17 June 2017

பாலத்தின் சுவடுகள் ...!


"இரும்பு பாலத்துக்கிட்ட போகும்போது பத்திரமா போ, கீழ எட்டிப்பார்க்காத" ன்னு அம்மா சொல்லியனுப்பும்  வார்த்தைகள் இப்போதும் அந்த பாலத்தை கடக்கும்போதெல்லாம்  நினைவுகளுக்குள் வந்துபோகிறது.


பெயர் என்னவோ "பழைய பாலம்" தான் ஆனால் அதுதான் பவானியையும் குமாரபாளையத்தையும் இணைக்கும் மிக முக்கிய பாலம். வெள்ளைக்காரன் காலத்தில் கட்டியிருக்கக்கூடும். லாரிகளோ , பேருந்துகளோ புழக்கத்தில் வராத காலத்தில் வெள்ளையர்களின் சாரட் வண்டிகளுக்காகவும், மிதிவண்டிகளுக்காகவும், மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகள், சிறு கார்கள் போன்ற மிகச் சாதாரண வாகனங்களுக்காக கட்டப்பட்டதாக தோன்றுகிறது. நிறைய தூண்கள் வைத்து, பாலத்தின் நடுவே இரும்பினாலான சுவர் போன்ற அமைப்பால் கட்டியிருக்கிறார்கள். அந்த இடத்தைத்தான் "இரும்பு பாலம்" என இப்போதும் அடையாளமாய் சொல்லுவதுண்டு. பாலம் உறுதியானதாக இருக்க வேண்டுமென்பதற்காக கலவைகளில் முட்டைகளைக் கலந்து கட்டியிருக்கிறார்கள் எனவும், சிலரை நரபலி கொடுத்திருக்கிறார்கள் எனவும், ஒவ்வொரு தூணுக்குமிடையில் ஒரு மனிதனின் எலும்புக்கூடு இருப்பதாகவும், அப்போது இறந்தவர்கள் இன்னும் பேயாய் சுற்றுகிறார்கள் எனவும், அதனாலேதான் இரும்புப்பாலத்தை கடக்கும்போது கவனமாய் போக வேண்டுமெனவும் சொல்கிறார்கள் என என் சிறு வயதில் நிறைய கதைகளைக் கேட்டிருக்கிறேன். இவையெல்லாம் கதைகளா, கட்டுக்கதைகளா, அவரவர் அனுபவத்தின், வயதின் கற்பனைகளா என்பதையெல்லாம் என் அறிவுக்கு எட்டாத பரணில் தூக்கி போடுகிறேன்.



இந்த பாலத்தினுடனான என் அனுபவங்கள் மிக அலாதியானவை. காய்ந்த மண்ணில் விழும் சிறு மழையைப்போல அதன் ஈரப்பசை என் வயதின் சுவர்களில் இன்னும் அப்பிக்கிடக்கிறது. மிகச் சிறு வயதில் அந்த பாலத்தைக்கடந்து உறவினர் வீடுகளுக்கு போக ஒரு முனையில் நிற்கும் குதிரைவண்டிக்கு பெரியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே கற்பனைகளால் நான் பாதிபாலத்தைக் கடந்திருப்பேன். ஒரு வழியாய் குதிரை வண்டியில் ஏறி வண்டி ஓட்டுபவருக்கு அருகில் உக்கார வைத்துவிடுவார்கள். வழியில் குதிரையின் வால் ஒரு முறையாவது சட்டென அடிக்கும் அதன் சிலிர்ப்பில் வெளியில் சொல்ல முடியாத பயமும் கலந்திருக்கும். இறங்கும் இடம் வரும்போது குதிரைவண்டி அப்படியே பின்னாலே போகாதா என மனம் ஏங்கும். இப்போதெல்லாம் குதிரைவண்டிகளைப் பார்ப்பதே அரிதாய் இருக்கிறது. அடுத்தமுறை எங்கே குதிரைவண்டி சவாரியைப் பார்த்தாலும், எந்த வயதானாலும் ஒரு முறை பயணித்து விட வேண்டும். சாயம் போன என் பால்யத்தின் பயணத்தின் மீது அது நிச்சயம் பல வண்ணங்களைப் பூசும்.



கொஞ்ச காலம் வேலைக்கு போன போது தினமும் இந்த பாலத்தின் வழியேதான் என் வாழ்க்கை ஓடியது. நண்பர்களோடு நடந்து செல்லும்போது பாட்டு பாடியபடி தூண்களையும் கடந்து போகும் ஆட்களையும் எண்ணிக்கொண்டே போனது இப்போதும் யாராவது என்னை கடக்கும்போது மனதில் இருந்து எட்டிப்பார்க்கிறது. எவனோ ஒருவனின் காமப்பசிக்கோ அல்லது  எவளோ ஒருத்தி ஏமாந்ததாலோ தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத ஒரு குழந்தையை இரவோடு இரவாக பாலத்திலிருந்து காவிரி ஆற்றுக்குள் வீசி இருந்தார்கள். முந்தையநாள் பனிக்குடத்தில் மிதந்த குழந்தை அடுத்தநாள் காவிரியில் மூழ்கியிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்துவிட்டு கனத்த இதயத்தோடு நடந்தபோது  அன்று அந்த பாலம் முடியவே இல்லை. அவள் உண்மையானவளாய் இருந்திருந்தால் அன்று கரைபுரண்டு ஓடிய காவிரியில் பாதி அவள் கண்ணீராய்  இருந்திருக்கும்.

