29 July 2017

வயலும்... வாழ்வும்...!


வார இறுதியில் வரும் இரண்டு விடுமுறை நாட்களை எப்படி கழிப்பதென வாரம் முழுவதும் யோசனை செய்ய ஒரு கூட்டம் இருக்கிறது. வயலும் வயல்சார்ந்த நிலமுமாய் ஒரு நாளைக்கழிக்கவோ அல்லது ஒரு நாள் முழுவதும் விவசாயம் செய்யவோ வேண்டுமென்று நீண்ட நாட்களாக மனதில் ஊரித்திளைக்கும் சின்னச்சின்ன ஆசைகளில் ஒன்று நிறைவேறிய நாளாய் இன்று மாறிப்போனதில் மனம் பரவசத்தில் இனிக்கிறது.

நண்பரின் உறவினர்கள் வீட்டுக்கு சென்று வர கிருஷ்ணகிரி வந்திருக்கிறோம். நலம் விசாரிப்புகளும் புன்னகைகளும் பரிமாறிக்கொண்ட பின்பு, இங்குள்ள சிறப்புகளை பார்க்கலாமென நினைத்த பொழுது உச்சிவெயிலின் வெப்பம் உச்சந்தலைக்குள் ஆழமாய் இறங்கியது. இந்த வெப்பத்தை குளித்துதான் குறைக்க வேண்டுமென
வயல்களும் கிணறுகளும் நிறைந்த ராயக்கோட்டை போகும் வழியை நோக்கி புறப்பட்டோம்.

இருபக்கமும் பச்சை கம்பளங்கள் விரித்தது போன்ற வயல்களின் நடுவே கருப்புச்சாலையில் வலுக்கிச் செல்கிறோம்.  கற்றைக்கூந்தலில் விலகிப் பறக்கும் ஒற்றை முடியென நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் பிரியும் ஒரு குறுகிய சாலைக்குள் சென்று காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வரப்புகளின் மீது நடக்கிறோம்.

வயல் தேவதையின் இடுப்பில் வற்றாத நீரோடும் முத்தமிட்டபடி நீந்தும் மீன்களோடும் ஒரு கருப்புக்குடமென உட்கார்த்திருந்தது அந்த கிணறு.
வெட்கம் ததும்ப சிரிக்குமொரு பேரழகியின் பல்வரிசை போல அந்த கிணற்றின் படிக்கட்டுகள் அத்தனை அழகு. தென்னை மரநிழலில் தன் ஈரங்களை துடைத்துவிட்டு இளப்பாறிக் கொண்டிருந்தது ஒரு பம்புசெட்.
காதலிக்கும் மீன்களின் கனவுகள் மீது எங்கள் சத்தங்களால் கல்லெறிய வேண்டாமென நீளும் வரப்பில் மீண்டும் நடக்கிறோம்.

வலப்புறம் கதிர் அறுக்கும் பெண்களும் இடப்புறம் ஏர் உழுவும் ஆண்களுமாய் காணும் நொடியில் திறந்துவிடப்பட்ட பம்புசெட்டிலிருந்து வயல் துளைத்து ஓடுகிறது ஒரு குட்டி வாய்க்கால். ஒற்றைப்பல் உடைந்து சிரிக்கும் சிறுமியென
இங்கொரு கிணறு ஒற்றைப்படி உடைந்தபடி. தரை காணக்கிடைக்கா தண்ணீரில் அது தன் இருப்பை ஆழமாய் உணர்த்தியது.ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் ஆசை தீர நீந்திக் குளித்திருந்தாலும் கிணறு  என்பது கொஞ்சம் அச்சமூட்டக்கூடியது. ஆனாலும் வருடங்கள் பல கழிந்தபின் இத்தனை அழகாய் ஒரு இடத்தையும் இவ்வளவு அடர்த்தியாய் ஒரு கிணற்றையும் பார்க்கும்போது பயம் துறந்து ஒரு துள்ளல் தொற்றிக்கொண்டது. ஆடை களைந்து ஆழம் தெரிந்து அந்த குளிர்ந்த நீரில் குதித்த நொடியில் உடம்பெங்கும் பரவிய சிலிர்ப்பு இன்னும் பல நாட்கள் இந்த உடம்பில் உலாவரும்.

கிணற்றின் உடம்பில் நிரம்பியிருந்த பாசம் நகங்களின் இடுக்குகளில் நுழைந்து, நீரில் மிதந்த தென்னங்கீற்றை பார்த்து பாம்பென பயந்து, நெடுநாட்களுக்குப்பின் ஒரு குட்டிக்கரணம் அடித்து, பாயும் பம்புசெட்டில் பரவசமாய் நனைந்து, இந்த அழகியலை பிரிய மனமில்லாமல் தலை துவட்டுகையில் தெறித்து விழுகின்றன சுமக்க முடியா சோம்பல்களும், சொல்ல முடியா சோகங்களும்.

கடந்த தலைமுறையில் இதுவெல்லாம் அன்றாட சாதாரண நிகழ்வு, ஆனால் இந்த தலைமுறைக்கு வாழ்வின் பின்னால் எதற்கெனத் தெரியாமலே ஓடும் அவசரத்தில் எப்போதாவது வாய்க்கும் சிறு ஆறுதல். அடுத்த தலைமுறையில் இந்த வயல்வெளி ஒரு அடுக்குமாடி குடியிருப்பாகவும், இந்த கிணறு அங்கே நீச்சல் குளமாகவும் மாறக்கூடும். பரிமாறவும், பசியாறவும் சோறும், தாகம் தீர்க்க தண்ணீரும் கிடைக்க வாய்ப்பே இல்லாமல் போகும் ஒரு துயர வாழ்வை நோக்கி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதில் மனம் கனத்துத்தான் போகிறது.

---தனபால் பவானி
29.07.2017

#வயலும்_வாழ்வும்
#பயணக்கட்டுரை
#கிராமம்_விவசாயம்


No comments:

Post a Comment