரி ஆறு
பாசனத்தின் பயனாகவோ ஆடிப்பெருக்கை முன்னிட்டோ மேட்டூர் அணை திறந்த பின் கால் முளைத்த நதியென ஓடி வரும்பொழுது இருகரைகளையும் தொட்டுக்கொண்டோடும் காவிரியைக் காணவே அத்தனை அழகாய் இருக்கும்.

வறண்டு போய் வெடித்துக்கிடக்கும் மண் தாரைகள் ஓடி வரும் நதியை உறிஞ்சியபடி ஈர மணம் வீசும் அந்த வாசத்தை நுகர நுகர ஜீவன்களில் புது உயிர் சில்லிட்டபடி மனமெங்கும் கிளை பரப்பும்.

பல நாட்களுக்குப் பிறகு பாறைகளை முழுக்கி தண்ணீர் நிரம்பி ஓடும் ஆற்றுக்குள் பவானி பழைய பாலத்தில் இருந்து குதிக்கும் பலசாலிகள் பாக்கியவான்கள், வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்களை மிக எளிதாய் மிக அழகாய் வாழ்ந்துவிட்டுப்போகிறார்கள்.

இந்த பண்டிகை புதுமணத்தம்பதிகளுக்கு தனி விசேஷம் என்றாலும் விவரம் தெரியாத, நீச்சல் தெரிந்த அந்த காலகட்டத்தில் தலையிலிருந்து காது வழியாய் கடைவாயில் ஒழுகும் எண்ணெய் வழிய வழிய பவானி கூடுதுறையில் குதித்து விளையாடிய நாட்கள் இன்னும் ஈரமாகவே இருக்கிறது. தலையில் காசு வைத்து முழுகி, வேறொரு காசை தேடியெடுத்து எண்ணைப்பிசுக்கு மிதக்கும் அந்த நீரில் குளித்து மேலேறுவது என்பது சாதனைகளின் மிச்சமென மினுங்கும்.

மாலையில் கடைவீதியில் அலைமோதும் கூட்டத்தின் நடுவே நீண்டிருக்கும் கடைகளில் சாவிக்கொத்துகளும் சாவி கொடுக்கும் பொம்மைகளும் கைநீட்டி அழைக்கும்.

அன்னாசிப் பழங்களின் வாசனை மூக்கு வழியாய் நுழைந்து மூளைக்குள் ருசியேற்றும் , வட்ட வட்டமாய் வெட்டிய பழங்களின் மேல் உப்பு மிளகாய்ப்பொடிகளைத் தூவவிட்டு வாசனையால் இழுப்பார்கள்.

சிறு வயதில் பெரும்கூட்டம் கூடினால் திருவிழாதான் என நம்பிக்கொண்டிருந்த நாட்களில் எல்லாக் கூட்டங்களுமே ஏதோ ஒரு திருவிழாவை மனதுக்குள் பதியம் போட்டுவைத்துவிட்டன.

ஆடி மாதம் பிரித்துவைத்த புதுமணத் தம்பதிகள் கைகோர்த்தபடி உலாப்போகும் அந்தக் கவிதையான காட்சிகளை அடைகாத்த சிறுவயது இப்போது அழகாய் அசைபோடுகிறது.

இந்த மாதிரியான உயிரில் நிறையும் பண்டிகைகளை பெருநகரங்கள் கொண்டாடாமல் போன அல்லது கொண்டாட முடியாமல் போன இன்றைய சூழலில் மனம் எதையெல்லாம் இழக்கிறதா அதையெல்லாம் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் காலம் திரும்பக்கொடுத்து விடாது.

அருகிலிருந்து பார்க்கவோ அந்த அன்னாசிப்பழ வாசனையில் மூழ்கிப்போகவோ முடியாத வாழ்க்கையை காலம் பரிசளித்திருக்கும் வேளையில் அந்த வரம் வாங்கியபடி உள்ளூரில் இருந்து கொண்டு இந்த ஆடியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 --- தனபால் பவானி

26 July 2016

உறக்கத்தில் ஒரு வருடம்


வள்ளுவன் எழுதிய குறள்களை 
வான்கடந்து அந்நிய காதுகளுக்குள் 
ஊற்றியது உங்கள் குரல் ...!

