13 April 2017

நீங்களும் உங்க ஜனநாயகமும்

உங்களிடம் இன்னும்
லத்திகளும் துப்பாக்கிகளும்
மீதமிருக்கின்றன அதையும்
அப்பாவிகள் மீது பிரயோகியுங்கள்

பள்ளிகளுக்கும் கோவிலுக்கும்
அருகில் ஆட்சியரின் அனுமதியோடு
சாராயக்கடை திறப்புவிழா
நடத்துங்கள்

அம்மணமான விவசாயிகளிடம்
முண்டாசுகள் அவிழாமல் இருக்கின்றன
அதை பிடுங்க ஆயுதப்படையை அனுப்புங்கள்

உரிமைக்காக போராடும்
மாணவர்களின் மீது
உங்கள் கையாலாகாத்தனத்தை
கட்டவிழுங்கள்

பெண்களிடமும்
பெரியவர்களிடமும்
வன்முறையை நிகழ்த்தி
உங்கள் வீரத்தை
மெச்சிக்கொள்ளுங்கள்

இன்னும் வாகனங்களும்
வாழ்க்கையும் மிச்சமிருக்கின்றன
அதையும் தீயிட்டுக் கொளுத்துங்கள்

இறுதியில் இழப்பீடென
எதையாவது அறிவித்து அதையும்
உங்கள் சட்டைப்பையில்
திணித்துக்கொள்ளுங்கள்

விவசாயிகளை மதிக்காத நாட்டில்
மக்களை மதிக்காத மாநிலத்தில்
மனிதனாய் வாழ நாதியற்ற ஊரில்

தமிழ் புத்தாண்டென்ன
ஆங்கிலப் புத்தாண்டென்ன
போங்கடா நீங்களும்
உங்க ஜனநாயகமும் ...!



மெளனத்தின் சத்தம்

அன்பின் அடுக்குகளில்
என்னை இன்னும் இன்னும்
உயர்த்துகிறது படைப்பு ...!

மார்ச் மாதத்திற்கான
"மின் இதழ் - 11" (01.04.2017)இல்
எனது கவிதையும்

என் கவிதையை தேர்வு செய்த
படைப்பு குழுவுக்கு
அளவில்லா நன்றிகளும்
அழகான வடிவமைப்புக்கு
வற்றாத வாழ்த்துகளும் ...!
***************************
ரகசியங்கள் நிறைந்த
ராத்திரியின் நடுநிசியில்
அடர் மெளனத்தை குலைக்கிறது
கோடங்கியின் குடுகுடுப்பை சத்தம்

இரண்டு வீதி தாண்டி
நீளும் ஒரு குறுகிய சந்துக்குள் கேட்கிறது
ஊளையிடும் நாயின் சத்தம்

வெக்கை நிமித்தமாய்
வெளித்திண்ணையில் புரண்டு படுக்கிறது
ஒரு பெரியவரின் இருமல் சத்தம்

முக்கிய சாலையின் வழியே
சுழலும் விளக்கோடு வேகமாய் விரைகிறது
அவசர ஊர்தியின் அபாயச் சத்தம்

இரைதேடும் இரவில்
பறந்தபடியே பயமாய் கேட்கிறது
ஒரு ஆந்தையின் அலறல் சத்தம்

பாதிக்கதவு சாத்தியபடி
விற்கப்படும் தேநீர்க் கடையிலிருந்து சூடாய்க் கசிகிறது
இளையராஜாவின் பாட்டுச் சத்தம்

முழுதாய் மூடிய கதவுகளின்
சாவித் துவாரத்தின் வழியே
காற்றில் கசிகிறது ஒரு
முத்தச் சத்தம்

இத்தனையும் மீறி இப்போதும்
யாராவது வருவார்களென்ற நம்பிக்கையில் ஒலிக்கிறது
குல்ஃபி ஐஸ் விற்பவனின் சைக்கிள் மணிச்சத்தம் ...!



எப்படிச் சொல்ல...?


பெரு நகர பேருந்தில் 
நரக பயணத்தில் 
பெண்ணாய் படும் 
அவஸ்தைகளை 
எப்படிச் சொல்ல...?

இருக்கைகள் நிறைந்த 
காலை வேளையில் 
கிடைக்கும் இடைவெளியில் 
என்னை நிறுத்திக்கொள்ள
முயலும் போராட்டத்தை 
எப்படிச் சொல்ல...?

உடைக்குள் ஊடுருவி 
உடல் தேடும் ஒருவனிடம் 
உடலுக்குள் மனுசி என்ற 
மனசொன்று இருப்பதை 
எப்படிச் சொல்ல...?

