26 July 2020

கடந்து போவதுதானே வாழ்க்கை


வழியெங்கும் சந்திக்கும் மனிதர்களிடத்தில் தவழும் புன்னகைகளையெல்லாம் நெஞ்சுக்கூட்டில் சேமித்து வைக்கவும், பதிலுக்கு கொஞ்சம் புன்னகைக்கவும் காலம் எல்லோருக்குமே சிரிப்பென்ற வரத்தைக் கொடுத்திருக்கிறது. அதை நாம் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரிதான் பயன்படுத்துகிறோமா என்பதில் தான் வாழ்வின் மிகப்பெரிய கேள்விக்குறி மீன் தூண்டில் கொக்கியைப்போல மனதில் மாட்டிக்கொண்டிருக்கிறது. சொந்தங்களிடம் காட்ட ஒரு புன்னகை, நட்புகளுக்கென ஒரு புன்னகை, நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு ஒரு புன்னகை, தாழ்த்தவர்களுக்கு ஒரு புன்னகை, எதிர்பாலிடத்தில் ஒரு புன்னகை, குழந்தைகளுக்கென ஒரு புன்னகை என எல்லோரிடத்திலும் வெவ்வேறு புன்னகைகள் இருக்கின்றன. நாம் எதை பயன்படுத்த வேண்டுமென்பதை  பெரும்பாலும் எதிரில் இருப்பவர்களின் செயல்தான் தீர்மானிக்கிறது.

அன்புக்காகவும் பிரியங்களுக்காகவும் ஏங்கும் மனிதர்கள் இங்கு ஏராளம். அதே அன்பையும் பிரியங்களையும் செலவு செய்யத் தெரியாமல் கைவசம் வைத்திருப்பவர்களும் ஏராளம். வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதலாக காட்டவேண்டிய அன்பை, நேசத்தை வாய்ப்புகளிருந்தும் நாம் எல்லோரிடத்திலும் அதைக் காட்டுவதில்லை. அந்தந்த நேரத்தில் வசப்படும் பொய்களை நம் வசதிக்கேற்ப முலாம் பூசி மழுப்பி விடுகிறோம். காற்றில் உதிரும் சில மலர்களை நினைத்து மரங்கள் வருத்தப்படுவதில்லை, மாறாக இன்னும் இன்னும் பல மலர்கள் பூக்க வேர்கள் தொடர்ந்து உதவுகின்றன. மனிதர்களிடத்தில் காட்டவேண்டிய நேசங்களும் அதைப்போலவே இருக்கணும். இவனால் எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதையும் தாண்டி என் சிறு புன்னகை இவருக்கான நாளை நல்லவிதமாக மாற்றுமென்ற நம்பிக்கை இருந்தால் போதும் கடக்கும் எல்லா மனிதர்களிடத்திலும் ஒரே மாதிரியான புன்னகையால் கை குலுக்கலாம்.

எங்க ஊருல ஒரு பையன் இருக்கான், எத்தனையோ பையன்கள் இருந்தாலும் இவன் கொஞ்சம் வித்தியாசமானவன். அவன் பெயர் ராஜேஷ்ன்னு ஒருமுறை சொன்னான் அதான் உண்மையான பெயரான்னுதெரியல. அவன்கிட்ட எப்போதும் கிலோ கணக்கில் காகிதங்கள், விசிட்டிங் கார்டுகள், நோட்டீஸ்கள், மடித்துவைக்கப்பட்ட கல்யாண அழைப்பிதழ்கள் என கட்டு கட்டாக ரப்பர் பேண்டுகளைப் போட்டு சட்டை பாக்கெட்டுகள், பேண்ட் பாக்கெட்டுகள் மட்டுமல்லாமல் கைகளில் கக்கத்தில் என எல்லா பக்கங்களில் வைத்திருப்பான், ஆனால் யாரிடமும் எதையும் கொடுக்க மாட்டான். எப்போதும் முழுக்கால் பேண்ட், கைகளில் பட்டன் போட்ட முழுக்கை சட்டையோடு இருப்பான். யாராவது டீ, காபி வாங்கிக்கொடுத்தால் குடிப்பான் இன்னும் கொஞ்சம் போய் வறுக்கி, பண், போண்டா, பஜ்ஜிகளும் வாங்கிக்கொடுப்பவர்களும் உண்டு. பவானி கூடுதுறையில் இருந்து பவானி எல்லையம்மன் கோவில் வரை நடந்தே போய் வந்து கொண்டு இருப்பான். அவனை போலீசுக்கு உதவியா சிஐடி வேலை பாக்கறான்னு கூட கிண்டலா சொல்லுவாங்க.