யாரும் சொல்லாத உயரத்தை 
கைநீட்டித் தொட கனவுகள் 
விதைத்தது உங்கள் விரல் ...!

மழுங்கிய மூளை மடிப்புகளை 
அறிவுக்குச்சியால் திருகி 
திருத்தி அமைத்தவர் நீங்கள் ...!

புத்தகங்கள் சொல்லித்தராத 
அறிவியலை அன்பால் அழகாய் 
கற்றுக்கொடுத்தவர் நீங்கள் ...!

உங்களை விதைத்த மண்ணில் 
இன்னும் இன்னும் மிச்சமிருக்கிறது 
எங்கள் எல்லோருக்குமான கனவுகள் ...!

இன்று 
உங்கள் நினைவு தினமல்ல
நீண்ட உறக்கத்தில் ஒரு வருடம் 
முடிந்திருக்கிறது ...!

நீங்கள் இன்னும் வாழ்கிறீர்கள் 
இரவுகளில் மூடும் 
எங்கள் எல்லா கண்களிலும் 
பகல்களில் திறக்கப்படும் 
உங்கள் எல்லா சிலைகளிலும் ...!!!



14 July 2016

சில ரகசியங்கள்





யாருக்கும்
சொல்லிவிடக்கூடாதெனவோ
தெரிந்துவிடக்கூடாதெனவோ
எல்லோருக்குள்ளும் ஒளிந்து கிடக்கின்றன
சில ரகசியங்கள்

வாய்வரை வந்துவிட்டு
உதடுகளை உச்சரிக்க விடாமல்
உள்சென்று ஒடிந்து விழுந்து விடுகின்றன
சில ரகசியங்கள்

காக்கப்படுமென
நம்பியதை உடைத்து
காற்றில் மிதந்து வந்து
நம் காதுக்குள்ளே நுழைகின்றன
நாமே சொன்ன
சில ரகசியங்கள்

தொடுதிரையில்
வார்த்தைகளைக் கோர்த்து
கவிதையெனவோ கட்டுரையெனவோ
தலைப்புகளைத் தாங்கி வருகின்றன
சில ரகசியங்கள்

யாருக்குமே சொல்லாமல்
நிழலுக்கும் தெரியாமல்
எரியூட்டப்பட்ட உடலோடு
சாம்பலாகிப் போயிருக்கின்றன
சில ரகசியங்கள் ...!



09 July 2016

உள்ளத்தனைய உடல்

#உள்ளத்தனைய உடல்
#21DaysChallenge
#Completed

இந்த குழுவில் இணைவதற்கு முன்னால் நானும் சோம்பேறிதான்
ஆனாலும் எப்போதாவது நண்பர்கள் கிடைத்தால் உடற்பயற்சி செய்வதுண்டு,  துணைக்கு யாருமில்லையென்றாலோ தூக்கம் என்னை எழ விடவில்லையென்றாலோ பெங்களூர் குளிருக்கு கதகதப்பாய்  போர்வைக்குள் புதைந்துவிடுவதுண்டு.

எதேச்சையாய் இந்த குழுவில் இணைந்து ஒரு ஆர்வத்தில் முதல் நாளே ஓவராக ஓடிவிட்டேன்.  நீண்ட நாள் இடைவெளியோ அல்லது திடீரென அதிகமாய் உடலுக்கு வேலை கொடுத்ததாலோ காய்ச்சல் வந்து மூன்று நாளாய் பெரும் அவஸ்தை.  இனி இதை முயற்சிக்க வேண்டாமெனவும் குழுவிலிருந்து வெளியேறி விடலாமெனவும் தோன்றியது. அதே சமயம் இன்னொரு முறை முயற்சித்துதான் பார்ப்போமே என ஏதோ ஒரு உள் மனம் சொல்ல மீண்டும் தொடங்கினேன் .

