20 May 2012

மின்சாரம் இல்லாத இரவு ...!



தொலைக்காட்சிப்பெட்டிகள்
ஊமையாகிப்போக
அழமுடியாத சோகத்தில்
அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்
நாடக ரசிகைகள்....!

மொட்டைமாடிக்காற்றில்
முழுதாய் திரிகின்றன
காதலர்கள் கைப்பேசியில்
பரிமாறிக்கொள்ளும்
முத்தங்கள்....!

பனையோலை விசிறிகள்
முயற்சி செய்கின்றன
புழுதி படிந்த காற்றை விரட்ட...!

மின்சார உணவில்லாமல்
தற்காலிகமாய் இறந்து கிடக்கின்றன
மடிக்கனிணிகள்....!

தெருவோரங்களில் முளைக்கின்றன
பழைய பொருளாய் மாறிப்போன
கயிற்றுக்கட்டில்கள்...!

நீண்ட நாளைக்குப்பிறகு
கேட்கிறது குழந்தைகளை
தூங்க வைக்க பாட்டிகள்
சொல்லும் கதைகள்...!

எதுவும் இல்லாத
பழைய மனிதர்களின் வாழ்வும்
எல்லாம் இழந்த இன்றைய
மனிதர்களின் வாழ்வும்
வந்து போகிறது மனக்கண்ணில்....!

கருப்பு கொட்டிக்கிடக்கும் இரவை
இனிமையாக்குகிறது எங்கோ ஒரு
பண்பலை ஒளிபரப்பும்
இளையராஜாவின் பழைய பாடல்.....!