24 February 2021

தடுமாறும் தலைமுறை

அறிவியலும் விஞ்ஞானமும் போட்டிபோட்டு வளர்ந்துகொண்டிருக்கும் காலத்தில் வருடங்கள் சட்டென ஓடிவிடுகின்றன. போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்ததாய் ஒரு தலைமுறை எதையோ நோக்கி, எதையெதையோ தேடி வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வேகத்தால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கும் சேர்த்தே பல அசெளகரியங்களை போகிறபோக்கில் திணித்துவிட்டுப் போகிறார்கள் என்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாத வேதனை. 

காலத்தின் கைகளில் எல்லோருக்குமான நல்ல விஷயங்களைப்போலவே சில கெட்ட விஷயங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு தலைமுறை தன் நல்ல விஷயங்களையும் கூட கெட்ட விஷயமாக மாற்றிக்கொண்டிருப்பதுதான் இங்கே ஏற்றுக்கொள்ளவே முடியாத மாற்றமாக இருக்கிறது. அம்மாவுக்கு ஓய்வு கொடுக்கணும், அப்பாவின் சுமையை கொஞ்சம் தானும் ஏற்றுக்கொள்ளனும், தன் கூடப்பிறந்தவர்களை நல்லா படிக்கவைக்கணும், நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கணும், அப்பறம் தான் நம்ம கல்யாணத்தை பற்றி யோசிக்கணும் என்று முப்பது வயதான பின்னும் தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வராமல் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நல்ல இளைஞர்கள் கடந்த தலைமுறையோடு நின்றுவிட்டார்கள்.
யாருக்கு என்ன நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதைப்பற்றிய கவலையோ, அக்கறையோ எனக்கு இல்லை என்று அணைபோட முடியாத காட்டாற்று வெள்ளம் போல ஒரு தலைமுறை இங்கு கண் முன்னே உருவாகிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. 

தன் சந்தோசமே பெருசு அதற்காக என்ன விலை கொடுத்தாலும், யார் எத்தனை துன்பப்பட்டாலும் அதை அடைந்தே தீருவது என பலர் "சுயபோதை" ஒன்றுக்குள் மூழ்கிப்போய்க் கிடக்கிறார்கள். அவர்களால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களைச்சார்ந்த குடும்ப உறவுகளும், நட்பு வட்டமும் அடையும் வருத்தங்கள் ஏராளம். பதின் பருவ வயதென்பது மதில்மேல் இருக்கும் பூனையைப்போல எப்போது எந்த பக்கம் குதிக்குமென கணித்துவிட முடியாத வயது. சிலசமயங்களில் சட்டென இறக்கை முளைத்து வானத்தையும் தாண்டி பறக்க நினைக்கும், சில சமயங்களில் தனிமைகளின் இருளுக்குள் புதைந்துகொண்டு தலைகாட்ட மறுக்கும். அந்த வயதின் மூர்க்கங்களை அடக்கி அது தடுமாறும் போதெல்லாம் தமக்கு வேண்டிய பக்கங்களில் திருப்பி ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்கின்ற கலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. 

குழந்தை வயதென்பது பெற்றோர் சொல்லும்படி முழுவதுமாக கேட்கவில்லையெனினும் அடிவிழுமென்ற பயத்தின் பொருட்டு தேவையானவற்றை கேட்கும். கல்யாணமானபின்பு புதிதாய் இணைந்த இன்னொரு உறவையும் அது சார்ந்த இடங்களையும் பொறுத்து கொஞ்சம் தன்னிலை உணர்ந்து செயல்படும். முதிர் பருவமென்பது பேரன் பேத்திகளுக்காக, இனி தனித்து இயங்க முடியாத சூழலின் வலியை மறைப்பதற்காக, பல இடங்களில் ஆறுதலாக பல இடங்களில் அன்பாக இருக்கவேணும் சில விஷயங்களுக்குள் அடங்கும். ஆனால் இந்த இளவயதென்பது யார் சொன்னாலும் கேட்காத, யார் வலியையும் பொருட்படுத்தாத, யார் வழியையும் பின்பற்றாத தற்காலிக சுகத்துக்கான பாதைகளில் அதீத ஆசைகளோடு அதி வேகமாக பயணிக்கக்கூடிய ஒன்று.

