31 March 2020

ஊரடங்கு




மனித நடமாட்டங்களும், வாகன ஓட்டங்களும் இல்லாத தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக குருவிகள் பறந்து பறந்து விளையாடுவதை, காக்காவுக்காக வைத்த ரொட்டித்துண்டுகளை அணிலொன்று வந்து கவ்விக்கொண்டுபோய் குட்டிகளுக்கு ஊட்டுவதை, மண்ணைக் கிளறி கிடைக்கும் பூச்சிகளை குஞ்சுகளுக்கு கொடுக்கும் கோழியின் பாசத்தை, எந்தவித தொல்லையும் இல்லாமல் நடுரோட்டில் உறங்கும் நாயை, நீண்ட கொட்டாவி விட்டபடி சோம்பல் முறிக்கும் பூனையை என மனித இனத்தை தாண்டிய உயிர்களை, பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் நின்று பார்ப்பதில் எத்தனை ஆனந்தம் இருக்கிறது. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதை உணர்த்த இந்த பெரிய ஊரடங்கு எத்தனை அவசியமாய் தெரிகிறது.

ஊரடங்கு உத்தரவு என்பது வெள்ளைக்காரர்களின் காலம் முதலே இருந்து வந்திருக்கிறது.  தலைவர்கள் படுகொலை, கலவரம், அரசியல் போராட்டம், ஜாதிசண்டை, வன்முறை, மதப்போராட்டங்கள், நோய் பரவுதல் போன்ற காரணங்களுக்காக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். பொது சொத்துகளுக்கு சேதாரம் ஏற்படும் வகையிலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், நாட்டின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் நடக்கும் சம்பவங்களை தடுக்கும் அல்லது குறைக்கும் வகையில் இந்த ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.

இதுபோன்ற ஊரடங்கு நாட்களில் அரசு சார்பாக பல நிபந்தனைகள் விதிக்கப்படும், அவற்றையெல்லாம் அப்போது இருந்த மக்கள் ஏறக்குறைய கடைபிடித்தார்கள், இந்த காலத்தில் அப்படி நடக்கிறதா என்னும் கேள்விக்கு இல்லை என்ற பதிலைத்தான் சோசியல் மீடியாக்களும்,மக்களின் அலட்சியங்களும் காட்டுகின்றன. கலவரம், வன்முறை சமயங்களில் கூட மக்கள் "கண்டதும் சுடும்" உத்தரவுகளுக்கு பயந்து வீட்டுக்குளேயே இருந்து விடுகின்றனர், ஆனால் கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி உலகையே ஆட்டிப்படைக்கும் சூழலில் அதை எத்தனை சுலபமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது காணும் காட்சிகளெங்கும் தெரிகிறது. எனக்கு விபரம் தெரிந்து, என்னோட பத்து வயதில் (1991), முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களின் படுகொலையின் போது எங்கள் ஊரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நினைவு, அப்போதெல்லாம் அதிகமாக ரேடியோவும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்திகள் மட்டுமே. இப்போது இருப்பதைப்போல இத்தனை வசதிகள் இல்லை. அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டும் யாராவது ஒருவர் இருவர் சாலைகளில் நடந்து போவதாக சொல்லிக்கொள்வார்கள், ரோந்து வாகனங்கள் எல்லா வீதிகளுக்கும் வரும், காவலர்கள் ஒவ்வொரு வீடாக எச்சரிக்கை செய்வார்கள். பெரும்பாலும் கல்வியறிவு இல்லாத மக்களிடம் பயம் ஒருபக்கம் இருந்தாலும் இதுபோன்ற உத்தரவுகளை அத்தனை மதித்தார்கள்.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் தன் பசிக்கு கிடைப்பவர்களையெல்லாம் இரையாக்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், இயற்கைக்கும் அது வழங்கியிருக்கும் வாழ்க்கையை பார்க்கும் போது மனிதன் எத்தனை சல்லிப்பயலாய், சுயநலவாதியாய் வாழ்ந்திருக்கிறான், வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது புரிகிறது. முன்னொரு காலத்தில் வேட்டையாடித்திரிந்த காடுகள் கட்டிடங்களாய், சாலைகளாய் மாறிப்போனதை மீண்டும் ஒருமுறை பார்த்து வர விலங்குகளின் அடுத்த தலைமுறை வீதிகளுக்கு வந்திருக்கின்றன. கூட்டம் கூட்டமாய் மான்கள், புழுகுபூனை, காட்டெருமை, கோடிக்கணக்கில் முட்டைகளிட்ட ஆமைகள் என காட்டுக்குள், கடலுக்குள் வாழ்ந்த விலங்குகள் இப்போதும் ஊருக்குள் உலாவருகின்றன. இதை ரசிக்கும் அதே வேளையில் மலைப்பாதைகளில் மனிதர்கள் கொடுக்கும் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கும்? யாரோ வந்து ஊற்றிவிட்டுப்போகும் நீருக்காக காத்திருக்கும் விலங்குகள் இந்த கோடையில் எதைக்குடிக்கும்? கூட்டமாய் வந்து பார்த்துப்போகும் மனிதர்களை வெறுத்தபடியேனும் நேசிக்கும் மிருகக்காட்சி சாலை விலங்குகளை இப்போது யார் போய் பார்ப்பார்கள்? வீட்டை விட்டு விலகியிருக்கும் தோட்டத்தில் கட்டிருக்கும் மாடுகளும், ஆடுகளும் என்ன செய்துகொண்டிருக்கும்? என்னும் கேள்விகள் எழாமல் இல்லை.