மல்லிகை கருகும்படி 
முதுகில் மூச்சுக்காற்றை 
ஊசியாய் இறக்கும் ஒருவனிடம் 
உனக்கும் என் வயதிலொரு 
சகோதரி இருப்பாளென 
எப்படிச் சொல்ல...?

கடக்கும் சாக்கில் 
கம்பியை பிடித்தபடி 
பின்னுரசும் ஒருவனிடம்  
பிசுபிசுப்பின் ஈரக்கசிவை 
எப்படிச் சொல்ல...?  

வெக்கை தகிக்கும் வியர்வையில்
வழிந்திறங்கும் துளிகளில் 
வாசம் நுகரும் ஒருவனிடம் 
உதிரம் கசியும் வலியை 
எப்படிச் சொல்ல...?

காலதாமதத்திற்கு காரணம் கேட்டு 
கைப்பேசியில் வந்து குதறும் 
மேலாளருக்கு 
"அந்த மூன்று நாட்களில்"
அலுவலகம் வர கொஞ்சம் தாமதமாகுமென்பதை 
எப்படிச் சொல்ல...???


கடந்தகால கவலைகள்

பேட்டர்ன் லாக் போடப்பட்ட 
தொடுதிரைக் கைப்பேசியை 
விடுவிக்க தெரியாமல் 
வெத்தலையைப்போல் 
தடவும் அம்மாவுக்கு அதை
திறந்து கொடுக்கிறேன்

கேலரிக்குள் குவிந்து கிடக்கும்
புகைப்படங்களை
அரிசி புடைக்கையில் தள்ளிவிடும்
சிறு கற்களைப்போல
இடப்பக்கமாய் தள்ளிவிட்டு ரசிக்கிறார்

மிகப்பிடித்த படமொன்றை
கீரைக்கட்டை விலக்கி
பழுத்த இலை களைவதைப்போல
அழகாய் ஜும் செய்து பார்க்கிறார்

ஒரு கலர் படத்தில்
வெள்ளைப் புடவையுடன்
முதுமை சுமக்கும் தன் அம்மாவை
பார்த்து அன்பில் கசிகிறார்

இறுதியில்
பேரன் பேத்திகளின் புகைப்படங்களோடு
நீளும் நிமிடங்களில்
நிதானமாய் மறக்கிறார்
கடந்தகால கவலைகளையும்
நிகழ்கால நடப்புகளையும் ...!




தவறிய அழைப்பு

ஆழ்ந்த உறக்கத்தின்
அர்த்த ராத்திரியில்
கைப்பேசிக்குள் விழுந்து கிடந்தது
ஒரு தவறிய அழைப்பு

நடுநிசியின்
பெரு மெளன அமைதியிலும்
என் செவிப்பறைக்கு எட்டாத நொடியில்
அது தன் சத்தத்தை
நிறுத்தியிருக்கக்கூடும்

சங்கீதம் வழிந்தபடி
எழுப்பிய அலாரம்
அரைக்கண்ணில் பார்க்க வைத்தது
அந்த தவறிய அழைப்பை

விபரங்கள் ஏதுமற்ற
அந்த புது எண்ணின் மீது
குவியும் கவனத்தில்
தொலைந்துபோன நட்பும்
உடைந்துபோன உறவுகளும்
வந்து போகின்றன

ஆர்வத்தோடும் அன்போடும்
திருப்பி அழைத்தபோது
"நீங்கள் அழைத்த எண் தற்போது
அணைத்து வைப்பட்டிருக்கிறதென" வரும்
பதிவுக்குரலால்

நீளும் சந்தேகத்தையும்
குமுறும் குறுகுறுப்பையும்
பெருகும் பயத்தையும்
எதைக்கொண்டு நிரப்புவது ...???

#குறிப்பு: புலிகேசி படத்தில் வரும் "ஒரு புறாவுக்கெல்லாம் போரா? பெரிய அக்கப்போராகவல்லவா இருக்கிறது" என்பதுபோல்...
"ஒரு மிஸ்டு காலுக்கெல்லாம் கவிதையா ..?" எனக் கொதிப்பவர்களுக்கு ....
"வேற வழியில்லை போற போக்குல அப்டியே படிச்சிட்டு போங்க என்ன இப்போ....!"


பவானி - ஊரும் ஆறும்....!

