Showing posts with label காதல் வலிகள். Show all posts
Showing posts with label காதல் வலிகள். Show all posts

24 November 2017

பிரியங்களின் வலி




பிரியங்களின் பெருவாசலில்
தனித்திருப்பது அத்தனை சுலபமல்ல

தனிமை போர்த்தியபடி
மெல்ல நகரும் பொழுதுகள்
நரகத்தை நினைவூட்டும்

துக்கம் மிகுந்து தூக்கம் துறந்த
இரவுகளை தலையணைக்கடியில்
ஒளித்து வைக்கச் சொல்லும்

பசி நிறைந்த பகல்கள்
மெளனத்தை சமைத்து
உணவாய்த் திண்ணும்

பெயரற்ற உருவங்கள்
மூளை மடிப்புகளில்
முன்னும் பின்னும் மின்னும்

அழகிய முரண்களோடு
அர்த்தமற்ற சண்டைகளால்
மனம் திணறி பிரிந்திருப்பதை விட
தனித்தே இருந்துவிடலாமென்றும்
தோன்றும் ....!

எஞ்சி நிற்கும் வருத்தம்

கனவால் செய்த பலூனொன்று
சொற்கள் குத்தியதால்
பெரிதாய் சத்தமிட்டு உடைகிறது

திட்டங்களின் நூலறுந்து
அந்தரத்தில் தொங்குகிறது
தொகுத்த வார்த்தைகள்

பிம்பங்களுக்குள் வந்துபோன
சந்தோச நிமிடங்கள்
சட்டென மறைந்து காணாமல் போகின்றன

சுமந்து வைத்திருந்த
பிரியங்களின் கூடையில்
இப்போது முட்கள் மட்டுமே
நிரம்பி வழிகிறது

எனக்கு ஆறுதல் தேவைப்படவில்லை
உனக்கு கொடுத்து வைக்கவில்லையென்ற
வருத்தம் மட்டுமே எஞ்சி நிற்கிறது...!


வானத்தை அடையும் திசை

உனது
முத்தங்களின் பசிக்கு அழாமல்
கொஞ்சல்களுக்கு ஏங்காமல்
தாலாட்டுக்கு காத்திருக்காமல்
உறங்குமொரு குழந்தையென
அமைதியாய் இருக்கிறதுன் நினைவுகள்

மீன்களில்லா குளத்தில் போடும்
தூண்டிலைப்போல சமயங்களில்
வெறுமை சிக்கிக்கொள்ளும்
கொக்கிகளாய் நகர்கிறது நாட்கள்

தவறியும் அவிழ்த்துவிடாத
நம் சிநேகத்தின் முடிச்சுகளில்
இறுக்கம் இன்னும் கூடியிருக்கலாம் 
உன்மீதான காதலைப்போலவே

மிகச்சரியாய் எய்யப்பட்ட அம்பில் 
காயப்பட்ட பறவையின் 
சிறகுகளுக்கு வலுவிழந்து போகலாம்... 
அது வானத்தை அடையும் திசையை நோக்கி 
மீண்டும் பறக்கும்...!


13 May 2017

தனிமை

விடுமுறை தினங்களின்
விடியல்களில் பொதிந்திருக்கும் வெறுமையின் அடர்த்தி
மிகக் கொடியவை

ஒடிந்த சிறகோடு
உலவும் பறவையொன்று
இரைதேட பறக்கும் அவஸ்தையைப்போல்
வலி நிறைந்தவை

பிரியங்களின் கோப்பையில்
நிரம்பி வழியும் காதலை
மெளனத்தின் மூடிகொண்டு
அடைக்கும் கணங்களில்
அது இன்னும் பொங்கி வழியும்

நீளும் கரங்களைத் தொடவும்
கசியும் முத்தங்களைப் பகிரவும்
அன்பின் அணைப்பில் உருகவும்
சாயும் மடியில் உறங்கவும்
வாய்ப்புகளற்ற பொழுதொன்றில்
முளைக்கும் கேள்வியும் பதிலுமாய்

"தனிமை"
சில நேரங்களில் மிகச்சிறந்த வரம்
சில நேரங்களில் மிகக்கொடிய சாபம்....!