சூரிய குடும்பத்தில் இருந்து உடைந்து வந்த ஒரு சிறு துண்டில் உருவானதாய் சொல்லப்படும் பூமி, இன்று கண்ணுக்கே தெரியாத ஒரு நுண்ணுயிரியால் எத்தனை அழிவுகளை சந்திக்கிறது. இது விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் வந்ததா? அறிவியலின் தவறால் நிகழ்ந்ததா? ஆண்டவனின் விளையாட்டால் நேர்ந்ததா? எல்லாவற்றுக்கும் மேல் உள்ள ஏதோ ஒரு சக்தியால் நடப்பதா? உலகம் அழிவதற்கான அறிகுறியா? என எத்தனை எத்தனையோ கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இது எல்லாமே உயிரின் மீதான பயத்தால் மட்டுமே எழும் கேள்விகள், உயிருக்காக பயப்படாதவர்கள் நடப்பவை நடக்கட்டுமென போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் அந்த மாதிரியான மனிதர்கள் வெகு குறைவு. தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும், தன் தலைமுறைகளுக்காகவும் சேர்த்துக்கொண்டே இருக்கும் மனிதர்களுக்கு நடுவே எல்லோருக்கும் பிடித்தமானவர்களாக, யாருக்கும் உதவி செய்பவர்களாக, எந்த நிலையிலும் மற்றவர்களையும் மனிதர்களாய் எண்ணக்கூடிய, தன்னிடம் இருப்பதையும் மீறி மற்றவர்களுக்கு உதவுபவர்களாக பலரையும் இந்த பூமி இன்னும் சுமந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒரு விஷயத்தை நன்றாக கூர்ந்து கவனித்தால் கொரோனாவின் கொடும் கைகள் கொத்து கொத்தாய் பிடித்து தின்று கொண்டிருப்பது  மனிதர்களை மட்டுமே என்று புரிகிறது. மனிதன் தான் தொடர்ந்து இந்த பூமியின் மீதும் இயற்கையின் மீதும் அவைகளுக்கு எதிரான கட்டுமானங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்திருக்கிறான். தன் வசதிக்கு கட்டமைத்துக்கொண்ட  பூமியைத் தானே உருவாக்கியதாக நினைத்துக்கொண்டு செய்து வரும் மாற்றங்களால் இந்த பூமி மனிதர்களிடமிருந்து தற்காலிகமாக தன்னை விளக்கிக்கொள்வது போல இந்த கொரோனாவின் வேகம் இன்னும் பெருகுகிறது. இந்த கொரோனாவின் தாக்குதலால் இந்த பூமியின் இன்னொரு பக்கம் எத்தனை அழகாய் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை கொஞ்சம் ரசிக்கவும் வேண்டியுள்ளது. பிடித்த வீட்டை, பிடித்த தெருவை, பிடித்த ஊரை விட்டு எதன் பொருட்டோ கட்டாயமாக வெளியேற்றப்பட்டு காலங்கள் பல கடந்த பின்பு வாழ்க்கை வழங்கும் ஒரு வாய்ப்பில் வந்து பார்க்க நேர்ந்தால் பல விஷயங்கள் மாறியிருப்பினும் நம் பழைய இடம் என்பதில் எத்தனை ஆனந்தம் வந்து சட்டென ஒட்டிக்கொள்கிறது. அதைப்போலவே தான் இயற்கை இந்த நிகழ்வால் தன்னை கொஞ்சம் கூர்தீட்டிக் கொள்கிறது. தனக்கு முன்னால் இந்த மனித இனம் என்பதும் அவன் செய்த, செய்யும் சாகசங்களும், நிறுவியிருக்கும் மாற்றங்களும் ஒன்றுமே இல்லை என்பதன் அடையாளமாக கொஞ்சம் விளையாடிப்பார்க்கிறது.

