13 February 2017

இதற்கு பெயரும்



சின்னத்தம்பி குஷ்பு போல அத்தனை செல்லமாகவும் பெருமையாகவும் ஒரு இளவரசி போல வளர்க்கப்பட்ட பெண் அவள். அழகும் அமைதியும் அவள் எடையை விட அதிகமாகவே இருக்கும். கல்லூரிக்கும் கம்ப்யூட்டர் வகுப்புக்கும் போய்விட்டு வரும்போது மட்டுமே அவளை பார்க்க முடியும். சமயங்களில் வீட்டுக்கு எதிரில் உள்ள கோவிலுக்கு சென்று வருகையில் அந்த அம்மனே எழுந்து வருவதாய் தோன்றும். அன்பையும் சிரிப்பையும் இப்போதும் இருப்பு வைத்திருகிறாள் விதி அவளிடம் விளையாடிய போதும் கூட. அவள் அழகுக்கு எத்தனை பெரிய வரனும் எத்தனை பெரிய வாழ்க்கையும் காத்திருந்த போதும் அண்ணனின் நண்பனை நேசிக்கத் தொடங்கினாள், அவள் வாழ்க்கை அவள் விரும்பாத திசையை நோக்கி நகரப்போகிறது என்பதை சொல்லாமலே காலமும் அவளை அவனிடம் சேர்த்து வைத்தது. திருமணம் முடிந்து நாட்கள் நகர நகர அவளும் நகரத்தொடங்கினாள் ஒரு நரகத்தை நோக்கி. காதலித்த கணவனானவன் வேலைக்கு போகாமல் குடிக்கு அடிமையாகி இவளை வேலைக்கு அனுப்பி வலிகள் நிறைந்த ஒரு பள்ளத்தில் தள்ள, அவள் அப்பாவும் ஒரு அண்ணனும் அடுத்தடுத்து இறந்து போக குடும்ப சூழ்நிலைகள் மாற மகன் வளர வாழ்வின் போராட்டத்தை நேசிக்கத் தொடங்கி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறாள் அதே புன்னகையோடு.

பூப்போட்ட பாவாடையும் சந்தன நிற சட்டையும் அணிந்து அவள் தெருவில் இறங்கி நடந்து வந்தால் எல்லா வாலிபர்களையும் ஏக்கமாக பார்க்க வைத்து விடுவாள். திருவிழா நேரத்தில் தாவணி பாவாடையிலும் தீபாவளியில் சேலையிலும் அவளைக்காணும் அத்தனை பசங்களின் நரம்புகளிலும் சொல்ல முடியாத ஒரு படபடப்பு உடம்பில் பரபரவென ஓடும். நீண்ட நாளாய் அவளை பார்த்துக்கொண்டிருந்த நண்பனொருவன் அவள் பிறந்தநாளில் “தேவதைக்கு ஒரு மானுட உதாரணம் நீ” என்ற ஒற்றை வரியில் மொத்த நேசத்தையும் புகுத்தி ஒரு வாழ்த்து அட்டையை அவள் வீட்டுக்கு அனுப்ப அவள் அப்பன் தெருவில் நடக்கும் எல்லோருக்குமே வில்லனாக மாறினார். முயற்சியும் பயிற்சியும் அவர்களை சேர்த்து வைக்க இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிப்போனாள், நண்பனை கடனும் மதுவும் மூழ்கடிக்க, சேரக்கூடாத சேர்க்கை சிதறடிக்க, அவளும் நிலைகுலைந்து போனாள். கடைசியாய் அவளை பார்க்க நேர்ந்த போது காவிரி ஆற்றில் துவைத்த துணிகளை சுமந்தபடி ஈரம் சொட்ட சொட்ட அவள் மாரியம்மன் கோவிலைக் கடக்கையில் ஒரு தேய்ந்த தேவதையைப்போல கண்ணை விட்டு மறைந்து போனாள்.