முதலில் எடுத்ததும் ஓடாமல் மெதுவாய் நடைப்பயிற்சியில் தொடங்கி 3km நடந்து பின் ஒவ்வொருநாளும் தூரத்தை அதிகப்படுத்தி வேகமாய் நடந்து மெதுவாய் ஓடி உடலை ஒரு புதிய பழக்கத்துக்கு கொண்டு வந்தேன்.
தினமும் எதாவது ஒரு வகையில் என் பயிற்சியை தொடர்ந்தேன்

பக்கத்திலிருக்கும் கடைக்கு கூட பைக் எடுத்துக்கொண்டு போகும் நான் இப்போதெல்லாம் 7 அல்லது 8 KM தூரமானாலும் சிரமமில்லாமல் யார் துணையுமில்லாமல் நடக்க முடியுமென நம்புகிறேன். பவானியிலிருந்து சித்தோடு-ஈரோடு வரைகூட  நடந்து போக முடியும்.

இந்த சவாலை நான்  பெங்களூரில்  தொடங்கியபோது வெளியூர் பயணம் , சுற்றுலா திட்டம் , சொந்த ஊர் பயணம் என பல இடஞ்சல்கள் வந்தன , அதையெல்லாம் சமாளித்து  போகும் இடங்களிலெல்லாம் பயிற்சியை எதோ ஒருவகையில் தொடர்ந்தேன்.  நடக்க, ஓட முடியாத போது சைக்கிள், வெளியூர் போனால் நடைபயிற்சி தடைபடும்  நேரங்களில் நிறுத்தத்திற்கு 5km முன்னாடியே இறங்கி நடப்பது , மழை காரணமாக வெளியே போக முடியாத தருணங்களில் ஜிம்மில் அல்லது தங்கியிருந்த அறைக்குள் பயிற்சி செய்வதென நான் தோற்கப்போகும் தருணங்களில் எல்லாம் என்னை நானே வென்றெடுத்தேன் .

ஒவ்வொரு முறையும் என் தூரத்தையும் என் நேரத்தையும் அதிகமாக்கி என்னால் முடிந்தவரை இந்த 21 நாட்களாய் மிகச்சரியாக  பயன்படுத்தினேன் . இந்த 21 நாட்களில் நான் இழந்தவையென  பார்த்தால் ..
இடையும்-எடையும் அலுப்பும்-கொழுப்பும் உணவும்-வியர்வையும் துக்கமும்-தூக்கமும்

கிடைத்தவையெனப் பார்த்தால்
அன்பும் நட்பும்
உந்துதலும் பாராட்டுக்களும்
அறிவுரைகளும் ஆலோசனைகளும்
வாழ்த்துக்களும் வரவேற்புகளும்
முயற்சிகளும் வெற்றிகளும்
என இன்னும் இன்னும் நிறைய.

வழக்கமாய் அலுவலகம் விட்டு வந்தவுடன் கதவைத் தாழிட்டு கைப்பேசியோடு கடினமாய் கடக்கும்  என் சாயங்கால நேரங்கள் இந்த நாட்களில் எத்தனையோ புது உறவுகளை புது இடங்களை புது வ(லி)ழிகளை புது நம்பிக்கைகளை புது வெற்றிகளைக் கொடுத்திருக்கிறது.  இதெல்லாம் இந்தக் குழுவிலுள்ள ஒவ்வொருவராலுமே சாத்தியம் .

இதை இன்னும் இன்னும் தொடரனும் இன்னும் பல தடைகளை இன்னும் பல இடங்களைக் கடந்து பயணிக்கணும் ... பயணிப்பேன்.

என் சின்னச் சின்னப் பதிவுகளுக்கும் லைக் போட்டு என்னை ஊக்கப்படுத்தி என்னை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் இதயம் நிரம்பிய நன்றிகள்.

குறிப்பாக குருநாதர் ஷான் கருப்பசாமி
அவர்களுக்கும் , ஈரோடு கதிர் அண்ணன் அவர்களுக்கும் குறையாத நன்றிகள் .