அவன்கிட்ட இருக்கும் காகித கட்டுகளை யாரும் அவ்வளவு சீக்கிரம் தொட்டுவிட முடியாது. ஆனாலும் அன்பானவன், யாரிடமும் கோபப்பட மாட்டான், அநாகரிகமாக நடந்துகொள்ள மாட்டான். இப்போ டச் போன் கூட வெச்சிருக்கான், ஆனால் அதை அத்தனை கவர்களில் போட்டு அவ்ளோ பத்திரமா உள் பாக்கெட்டில் வெச்சிருப்பான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோணுவது, இவனும் மற்றவர்களைப் போல இருந்திருந்தால் இந்நேரம் எப்படி இருந்திருப்பான், இப்போ
இவன் மூன்று வேளையும் சாப்பிடுவானா, எப்பவாவது புதுத்துணி போடுவானா, உடம்பு சரியில்லைனா ஹாஸ்பிடல் போய் வைத்தியம் பார்த்துக்கொள்வானான்னு சாதாரண மனிதர்களுக்கு உண்டான எல்லா கேள்விகளும் வந்து போகும். ஆனாலும் எல்லாக் கேள்விகளையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு எல்லோரும் கொடுக்கும் புன்னைகையிலிருந்து மாறாக கொஞ்சம் கூடுதல் பிரியங்கள் நிறைந்த புன்னகையை அவனுக்கு கொடுப்பேன் அவனும் அதே போன்றதொரு புன்னகையைக் கொடுப்பான்.

என் நண்பர் வீட்ல ஒரு அக்கா இருப்பாங்க, உறவுக்கார பெண்ணான அவங்களை கூட மாட ஒத்தாசைக்கு இருக்கட்டும்னு நண்பனோட வீட்டோட வச்சிருக்காங்க. இப்போ சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் மொபைலை கொடுத்துவிட்டால் அது சமர்த்தாக சாப்பிட்டு விடும். கைப்பேசிகள் வந்திருக்காத காலங்களில் குழந்தைகளை சாப்பிட வைக்க "பூச்சாண்டி வரான்" ன்னு ஒரு சொல்லி சாப்பிட வைக்கும் ஒரு பழக்கமிருந்தது. இப்பவும் கூட அந்த தெருல சின்ன குழந்தைகள் சாப்பிடலனா இந்த அக்கா பேரைச் சொல்லி தான் சாப்பிட வைப்பாங்க. அந்த அக்கா பேரு என்னன்னா "ஆயா பொண்ணு". இது நிச்சயமா அந்த அக்காவோட உண்மையான பேரா இருக்காது, உண்மையான பேர் என்னன்னு அந்த அக்காவுக்கும் கூட தெரியாமல் இருக்கலாம். ஒருமுறை அந்த அக்காகிட்ட "உங்க பேர் என்னங்க அக்கா" ன்னு கேட்டேன், "எதுக்குடா கேக்கற" ன்னு கொஞ்சம் புரியாமை கலந்த கோபத்தோடு கேட்டுட்டு போய்ட்டாங்க.