விலங்குகளும், பறவைகளும், காற்றும், வானமும், வனமும், அருவிகளும், மலைகளும், கடல்களும் தங்களின் மீது பூசப்பட்டிருந்த அழுக்கை, சுமந்து கொண்டிருந்த பாரத்தை,
தாங்கிக்கொண்டிருந்த வலியை, தவிர்க்க முடியாத கணங்களை இந்த ஊரடங்கின் மூலம் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றன. நம் தலைமுறையில் பார்க்கும் முதல் உலக ஊரடங்கு, முதல் உலக இயக்கத்தின் தற்காலிக நிறுத்தம் இதுவாகத்தான் இருக்கும். இதிலிருந்து மீள்வதில் அத்தனை ஒன்றும் கடினமில்லையென்றே தோன்றுகிறது.  நகரமயமாக்குதலின் மூலம் பழைய வாழ்வின் வேர்களைத் தொலைத்துவிட்ட பலருக்கு பல விஷயங்களை மீட்டெடுக்க இதுவொரு நல்ல வாய்ப்பாகவும் இருக்கிறது.

மொட்டைமாடியில் அமர்ந்து குடும்பத்தோடு பேசி எத்தனை காலங்கள் ஆகிறது? வீட்டில் அனைவரும் அமர்ந்து கொண்டு ஒளியும் ஒலியும் பார்த்தது போல ஒரே சேனலை பார்த்து எத்தனை காலங்கள் ஆகிறது? எல்லோரையும் உட்கார வைத்து பாட்டியோ , அம்மாவோ சாப்பாட்டை உருண்டை பிடித்து கொடுத்து எத்தனை காலங்கள் ஆகிறது? தாயம், பரமபதம், பம்பரம், கண்ணாமூச்சி என மறந்து போன விளையாட்டுகளை மீண்டும் விளையாடி எத்தனை காலங்கள் ஆகிறது? மாலை நேரத்தில் குழந்தைகளோடு மொட்டைமாடியில் பட்டம் பறக்கவிட்டு எத்தனை காலங்கள் ஆகிறது? வீட்டுப்பாடங்கள் இல்லாமல், பரிச்சைக்கு படிக்காமல் விளையாடிய களைப்பில் குழந்தைகள் தூங்கி எத்தனை காலங்கள் ஆகிறது? இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்களை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று காலம் வழங்கியிருக்கும் வாய்ப்புதான் இந்த நீண்ட ஊரடங்கு.