"ஈரோடு வாசல்" வாட்ஸ் அப் குழுவில் நடந்த கட்டுரை எழுதும் போட்டியில் நான்காம்  இடம் பிடித்த என் கட்டுரை. பெரிதாய் வாழ்த்திய அனைவருக்கும் அன்பும் நன்றியும்...!
================================
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நகராட்சிகளில் ஒன்று திருநணா என்னும் பவானி. எந்த ஊரைப்பற்றியும் அந்த ஊரில் பிறந்தவர்களைத்தவிர வேறொருவர் பெருமையாய் சொல்லிவிட முடியுமா என தெரியவில்லை. இந்த ஊர் பற்றிய பெருமை சொல்லவோ அதன் வரலாறை விளக்கவோ என்னாளும் முடியுமாவென தெரியவில்லை, ஆனாலும் நான் பிறந்து வளர்ந்து  முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் இந்த ஊருடனான பிணைப்பு, நான் கடந்து வந்த வாழ்வின், படித்த கல்வியின், சந்தித்த மனிதர்களின், ரசித்த இடங்களின், மகிழ்ந்த விளையாட்டுகளின், கொண்டாடிய திருவிழாக்களின் நினைவுகள் நியாபகப் பரண்களின் மேல் இன்னும் பசுமையாகவே இருக்கிறது.

பரிகாரமோ வேண்டுதலோ எதுவாகினும் வெளியூர் கோவில்களுக்கோ வெளிமாநில கோவில்களுக்கோ படையெடுக்கும் நம்மில் பலர்  சொந்த ஊரிலுள்ள கோவில்களை அத்தனை சுலபமாய் மதிப்பதில்லை அல்லது பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. பவானி கூடுதுறை எத்தனை பெரிய கோவில், இந்தியாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் கூட இங்கு வந்து பரிகாரம் செய்து, இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து , வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கிறார்கள். சபரிமலைக்கு போகும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோர் இங்கு வராமல் செல்வதில்லை. கல்யாண தாமதம், குழந்தை பாக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றுக்கும் இங்கு பரிகாரமுண்டு அதே வேளையில் போலி புரோகிதர்களும் நிறையவே உண்டு. இந்த ஊரிலுள்ள நிறைய பேர் வெளியூர் கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்து சில சமயங்களில் ஏமாந்தும் வருகிறார்கள். இன்னும் திருமணம் கைகூடாத நானும் கூட பல கோவில்களுக்கு சென்று வந்தபின்தான் இங்கு பரிகாரம் செய்தேன். (ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது வேறு விஷயம்). இத்தனை சிறப்பு வாய்ந்த கோவிலில், இரண்டு ஆறுகள் இணையுமிடத்தில் மூன்றாவதாய் ஒரு நதி உருவாகிறதெனவும், படித்துறையில் தங்கத்தேர் ஒன்று தானாக சென்று காவிரி ஆற்றில் மூழ்கியதாகவும், இங்கிருந்து 6கிமீ தொலைவிலுள்ள ஊராட்சிக்கோட்டை மலையடிவாரம் வரை சுரங்கப்பாதை உள்ளதாகவும் அதில் அடிக்கு 108 சிவலிங்கங்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே இன்று வரை பார்க்கப்படுகிறது.

எல்லா ஊருக்குமென ஏதாவதொரு அடையாளம் இருக்கும், பவானிக்கு அடையாளமாய் இருப்பது ஜமுக்காளங்கள். நெசவை முக்கிய தொழிலாக கொண்டு தயாரிக்கப்படும் ஜமுக்காளங்கள் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. பத்தமடைக்கு பாயைப்போல பவானிக்கு ஜமுக்காளங்கள். புதுமணத்தம்பதியோ, பூப்படைந்த பெண்மணியோ, நிறைமாத கர்பிணியோ, வயதான பெற்றோரோ, வாலிப வயதினரோ யாராக இருந்தாலும் அத்தனை இதமான தூக்கத்தை, கனவுகளை, சந்தோசத்தை, நிம்மதியை கொடுக்கும். தான் பட்ட கஷ்டத்தை தன் குழந்தைகள் படக்கூடாது என நினைத்த நெசவாளிகள் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து வெளிவேலைகளுக்கு அனுப்பிவிட்டார்கள். இதோ நாள் குறிக்கப்பட்ட நோயாளியைப்போல மரணிக்கும் தருவாயில் சோர்ந்து கிடக்கிறது ஜமுக்காளத்தொழில். அதை தொடர்ந்து செய்ய விஷயம் தெரிந்தவர்களுக்கு தெம்பில்லை, அதை மீட்டெடுக்க அடுத்த தலைமுறை தயாராகவும் இல்லை.