ஒருகாலத்தில் அடர்ந்த கருவேல மரங்களைக்கொண்டிருந்த காடுகள் அவை. இப்போது வளர்ச்சியின் பொருட்டு நகரத்தின் முக்கிய மையப்புள்ளியாக மாறியிருக்கும் இடம். பேருந்து நிலையம், நீதிமன்றம், பெரிய மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என்று எல்லாவிதமான வசதிகளும் வந்து குவிந்திருக்கும் இடம். அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் சொந்த வீட்டுக்காரர்கள், பெரிய பெரிய வேலைகளில், சொந்த தொழில்களில் முன்னேறியவர்கள். அவர்களின் வீடுகளில் இருக்கும் பதின் பருவப்பிள்ளைகளின் போக்கு எதிர்காலத்தை நினைத்து நமக்கே பயத்தை சுரக்க வைக்கும் நேரங்களில் கூட அவர்களின் பெற்றோர் அவர்களைக் கண்டிப்பதோ கடிந்து கொள்வதோ அடக்கி வைப்பதோ இல்லையென்பதுதான் கூடுதல் கொடுமை. பெரிய இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் பண்ணியதும் சட்டென வேகமாய் முறுக்கி எடுத்த எடுப்பில் டாப் கியரில் பயணிக்கும் நொடி நமக்குள் பலவிதமான பயத்தை கொடுக்கிறது. நண்பர்களோடு சேர்ந்து இரவு நேரங்களில் ரேஸ் போவது சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களைப்போல இங்கேயும் வந்துவிட்டது. இரவு நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத நேரமென்பதால் சாதாரணமாக மணிக்கு 80கிமீ வேகத்தில் வீடுகளும் குழந்தைகளும் அதிகமுள்ள தெருக்களில் பயணிப்பதை பார்க்கமுடிகிறது. அந்த பெரிய பெரிய வண்டிகளின் சத்தம் தூங்கிக்கொண்டிருக்கும் வயதானவர்களை, குழந்தைகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன.

பள்ளிக்கூட படிப்பை முழுவதுமாக முடிக்காத பதின்பருவப்பிள்ளைகள் அவர்கள். ஆண்ட்ராய்ட் மொபைல்களின்மேல் அதிக நாட்டம் கூடவே போட்டோகிராபி/மாடலிங் மீது ஆர்வம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை சார்ந்த ஆர்வமே அவர்களை படிக்கவிடாமல் செய்திருக்க வேண்டும். சொல்லி வளர்க்கவோ, பார்த்து வளரவோ கூடப்பிறந்தவர்களும், உறவுகளும் இல்லாமல் வளர்ந்த பிள்ளைகள். திருடவோ, குற்றச்செயல்களிலோ ஈடுபடாமல் பொருளீட்டும் வண்ணம் சின்ன சின்ன வேலைகள் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தங்களது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தவர்கள். ஒருகட்டத்தில் திருமண விழாக்களில் சமையல், பரிமாறும் வேலை என செய்து கொஞ்சம் அதிக பொருளீட்டும் இடம் நோக்கி நகர்ந்த பின்பு அவர்களது ஆசைகளும் அதிகமாகியிருக்கின்றன. கைகளில் தாராளமாய் காசு தங்க, மது, புகை, புகையிலை உள்ளிட்ட அவர்களின் கூடவே தங்கிவிட்டது. ஒருவனைப்பார்த்து மற்றொருவன் என எல்லோரும் குடிக்கு வெகு சீக்கிரமே சிநேகமாகிப்போனார்கள். தங்களது வாழ்க்கை இந்த பதினெட்டு வயதுக்குள் மிகக் கோரமாக முடிவுக்கு வரப்போகிறது என்பது தெரியாமலே ஒரு பெரிய தீம் பார்க் நோக்கிய பயணத்தை அந்த அர்த்த ராத்திரியில் தொடங்கினார்கள். 

நட்புக்கூட்டத்தில் கார் வைத்திருந்த ஒருவனோடு சேர்த்து எட்டு பேர் ஆம்னியில் புறப்படுகிறார்கள் போகும்போதே வாங்கிவைத்த சரக்கு பாட்டில்கள் காலியாக காலியாக இவர்கள் போதைக்குள் முக்கால்வாசி மூழ்கிப்போனார்கள். தேசிய நெடுசாலையில் பயணிக்கத்தொடங்கும் போது வேகத்தால் பறக்கத்தொடங்கியிருக்கிறார்கள். போகிற வழியெங்கும் வேறுவேறு ஆட்கள் காரை ஓட்டிக்கொண்டு போகிறார்கள் போதையோடு. தங்களுக்கு முன்னால் போன அரசுப்பேருந்து யாரோ ஒரு பயணியை இறக்கிவிட நிறுத்த, அந்த பயணியும் இறங்கி சாலையைக்கடக்க அதிவேகத்தில் ஆம்னியில் வந்தவர்கள் அவரையும் அடித்துத்தூக்கி காரைக்கொண்டு போய் அரசுப்பேருந்தில் மோத சாலையைக்கடந்த பயணி உட்பட காருக்குள்ளிருந்த ஐந்து பேர் என மொத்தம் ஆறுபேரும் சம்பவ இடத்திலேயே கோரமாக மரணிக்கிறார்கள். மீதமுள்ளவர்களுக்கு பலத்த அடி, ஒருவனுக்கு கால் போய் விட்டதாகவும் சொல்கிறார்கள். இதை விதி என்று எல்லோரும் ஒற்றை வார்த்தையில் விளக்கம் சொல்லி விலகிப்போனாலும் அந்த வேகமும் போதையும் எத்தனை குடும்பங்களைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

