24 March 2021

பெண் என்னும் கம்பீரம்

ஆதாம் என்னும் ஆண் மகனால் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்துவிட முடியாது என்னும் கருணையால் ஏவாள் படைக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஆதாம் எங்கே நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்துவிடுவானோ என்னும் பொறாமையால் கூட ஏவாள் படைக்கப்பட்டிருக்கலாம். எப்படியாகினும் இந்த உலகம் மனித இனம் தோன்றிய காலம் தொட்டே பெண்ணின் துணையில்லாமல் உருமாறி நிறம் மாறி இப்போதிருக்கும் இந்த நிலையை அடையவில்லை. காலங்காலமாக பெண்ணின் பங்களிப்பு இல்லாமல் முன்னேறிய குடும்பம் என்பது அரிதிலும் அரிதாகவே இருக்கக்கூடும். பூமிக்கு ஒன்றை நிலவும், ஒன்றை சூரியனும் போல, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் ஆணிவேராக இருப்பாள். அவள் தான் ஏதேதோ வழிகளில் எங்கெங்கோ கைமீறிச் செல்லும் குடும்பத்தின் பொருளாதாரத்தை இழுத்து தன் முந்தானையின் முனையில் முடிச்சி போட்டுவைத்திருப்பாள், வந்தவழி தெரியாமல் போக இருக்கும் சில்லறை நாணயங்களையெல்லாம் சிறுவாட்டுக்காசென பானைகளுக்குள்ளும், கடுகு டப்பா, சீரக டப்பாக்களிலும் சேர்த்து வைத்திருப்பாள். ஆபத்து காலங்களிலோ அவசர நேரங்களிலோ கைகளில் எதுவுமற்று திணறி நிற்கையில் அவள் சேமிப்புதான் கைகளுக்குள் வந்து எதுவோ ஒன்றுக்குள் சிக்குண்டு கிடக்கும் குடும்பத்தைக் காப்பாற்றும். 

ஒரு ஆண் அத்தனை எளிதில் சேமிப்பை தொடங்க மாட்டான். தன் உடன்பிறப்புகளுக்கு, உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, என அவன் செய்யும் செலவுகள் ஏராளம். அத்தை பெண்களுக்கும் மாமா பெண்களுக்கும் பிரியங்களின் மிகுதியால் செய்யப்படும் தாராள செலவுகளும் கணக்குகளுக்குள் வராதவை. ஆனால் ஒரு பெண் அப்படி எடுத்த எடுப்பில் சட்டென செலவு செய்து விடுவதில்லை. ஒவ்வொரு ரூபாய்க்கும் அவளுக்கென சில பொறுப்புகள் இருக்கிறது. அதையும் மீறி இந்த செலவு அவசியமா அவசியமில்லையா என்று ஆராயும் அறிவும் இருக்கிறது. ஆண்களில் இந்த ஆராயும் அறிவு வெகு சிலருக்கு மட்டுமே இருக்கிறது. மளிகைக்கடையில் காசு கொடுத்து வாங்கும் கருவேப்பிலை தொடங்கி பட்டுச்சேலை வரை அவர்கள் செய்யும் செலவுகளுக்கு நிகராக மிச்சம் பிடிப்பதிலும் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்வதில்லை. இதற்கு நேர்மாறான பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். போகிற போக்கில் காரணமே இல்லாமலும் அவசியமே இல்லாமலும் செய்துகொள்ளும் செலவு அவர்களுக்கானது அல்ல, இந்த சமூகத்தின் பார்வையில் தங்களையும் தங்களுக்கு இணையாகவோ அல்லது மேலாகவோ உள்ளவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு தாங்களும் இப்படி வாழ்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான அறிகுறிகள் தான் அந்த செலவுகள். இவை பெரும்பாலும் தற்பெருமைக்காகவும், கெளரவுத்திற்காகவும் மட்டுமே செய்யப்படுபவை. 