எந்த ஊருக்கும் காவல் தெய்வமென ஏதாவது ஒரு கடவுள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. பவானியில் முனியப்பனை தவிர்த்து எப்போதும் துணையிருக்கிறார்கள் செல்லியாண்டியம்மனும் மாரியம்மனும். மாசி மாதத்தில் வரும் உள்ளூர் பண்டிகையில் அழகு குத்தி , அக்கினி சட்டியெடுத்து, கிடா வெட்டி , பொங்கல் வைத்து விதவிதமாய் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். ஒரு மாதத்திற்கு மேல் நடக்கும் இந்த பண்டிகையின் முக்கிய நாளில் உடலில் சேறு பூசியபடி அம்மனை குதிரையில் வைத்து அழைத்தபடி ஆடிவருவது ஒரு பழக்கம். பருவகாலம் மாறும் இந்த தருணத்தில் உடலுக்கு ஒவ்வாத நோய்கள், சின்னம்மை , பெரியம்மை போன்ற நோய்கள் வராமல் இருக்க இந்த நேர்த்திக்கடனை ஆண்கள், குழந்தைகள் செய்வது பழங்கால வழக்கம். கம்பம் போடுதல் என்பது அம்மனுக்கு கல்யாணம் செய்து வைப்பதாகவும், அம்மனுக்கு சீர் கொண்டு வரும்போது தேர் உலா வருவதாகவும், கம்பம் பிடுங்கும் போது கணவனை இழந்த அம்மன் தனிமையில் அழுவதாகவும் சொல்லப்படுகிறது. கம்பம் பிடுங்கும் நாளில் முளைப்பாரிகளை சுமந்தபடி பெண்கள் ஆடி வருவதும், கும்மிப்பாட்டு , கொப்பியடித்தலென திருவிழா களைகட்டும். இந்த முறை முளைப்பாரிகளை காவிரியில் விடும்போது வறண்டு கிடந்த காவிரி அழுத கண்ணீரே சிறு சிறு குட்டைகளாய் கலங்கியிருக்க முளைப்பாரிகளில் ஏற்றிவைத்த  தீபங்களில் தெரியவில்லை காவிரி கரைபுரண்டோடும் காட்சியும் எங்கள் தாகம் தீர்ப்பதற்கான தீர்வும்.

இரண்டு பக்கம் ஆறும் நடுவில் ஊரும் இருப்பது எத்தனை பெரிய வரம். அத்தனை பெரிய வரத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருந்தோம் பவானியில் ஒரு காலத்தில். இரண்டு கரைகளையும் தடவியபடி ஓடும் காவிரியை காண கண்கோடி வேண்டும். அம்மாவோடு அதிகாலை நான்கு மணிக்கு அழுக்கு துணியோடு செல்லும்போதெல்லாம் துவைத்து முடிக்கும் வரை அம்மாவின் புடவையை போர்த்தியபடி படிக்கட்டுகளின் கைப்பிடி சுவற்றில் உறங்கிய சுகமான நினைவுகள் இன்னும் எனக்குள் உறங்காமலே இருக்கிறது. தீர்த்தக்குடமெடுக்க போனபோது குடத்தோடு வந்து விழுந்த சொட்டை வாழ மீன் இன்னும் நினைவுகளில் நீந்திக்கொண்டுதான் இருக்கிறது. இறந்துபோன தாத்தாவின் உடலை புதைத்துவிட்டு இருள்கவ்விய மாலையில் ஆற்றுக்குள் பயந்துகொண்டே இறங்கியபோது காவிரி என்னை பத்திரமாகவே கரைக்கு அனுப்பிவைத்தாள். காவிரியோடு எத்தனையோ நினைவுகள் நீந்தினாலும் எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தது பவானி ஆறுதான். என்வயது பசங்களெல்லாம் ஜாலியாய் குதித்து குளிக்க, அம்மா துணி துவைப்பதற்கு மட்டும் வாகான இடமாய்ப் பார்த்து ஓடைக்கு மட்டும் என்னை அழைத்துச்செல்வார், ஒரு குழியில் உட்கார்ந்துகொண்டு கொண்டுபோன கோப்பையில் தண்ணீர் மொண்டு ஊற்றி குளித்துவிட்டு வருவோம். பிறகு வளர வளர வீட்டில் சொல்லாமல் பசங்ககூட போய் லாரி டியூப், முடிச்சு போட்ட லுங்கியென ஒருவழியாய் நீச்சல் கற்றுக்கொண்டேன். பவானி ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு நீந்திப்போய் கரும்பு உடைத்து, புளியங்காய் பறித்து, கொடுக்காப்புளி எடுத்து, சுடுகாட்டில் இருந்து வந்த புகைவாசத்தில் பயந்து, பரிசலில் இருந்து விழுந்தென மறக்கமுடியா நினைவுகள் மனதின் ஓரத்தில் இன்னும் பசுமையாய் பல்லிளித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