எதிரெதிர் வீடாக இருந்ததாலும், எதிரெதிரே பார்த்துக்கொண்ட போது புன்னகைத்துக் கொண்டதாலும் வெகு சீக்கிரமே சிநேகமாகிப்போனார்கள் அவர்கள். பாதி திறந்தபடி இருக்கும் ஜன்னலின் வழியே மீதிக்காதலை மிகத் தெளிவாய் வளர்த்தார்கள் ஆனால் துணைக்கோ தூதுக்கோ அவர்களிடம் இருந்தது  "பள்ளிக்கூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த வாங்கலாமா" இந்த ஒரே ஒரு பாட்டு மட்டும்தான், ஒரு கேசட் முழுவதும் அந்த பாடலை மட்டுமே பதிவு செய்து வைத்திருந்தான். அவர்கள் சந்திக்க நினைக்கும் போது அந்த பாடல் அவன் வீட்டு இசைப்பெட்டியில் ஒலிக்கும் பல்லவி முடிந்தவுடன் அவன் முன்னால் நடந்து போக ஐந்து நிமிட இடைவெளியில்  மளிகைக்கடைக்கோ தண்ணீர் பிடிக்கவோ போவதாக சொல்லிவிட்டு இவள் பின்னால் போவாள், அருகில் உள்ள பள்ளிக்கூடத்தின் கிணற்றுக்கு பின்னால் காதல் வளர்ப்பார்கள். போன சுவடு தெரியாமல் வீட்டுக்கு திரும்பி விடுவார்கள் அவள் நடவடிக்கைகளில் மாற்றம் கண்டுபிடித்த அவள் அண்ணன் ஒருமுறை பின்னாலே போய் அவள் காதலையும் கண்டுபிடிக்க வழக்கம் போல் அடி உதை ரணகளம், அவன் வீடு மாறி போக, இவளுக்கு அவசர அவசரமாய் வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணமும் நடக்கிறது. இரண்டாவது பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்தவள் திரும்ப போகவே இல்லை, விவாகரத்து வாங்கிக்கொண்டு தன் பிள்ளைகளை வளர்த்தவள் மூத்த பெண்ணுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டாள். அவள் வீடு எவ்வளவோ மாறிய பின்பும் அந்த எதிர்வீட்டு ஜன்னலில் இருந்து இன்னும் சோகமாக கசிந்து கொண்டிருக்கிறது சந்தோசமான அந்த பாடல்.

ஆயிரம் பேருக்கு மேலாக பணியாற்றிய அந்த பெரிய நிறுவனத்தில் அடிக்கடி சந்திக்கும் அவன் அன்பும் அக்கறையும் பிடித்துப்போக மிக எளிதாகவும் இல்லாமல் மிகக் கடினமாகவும் இல்லாமல் ஒருவித மனோநிலையில் தான் அவள் சம்மதம் சொன்னாள், திருவிழாக்கால சந்திப்புகளும் திண்ணை பேச்சுகளும் இருவரையும் பிரிக்கவில்லை, தூரங்கள் பக்கமாக நட்புகள் பக்கபலமாக மாற சிறகடித்தார்கள். அவன் இவள் அன்புக்குள் பாய்ந்தவனாய் இருந்தாலும் அவனுடைய அப்பாவுக்கு பயந்தவனாய் இருந்தான், அக்காவுக்கு கல்யாணம், தம்பி படிப்பு என காரணங்கள் அதிகமாக அவர்கள் பிரிவும் அதிகமானது, சந்திப்புகள் குறைந்து போனது. பொசுக்கென இவள் அம்மா நோயில் படுக்க இடி விழுந்தவளாய் நொறுங்கிப்போகிறாள், மரணப்படுக்கையில் அம்மா அவளை “எல்லாம் தெரிந்த” தன் தாய்மாமனுக்கு மணமுடித்துவைத்து இறந்துபோக கண்ணீரோடு எல்லாவற்றையும் சுமந்தபடி ஊர் விட்டு வெளியேறுகிறாள். ஒரு வருடத்திற்குள் பழைய காதலை துருவியபடி அவள் கணவன் வார்த்தைகளால் சிதைக்க விவாகரத்து வாங்கிவிட்டு மீதமுள்ள வாழ்க்கையை வாட்ச்மேன் வேலைக்கு போகும் அப்பாவோடு வாழ்கிறாள், எத்தனையோ முறை அழைத்தும் இன்னும் இந்த ஊருக்கு வராமலே.

