05 May 2017

கோடை விடுமுறை என்பது ...!



என்னோடு படித்து, விளையாடி, ஊர்சுற்றி இப்போது வெளியூரில் செட்டிலாகிவிட்ட நண்பனிடம் பேச நேர்ந்த போது குழந்தைகளின் படிப்பு, கோடைவிடுமுறை, பள்ளிக்கூடத்தில் சந்திக்கும் சவால்கள் என நீண்ட விவாதத்தில் ஊருக்கு போகலையா என கேட்டேன். எதற்கு? என மிகச்சாதாரணமாய் கேட்டான். அந்தக்கேள்வியில் எதிர்காலத்திற்கான திட்டமிடலும், நிகழ்காலத்திற்கான பொருளாதார சிக்கலும் நிறைந்திருந்தன. கூடவே குழந்தைகளுக்கான சிறப்பு வகுப்புகளும், சில புதிய பயிற்சிகளும் இருப்பதாய் கூறினான்.

இந்த தலைமுறை குழந்தைகள் இழந்துவரும் சந்தோசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, அதை புரிந்துகொள்ள பெற்றோர்கள் ஒரு பக்கம் தயாராய் இருந்தாலும், காலமும் நேரமும் அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது உண்மை. பெருகிவரும் பொருளாதாரம் ஒருபுறம் இருந்தாலும் அதை காரணமாய்க் காட்டாமல் தங்களின் குழந்தைகளுக்கு சில மறக்க முடியா நினைவுகளைக் கொடுக்க ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.

என் சிறுவயது கோடை விடுமுறைகளை எப்போது நினைத்தாலும், வாழ்வின் எந்த பக்கத்திலிருந்து புரட்டிப்பார்த்தாலும் நெல்லிக்கனியை தின்றுவிட்டு குடிக்கும் ஒரு குவளை தண்ணீரின் முடிவில் தித்திக்குமே ஒரு சுவை அதைப்போலவே அத்தனை இனிப்பாய் இருக்கும். பெரியம்மா, சின்னம்மா, மாமாக்கள், அத்தைகளென எல்லா உறவுமே வாய்க்கப்பெற்றவன் நான், அண்ணன்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கைகள், அத்தை - மாமா பையன், பெண்களென மிகப்பெரிய குடும்ப சூழலில் வளர்ந்தவன். விசேஷமோ, திருவிழாவோ வந்தால் எங்கள் கூட்டமே மிகப்பெரிதாய் இருக்கும்.

கோடை விடுமுறைக்காக காத்திருக்கும் இரவுகள் மிக நீண்டவை, விடியலின் வெய்யிலை வரவேற்கும் விதமே எங்களுக்குள் ஒரு புது சந்தோசத்தை கொடுத்திருக்கும். விடுமுறை தொடங்கிய நாளிலிருந்து வீட்டில் அடம்பிடித்து ஊருக்கு போக அனுமதி வாங்கி வைப்போம், "மெயின் ரோட்டுக்கு போகக்கூடாது, ஆத்துக்கு (காவிரி ஆறு) போகக்கூடாது, சண்டை போடக்கூடாது, யார்மேலயும் யாரும் குறைசொல்ல கூடாது" இப்படி சில நிபந்தனைகளோடு.  ஆனால் சட்டமென்பதும், நிபந்தனைகளென்பதும் மீறுவதற்காகவே என்பதை சிறுவயது எப்போதும் பயமின்றி நம்புமல்லவா.

