24 April 2017

மழைச்சத்தம்


ஊரிலிருந்து அம்மா போன் பண்ணி இருந்தாங்க, எடுத்தவுடனே சாப்டியான்னு கூட கேக்கல "கண்ணு இங்க பயங்கர மழை கண்ணு, நல்லா காத்தும் அடிக்குது ரொம்ப நேரமா மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது, மழை சத்தம் கேக்குதான்னு" கைப்பேசியை மழை பொழியும் இடத்திலிருந்து தள்ளி காற்றில் வைக்கிறார்கள். கேட்டதும் கிடைத்துவிட்ட ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளுக்காக மகிழ்ச்சியில் திளைக்கும் ஒரு குழந்தையைப்போல அம்மாவிடம் அத்தனை ஆனத்தம் கூடவே சொல்ல முடியாத சந்தோஷமும் உற்சாகமும் மிளிர்கிறது.

வறண்ட நிலத்தின் வெகுதொலைவுக்கு போய்விட்ட நிலத்தடி நீர், குழாய் வழியே வராமல் குடியிருக்கும் வீடுகளுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க முடியாமல், எப்போதாவது வரும் தெருக்குழாய் நீருக்காக கால்கடுக்க காத்திருந்து சமயங்களில் சக பெண்களோடு சண்டையிட்டு ஒரு குடமோ இரண்டு குடமோ தண்ணீரை ஒலிம்பிக்கில் வாங்கிய பதக்கம் போல அத்தனை சந்தோசமாய் சுமந்து வரும் கஷ்டத்தை வெளியூரில் குளிர்சாதன அறையில் அமர்ந்திருக்கும் என்னைப்போன்ற மகன்களோ , மகள்களோ அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். அது பிறந்த ஊரிலோ அல்லது வாக்கப்பட்ட ஊரிலோ வாழ்ந்து பழகிய அம்மாக்களின் சின்ன சின்ன சந்தோசங்களுள் இப்போது சேர்ந்துவிட்டது.

இதே அம்மாதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு என் பால்யத்தின் விவரமறியா வயதில் வாழ்ந்த மொட்டை மாடிக் குடிசை வீட்டின் மேல் கருமேகங்கள் சூழ்ந்தாலே சொல்ல முடியாத ஒரு கவலைக்குள் மூழ்கிவிடுவார்.
ஒரு சிறு மழையோ பெரு மழையோ பெய்யத் தொடங்கினாலே எங்கள் குடிசை வீட்டின் எல்லா பகுதிகளும் பாரபட்சமில்லாமல் ஒழுகும். கிடைக்கின்ற தட்டு முட்டு சாமான்கள் எல்லாத்தையும் மழை நீர் ஒழுகும் இடங்களாய் பார்த்து பார்த்து வைப்போம். அந்த பாத்திரங்களில் நிரம்பும் தண்ணீரை தொட்டிகளில் சேமித்து அடுத்தநாள் பயன்படுத்துவோம். மழை இடிகளை அனுப்பி வந்துவிட்டு ஈரத்தை கொடுத்து போய்விடும், அம்மா தான் ஈரம் நிறைந்த முழுவீட்டையும் துடைத்து, நனையாத போர்வைகளை தேடிப்பிடித்து எங்களுக்கு போர்த்திவிட்டு, மழை நீர் நிரம்பிய குண்டாக்களை மாற்றிவைத்து, மின்சாரம் துண்டித்த இரவை மண்ணெண்ணெய் விளக்கால் தண்டித்து ஈரமாகாத ஒரு இடம் பார்த்து உறங்கப்போகும்போது பாதி இரவை மழை தன் மின்னல் நாக்குகளால் மெதுவாய் விழுங்கி இருக்கும்.

இதோ இத்தனை பெரிய காற்றுடனும் இடி முழக்கத்துடனும் பெய்யும் மழையை அம்மா எத்தனை குதூகலமாய் ரசிக்கிறார், என்னையும் ஒரு இசையை போல ரசிக்க வைக்க முயல்கிறார். இது நிச்சயம் நல்லவீட்டில் இருப்பதற்கான காரணமோ அல்லது மழை பெய்தால் ஒழுகாது என்ற கவலையின்மையோ இல்லை. மழை மீதான பிரியங்கள், தண்ணீர் மீதான தாகம் , விவசாயத்தின் மீதான அன்பு, நாட்டின் வளர்ச்சி, குளிர்ச்சியின் மீதான ஏக்கம், நீர் பற்றாக்குறையின் மீதான வேண்டுதல், எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையோடு இணைந்து வாழ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அடுத்த தலைமுறை மீதான அக்கறை. தான் வாழ்ந்த ஊரில் தன் பிள்ளைகள் பின்னாளில் தண்ணீருக்காக கையேந்தக்கூடாது என்ற தவிப்பு.

இந்த அக்கறையும் தவிப்பும்  எதிர்பார்ப்பும் இப்போது எல்லோருக்குள்ளும் இருப்பது நன்றாகவே தெரிகிறது. அதற்கு "எங்களூரில் மழை" என ஒரு திடீர் சந்தோசத்தோடு மழை பொழியும் எமோஜியை சுமந்து வரும் வாட்ஸ்அப் தகவல்கள் ஒரு சின்ன  உதாரணம்.
அடுத்த தலைமுறைக்கு "மழை"
என்பதை ஒரு புகைப்படமாகவோ, ஒரு ஒளிப்படமாகவோ, ஒரு ஓவியமாகவோ காட்டாமல் மழையை மழையாகவே காட்டவேண்டுமென்ற ஏக்கமும் தவிப்பும் எப்போதுமே இருக்கிறது. அதை நாம் மீட்டெடுக்கும் இயற்கையும் , வளர்க்கப்போகும் மரங்களுமே சாத்தியமாக்கும்.