வீட்டு வேலைகள் செய்து கொண்டே இருப்பதால் எப்போதும் அழுக்கு நிறைந்த உடை, சரியாக வகிடெடுத்து சீவாத தலை, கறை படிந்த பற்கள், கரகரத்த குரல், பயமுறுத்தும் கண்களென அவர்கள் கொஞ்சம் சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் அவங்க அவ்ளோ அழகு. அவங்க மற்றவர்களைப்போல இருந்திருந்தால் இந்நேரம் கல்யாணமாகி இரண்டு குழந்தைகளோடு எல்லோரையும் போல ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார். அதேசமயம் எல்லோரையும் போல இருப்பதைக் கொண்டாடாமல் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்திருப்பார். இப்போ அவங்களுக்குன்னு பெருசா கனவுகள் இருக்காது, கவலைகள் இருக்காது, இழப்புகள் தெரியாது, மன ரீதியான வலிகள் இல்லாமல்,  உடல் ரீதியான வலிகள் மட்டும் இருக்கலாம். மூன்று வேளை சாப்பாடும், நல்ல தூக்கமும் இருந்தால் போதுமென நினைத்திருக்கலாம். எப்போதாவது தான் அவங்க சிரிப்பாங்க ஆனால் அந்த சிரிப்பில் அத்தனை அன்பு இருக்கும், வாஞ்சை இருக்கும், வெட்கமும் கலந்தே இருக்கும். எல்லோரும் அவரின் உருவத்தை வைத்து பயந்து விலகி நின்றாலும் பூச்சாண்டிக்கு நிகராக ஒப்பிட்டு அழைத்தாலும் அவங்க இப்போதும், எப்போதும் ஒரு அழகிய தேவதைதான்.

பவானி மேற்குத்தெரு வட்டாரத்தில் "மாது"ன்னு சொன்னா நெறைய பேருக்கு தெரியும். சாதாரண மனிதர்களிடமிருந்து மாறுபட்ட குணங்கள், கொஞ்சம் முரட்டுத்தனம் நிறைந்த வளர்ந்த குழந்தை மனம், பயம் தெரியும் வெட்கம் தெரியாது, பசி தெரியும் பாவம் தெரியாது, நிழல் தெரியும் வெய்யில் உரைக்காது, வேகம் தெரியும் வேலை தெரியாது, கணுக்காலுக்கு மேலே தூக்கி போட்டிருக்கும் பேண்டை அரைஞாண்கயிறு கீழே விழாமல் பிடித்துக்கொள்ளும், கைகள் மடக்கிய கசங்கிய சட்டையில் எங்காவது ஒரு பீடி ஒளிந்திருக்கும். எப்போதாவது எண்ணெய் பார்க்கும் தலையும், வெத்தலை பாக்கு போட்ட வாயும் பதினாறு வயதினிலே சப்பாணியை நினைவுபடுத்தும்.

எல்லா மனிதர்களைப்போலவும் பிறப்பெடுத்து வந்தவர் தான், வாழ்க்கை மாற்றிப்போடும் கணக்குகளில் கொஞ்சம் பிணக்குகள் உண்டாவதைப்போல, இலக்கியங்கள் கொட்டிக்கிடக்கும் போது கொஞ்சம் பிழைகளும் இருப்பது போல இவரும் இருக்கிறார். மாதுவுக்கு சரியா பேச வராது, அரை குறை வார்த்தைகள் அவ்வப்போது உடைந்து உடைந்து வரும், அவர் வாய் பேசும் வார்த்தைகளை விட கைகாட்டும் சைகைகள் தான் அதிகமிருக்கும். பண்டிகை, திருவிழா காலங்களில் மட்டும் புதுத்துணிகள் போட்டிருப்பார், "என்ன மாது புதுத்துணி போல"ன்னு யாராவது கேட்டா ஓரத்துல கொஞ்சம் வெட்கத்தோடு சிரிப்பார். கோவில் திருவிழாக்களில் கைகளை மேலே தூக்கியபடி வானுக்கும் பூமிக்கும் குதித்தபடி இவர் ஆடும் ஆட்டத்திற்கு "மாது ஆட்டம்னே" பேர் இருக்கு. இவர் காலில் செருப்பு போட்டு நடந்து நான் பார்த்ததே இல்ல, எவ்ளோ வெயில் அடிச்சாலும் வெறுங்காலில் தான் நடப்பார். ஆற்றுக்கு, அணைக்கு குளிக்க போனா சட்டையை கழற்றி கோவணம் கட்டிட்டு குளிச்சிட்டு அப்படியே ஈரத்தை பிழிந்து போட்டுக்கிட்டு வந்துடுவார், வீட்டுக்கு வரத்துக்குள்ள அது காய்ஞ்சிரும்.