---தனபால் பவானி
#பெங்களூரிலிருந்து

சிறகைப் பறக்கவிடு

உன் மீதான வெறுப்பு
இன்னும் கூட கூடியிருக்கலாம்
இல்லையெனினும் குறையாமல்
பார்த்துக்கொள்கிறேன்

நினைவுகளில்
அலைந்து கொண்டிருக்கும்
நிறைவேறாத ஆசைகளைக் கூட்டிவந்து
தீயிட்டுக் கொளுத்துகிறேன்

கடந்தகால பரண்களின்மேல்
மடித்து வைத்திருக்கும்
நம் நாட்களின் மீதுபடிந்த தூசிகளை
தவறியும் தட்டுவதில்லை

சுவாசப்பையின் பள்ளத்தாக்கிலிருந்து
சுத்தமாய் துடைத்தெறிந்த உன் வாசனையை
மீண்டும் நிரப்ப முயற்சிப்பதில்லை

கனவுகளில் தோன்றி மறையும்
உன் முக பிம்பத்தை உடைக்க மனமில்லை
தடைகளில்லை உன் திசையில் பயணி
தேடல்களுண்டு என் சிறகைப் பறக்கவிடு

வேண்டாமென
விலகிச்செல்லும் உறவுகளை
என்ன செய்வது
மறப்பதையும் மன்னிப்பதையும் தவிர


03 June 2016

பேசிக்கொண்டிருக்கும் நிழல்கள்




வெற்றிடம் நிரம்பித் ததும்பும்
மனதின் இருளடர்ந்த பக்கங்களில்
ஒரு சிறு வெளிச்சமென வந்து
முகம் காட்டு

யாரொருத்தியைப் போலவும்
இல்லாமல் நீ
நீயாக மட்டும் நிஜம் சுமந்து வா

உனக்கான கனவுகளையும்
எனக்கான ஆசைகளையும்
கலந்து செய்வோம்
நமக்கானதொரு காதலை

உன் அன்பின் எடைக்கு
என் காதலையும்
என் காதலின் எடைக்கு
உன் முத்தங்களையும்
பரிமாறிக்கொள்வோம்

உன்னோடு நானும்
என்னோடு நீயும்
அவரவர் வீடு திரும்பும் வேளையிலும்
கைகோர்த்தபடி அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கட்டும்
நம் நிழல்கள் ...!!!

                                   

30 May 2016

நந்தி மலை பயணம்




மிகப்பிடித்த பாடலொன்றையோ
படமொன்றையோ ரசித்துப்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் " கொஞ்சம் கடைக்குப்போய் பால் வாங்கிட்டு வா " என வீட்டில் யாராவது சொல்லும்போது பக்கத்து தெருவுக்கு போக கொஞ்சம் வெறுப்புடனும் நிறைய கோவத்துடனும் பைக்கை அப்படி உதைக்க நேரிடும், நடந்து போகும் தூரத்தில் இருக்கும் கடைக்குப்போக பைக்கோ சைக்கிளோ தேவைப்படுகிறது.

சில கிலோமீட்டர்கள் நடந்தே ஒரு பயணம் போக வேண்டுமென  வருகிற போது அந்த சூழ்நிலையை கையாளும் பக்குவத்தை எது கொடுக்கிறது? அந்த இலக்கை அடைய எது தூண்டுகிறது? அடைந்த பின்பு வரும் ஒரு பெருமிதத்தை புத்துணர்ச்சியை எது தக்கவைக்கிறது?

எங்கள் அலுவலகம் பெங்களூரில் உள்ள நந்தி மலை உச்சியை நடந்தே அடைய வேண்டுமேன ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மலை அடிவாரத்திலிருந்து உச்சி வரை 7 கிலோமீட்டர்கள் தான், பாதை வழியாக முதலில் உச்சி தொடும் முதல் மூன்று ஆண்களுக்கும் முதல் மூன்று பெண்களுக்கும் பரிசென அறிவித்திருந்தார்கள் பரிசுக்கென இல்லையெனினும் ஒரு பயண அனுபவமாக இருக்கட்டுமென நண்பர்களோடு பயணிக்க தொடங்கினோம் உச்சியை நோக்கி.