பெங்களூரின் பிரபலமான பாலமொன்றில் நடந்த கார் ரேஸில் விபத்து நடந்து பதினெட்டு வயது பூர்த்தியாகாத மருத்துவரின் மகன் தலை துண்டாகி இறந்ததாகவும் கார் பாலத்தை தாண்டி மறுபக்கம் விழுந்து நொறுங்கியதாகவும் ஒரு செய்தி படிக்கும் போதே பதைபதைக்க வைக்கிறது. இதுபோன்ற பல செய்திகளை தினமும் பத்திரிக்கைகளும் இணையப்பக்கங்களும் தாங்கி வருகின்றன. இவற்றையெல்லாம் படித்து நாம் சாதாரணமாக கடந்து போய்விடுவோம் ஆனால் அந்தந்த குடும்பங்களுக்கு அது எப்போதும் ஆறாத ரணமாகவே இருக்கும். வருட வருட புத்தாண்டு இரவுகள் கொண்டாட்டமாக தொடங்கும் அதே நேரத்தில் எத்தனையோ விபத்துகள் நடக்கின்றன, திடீர் மரணங்கள், கை கால்கள் இழப்புகள், மேனியெங்கும் சிராய்ப்புகள் என ஒரு இரவு கொண்டாட்டங்களையும் துக்கங்களையும் சரிசமமாக கொண்டு வந்து நம்முன்னே வைக்கிறது ஆனால் நமக்கு நடக்காத வரை கொண்டாட்டங்கள் மட்டுமே நம் கண்களுக்கு தெரிகின்றன. 

இந்த மாதிரியான விஷயங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெரும்பாலும் இளைய தலைமுறை பிள்ளைகள் தான். என் மகன் ஆறாவது தான் படிக்கிறான் இப்பவே என்னைய வெச்சி வண்டில கூட்டிட்டு போறான்னு பெருமையாக சொல்லிக்கொள்ளும் அம்மாக்களும், உங்க பையன் மூனு பேரை வெச்சிக்கிட்டு வேகமா வண்டி ஓட்டிட்டு போறான் கொஞ்சம் சொல்லிவைங்க என்று பக்கத்துவீட்டுக்காரரோ, தெருவில் வசிப்பவரோ சொல்லும் போதும் அதை கண்டிக்காத அப்பாக்களுமே தங்கள் பிள்ளைகளுக்கு நேரும் விபத்துகளுக்கு பாதை அமைத்துக்கொடுக்கின்றனர். வசதியில்லாத பிள்ளைகளுக்கு கிடைக்கும் புது சைக்கிளில் எல்லா சந்தோஷங்களையும் ஒரு வரையறைக்குள் அனுபவித்துக்கொள்கிறார்கள். அதீத செல்லமும், வசதியும் கிடைக்கப்பெறும் பிள்ளைகள் கொஞ்சம் வழி மாறிப்போவது உண்மை. அதனால் உண்டாகும் வலியும் உண்மையே. 

தடுமாறும் நாட்டையோ நாட்டின் பொருளாதாரத்தையோ ஒரு தனிமனிதனாக ஒரு குடும்பமாக நம்மால் சரி செய்யவே முடியாது அது அத்தனை சுலபமான காரியமும் அல்ல. ஆனால் தடுமாறும் அடுத்த தலைமுறை பிள்ளைகளை தனியாளாக, குடும்பமாக சேர்ந்து நல்வழிப்படுத்துவது அத்தனை கஷ்டமும் அல்ல. அன்போடு சேர்த்து கொஞ்சம் கோபத்தையும் , சுதந்திரத்தோடு சேர்த்து கொஞ்சம் இறுக்கிப்பிடித்தலையும், புன்னகையோடு சேர்த்து கொஞ்சம் கண்டிப்பையும் கையாளுங்கள். உங்கள் பிள்ளைகளின் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றத்துடிக்கும் அதே சமயம் அவனுக்கான ஒரு முழு வாழ்க்கை இருக்கிறது என்பதையும் உணர்த்துங்கள்.