29 July 2017

வயலும்... வாழ்வும்...!


வார இறுதியில் வரும் இரண்டு விடுமுறை நாட்களை எப்படி கழிப்பதென வாரம் முழுவதும் யோசனை செய்ய ஒரு கூட்டம் இருக்கிறது. வயலும் வயல்சார்ந்த நிலமுமாய் ஒரு நாளைக்கழிக்கவோ அல்லது ஒரு நாள் முழுவதும் விவசாயம் செய்யவோ வேண்டுமென்று நீண்ட நாட்களாக மனதில் ஊரித்திளைக்கும் சின்னச்சின்ன ஆசைகளில் ஒன்று நிறைவேறிய நாளாய் இன்று மாறிப்போனதில் மனம் பரவசத்தில் இனிக்கிறது.

நண்பரின் உறவினர்கள் வீட்டுக்கு சென்று வர கிருஷ்ணகிரி வந்திருக்கிறோம். நலம் விசாரிப்புகளும் புன்னகைகளும் பரிமாறிக்கொண்ட பின்பு, இங்குள்ள சிறப்புகளை பார்க்கலாமென நினைத்த பொழுது உச்சிவெயிலின் வெப்பம் உச்சந்தலைக்குள் ஆழமாய் இறங்கியது. இந்த வெப்பத்தை குளித்துதான் குறைக்க வேண்டுமென
வயல்களும் கிணறுகளும் நிறைந்த ராயக்கோட்டை போகும் வழியை நோக்கி புறப்பட்டோம்.

இருபக்கமும் பச்சை கம்பளங்கள் விரித்தது போன்ற வயல்களின் நடுவே கருப்புச்சாலையில் வலுக்கிச் செல்கிறோம்.  கற்றைக்கூந்தலில் விலகிப் பறக்கும் ஒற்றை முடியென நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் பிரியும் ஒரு குறுகிய சாலைக்குள் சென்று காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வரப்புகளின் மீது நடக்கிறோம்.

வயல் தேவதையின் இடுப்பில் வற்றாத நீரோடும் முத்தமிட்டபடி நீந்தும் மீன்களோடும் ஒரு கருப்புக்குடமென உட்கார்த்திருந்தது அந்த கிணறு.
வெட்கம் ததும்ப சிரிக்குமொரு பேரழகியின் பல்வரிசை போல அந்த கிணற்றின் படிக்கட்டுகள் அத்தனை அழகு. தென்னை மரநிழலில் தன் ஈரங்களை துடைத்துவிட்டு இளப்பாறிக் கொண்டிருந்தது ஒரு பம்புசெட்.
காதலிக்கும் மீன்களின் கனவுகள் மீது எங்கள் சத்தங்களால் கல்லெறிய வேண்டாமென நீளும் வரப்பில் மீண்டும் நடக்கிறோம்.

வலப்புறம் கதிர் அறுக்கும் பெண்களும் இடப்புறம் ஏர் உழுவும் ஆண்களுமாய் காணும் நொடியில் திறந்துவிடப்பட்ட பம்புசெட்டிலிருந்து வயல் துளைத்து ஓடுகிறது ஒரு குட்டி வாய்க்கால். ஒற்றைப்பல் உடைந்து சிரிக்கும் சிறுமியென
இங்கொரு கிணறு ஒற்றைப்படி உடைந்தபடி. தரை காணக்கிடைக்கா தண்ணீரில் அது தன் இருப்பை ஆழமாய் உணர்த்தியது.ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் ஆசை தீர நீந்திக் குளித்திருந்தாலும் கிணறு  என்பது கொஞ்சம் அச்சமூட்டக்கூடியது. ஆனாலும் வருடங்கள் பல கழிந்தபின் இத்தனை அழகாய் ஒரு இடத்தையும் இவ்வளவு அடர்த்தியாய் ஒரு கிணற்றையும் பார்க்கும்போது பயம் துறந்து ஒரு துள்ளல் தொற்றிக்கொண்டது. ஆடை களைந்து ஆழம் தெரிந்து அந்த குளிர்ந்த நீரில் குதித்த நொடியில் உடம்பெங்கும் பரவிய சிலிர்ப்பு இன்னும் பல நாட்கள் இந்த உடம்பில் உலாவரும்.

கிணற்றின் உடம்பில் நிரம்பியிருந்த பாசம் நகங்களின் இடுக்குகளில் நுழைந்து, நீரில் மிதந்த தென்னங்கீற்றை பார்த்து பாம்பென பயந்து, நெடுநாட்களுக்குப்பின் ஒரு குட்டிக்கரணம் அடித்து, பாயும் பம்புசெட்டில் பரவசமாய் நனைந்து, இந்த அழகியலை பிரிய மனமில்லாமல் தலை துவட்டுகையில் தெறித்து விழுகின்றன சுமக்க முடியா சோம்பல்களும், சொல்ல முடியா சோகங்களும்.