04 August 2016

நிம்மதி கொள்


நடுங்காதே மனமே
தூரத்தில் தெரிவது
வேறு யாருமல்ல
தேனின் தித்திப்பென அடி நாக்கில்
ஒட்டிக்கிடந்த ஒரு உறவுதான் அது

பக்கம் நெருங்கி உன்னை
கடந்து போகும் போது
உடைந்து போகாதே
உன்னைப்போலவே அந்த உறவும்
தேனீர் அருந்தவோ
பசி போக்கவோ வந்திருக்கலாம்

உன் சந்தோசத்தின் மீதொரு
பார்வைக் கல்லெறிந்தோ அல்லது
உண்மையில் பார்க்காமலே கூட
உன்னைத் தாண்டிப் போயிருக்கலாம்

கடந்த காலத்தின் நினைவுகளை
கண்களில் கொண்டுவந்து
ஆறிப்போனதாய் நினைத்துக் கொண்டிருக்கும்
காயங்களின் தழும்புகளைத் தடவிப்பார்க்காதே

கூண்டைத் திறந்துவிடும்
கைகளென மென்மையாக விலகு
சிறகுவிரிக்கும் பறவையென
அவளோ / அவனோ பறக்கட்டும்
அந்த சந்தோசத்தில்
உன் சந்தோஷமும் இருக்கிறதென நிம்மதி கொள் .....!!!

09 July 2016

சிறகைப் பறக்கவிடு

உன் மீதான வெறுப்பு
இன்னும் கூட கூடியிருக்கலாம்
இல்லையெனினும் குறையாமல்
பார்த்துக்கொள்கிறேன்

நினைவுகளில்
அலைந்து கொண்டிருக்கும்
நிறைவேறாத ஆசைகளைக் கூட்டிவந்து
தீயிட்டுக் கொளுத்துகிறேன்

கடந்தகால பரண்களின்மேல்
மடித்து வைத்திருக்கும்
நம் நாட்களின் மீதுபடிந்த தூசிகளை
தவறியும் தட்டுவதில்லை

சுவாசப்பையின் பள்ளத்தாக்கிலிருந்து
சுத்தமாய் துடைத்தெறிந்த உன் வாசனையை
மீண்டும் நிரப்ப முயற்சிப்பதில்லை

கனவுகளில் தோன்றி மறையும்
உன் முக பிம்பத்தை உடைக்க மனமில்லை
தடைகளில்லை உன் திசையில் பயணி
தேடல்களுண்டு என் சிறகைப் பறக்கவிடு

வேண்டாமென
விலகிச்செல்லும் உறவுகளை
என்ன செய்வது
மறப்பதையும் மன்னிப்பதையும் தவிர


06 September 2014

தொடர்வண்டி நினைவுகள் ....!





உன்னோடு 
அதிக நேரம் செலவழித்த 
அந்த தொடர்வண்டி நிலையத்தின் 
நடைமேடை திண்ணையில் அமர நேர்ந்தது ஒருநாள்...

அன்று 
கண்கள் மூடிய தருணம்
நினைவுகள் பின்னோக்கிச் சுழல..

''அப்போது என் விரல் கோர்த்தபடி
அருகில் அமர்ந்திருந்தாய் நீ
அழகான புன்னகையோடு ...

நீ பேசிய வார்த்தைகளை காதுகளும்
உன் அழகை கண்களும் உள்வாங்கிக்கொண்டிருக்க
அன்பான காதல் வெளிவந்து கொண்டிருந்த
ஆசிர்வதிக்கப்பட்ட நிமிடங்கள் அது .....!!!

இப்போது நீ இல்லாத அதே இடத்தில்
உன் நினைவுகளின் விரல் கோர்த்து அமர்ந்திருக்கிறேன்...

பெருங்கூச்சலிட்டு வந்த ஒரு தொடர்வண்டி
என் நினைவுகளைக் கலைத்து
பயணிகளை இறக்கி விட்டு
திரும்பாமல் போய் விட்டது உன்னைப்போல ....

தண்டவாளங்கள்
இன்னும் அப்பிடியே இருக்கின்றன
என்னைப்போல ....!!!