ஆமா... இவருக்குன்னு வீடு இருக்கு, தம்பி, தம்பி மனைவி, அவங்க குழந்தைங்கன்னு நெறைய உறவுகள் இருக்காங்க. நல்லா பார்த்துக்கறாங்க. ஊர் பெரிய மனிதர்களிடம் நல்ல அடையாளம் இவருக்கு உண்டு. மற்றவர்களுக்கு இல்லை என்பதைக்கூட மாதுக்குன்னு கேட்டா கொடுப்பாங்க. அப்பப்போ டீக்கடைக்கு வருவார் யாராவது டீ வாங்கி கொடுத்தா குடிப்பார், ஒரு பீடி வாங்கி பற்றவைத்துவிட்டு வேக வேகமா புகையை விடுவார், தனக்குள்ள ஏதோ பேசிட்டே இருப்பார். மதிய நேரத்துல எங்காவது திண்ணைல தூங்குவார், மழை வந்தா ஏதாவது திண்ணை, முற்றத்துல இருப்பார், அப்பறம் வீட்டுக்கு போய்டுவார். நம்மைப்போன்ற சக மனிதர்களைக் காணும் போதெல்லாம் அவரது வேலை, சம்பளம், வசதி, பேர், புகழ் போன்ற விஷயங்களை ஒட்டி நமக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இவரை போன்றவர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவரும் நம்மள மாதிரி நல்லா இருந்திருந்தா இந்நேரம் எப்படி இருப்பார், என்னென்ன பண்ணிக்கிட்டு இருந்திருப்பார், இவர் வண்டி ஓட்டிட்டு போனா எப்படி இருப்பார், குழந்தைகளை எப்படி பார்த்துப்பார்ன்னு அவர்கள் நினைத்துப் பார்க்காத ஒரு வாழ்க்கையை நான் நினைத்துப்பார்ப்பதுண்டு.

இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள், கிழிந்த சட்டை, பேண்டை அணிந்துகொண்டு சாலையின் இருபக்கங்களிலும் போக்குவரத்தை சரிசெய்யும்  சிறுவன், சமயங்களில் பீடியை இழுத்தபடி புகைவண்டியாய் மாறிப்போவான், எப்போதாவது ஒரு தேனீருக்காக கையேந்தும் அவனுக்கு வாழ்வு எல்லா மொழிகளிலும் உணர்த்தும் வலி என்பது பசி மட்டுமே. கேரிபேக்கில் கிழிந்த வெத்தலைகளையும் உடைந்த வெட்டுப்பாக்குகளையும் சேகரித்துக்கொண்டே கூன் விழுந்த உடலை சுமந்து எங்குங்கோ அழைந்துகொண்டும், ஏதோ ஒரு வீட்டு வாசலிலோ திண்ணையிலோ கிழிந்த பாய் போல தான் உடலை ஒடுக்கி படுத்திருக்கும் அந்த பாட்டியும், நடக்க முடியாமல் கைகளில் தட்டேந்தியபடி சாலையை தவழ்ந்தே கடக்கும் ஒருவருமென ஒரு சின்ன ஊருக்குள் இத்தனை ஜீவன்கள் வலி சுமந்தபடி காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அபிப்ராயத்தைக் கொடுப்பதில்லை. சிலர் தங்களது தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளவும், சிலர் தங்களது கிண்டல்களுக்கு பயன்படுத்திக்கொள்ளவும், சிலர் இவர்களின் குறைகளைக்காட்டி தங்களை பெரியதாய் அடையாளப்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்கள் இவை எதையும் தெரிந்துகொள்ளலாம் இவர்கள் இதையெல்லாம் கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

அப்படிக்கடந்து போவதில்தானே  வாழ்வின் அர்த்தம் நிறைந்திருக்கிறது.