கடந்த தலைமுறையில் இதுவெல்லாம் அன்றாட சாதாரண நிகழ்வு, ஆனால் இந்த தலைமுறைக்கு வாழ்வின் பின்னால் எதற்கெனத் தெரியாமலே ஓடும் அவசரத்தில் எப்போதாவது வாய்க்கும் சிறு ஆறுதல். அடுத்த தலைமுறையில் இந்த வயல்வெளி ஒரு அடுக்குமாடி குடியிருப்பாகவும், இந்த கிணறு அங்கே நீச்சல் குளமாகவும் மாறக்கூடும். பரிமாறவும், பசியாறவும் சோறும், தாகம் தீர்க்க தண்ணீரும் கிடைக்க வாய்ப்பே இல்லாமல் போகும் ஒரு துயர வாழ்வை நோக்கி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதில் மனம் கனத்துத்தான் போகிறது.

---தனபால் பவானி
29.07.2017

#வயலும்_வாழ்வும்
#பயணக்கட்டுரை
#கிராமம்_விவசாயம்


14 July 2017

டெண்ட் கொட்டாய்


வார இறுதி  விடுமுறையில் சினிமாவுக்கு போக அலுவலகத்தில் இருந்தபடியே டிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தான் நண்பனொருவன். எந்த வரிசையில் இடம் வேண்டும், கூட வரும் நபர்களின் எண்ணிக்கை, இடைவேளையில் கொறிக்க வேண்டியவை என ஒரு பெரும்தொகை கொடுத்து எல்லாம் தேர்வுசெய்துவிட்டான். உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே எல்லாம் கிடைத்தது. டிக்கெட் கிடைத்த ஆவலில் அவன் புன்முறுவல் செய்ய என் நினைவுகளின் படச்சுருள் பின்னோக்கிச் சுழன்று நான் விபரமறிந்து பார்த்த "முதல்  படத்தில்" போய் நின்றது.

பவானி வடக்குப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது குரங்குளின் வாழ்க்கையைப்பற்றிய ஒரு "டாக்குமெண்ட்ரி" படத்துக்கு கூட்டிப்போவதாகவும் அதற்கு ஒவ்வொரு மாணவனும் ஒரு ரூபாய் கொண்டுவர வேண்டுமெனவும் அறிவிப்பு வந்தது. எனக்கு வாரம் முழுவதும் சேர்த்தே ஒரு ரூபாய் கிடைக்காது இதில் ஒரே நாளில் ஒரு ரூபாயா என விழிபிதுங்கி எப்படியோ போராடி வீட்டில் ஒரு ரூபாய் வாங்கி என் பெயரையும் சினிமாவுக்கு வருபவர்களின் வரிசைப்பட்டியலில் இணைத்துவிட்டேன். கண்களுக்குள் கனவாய் நிறைந்திருந்த அந்த நாளும் வந்தது. பெயர்பட்டியல் படித்து வரிசையாய் நிற்கவைத்து பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுள்ள ஒரு “டெண்ட் கொட்டாய்க்கு” அழைத்துப் போனார்கள்.