22 August 2014

உறங்காத இரவுகளும் உன் நினைவுகளும்..!


உறக்கம் தொலைத்த இரவுகள்
உணவாய்த் தின்கிறது
உன் நினைவுகளை....

இருள் படிந்த என் அறையின்
ஜன்னல் வழியே வந்து விழும்
வெளிச்சக்கீற்றுகள்
தோண்டி எடுக்கின்றன
உன் வெள்ளைச் சிரிப்புகளை...

கைப்பேசியின் உள்டப்பியில்
இருந்து அழிக்கப்படும் தேவையற்ற
குறுந்தகவல்களைப்போல்
அவ்வளவு சுலபமாய்
அழிக்க முடியவில்லை
இதயத்திலிருந்து
உன் கடைசி பார்வையை ...

அருகில் உறங்கும் நண்பனின்
அலைபேசி அலறும் அர்த்த ராத்திரி
மீட்டெடுக்கிறது
நீ அழைத்த நிமிடங்களை....

கொசுக்கள் வந்து கடிக்கும் 
தருணங்கள் முன் வைக்கிறது 
உன் விலை மதிப்பில்லாத 
முத்தங்களை... 

தூரத்து மசூதியில் ஓதும்
ஒரு குரல், விடிந்து விட்டதை
விவரிக்கும் போது
தொடங்குகிறது என் உறக்கம் ...!





16 December 2010

எப்படிப்பிடிக்க ..?



கைமீறிப்போகிற எதையும்
உடனே பிடிக்க முடிவதில்லை
குடையோ ...
பட்டாம்பூச்சியோ ....
உன் காதலோ ....
எதையும்..!

15 December 2010

வெறுமை




நீ இல்லாத வாழ்க்கை 
வெறுமைதான் 
எழுதப்படாத
வெள்ளைப்பக்கங்களைப்போல..!

நீ இல்லாத இரவுகள்....!


வெறுமையாகவே விடிகிறது
நீ இல்லாத இரவுகள்.....!

கனவில் பேசிய வார்த்தைகள் கூட
காலையில் மறந்து போகிறது
மனப்பாட பகுதிகளைப்போல ...

நீ கொடுத்த முத்தங்கள்........
அலைபேசியின் எந்த பகுதியில்
ஒளிந்து கிடக்கிறதோ இப்போது ....!
மவுனத்தின் நிசப்தங்களில்
எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள் ....

எங்கிருந்தாலும் என்னை
நெட்டித்தள்ளி
இழுத்துக்கொண்டு போகிறது
உன் நினைவுகள் ....

உன்னைப்பற்றி எழுதும்போதெல்லாம்
இளமையை கொட்டுகிறது
என் பேனா....!

வீதியில் போகும் பலூன்காரனை
வேடிக்கை பார்க்கும் குழந்தையைப்போல்
வேடிக்கை பார்க்கிறேன்
என்னைக்கடந்து போகும்
காதல் ஜோடிகளை .....!

கடை வாசலில் தொங்கும்
உடையை உனக்கு போட்டு
அழகு பார்க்கிறேன்
கற்பனையில்....

எங்கோ கேட்கும் ரயிலின் சத்தம்
நினைவுபடுத்துகிறது
நீ வழியனுப்பி வைத்த நிமிடங்களை ...!

வானம் பார்த்து படுத்திருக்கும்
மொட்டைமாடி இரவுகளில்
நிலவு நினைவுபடுத்துகிறது
ஒப்பனையற்ற உன் முகத்தை ....!

ஒட்டைக்குடிசையில் ஒழுகும்
மழைத்துளிகளைப்போல்
உள்ளுக்குள் சில்லிடுகிறது
சில நிமிடங்கள் ......!


உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.....!

14 December 2010

எப்போது தருவாய் ...!


நான் உனக்கு கொடுத்த கடிதங்கள் ...
கவிதை புத்தகங்கள் ...
பிறந்த நாள் பரிசுகள் ... என
எல்லாவற்றையும் என்னிடமே
திருப்பிக்கொடுத்து விட்டாய் ....

எப்போது தரப்போகிறாய் ..?
உன்னைப்பார்க்கும் போதெல்லாம்
நான் கொடுத்த முத்தங்களை ..?