பணக்காரன், ஏழை, மாளிகைவாசி, தெருவோரம் இருப்பவர், மேல்ஜாதி, கீழ்ஜாதி, நல்லவன், கெட்டவன், என எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கியிருக்கும் இந்த ஊரடங்கு உணர்த்த வருவது ஒன்றுதான், எத்தனையோ கடவுள்கள், கோவில்கள், வழிபாட்டுத்தளங்கள் இருந்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரசுக்கு பயந்து எல்லாமே மூடப்பட்டிருக்கின்றன.  இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் மனிதர்களைக் காப்பாற்ற சக மனிதர்கள் தான் வர முடியும். நீங்கள் நம்பும் எந்த மதக்கடவுள்களாலும், எந்த சாமியார்களாலும் இந்த சூழலில் இருந்து நம்மைக் காப்பாற்ற முடியவில்லை. சக மனிதர்களாகிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புறவு பணியாளர்கள், தன்னார்வலர்கள் தான் இந்த மனித இனத்தை மீட்டெடுக்க அயராமல் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அவர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் விதமாகவும் இந்த ஊரடங்கில் வீடடங்கி இருங்கள்.

நீங்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் என்பது உங்களுக்காக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்காக, உங்கள் உறவுகளுக்காக, உங்களை நேசிக்கும் நண்பர்களுக்காக, உங்களைப்போல இந்த உலகில் வாழ வந்த சக மனிதர்களுக்காக என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


#Corona #Covid19
#Curfew #Quarantine


14 March 2020

காணாமல் போன தேவதைகள்



கற்பனைகளின் மீள முடியாத ஆழங்களில் தேவதைகள் என்பவர்கள் வெள்ளை உடைகளை அணிந்தும், பெரிய  பெரிய சிறகுகள் பொருந்தியும், எப்போதும் புன்னகை சுமந்தும், பறக்கும் வல்லமை கொண்டும், எதைக்கேட்டாலும் கொடுக்கும் மந்திரக்கோலுடனும் இருப்பார்கள் என்றுதான் மூளையின் மடிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால்.. உண்மையிலேயே தேவதைகள் அப்படிதான் இருக்கிறார்களா?

ஒழுகும் மூக்கை குட்டிப்பாவாடையை தூக்கித் துடைத்தபடி, அம்மாவின் முந்தானைக்குள் மறைந்துகொண்டு கைசூப்பியபடி, ஊர்க்கோவில் பிள்ளையாரிடம் எதையோ வேண்டி முணுமுணுத்தபடி , ஓவியமென்ற பெயரில் மீன்களை தரையிலும் நிலவை நதியிலும் வரைந்தபடி, பாலத்திற்கு கீழே தம்பிக்கு புட்டிப்பால் புகட்டியபடி, பாவாடை தாவணியில் தண்ணீர் குடம் சுமந்தபடி, ஜாக்கெட் தைத்துக்கொண்டே ரேடியோவில் கசியும் பாடலை பாடியபடி, விலகி ஓடும் மகளை இழுத்து ஜடைபின்னியபடி, புள்ளிகளை கோலத்தால் இணைத்தபடி, வேலைக்கு போகும் கணவனுக்கு டாட்டாவையும் பள்ளிக்கு போகும் குழந்தைக்கு முத்தத்தையும் கொடுத்து வழியனுப்பியபடி, சும்மாடு கட்டிய தலையில் வீடுபெருக்கும் விளக்கமாறுகளை விற்றபடி, பற்களில்லாத வாய்க்கு வெற்றிலையை உரலில் இடித்தபடி தேவதைகள் வீடெல்லாம், தெருவெல்லாம், ஊரெல்லாம் நிறைந்தே இருக்கிறார்கள் அவர்களை தேவதைகளாய்ப் பார்க்கும் கண்களும் மனமும்தான் எல்லோரிடத்திலும் இருப்பதில்லை.