அப்போது பவானி வர்ணபுரத்தில் இருந்த "சங்கமேஸ்வரி திரையரங்கம்" என்று எல்லோராலும் அறியப்பட்ட டெண்ட் கொட்டாயில்  பரந்து கிடந்த மணற்பரப்பும் மரப்பலகை பெஞ்சுமாய், ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் நடுவில் நேர்க்கோடு போல ஒரு சின்ன சுவரால் பிரித்து வைத்திருந்தார்கள். பெரிய வெள்ளைத்திரையை கண்களுக்குள் வாங்கியபோது அது அந்த வயதுக்கான தேவலோகமாகவே தெரிந்தது. அப்போது கல்யாணமண்டபம், கோவில்கள், அரசு மருத்துவமனை தாண்டி நான் பார்த்த மிகப்பெரிய கூடாரம் அதுதான். எப்போதும் திரையரங்கின் வெளியே கட்டி இருக்கும் மிகப்பெரிய ஒலிபெருக்கியில் "விநாயகனே வினை தீர்ப்பவனே" பாடல் போடுவார்கள் அது முடிந்தவுடன் படம் போடுவார்கள்.  இந்த பாடல் ஒலிபரப்புவதை வைத்தே அப்போதைய நேரத்தை தெரிந்துகொண்டவர்களும் உண்டு.
காட்டில் வாழும் குரங்குகளை வேட்டையாட வருபவர்களிடமிருந்து தன் குட்டியை  காப்பாற்ற உயர்ந்த மரத்தின்மீது ஏறும் தாய்க்குரங்கு ஒரு கட்டத்தில் அந்த குட்டியை தவறவிடும், அந்த குட்டி குரங்கு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும்போது தாய்க்குரங்கு அதை எப்படி காப்பாற்றுகிறது என்பதை அழகாக சொல்லி இருப்பார்கள். சிறுவயதில் பார்த்த அந்த படம் நினைவுகளில் பசைபோல ஒட்டிக்கொண்டது. இடைவேளையில் பெரிய கூடையில் முறுக்குகளும், சோளப்பொரியும் சுமந்த ஒருவர் இருக்குமிடம் தேடிவந்து விற்கும் வாசம் இப்போதும் நாசிகளில் நுழைகிறது. இன்று எத்தனை பெரிய மால்களில் குளுகுளு வசதியோடு குஷன்கள் வைத்த சோபாவில் அமர்ந்து பல படங்கள் பார்த்துவிட்ட போதிலும்கூட கால்களில் மண்துகள்கள் குறுகுறுக்க மண்ணால் மேடை அமைத்து அதில் அமர்ந்து கண்கள் விரிய வியந்து பார்த்த அந்த முதல் படத்தின் பிரமிப்பை இப்போது இருக்கும் எந்த தொழில்நுட்பமும் கடுகளவும் கொடுத்துவிட முடியாது.

பத்து வருடங்களுக்கு முன்னாள் பவானி ராயல் தியேட்டரில் படம் பார்க்காதவர்களே இல்லையென்று சொல்லலாம். இப்போது புதர் மண்டி பாம்புகளும் பலவித விஷ ஜந்துக்களும் வாழுமிடமாக மாறி இருந்தாலும் ஒரு காலத்தில் யாராலும் ஒதுக்கிவிட இடமாகவும், முக்கிய அடையாளமாகவும் திகழ்ந்தது. ராயல் தியேட்டரில் தான் எத்தனை காதல்கள், எத்தனை பிரிவுகள், எத்தனை சண்டைகள், எத்தனை நட்புகள், எத்தனை சந்தோஷங்கள் இப்போது அத்தனையும் நினைவுகளின் பரண்கள்மேல் பத்திரமாய் இருக்கிறது. அப்பள பஜ்ஜியும், பன்னீர் சோடாவும் பல கைகள் மாறி காதலியிடம் சேரும்போது காதலனுக்குள் வரும் சந்தோசத்தை பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் "உயிரே" படம் ஓடிக்கொண்டிருந்த போது கூட்டம் நிரம்பி வழிய "தைய தைய" பாடலின்போது நண்பர்கள் ரயில் போல நின்றுகொள்ள என்ஜினாய் நிற்பவன் வாயில் சுருட்டோடு நிறைய  புகைவிட்டபடி பாடல் முடியும் வரை அங்குமிங்கும் ஓட, பாட்டு முடியுமுன்னே குடும்பத்தோடு வந்தவர்கள் தெறித்து ஓடிய காட்சி குறும்பாய் நிழலாடுகிறது. இப்போது விஷ்ணு தியேட்டர் என்று பெயர் மாறியிருக்கும் மோகன் தியேட்டரில் திரைக்கு முன்னால் தடுப்பு கம்பியிருக்கும் அதில் தீ என்று எழுதிய மணல் பக்கெட்டுக்கள் தொங்கிகொண்டிருக்கும் அந்த கம்பியில் ஏறி ஒருபக்கமிருந்து மறுபக்கம் போக பந்தயம் கட்டி கயிற்றில் நடப்பது போல் நடந்து விளையாடிய நாட்கள் பால்யத்தின் வரம்.  படம் போடுவதற்குமுன் திரைக்கு முன்னால் இருக்கும் பெரிய ஸ்கிரீன் முனைகளில் விளக்கெரிந்த படி மேலெழும்பும் அதிசயத்தையும் அதில் நெக்குருகி நெகிழ்ந்து கிடந்த தருணங்களையும் இந்த தலைமுறை பார்க்க வாய்ப்பு மிகக்குறைவு.