உன் நினைவுகள் மட்டும்....


இதுவரை.....
நான் நடை பழகிய தெருக்கள் ...
மண்டிபோட்டு குண்டு
விளையாடிய மைதானங்கள் ...
முண்டியடித்து முதல் காட்சி பார்த்த
திரையரங்குகள் ...
என் நிழலில் ஓய்வெடுத்த மரங்கள் ...
நான் குதித்து குளித்த நதிகள் ....
எட்டி உதைத்தாலும்
ஏற்றுக்கொள்ளும் மிதிவண்டி ...
என்னை தொலையாமல்
பார்த்துக்கொண்ட புத்தகங்கள் ...
என்னை தொல்லை செய்யும் தோழிகள் ....
என்னை தூங்க வைத்த தூளிகள் ..
என்னை தாங்கிக்கொண்ட நாற்காலிகள் ..
தமிழ் கற்றுக்கொடுத்த பள்ளிக்கூடம் ...
அன்பு கற்றுக்கொடுத்த அம்மா ...
அனைத்தும் கற்றுக்கொடுத்த நட்பு ....
எல்லாத்தையும் ...
எல்லாத்தையும் .....
விட்டு.... விட்டு...
வந்துவிட்டேன் .... ஆனாலும் ...
உன் நினைவுகள் மட்டும்
என்னை விட்டு விடாமல்
என் நிழல் போல கூடவே வருகிறது ......!!!

இப்போது எப்படி இருப்பாய் நீ ....?


ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும்
ஒவ்வொரு நாளின் முடிவிலும்
உன் பெரிய புன்னகையோடும்
என் சின்ன கோபத்தோடும்
நகர்ந்த நாட்கள்
உனக்கு நினைவிருக்கிறதா ..?

என் மிதிவண்டி சத்தத்திர்க்காக நீயும் ...
உன் கொலுசுகளின் ஓசைக்காக நானும்....
காத்திருந்த காலங்கள்
உனக்கு நினைவிருக்கிறதா ..?

என் கவிதை புத்தகங்களை நீயும்
உன் கல்லூரி புத்தகங்களை நானும்
மாறி மாறி படித்த
மறக்க முடியாத நாட்கள்
உனக்கு நினைவிருக்கிறதா ..?

காலம் நம்மை பகடைக்காயாய்
உருட்டி விளையாடியதில்
திசை தொலைத்த காற்றாய்
காணாமல் போனோம் ...
உருண்டோடிய காலத்தின் ஒரு நாளில்
ஒரு பேருந்து நிறுத்தத்தில்
உன்னை கண்ட போது...

கழுத்தில் தாலியும் ..
கையில் குழந்தையுமாய்
ஒரு பழைய கவிதையாய்
பாவமாய் நின்றாய் ....

ஆனாலும் ...

சந்தோசம் அதிகமாகவே இருந்தது
உன் குழந்தையின் முகத்தில் ....!

இதுவரை எத்தனையோ கண்கள்
என்னைக்கடந்து போய்விட்டது
இருந்தாலும் ...
உன் முதல் பார்வை
இன்னும் பத்திரமாய் இருக்கிறது
என் கண்களுக்குள் ....

இதுவரை எத்தனையோ
உதடுகள் என் பெயரை
உச்சரித்துப் போயிருக்கிறது
நீ உச்சரித்தது மட்டும்
இன்னும்
எதிரொலித்துக்கொண்டிருக்கிறது...

இன்னும் பல
காலங்கள் கடந்து விட்டது...
உன்னை பார்த்தும் பல காலங்கள்
ஆகிவிட்டது ....

இப்போது நீ
எப்படி இருப்பாய்..?

எங்கிருந்தாலும் ..
எப்படி இருந்தாலும் ...

நீ நன்றாக இருக்க வேண்டும்
என்பதே என் இப்போதைய
கனவும் கூட ...

நீ என்னை மறந்திருந்தாலும் சம்மதம்
நான் நினைத்துக்கொள்கிறேன் ...
உன் குழந்தையின்
முகத்தில் பார்த்த சந்தோசம்
உன் முகத்திலும் வந்திருக்குமென .....!