கணவனை இழந்து முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஒரு பெண் தெருவோரத்தில் கட்டிலில் கடை போட்டு மாங்கா, எழந்தபழம், நவாப்பழம், கொய்யா, நெல்லிக்கா, மாலை வேளைகளில் பஜ்ஜி, போண்டா போட்டும் விற்பனை செய்து தன் நான்கு பிள்ளைகளுக்கும் தனியாளாக நின்று கல்யாணம், சீர் செணத்தி செய்துவைத்து இப்போதும் அந்த கடையை அதே இடத்தில் நடத்திக்கொண்டிருக்கிறார். வாழ்வின் மீதான பேரார்வம் மட்டுமே அவரை இன்னும் தொடர்ந்து இயங்கவைக்கிறது. தனாக்கா கடை என்பது அந்த பகுதிக்கான அடையாளமாய் மாறியதில் தான் அவர் வெற்றி இருக்கிறது. 

அதே தெருவில் தான் பணியாரக்காரம்மாவும் இருந்தார். பலபேரின் காலை பசியை போக்கியது அவர்தான். விடியற்காலையிலேயே மண் அடுப்பை பற்றவைத்து ஒரு அடுப்பில் பணியாரம், ஒரு அடுப்பில் இட்லி என ஊற்றி வைத்து காலை உணவை தயாரித்து விற்பவர். கூடவே கஞ்சி கொலாப் புட்டும் விற்பார். அத்தனை சூட்டிலும் அத்தனை வயதிலும் அத்தனை சுறுசுறுப்பாக இருப்பார். அடுப்பு சூட்டில் முகமெல்லாம் வியர்த்து வழியும் அதை முந்தானையில் துடைத்தபடி காத்திருக்கும் எல்லோருக்கும் இட்லி, பணியாரம் போட்டு சட்னி சாம்பார் ஊத்தி, காசை வாங்கி போட்டு சில்லறை கொடுத்து, விறகு மாற்றி, அங்கேயே சாப்பிட்டவர்களின் தட்டுகளைக் கழுவி, அடுத்த நாளுக்கான தேவைகளை கடைக்கு, மார்க்கெட்டுக்கு போய் வாங்கி வருவதென எல்லாமே ஒரே ஆள் தான். எத்தனையோ பேர் கடை வைத்தும் அந்தம்மா கொடுக்கும் ருசியை யாராலும் கொடுக்க முடியல. அதான் அவர் பட்ட கஷ்டத்திற்கான பரிசும் உழைப்பிற்கான அங்கீகாரமும். 

பாவாயக்கா டீக்கடைன்னா ஏரியாவில் தெரியாத ஆட்களே இருக்க மாட்டார்கள். ஆண்களே கொஞ்சம் பயப்படும் அளவுக்கு அத்தனை கம்பீரமும் ஆண்களுக்கு நிகராக தைரியமும் கொண்ட பெண் அவர். என் சிறுவயதில் டீ வாங்கப்போகும் போதெல்லாம் கைல தினத்தந்தியோட அவங்க டீ போடும் அழகை பார்த்துட்டே இருப்பேன். மளமளவென கண்ணாடி டம்ளர்களைக் கழுவி, வரிசையாக வைத்து பாலையும் டிக்காசனையும் கலந்து மேல தூக்கி ஒரு ஆத்து ஆத்தி வரிசையாக ஊற்றி அவர் எடுத்துக்கொடுக்கும் அழகே தனி தான். இப்போ அவர் இல்ல ஆனாலும் பெண்கள் நடத்தும் டீக்கடைகள் அந்த பகுதியில் இருக்கின்றன. பாவாயக்கா மாதிரி டீ போடும் பெண்கள் இப்போது இருந்தாலும் அவரிடம் இருந்த கம்பீரமும் தைரியமும் எல்லா பெண்களிடமும் இல்லை. 