குழந்தைப்பருவத்திலிருந்து பால்யத்தின் படிக்கட்டுகளில் பயணிக்கத் தொடங்கிய காலங்களில் கடந்துபோன தேவதைகள் தான் எதார்த்தமான தேவதைகளாக இன்னும் நிரம்பியிருக்கிறார்கள். ஊர்திருவிழாக்களில் எட்டு பெட்டிகள் பத்து பெட்டிகள் கொண்ட  குடை ராட்டிணங்கள் இருக்கும். தோழிகளோடு ஒரு பெட்டியில் ஏறும் பெண்கள், அதற்கு நேரெதிரான பெட்டிகளில் அமரும் மாமா பையன்களிடமோ மனசுக்கு பிடித்த பையன்களிடமோ பந்தயம் கட்டி கைக்குட்டையோ, கால் கொலுசையோ கீழே வைத்துவிட்டு ராட்டிணம் சுழல சுழல அதை எடுக்க வேண்டுமென ஒரு விளையாட்டு விளையாடுவார்கள். கீழிறங்கும் பெட்டியில் பாதி வெளியே தொங்கியவாறு அதை எடுக்கும் போட்டிகள் அத்தனை சுவாரஸ்யமானவை. ஒரு சுற்றில் யார் எடுக்கிறார்களோ அவர்கள் மேலே போயிட்டு கீழே வரும்போது அதை வைக்க வேண்டும், அடுத்த சுற்றில் யார் எடுக்கிறார்கள் என போட்டி நடக்கும். எத்தனை சுற்றுகளில் யார் அதிகம் எடுக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள். பெண்ணுக்காக ஆணும், ஆணுக்காக பெண்ணும் மாறி மாறி விட்டுக்கொடுத்துக்கொண்டாலும் போட்டியென வந்தபின்பு ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை எல்லாப் போட்டிகளிலும் நிரூபித்துக்கொண்டே இருப்பார்கள். பந்தயம் கட்டிய பரிசாக குச்சி ஐஸோ, சர்பத்தோ வசதியைப்பொறுத்து தோடு, வளையல், பாசின்னு திருவிழா கடைவீதிகளில் தாவணி பாவாடைகளில் அத்தனை தேவதைகள் சுற்றி வருவார்கள்.

கல்யாணம், பொங்கல், தீபாவளி போன்ற பெரிய விசேஷங்களுக்கு ரெடிமேடாக கடைகளில் விற்கும் மெகந்தி கோன்களை வாங்கி வைத்துக்கொள்வதில் எங்கோ ஒளிந்திருக்கும் வெட்கமும் கொஞ்சம் புன்னகையும் கூடுதலாக வந்துவிடுகின்றன இன்றைய பெண்களுக்கு. அம்மாக்களிடம் திட்டு வாங்கிக்கொண்டே சில்வர் பாத்திரத்தில் குங்குமத்தைக்கொட்டி சில பல பொருட்களையெல்லாம் சேர்த்து அடுப்புல வெச்சி நல்லா காய்ச்சி, அந்த பாத்திரத்தை வேற எதுக்கும் பயன்படுத்த முடியாதபடி பண்ணி, மெல்லிய குச்சி வெச்சி கைகளில் வைத்துக்கொள்ளும் வடிவங்களில் ரத்தமே வழிந்து வருவதாக அத்தனை சிவப்பாக இருக்கும் கைகளில் சந்தோஷமும் கொஞ்சம் நிரம்பிவழியும். நாலு வீட்டுக்கு ஒரு மருதாணிச்செடி இருக்கும், அதுல மருதாணி இலைகளை பறித்துவந்து, எலுமிச்சை பழ சாறு சேர்த்து நல்லா நெகு நெகுன்னு அரைத்து கொழ கொழன்னு வளித்து திண்ணைல உக்காந்து கதைகள் பேசிக்கிட்டே கைகளில் வெச்சிக்கிட்டு உன்னோடது அழகா என்னோடது அழகான்னு திருப்பித்திருப்பி பார்த்துகிட்டு தூக்கத்துல அரிக்கும் மூக்கை மருதாணி கையோடவே சொறிஞ்சிகிட்டு தூங்கிப்போன தேவதைகள் எல்லார் வீட்லயும் இருந்தாங்க. காலைல எழுந்து கைகளைக்கழுவி கொஞ்சம் தேங்காய் எண்ணெய் போட்டு தேய்த்து பார்க்கும் போது அந்த தேவதைகளின் வெட்கத்தில் கொஞ்சத்தை வாங்கிக்கொண்டு மருதாணி வைத்த கைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலாய் சிவக்கும்.