நவீனமென்ற பெயரில் பவானி ஆற்றின் மேடு பள்ளங்களை நிரப்பி புல் தரைகளைக் குதறி கான்கிரீட் காரைகளால் மூடிவிட்டார்கள், குளித்த இடைவெளியில் இளைப்பாற மரங்களில்லை, தேடிப்பிடிக்க பட்டாம்பூச்சிகளில்லை, மகிழ்ந்து விளையாட தொட்டாஞ்சிணுங்கி  செடிகளில்லை இப்படி எத்தனையோ இல்லைகளுக்கு நடுவே வறட்சியின் பிடியிலுள்ள நதிகளில் தண்ணீருமில்லை. அடுத்த தலைமுறைக்கு அதை நதியாகவே காட்ட போகிறோமா அல்லது நதி இருந்த இடமாக காட்ட போகிறோமா என்பது விடையில்லா கேள்விக்குறி.

இங்கு அரசியல்வாதிகளைத் தவிர்த்து நிம்மதியாய் வாழ்வதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் சத்தியமாய் உள்ளன. கோவில்கள், பள்ளிக்கூடங்கள், சிறுதொழில்கள், கடைகள், சொந்த தொழில்கள் என எல்லாமே இருக்கிறது. "நம்மை வாழவைக்கும் ஊரை விட வாழ சிறந்த ஊர் எதுவுமில்லை" என்ற ஒரு வசனமிருக்கிறது அதற்கு நிகராய் இந்த ஊர் வாழ சிறந்த ஊர் தான், ஆனாலும் கலப்பை பிடித்த, நெசவு நெய்த, ஸ்டேரிங் திருப்பிய, டீ ஆற்றிய, டேபிள் துடைத்த, செங்கல் சுமந்த, பொட்டலம் கட்டிய, பூஜை செய்த, முடி திருத்திய, செருப்பு தைத்த, மூட்டை தூக்கிய அடித்தட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படியோ கஷ்டப்பட்டு படிக்கவைத்து விட்டார்கள். நடக்கத் தெரியாத பறவைகள் சிறகு முளைத்தவுடன் கூட்டுக்குள்ளா அடைபட்டுக்கிடக்கும்? படிப்பிற்கு தகுந்த அல்லது அதற்கு இணையான வாழ்க்கையைத்தேடி இடம்பெயர்தலென்பது விருப்பமில்லாத தருணங்களிலும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இயற்கை தன்னை எப்போதும் ஒரே மாதிரியாய் நிலைநிறுத்திக்கொள்ளவே முனைகிறது மனிதன் தான் அதற்கு எல்லாவிதத்திலுமான முட்டுக்கட்டையை முன்னெடுத்துக்கொண்டே இருக்கிறான், ஏரி-குளங்களை மூடி பள்ளி-கல்லூரிகள், விவசாய நிலங்களை அழித்து நெடுஞ்சாலைகள், ஆத்தோர கரைகளில் வீடுகள், காடுகளை அழித்து கோவில்கள், மரங்களை அழித்து மாளிகைகள் என இன்னும் என்னவெல்லாம் பண்ணக்கூடாதோ அதையெல்லாம் தயக்கமோ பயமோ இல்லாமல் பண்ணிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

நமக்குப்பிறகான சந்ததிகளுக்கும் அவர்களின் வாழ்வுக்குமான உலகை, உணவை விஷம் நிரம்பிய கோப்பையாய் தயாரித்துக் கொண்டிருக்கின்றன பல்வேறு அமைப்புகளும் நாடுகளும். துளிர்விடத்தொடங்கியிருக்கும் அவர்களின் கனவை, ஆசையை வேரறுத்து இந்த மண்ணையும் மக்களையும் மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கான உலகை அறிவியலின் துணையோடு இந்த இளைய தலைமுறை கொடுக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையின் நொடிகளோடுதான் ஒவ்வொரு நாளும் விடிகிறது.

---தனபால் பவானி
03/04/2017

#பவானி
#பவானி_கூடுதுறை
#பவானிநகராட்சி
#ஈரோடு_மாவட்டம்
#ஈரோடு_வாசல்