Showing posts with label அம்மாவுக்காக. Show all posts
Showing posts with label அம்மாவுக்காக. Show all posts

13 April 2017

கடந்தகால கவலைகள்

பேட்டர்ன் லாக் போடப்பட்ட 
தொடுதிரைக் கைப்பேசியை 
விடுவிக்க தெரியாமல் 
வெத்தலையைப்போல் 
தடவும் அம்மாவுக்கு அதை
திறந்து கொடுக்கிறேன்

கேலரிக்குள் குவிந்து கிடக்கும்
புகைப்படங்களை
அரிசி புடைக்கையில் தள்ளிவிடும்
சிறு கற்களைப்போல
இடப்பக்கமாய் தள்ளிவிட்டு ரசிக்கிறார்

மிகப்பிடித்த படமொன்றை
கீரைக்கட்டை விலக்கி
பழுத்த இலை களைவதைப்போல
அழகாய் ஜும் செய்து பார்க்கிறார்

ஒரு கலர் படத்தில்
வெள்ளைப் புடவையுடன்
முதுமை சுமக்கும் தன் அம்மாவை
பார்த்து அன்பில் கசிகிறார்

இறுதியில்
பேரன் பேத்திகளின் புகைப்படங்களோடு
நீளும் நிமிடங்களில்
நிதானமாய் மறக்கிறார்
கடந்தகால கவலைகளையும்
நிகழ்கால நடப்புகளையும் ...!




12 March 2017

உணரவேண்டியிருக்கிறது

அர்த்தராத்திரியோ அதிகாலையோ
கதவு திறக்கும் போது
உதிரும் புன்னகையோ
"வா கண்ணு" என்னும் வார்த்தையோ கேட்காது

கதவுகளுக்குள் வந்தபின்
ஆடை மாற்றுவதற்குள் கொடுக்கப்படும்
ஒரு செம்பு தண்ணீர் கிடைக்காது

காலையில் எழுவதற்கு முன்
படுக்கையில் இருக்கும்போதே
ஒரு கோப்பை தேநீர் வராது

இட்லியோ தோசையோ
இரண்டு சட்னிகளோடு சேர்த்து
கொஞ்சம் கரிசனமும் அக்கறையும்
இருக்காது

எங்கோ வைத்துவிட்ட
இருசக்கர வாகனத்தின் சாவியை
நாமே தேடி எடுக்க வேண்டிவரும்

டீத்தூள் டப்பாவையும்
சர்க்கரை டப்பாவையும் கண்டுபிடிப்பதற்குள்
தேநீர் தயாரிக்கும் ஆசையை
பலமுறை கைவிடவேண்டும்

சமையலறையில் தேடல்
சாப்பாட்டு மேஜையில் வெறுமை
வீட்டில் தெரியும் தனிமை
விளங்க முடியா பொறுமை
எல்லாம் சேர்ந்து உணர்த்தும் அம்மாவின் பெருமை

அம்மா வெளியூர் சென்றிருக்கும் போது
நாம் வெளியூரில் இருந்து வீடு திரும்பும் நாளொன்றில் உணரவேண்டியிருக்கிறது எத்தனையோ விசயங்களை..!

07 May 2016

ஆண்களின் வரம்

"கொழம்பு நல்லா இருக்கு" என்பதே
அம்மாக்கள் பெரும் மிகச்சிறந்த பாராட்டு ..!
**************************************
மொத்த மெத்தையும் கொடுக்காத
தூக்கத்தைக் கொடுப்பதுதான்
அம்மாவின் சேலைத் தொட்டில்..!
**************************************
எந்த நிலையிலும்
தன்னை நேசிக்கும் பெண்ணாய் அம்மா
இருப்பது ஆண்களின் வரம் ..!
**************************************
குடும்பம் என்னும் புத்தகத்தில்
அம்மா என்பவள் அடிக்கோடிட்ட
மிகப்பிடித்த வரி ..!
**************************************
மாளிகையானாலும்
குடிசையானாலும் சமையலறைக்கு
பிடித்த ஆள் அம்மா மட்டுமே ..!
**************************************
யாருமற்ற  வீட்டில் எப்போதும்
நிறைந்திருக்கும் அம்மாவின்
வாசம் ..!
**************************************
எத்தனை முறை முயற்சித்தாலும்
மிக அரிதாய்க் கிடைப்பது தான்
அம்மாவின் வெட்கம் ..!
**************************************
எந்த மொழியில் அழைத்தாலும்
அழகாகும் சொல் அம்மா ..!
**************************************
அன்னையர் தின வாழ்த்துக்கள்..!


16 December 2010

வெற்றிடம்



வீடு அமைதியாகவே இருந்தாலும்
ஏதோ ஒரு வெற்றிடமாகவே
இருக்கிறது...
அம்மா இல்லாத நேரங்களில் ......

வாசிப்பு வரம்



படிக்கத் தெரியாத அம்மாவின்
வாசிப்பு வரத்திற்காகவே
திருமணப் பத்திரிக்கைகளின்
தீராத தவம் .......!


15 December 2010

வெட்கத்தின் நிறம்



எந்த தூரிகையாலும்
தீட்டிவிட முடியாது ...
அம்மாவுடைய வெட்கத்தின் நிறத்தை ....!

14 December 2010

பிறந்த நாள் ..!


ஆங்கிலேயர் ஆட்சி செய்ததுமுதல்..
அமெரிக்கா வல்லரசானது வரை
நினைவில் இருக்கிறது ....

உலககோப்பை வென்ற
இந்திய அணியின் சரித்திர வருடம்
நியாபகம் இருக்கிறது ..

கமலின் முதல் படமும்
ரஜினியின் நூறாவது படமும்
தூக்கத்தில் கேட்டாலும்
சொல்லிவிட முடியும் ...!

பல வருடங்களுக்கு முன்பு பெற்ற காதல் கடிதம்
அந்த நாளின் நிமிடம் முதல் நொடி வரை
அனைத்தும் சேகரித்து சிரிக்கிறது
நாட்காட்டியில்...!

நண்பர்களோடு சுற்றிய தினம் ..
சுதந்திர தினம் ..
ஆசிரியர் தினம் ..
காதலர் தினம் ...
குழந்தைகள் தினம் ...
எல்லாம்..எல்லாம் நினைவிருக்கிறது ....!

ஆனால் ...

பல பேரிடம் வேண்டியமட்டும் விசாரித்தும் ...
பல ஆண்டுகள் பின்னோக்கி தோண்டிப்பார்த்தும் ..
இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை ...

என் அம்மாவின் பிறந்த நாளை ...!