வீடுகளில் தெருக்களில் இருக்கும் தேவதைகள் ஒரு ரகம் எனில், பள்ளிக்கூட தேவதைகள் இன்னொரு ரகம். தேர்வு நேரங்களில் சொல்லிக்கொடுப்பதை, உடைந்து போன பென்சில்களுக்கு வேறு தருவதை, இரண்டு சொட்டு இங்க் கொடுப்பதையெல்லாம் தாண்டி, நமக்கென எடுத்துவரும் உணவில் ஒரு அதீத அன்பும் கலந்தே இருக்கும். ஜாமெண்ட்ரி பாக்ஸை வாயில் வைத்து பற்களால் கடித்து உப்பு மிளகாயில் உருண்டுகொண்டிருக்கும் நெல்லிக்காய்களை எடுத்து வாஞ்சையோடு நீட்டும் நேசத்தில், காக்காய் கடி கடித்து கொய்யாக்காயை கொடுத்துவிட்டு கூடவே சேர்ந்து சாப்பிடும் நேரத்தில், பாவாடையின் உள்பக்கமாக வைத்து பீடா மிட்டாயை சரிபாதியாய் கடித்து கொடுக்கும் வேளையில், வாங்கிக்கொடுக்கும் தேன்மிட்டாயை தேவாமிர்த மிட்டாயாக நினைத்து சாப்பிடும் நேரத்தில் அவர்கள் தேவதைகளின் தேவதைகளாக தெரிவார்கள்.
தெரு முக்கில் இருக்கும் மாரியம்மன் பண்டிகைக்கு தீர்த்தக்குடம் எடுக்க வரும் தேவதைகள் பாவாடை சட்டையோடும், தாவணி பாவாடையோடும் சமயங்களில் சேலைகளிலும் வரும்போதெல்லாம் அந்த அம்மனே இறங்கி இவர்கள் வடிவில் வருவதாய் தோன்றும். இப்போது போல சுடிதாரிலோ, சல்வார்கம்மீஸ்களிலோ யாரும் வந்ததில்லை. நெற்றி நிறைய திருநீறும், நடுவில் பெரிதாக குங்குமமும், தலையில் கொஞ்சம் மல்லிகைப்பூவோ, கனகாம்பரமோ, ஊதா நிற டிசம்பர் பூவையோ வைத்துக்கொண்டு வரும்போதெல்லாம் வாய் பிளந்து பார்த்த நியாபகங்கள் அவர்களுக்கு முன் வரிசையில் நின்று இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. வாங்கிய விபூதியை தம்பிக்கோ தங்கைக்கோ வைத்துவிட்டு கண்களுக்குள் விழுந்துவிடாதவாறு கைகுவித்து ஊதிவிடும் அழகில் மந்திரக்கோலுக்கு பதிலாக புல்லாங்குழலை உதடுகளில் வைத்திருக்கும் நவீன தேவதைகளாகவே தெரிவார்கள்.

சிறுவயது ஆண் பிள்ளைகளின் விளையாட்டுகள் ஆர்வத்தில் தொடங்கி சண்டைகளில் முடிந்துவிடும். பெண் பிள்ளைகளின் விளையாட்டுகள் பெரும்பாலும் அன்பில் தொடங்கி அன்பிலேதான் முடியும். சின்னச் சின்ன தேவதைகள் கண்ணாமூச்சி ஆடும் போது கண்களைக் கட்டிவிட்டு "கண்ணாமூச்சி ரே ரே, கண்டுபுடி யாரு, ஊள முட்டையை தின்னுபுட்டு, நல்ல முட்டையை கொண்டு வா " ன்னு சொல்லி அனுப்பும் இடத்தில் எப்போதும் ஒரு பெரிய தேவதை உட்கார்ந்திருக்கும். அந்த பெரிய தேவதைதான் கண்ணாமூச்சி விளையாட்டின் ஆணிவேராய் தெரிந்ததெல்லாம் பால்யத்தின் வரம்.  சைக்கிள் பந்தயத்தில், முங்கு நீச்சல் போட்டிகளில், கோலப்போட்டிகளில், லெமன் ஸ்பூன் போட்டிகளில் என தேவதைகள் விளையாடியதை பார்க்கவும், தேவதைகளோடு சேர்ந்து விளையாடவும் வாய்த்த வாழ்க்கையில் தான் அத்தனை ஆனந்தமும் நிறைந்தே இருந்தன. இப்போது இருப்பதைப்போல எந்தக் குழந்தைகளோடும் விளையாடாமல் கைப்பேசிக்குள் மூழ்கியபடி எந்த பெண்களும் இருந்ததில்லை, "அப்போ மொபைல் இல்ல அதனால விளையாடினார்கள், அந்த காலத்திலும் மொபைல் போன் இருந்திருந்தால் இப்படி விளையாடி இருப்பீர்களா?" என்னும் கேள்வி எழுந்தாலும் கூட குழந்தைகளோடு விளையாட தொடங்கும்போதுதான் உண்மையான தேவதைகளும் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.