மெத்தகொட்டாய் என்று செல்லமாய் சொல்லப்படும் RAS தியேட்டரில் பல ரஜினி-கமல் படங்கள் மிகப்பெரிய கட்டவுட்டுகளோடும் பெரியபெரிய மாலைகளோடும் பார்த்த நாட்கள் மறக்கமுடியாதவை, இங்கு கிடைக்கும் முட்டை போவண்டாவிற்க்காகவே பலமுறை அடம்பிடித்து வந்ததுண்டு. இதை ஒட்டி இருக்கும் லட்சுமி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியேறுவதற்குள் வண்டிகளை வெளியே எடுக்க படும் சிரமம் இப்போது இருக்காது என நம்பலாம். காதலுக்கு மரியாதையும், WHO AM I? படங்களும் வந்தபோது பல ஞாயிறுகளின் சாயங்காலங்கள் கெளரி தியேட்டரில் விசில் சத்தங்களிலும் கைத்தட்டல்களிலும் நிறைந்தது. காதலர் தினம் பாடல்கள் வந்தபோதே துளிர்த்த கற்பனைகள் அந்த படத்தை KON  தியேட்டரில் பார்த்தபோது முழுமையடைந்து. டிப்ளமோ வாழ்வின் கடைசி தேர்வை முடித்த ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முருகன் தியேட்டரில் வெளியானது கில்லி படம், மதிய காட்சிக்கு பார்த்த அதுதான் அந்த தியேட்டரில் கடைசி படம். இப்போது அந்த இடம் வீடுகள் கட்ட தயாராகி விட்டது. தியேட்டரில் கேண்டீன் இருந்த இடத்தில் பலவருடங்கள் டாஸ்மாக் இருந்தது. மிகக்குறுகிய சந்துக்குள் போய் டிக்கெட் வாங்கும் சரஸ்வதி தியேட்டரில் பார்த்த பல ஜாக்கிஜான் படங்கள் நினைவுகளை விட்டு நீங்காதவை. வித்தியாசமான வடிவமைப்பில் நாற்காலிகளும் மாடிப்படிகளும் கொண்ட சரவணா தியேட்டர் அதன் அழகுக்காகவே நிறைய கூட்டம் சேர்த்தது காலச் சூழ்நிலையால் இப்போது அது பள்ளிக்கூடமாய் மாறியிருக்கிறது. பல பலான படங்களை மட்டுமே வெளியிடும் ராஜம் தியேட்டர் இப்போது நாகரீகம் கருதி பல நல்ல படங்களை மட்டுமே வெளியிடுகிறது.

மனித வாழ்வில் சினிமா என்பதையும் அது சார்ந்த கொண்டாட்டங்களையும் அத்தனை எளிதாய் ஒதுக்கி விட முடியாது. இப்போதும் கூட ஊருக்கு போகும்போதெல்லாம் நண்பர்களோடு இரவுக்காட்சிக்கு போவதுண்டு என்னதான் பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரிய பெரிய தியேட்டர்களில் சினிமாக்கள் பார்த்தாலும் கூட சொந்த ஊரில் சிறு தியேட்டர்களில், மறக்க முடியா பழைய நினைவுகளின் மடியில் அமர்ந்தபடி நண்பர்களோடு படம் பார்ப்பது அலாதியானது. காலத்தின் வளர்ச்சிகளாலும், வரிகளின் கொடுமைகளாலும் இனி வரும் காலங்களில் தியேட்டர்கள் இல்லாமல் கூட போகலாம் அப்போது நினைத்துப்பார்ப்பதற்கும் சொல்லி மகிழ்வதற்கும் சில கதைகளை இந்த டெண்ட் கொட்டாய்களும் தியேட்டர்களும் கொடுத்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத, மறக்கமுடியாத உண்மை.

09 July 2017

நிறம் மாறும் முகங்கள்...!


பிரியங்களின் ஒரு துளியையோ
அன்பின் ஒரு துகளையோ
நம்மீது தெளிப்பவர்களைக்
கொண்டாடும் மனதுக்கு புரிவதேயில்லை
சிலசமயம் அவர்களின் முகங்கள்
நிறம் மாறுமென்பதை

பழகவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
தவிக்கும் தருணங்களில்
பழைய சொற்களின் மேல் விழுந்த
நம்பிக்கை மெல்ல நழுவும்

மகிழ்வைக் கொண்டாடிய நாட்களை
சந்தேகத்தின் துருப்பிடித்த நேசமொன்று கிளறிப்பார்க்கும்

பிரமிப்பின் உச்சியில் இருந்த கணத்தை
வெறுப்புகளின் அதள பாதாளத்தில்
போட்டு மூடச்சொல்லும்

ஒரு வரியோ
ஒரு வார்த்தையோ
சுட்டிக்காட்டும் நிகழ்வை
சொற்களின் கூர்மை சோதிக்கும்

மனம் திருந்தி
தவறுகள் திருத்தி
திரும்பி வந்து ரோஜாக்களோடு கைகுலுக்கும் பொழுதில்
முட்கள் மட்டுமே ஆழமாய்  இறங்கும்....!