பவானியிலிருந்து ஒரு பாலத்தைக் கடந்தால் குமாரபாளையம் அத்தைவீடும் சித்திவீடும். பாலத்தில் போகும்போதே தூரத்தில் புள்ளியாய் தெரியும் வீடுகளைக் கைகாட்டி விளையாடிக்கொண்டே போவோம். சித்தி வீட்டு பசங்களைப் பார்க்கும்போது நடந்து வந்த களைப்பு காணாமல் போகும். அடுத்த நாள் காலையில் காவிரி ஆற்றுக்கு ஒரு போருக்கு போவதைப்போல அத்தனை பரிவாரங்களோடு போவோம். மீன்பிடிக்க மண்புழு, தூண்டில் நீச்சல் பழக வாழைமரமோ டயர் டியூப்போ கிடைப்பதை எடுத்துக்கொள்வோம். கரைகளை விட்டு கொஞ்சம் விலகி ஓடும் காவிரியில் இறங்கி நடப்போம், கப்பல் வடிவில் ஒரு பெரும்பாறை இருக்கும் அதில் தான் எங்கள் அத்தனை அழிச்சாட்டியமும் நடக்கும்.

ஏதாவது ஒரு பொருளை தண்ணீரில் போட்டு அதை கண்டுபிடிப்பது, முங்கு நீச்சலில் துரத்தி பிடிப்பது, யார் தண்ணீருக்குள் அதிக நேரம் தம் காட்டுகிறார்களென மேலிருந்து எண்ணுவது என விதவிதமான விளையாட்டுகள் நிறைந்த பருவம் இனி எப்போதும் திரும்பாது. பிடித்த மீன்களை ஒரு  பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொண்டு, கொடுக்கு ஒடித்த நண்டுகளை பயந்தபடி பிடித்துக்கொண்டு, வீடு திரும்பும்போது தேடித் தேடி மொட்டாணிக்கற்கள் பொறுக்கிக்கொண்டு வருவோம் ஐந்துகள் ஏழுகல் விளையாட. அந்த நாட்களின் சந்தோசங்களை நினைவுகளால் கிளறிப்பார்த்தால் மனம் முழுவதும் காட்சிகள் பிரகாசமாய் விரிகிறது. வளர்ந்த பிள்ளைகள் கல்யாணமாகி வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட , வற்றாத ஞாபகக் குறிப்புகள் நெஞ்சில் நீள, வறண்ட காவிரியில் தண்ணீரும் கப்பல் பாறையும் காணாமலே போய்விட்டன.

குமாரபாளையத்திலிருந்து ஈரோடு போகும்வழியில் பள்ளிபாளையம் அருகில் பெரியம்மா வீடு, கோடைவிடுமுறை வரும் தருணங்களில்தான் அங்கே உள்ளூர் பண்டிகைகளும் வரும்,   இரண்டையும் சேர்த்து கொண்டாட போவோம். அங்குதான் அண்ணன்கள் எங்களுக்கு புரூஸ்லீயை அறிமுகப்படுத்தினார்கள் கராத்தே வகுப்புகளுக்கு போய்க்கொண்டிருந்த அண்ணன்களை அந்த வெள்ளை நிற கராத்தே உடையில் பார்க்கும்போது அத்தனை பெருமையாகவும் அவர்கள் சுற்றும் புரூஸ்லீ கட்டையை பார்க்கும்போது அத்தனை வியப்பாகவும் இருக்கும். ஆற்றில் குளிக்க போன இடத்தில் மீனுக்காக போட்டிருந்த வலையில் சிக்கியிருந்த குட்டி மலைப்பாம்பு  ஒன்று இன்னும் நினைவுகளுக்குள் நெளிகிறது, ஏரியில் பிடித்து சுட்டுத்தின்ன காடைகளும், மதில் சுவர் தாண்டி வளர்ந்து தொங்கிய சப்போட்டா பழங்களும், ரேசன்கடை வளாகத்தில் பறித்த பாதாணிக்காய்களும், சாலையோர மரங்களின் புளியங்காய்களும் இன்னும் அடிநாக்கில் தித்திக்கிறது. சந்தையிலிருந்து பெரியம்மா வாங்கிவரும் தீனிகளை அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது. பெரியம்மா வீட்டிற்கு எதிரில் உள்ள கிணற்றில் குளித்த நாட்களில் இன்னும் ஈரம் சொட்டுகிறது, கிணற்றுமேட்டில் இருந்த கொய்யாமரத்தில் அணில்களும் , கிளிகளும் கடித்த கொய்யாக் காய்களுக்கு நடக்கும் சண்டையில் பெரும்பாலும் யாருமே வெல்லமாட்டோம். அந்த கொய்யா இலைகளில் கொஞ்சம் உப்பையும், கொஞ்சம் புளியையும் வைத்து சாப்பிட்ட நாட்களை நினைத்தால் இப்போதும் நாக்கில் எச்சில் ஊறுகிறது. தறிப்பட்டறையில் வேலைசெய்யும் பெரியம்மாவுக்கு காபியோ மதிய சாப்பாடோ கொடுக்க செல்லும் வேளையில் வாய்பிளந்து பார்த்த கயிறு திரிக்கும் கருவிகள் இன்னும் நினைவுகளில் சுழல்கிறது.