பெல் இல்லாத குட்டி வாடகை சைக்கிளில் நண்பர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு அந்த பாலத்தில் ஓட்டிய மகிழ்வை இப்போது காரிலோ, பைக்கிலோ கடக்கும்போது வருவதே இல்லை. இரவுக்காட்சி சினிமாவுக்கு போய்விட்டு திரும்புகையில் தூரத்து சுடுகாட்டில் பிணம் எரியும் நெருப்பைக்கண்டு  பயந்தபடியே பாலத்தைக் கடந்த நாட்களை நினைத்தால் இப்போதும் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. ஊரடங்கிய ஒரு பெருமழையில் யாருமற்ற பாலத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி நடந்து வரும்போது ஒரு ஆட்டோக்காரர் அழைத்து வந்து பாலத்தின் மறுமுனையில் விட்டார் இருபது வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்ச்சி இப்போதும் மனதின் ஒரு ஓரத்தில் பத்திரமாய் இருக்கிறது. பகலில் பாலத்திலிருந்து காவிரியில் குதிக்கும் பசங்களிடம் பயம் கலந்த பரவசம் இருக்கும். பாலத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு யாரோ சிலர் போடும் தூண்டிகளில் சில நேரம் பெரிய மீன்களும் சிக்கி விடும். காய்ந்துபோன பூக்களையும் மாலைகளையும் நடுப்பாலத்தில் இருந்து காவிரிக்குள் வீசும் பழக்கத்தை யார் கண்டுபிடித்தார்களோ இப்போதுவரை தொடர்கிறது.

             
                                  

இப்போது அந்த பாலம் தவிர்த்து இரண்டு புதிய பாலங்கள் வந்து விட்டன. பவானி பேருந்து நிலையத்தை ஒட்டிய புது பாலத்தை கடப்பதற்கு மட்டுமல்லாமல், காதலர்களின் சந்திப்பு, வயதானவர்களின் பொதுக்கூட்டம், மதுப்பிரியர்களின் திறந்தவெளி பார், அதிகாலை நடைபயிற்சி, இருசக்கர வாகன பயிற்சி,  மாலை நேர இயற்கை ரசிப்பு என பலவிதமாய் பயன்படுத்துகிறார்கள் எந்த பயமுமின்றி. இந்த பாலத்தில் நிற்கும் போது பெரிய லாரியோ, பேருந்தோ கடக்கும்போது பாலம் கொஞ்சம் ஆடுவதை உணர முடியும் ஆனால் இந்த உணர்வை பழைய பாலம் தந்ததே  இல்லை. அது எவ்வகை கட்டிடக்கலை என தெரியவில்லை, அல்லது புதிய பாலங்கள் எல்லாமே இப்படி அதிரும் வகைதானா என்பது புரியவில்லை. நேர வசதிக்காக இந்த புதிய பாலங்களை பயன்படுத்தினாலும் கூட இப்போதும் ஊருக்கு போகும் போது ஒருமுறையாவது அந்த பழைய பாலத்தில் பயணிப்பதுண்டு, காரணமே இல்லையெனினும் காரணத்தை உண்டாக்கிக்கொண்டு பயணிப்பதில் என் சிறு வயது வாசனை அங்கே இருப்பதாய் உணரமுடிகிறது. பவானி குமாரபாளையத்தில் பிறந்தவர்கள் ஒருமுறையாவது இந்த பாலத்தைக் நிச்சயம் கடந்திருப்பார்கள்.

கடந்தமுறை சென்ற போது அங்கங்கே பழுதாகி இருந்த இடங்களில் ஒட்டு போட்டுக்கொண்டிருந்தார்கள். முகத்தில் சுருக்கம் விழுந்த ஒரு வயதான பாட்டியின் முகமாய் மேடு பள்ளங்களால் நிரம்பிய அந்த பாலம் இப்போதும் அழகுதான். பாலத்தின் நடுவில் நின்று பார்த்தால் வலப்பக்கம் பெருமாள்மலையும் இடப்பக்கம் ஊராட்சிக்கோட்டை மலையும் அத்தனை அழகாய்த் தெரியும். கற்பனைகளின் உயரத்திலிருந்து பார்த்தால் இரண்டு புதிய பாலங்களுக்கு நடுவே இந்த பழைய பாலம் அணில் முதுகில் உள்ள கோடு போல அழகாய் இருக்கும்.  எதையும் ரசிப்பதற்கான மனதையோ நேரத்தையோ இந்த காலம் எல்லோருக்கும் கொடுத்து விடுவதில்லை ஆனாலும் கூட அவ்வப்போது பால்யத்தின் வயதோடு பயணிப்பது ஒரு சுகம்.

காலம் கைகொடுக்கும் நாளொன்றில் இந்த பழைய பாலத்தில் நடந்து அதன் பக்கச் சுவர்களில் படிந்திருக்கும் என் நினைவுகளுடன் கைகுலுக்கி, தூண்களுக்கு நடுவே தொங்கிக்கொண்டிருக்கும் என் சிறு வயதை தொட்டுப்பார்த்து, இரும்பு பாலத்தில் உட்கார்ந்திருக்கும் என் பயத்திடம் நலம் விசாரித்து, பாலம் முழுவதும் நிரம்பிக்கிடக்கும் என் சுவடுகளின் சூடுகளை அதே கதகதப்போடு அள்ளிவர வேண்டும். அதை என் எதிர்காலத்தின் மொட்டை மாடிகளில் உலரவைப்பேன் அப்போது நகரும் வாழ்விடம் சொல்லிக்கொள்ள பல கதைகளை பத்திரமாய் வைத்திருக்கும்
அந்த "பாலத்தின் சுவடுகள்...!"