பவானியிலிருந்து பழனிவரை கூட பாதயாத்திரை போய் வந்திருக்கிறோம் வயதும் மனதும் ஒத்துழைத்த நாட்களில்.
இப்போதைய சூழலில்  நானெல்லாம் இரண்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதே கடினமென நினைத்தபடிதான் நடக்கத் தொடங்கினேன் ஆனால் இயற்கையை ரசித்தபடியும் இலக்கை துரத்தியபடியும் நடக்க  நடக்க தூரங்கள் குறையத்தொடங்கின. புகைப்படங்களெடுத்தபடி முன்னேறுகிறோம் எங்களுக்கு நிகராய் மேகங்களும் முன்னேறுகின்றன.

கால்கள் நடக்க நடக்க காலங்களில் பின்னோக்கி  கேள்விகளால் நிரம்புகிறது மனது அந்த காலத்தில் இத்தனை உயரத்தை எத்தனை குதிரைகளில் அடைந்திருப்பார்கள்?
இந்த மரங்களில் எத்தனை பறவைகள் கூடுகட்டியிருக்கும்?
எந்த விதையில்  இந்த மரம் இப்படி வளர்ந்திருக்கும்? மலை உச்சியின் கோட்டை கட்டவும் அந்த பெரிய குளம் கட்டவும் எத்தனை கழுதைகள் கல் சுமந்திருக்கும்? இங்கு வாழும் குரங்குகளுக்கு போதுமான உணவு கிடைத்துவிடுமா? அந்த பெரிய தேன்கூட்டை யாரும் தொல்லை செய்யாமல் அப்படியே விட்டுவிடுவார்களா? தலைக்குமேல் போகும் மேகம் பொசுக்கென மழை பொழியுமா? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் பதில் கிடைக்காமலே அடிமனதின் பள்ளத்தாக்கில் விழுந்து தொலைந்துவிடுகின்றன.

ஒருவழியாய் உச்சியை அடைந்த போது வாழ்க்கை ஒரு உண்மையை உணர்த்தியது , "முயற்சியோடு முன்னேற நினைப்பவர்களையும் வலிதாங்கி தடைதாண்ட துடிப்பவர்களையும் வாழ்க்கை உயரத்திற்கு கொண்டு செல்கிறது".

இன்னும் இன்னும் பயணிக்கணும்
புது உயரங்களைத் தொடவும்.
புது அனுபவங்களைப் பெறவும்.

பயணிப்போம் ...!

---தனபால் பவானி

07 May 2016

ஆண்களின் வரம்

"கொழம்பு நல்லா இருக்கு" என்பதே
அம்மாக்கள் பெரும் மிகச்சிறந்த பாராட்டு ..!
**************************************
மொத்த மெத்தையும் கொடுக்காத
தூக்கத்தைக் கொடுப்பதுதான்
அம்மாவின் சேலைத் தொட்டில்..!
**************************************
எந்த நிலையிலும்
தன்னை நேசிக்கும் பெண்ணாய் அம்மா
இருப்பது ஆண்களின் வரம் ..!
**************************************
குடும்பம் என்னும் புத்தகத்தில்
அம்மா என்பவள் அடிக்கோடிட்ட
மிகப்பிடித்த வரி ..!
**************************************
மாளிகையானாலும்
குடிசையானாலும் சமையலறைக்கு
பிடித்த ஆள் அம்மா மட்டுமே ..!
**************************************
யாருமற்ற  வீட்டில் எப்போதும்
நிறைந்திருக்கும் அம்மாவின்
வாசம் ..!
**************************************
எத்தனை முறை முயற்சித்தாலும்
மிக அரிதாய்க் கிடைப்பது தான்
அம்மாவின் வெட்கம் ..!
**************************************
எந்த மொழியில் அழைத்தாலும்
அழகாகும் சொல் அம்மா ..!
**************************************
அன்னையர் தின வாழ்த்துக்கள்..!