போனவாரம் ஊருக்கு போயிருந்த போது நினைவுகளில் நீந்த அந்த பக்கமாய் போயிருந்தேன், நாங்கள் ஆச்சரியமாய் பல சினிமாக்கள் பார்த்த மீனா தியேட்டர் ஜெயலட்சுமி தியேட்டராய் மாறியிருந்தது, நாங்கள் மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடிய இடங்களில் புது புது வீடுகள் முளைத்திருந்தன, ஏரியில் ஒரு சொட்டு நீரில்லாமல் வறண்டு போயிருந்தது. அந்த கிணற்றிலும் நீரில்லாததால் சிமெண்ட் ஓடுகளை போட்டு தடுப்பு வைத்துவிட்டார்கள். வாழ்வின் ஒவ்வொரு பருவமும் மாறி மாறி போய்க்கொண்டே இருக்கிறது நாம் விரும்பாவிட்டாலும் கூட.  அதை விதியென விலகிச்செல்வதா இல்லை வளர்ச்சியென பெருமை கொள்வதா தெரியவில்லை.

தாத்தா - பாட்டி வீடு உள்ளூரிலேயே இருந்ததால் ஒரு அழகிய வாழ்வை கிராமத்தில்  போய் அனுபவிக்க கொடுத்துவைக்கவில்லை. அண்ணனின் குழந்தைகளும் தங்கையின் குழந்தைகளும் விடுமுறையென வீட்டுக்கு வந்திருந்தார்கள். சோட்டாபீமிலும் ஐபாட் கேம்ஸ்களிலும் மூழ்கியிருந்தவர்களை கூட்டிப்போய் பம்பரம் விட சொல்லிக்கொடுத்தேன் தொடக்கத்தில் தோல்வியை சந்தித்தவர்கள் கொஞ்சம் முயற்சித்து பம்பரத்தை சுற்றிவிட்டார்கள். அதில் அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் , பம்பரத்தை கையில் விடும்போதும் உள்ளங்கை குறுகுறுப்போடு அவர்கள் அடைந்த பரவசமும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதவை. அதைப்போன்ற தருணங்களில்தானே குழந்தைகளின் உலகமும் சந்தோஷமும் இன்னும் இன்னும் விரிகிறது.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, இன்னும் விடுமுறைகள் பாக்கி இருக்கின்றன உங்கள் குழந்தைகளை உறவுகள் இருக்கும் ஊருக்கோ அல்லது ஊருக்கு வெளியே கிராமத்தில் இருக்கும் உங்கள் தாத்தா பாட்டி வீட்டுக்கோ அழைத்துச் செல்லுங்கள். உண்மையான அன்பையும், விளையாட்டுகளையும்,  கொண்டாட்டங்களையும் அவர்களுக்கு கொடுங்கள் நீங்கள் அனுபவித்த சந்தோசத்தில் ஒரு சிறு பகுதியைக் காட்டுங்கள் அது காலங்கள் கடந்தும் நினைவுகளில் நிற்கும்.

கோடை விடுமுறை என்பது சிறப்பு வகுப்புகளுக்கல்ல சிறப்பான வாழ்க்கைக்கு. குழந்தைகளை குழந்தைகளாய் வாழ விடுங்கள்.



#கோடைவிடுமுறை
#கொண்டாட்டம்
#பால்யநினைவுகள்