தேர்வீதியில் செளடேஸ்வரி அம்மன் கோவில் எதிரில் ஒரு அம்மா அரிசி கொலாப்புட்டு செய்து விற்பார். ஒரு குட்டிப்பானையில் நீரூற்றி சுட வைத்து ஒரு பக்கம் அடைக்கப்பட்ட மூங்கிலை வைத்து மறு பக்கம் ஒரு துணியை வைத்து அதில் கொலாப்புட்டு செய்யத் தேவையான அரிசி மாவை மிக நேர்த்தியாக நிரப்புவார். வெந்த கொலாப்புட்டை இறக்கி துணியை நகர்த்தி கத்தியில் அறுத்து வாழை இலையில் வைத்து கட்டி சர்க்கரை பாகை ஊற்றிக்கொடுப்பார். வீட்டில் வைத்து சர்க்கரை பாகை மட்டும் குடித்துவிட்டு விக்க விக்க கொலாப்புட்டை சாப்பிட்டிருக்கிறேன். அதன் ருசி ஒவ்வொரு நரம்பிலும் இறங்கி இருக்கிறது. வெளியூர் ஓட்டல்களின் விலைப்பட்டியலில் கொலாப்புட்டு கொண்டைக்கடலை என்னும் எழுத்துகளைப் பார்க்கும் போதெல்லாம் இந்தம்மாதான் நினைவுகளுக்குள் நிரம்புவார். இப்போ அவங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் தன் மருமகள் மூலம் அந்த கொலாப்புட்டு கடையை நடத்துகிறார். ஆனால் அந்த ருசி இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இப்போதும் காத்திருந்து வாங்கி வந்து சாப்பிடுவது வாடிக்கையாகவே இருக்கிறது. 

கார வேலை செல்லமக்கான்னு சொன்னா எல்லோருக்குமே தெரியும். அவங்க கட்டிட வேலைகள் செய்யரவங்க. நல்ல உயரம், கணீர்க் குரல், உடம்பில் அவ்ளோ வலு இருக்கும். ஒரே நடையில் பத்து செங்கல்னாலும் தூக்கிட்டு ரெண்டு மாடி ஏறிப்போவாங்க. பெரிய பெரிய கருங்கல்லாக இருந்தாலும் அலாக்கா தூக்கிட்டு போய் போடுவாங்க, சாரத்தின் மேல நிற்கும் மேஷன் ஆளுக்கு ரெண்டு செங்கல்லை லாவகமா தூக்கி போடுவாங்க. நான் கடைசியா பார்த்த வரைக்கும் கூட அதே வேலைக்குத்தான் போய்ட்டு இருந்தாங்க. தன்னைப்போலவே தன் இரு பெண் பிள்ளைகளுக்கும் எல்லா வேலைகளையும் நல்லா பழக்கிவிட்டவங்க. இப்பவும் எங்க பார்த்தாலும் அந்த கணீர்க் குரலில் கூப்பிட்டு பேசுவாங்க. அவரை மாதிரி கட்டிட வேலை செய்யும் பெண்ணை இதுவரைக்கும் பாக்கல.

பூக்காரம்மா, பலாச்சுளைக்காரம்மா, மீன்காரம்மா ன்னு இன்னும் ஊருக்குள்ள நெறைய பெண்கள் இருக்காங்க, ஆண்களோடு துணையில்லாமல் தைரியமாக முட்டி மோதி, பல அவமானங்களைத் தாண்டி மேலே வந்தவங்க. இப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பவர்கள். அவர்களையெல்லாம் ஏதோ ஒரு தருணங்களில் காணும் போதும் கடக்கும் போதும் வாழ்வின் மீதான நம்பிக்கை பிறக்கிறது. அவர்கள் தான் பலபேருக்கு ஆகச்சிறந்த நம்பிக்கை கடத்திகளாக இருக்கிறார்கள். சோர்ந்து விழும்போதெல்லாம் சட்டென எழுந்துகொள்ளத் தூண்டுகிறார்கள். ஆண்களின் துணை இல்லையெனில் இந்த சூன்யம் நிறைந்ததாக மாறிவிடும் என்று நினைத்து வருத்தப்படும் பல பெண்களுக்கான பலமாக பாடமாக இவர்கள் இருக்கிறார்கள். 

யுகம் யுகமாய் மனித இனம் வாழ்வதற்கு இன்றியமையாத தேவைகளாய் இருப்பது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் மட்டுமல்ல பெண்களும் தான்.