பதினாறு வயதிலேயே காதலிக்க தொடங்கி அடுத்த வருடமே கல்யாணம் பண்ணி பிறந்த குழந்தையை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு கல்லூரி போனவள், காதல் கணவனின் செயல்களால் தினமும் செத்து செத்து பிழைக்கிறாள் முட்டல் மோதல்கள் முற்றிப்போக பிறந்தவீட்டுக்கே திரும்புகிறாள். மீதமுள்ள படிப்பை அப்பா படிக்க வைக்க மீதமுள்ள கண்ணீரை அம்மா கொட்டிவிட படித்து முடித்து ஆசிரியை ஆகிறாள். பன்னிரண்டு வருட கல்லூரி பாடங்கள் சொல்லிக் கொடுக்காததை, இரண்டுவருட சொந்த வாழ்க்கை சொல்லிக்கொடுக்க சோகத்தின் சுவடுகளை புன்னகையால் துடைத்தபடி எடுத்துக்காட்டாய் தன் வாழ்க்கையை எல்லோருக்கும் பாடமாக கற்றுக்கொடுக்கிறாள் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டிருக்கிறாள்.

இதெல்லாம் நான் பார்த்து கடந்துவந்த எங்களூர் காதல் கதைகளின் ஒரு பகுதி. இதில் பெண்கள் மட்டுமே பாவமென்றோ ஆண்களெல்லாம் மோசமென்றோ கருத்து சொல்ல முன்வரவில்லை அதில் உடன்பாடுமில்லை. பதின் பருவத்திலிருந்து இப்போது வரை எத்தனையோ விதமான காதல்களைப் பார்த்து வளர்ந்தாலும் நெருக்கமான நட்பின் தோல்வியுற்ற காதல்களை மறப்பதென்பது அத்தனை சுலபமல்ல. ஆனாலும் கூட இப்போதும் அவர்களின் மனதின் பாசி படிந்த பழைய நினைவுகளில் அந்த காதலின் ஒரு இழையாவது உயிரோடிருக்குமென்பது உண்மை. எத்தனை நேரம் பேசினாலும், எத்தனை காலம் வாழ்ந்தாலும், எத்தனை பிறவிகள் எடுத்தாலும், எத்தனைதான் எழுதினாலும் “காதல்” தீராத ஒன்று என்பதும் அத்தனை உண்மையே.
வாழ்வின் அவசரத்தில் பொசுக்கென காதலிக்க முடிகிற நம்மால் அந்த வாழ்வை ஒரு சிலரைத் தவிர கடைசி வரை காதலாகவே நகர்த்த முடியவில்லையென்பது எவ்வளவு சோகம்.? இங்கே எல்லோருக்கும் ஜெயிக்க வேண்டும், உயர வேண்டுமென ஆசையிருக்கிறது ஆனால் விட்டுக்கொடுக்க வேண்டும், பிரிவு நெருங்கும் நேரத்தில் இன்னும் அதிகமாய் நேசிக்க வேண்டுமென்ற மனம் நிச்சயம் இல்லை. அதனாலேதான் இத்தனை பிரிவுகளும் இழப்புகளும்.

காதலிப்பதைவிட காதலிக்கப்படுவதில் தான் கூடுதல் அன்பிருக்கிறது. வெறுப்பதைவிட மன்னிப்பதில் தான் அதிக காதல் இருக்கிறது. ஒரே காதல் தான் எல்லோரையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இதயத்தில் தடித்திருக்கும் தழும்புகளை தடவிக்கொண்டு, நினைவுகளில் தேங்கியிருக்கும் வலிகளை சுமந்துகொண்டு வாழும் வாழ்க்கையில் எதை பெரிதாய் அனுபவித்துவிடப்போகிறோம்.? காதலர் தினத்தை மட்டுமல்ல அன்பால் நகரும் ஒவ்வொரு நொடியையும் கொண்டாடுங்கள்.

அவனையோ / அவளையோ மட்டுமல்லாமல் சக உயிரை நேசிக்கும் எல்லாவற்றுக்கும் காதலென்றே பெயர்.

#காதலர்_தின_வாழ்த்துகள்

---தனபால் பவானி
13.02.2017