ஓடிப்பிடித்து விளையாடி, சிறகுகள் இன்றி பறந்து, சிறு சிறு வெற்றிகளில் திளைத்து, அன்பில் கசிந்து, அன்பால் அணைத்து, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் குலதெய்வமாக, கூடப்பிறந்தவர்களுக்கு இன்னொரு அம்மாவாக,  உறவுகளுக்கு வழிகாட்டியாக, ஊருக்கே செல்லமாக, தெருவோர சிறுவர்களுக்கு தேவதைகளாக தெரிந்த பெண்கள் ஏராளம். ஏதோ ஒரு சந்தோசத்தில், ஏதோ ஒரு வெற்றியில், ஏதோ ஒரு சாதிப்பில், ஏதோ ஒரு மகிழ்வில் தனித்து சிரித்துக்கொண்டிருந்த தேவதைகளை பார்க்க வாய்த்த வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்து, ஏதோ ஒன்றில் தொலைந்து, ஊரைவிட்டு கடந்த போகும்போதெல்லாம் கண்ணீரால் மூழ்கிய தேவதைகளையும் பார்க்க வாய்த்ததுதான் இந்த வாழ்வின் கொடுமைகளுள் ஒன்று.


இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேவதைகள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனாலும் தான், தன்குடும்பம், தன் உறவுகள், தனது உலகம் மட்டும் என்று சுயநலமாய் மாறிப்போன பெண்கள் ஏராளமாக இருப்பதாக, அவர்கள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டதாக, அவர்களுக்குள் இயற்கையாகவே இருக்க வேண்டிய தேவதைகள் காணாமல் போய்விட்டதாக தோன்றுகிறது. தாவணி பாவாடை கட்டியரெட்டைஜடை போட்டு கனகாம்பர பூவைத்த, மருதாணியை விட வெட்கத்தில் சிவந்த, குழந்தைகளோடு சேர்ந்து விளையாடிய, கடிதமெழுதி தூதுவிட்ட, காத்திருந்து நகம் கடித்த, இலவசமாக டியூசன் எடுத்த, கண்களை மூடியபடி கடவுளிடம் வேண்டுதல்களை முணுமுணுத்து, எப்போதும் கம்பீரம் குறையாத தேவதைகளைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன.


காலம் எல்லாவற்றையும் ராட்டிணமாய் சுழற்றிக்கொண்டிருக்கிறது ஆனால் மேலே போன பெட்டிகள் கீழே அப்படியே வருவதில்லை மாறாக முன்னேற்றம், டெக்னாலஜி, மாற்றம் என்னும் பெயர்களில்  புதுப்புது பெட்டிகளாக தன்னை மாற்றிக் கொண்டு கீழே வருகிறது. எல்லா பெண் குழந்தைகளுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷி இருப்பது போல எல்லா பெரிய மனுஷிகளுக்குள்ளும் ஒரு பெண் குழந்தை இருக்கத்தான் செய்கிறது. அதை குழந்தையாகவோ , பெரியமனுஷியாகவோ வைத்திருப்பதும் அவ்வப்போது தேவதையாக மாற்றிக்கொள்வதும் பெண்களின் கைகளில் தான் இருக்கிறது. அப்படி மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் காணாமல் போன தேவதைகளைக் கண்டுபிடிப்பதில் ஒரு சிரமமும் இருக்காது.