14 December 2010

இப்போது எப்படி இருப்பாய் நீ ....?


ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும்
ஒவ்வொரு நாளின் முடிவிலும்
உன் பெரிய புன்னகையோடும்
என் சின்ன கோபத்தோடும்
நகர்ந்த நாட்கள்
உனக்கு நினைவிருக்கிறதா ..?

என் மிதிவண்டி சத்தத்திர்க்காக நீயும் ...
உன் கொலுசுகளின் ஓசைக்காக நானும்....
காத்திருந்த காலங்கள்
உனக்கு நினைவிருக்கிறதா ..?

என் கவிதை புத்தகங்களை நீயும்
உன் கல்லூரி புத்தகங்களை நானும்
மாறி மாறி படித்த
மறக்க முடியாத நாட்கள்
உனக்கு நினைவிருக்கிறதா ..?

காலம் நம்மை பகடைக்காயாய்
உருட்டி விளையாடியதில்
திசை தொலைத்த காற்றாய்
காணாமல் போனோம் ...
உருண்டோடிய காலத்தின் ஒரு நாளில்
ஒரு பேருந்து நிறுத்தத்தில்
உன்னை கண்ட போது...

கழுத்தில் தாலியும் ..
கையில் குழந்தையுமாய்
ஒரு பழைய கவிதையாய்
பாவமாய் நின்றாய் ....

ஆனாலும் ...

சந்தோசம் அதிகமாகவே இருந்தது
உன் குழந்தையின் முகத்தில் ....!

இதுவரை எத்தனையோ கண்கள்
என்னைக்கடந்து போய்விட்டது
இருந்தாலும் ...
உன் முதல் பார்வை
இன்னும் பத்திரமாய் இருக்கிறது
என் கண்களுக்குள் ....

இதுவரை எத்தனையோ
உதடுகள் என் பெயரை
உச்சரித்துப் போயிருக்கிறது
நீ உச்சரித்தது மட்டும்
இன்னும்
எதிரொலித்துக்கொண்டிருக்கிறது...

இன்னும் பல
காலங்கள் கடந்து விட்டது...
உன்னை பார்த்தும் பல காலங்கள்
ஆகிவிட்டது ....

இப்போது நீ
எப்படி இருப்பாய்..?

எங்கிருந்தாலும் ..
எப்படி இருந்தாலும் ...

நீ நன்றாக இருக்க வேண்டும்
என்பதே என் இப்போதைய
கனவும் கூட ...

நீ என்னை மறந்திருந்தாலும் சம்மதம்
நான் நினைத்துக்கொள்கிறேன் ...
உன் குழந்தையின்
முகத்தில் பார்த்த சந்தோசம்
உன் முகத்திலும் வந்திருக்குமென .....!

No comments:

Post a Comment