12 March 2017

உணரவேண்டியிருக்கிறது

அர்த்தராத்திரியோ அதிகாலையோ
கதவு திறக்கும் போது
உதிரும் புன்னகையோ
"வா கண்ணு" என்னும் வார்த்தையோ கேட்காது

கதவுகளுக்குள் வந்தபின்
ஆடை மாற்றுவதற்குள் கொடுக்கப்படும்
ஒரு செம்பு தண்ணீர் கிடைக்காது

காலையில் எழுவதற்கு முன்
படுக்கையில் இருக்கும்போதே
ஒரு கோப்பை தேநீர் வராது

இட்லியோ தோசையோ
இரண்டு சட்னிகளோடு சேர்த்து
கொஞ்சம் கரிசனமும் அக்கறையும்
இருக்காது

எங்கோ வைத்துவிட்ட
இருசக்கர வாகனத்தின் சாவியை
நாமே தேடி எடுக்க வேண்டிவரும்

டீத்தூள் டப்பாவையும்
சர்க்கரை டப்பாவையும் கண்டுபிடிப்பதற்குள்
தேநீர் தயாரிக்கும் ஆசையை
பலமுறை கைவிடவேண்டும்

சமையலறையில் தேடல்
சாப்பாட்டு மேஜையில் வெறுமை
வீட்டில் தெரியும் தனிமை
விளங்க முடியா பொறுமை
எல்லாம் சேர்ந்து உணர்த்தும் அம்மாவின் பெருமை

அம்மா வெளியூர் சென்றிருக்கும் போது
நாம் வெளியூரில் இருந்து வீடு திரும்பும் நாளொன்றில் உணரவேண்டியிருக்கிறது எத்தனையோ விசயங்களை..!

No comments:

Post a Comment