29 February 2020

சின்ன ஊட்டியில் பெரிய ஓட்டம்


வாழ்க்கை முன்வைத்திருக்கும் சவால்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் கொஞ்ச நாட்களாக கவிதைகள், கட்டுரைகள், தினசரி நம்பிக்கை வரிகள் (MyQuotes), என பலவற்றை குறித்து எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன். ஆனாலும் மிக முக்கியமான சில நிகழ்வுகளை அவ்வப்போது பதிவு செய்துவிடுதல் நலம் எனக்கருதி "குடியரசுதின மாரத்தான், காதலர் தினம், கல்யாணநாள்" என எழுதியதைத் தொடர்ந்து அந்த வரிசையில் ஏற்காடு மாரத்தான் பற்றியும் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. காரணம் அதுவொரு மறக்க முடியாத அனுபவம்.
--------------------------------------------------------------------
ஏற்காடு மாரத்தான் பற்றி நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் எனக்கும் ஆசையாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் கலந்துகொள்ள முடியுமா முடியாதா என்பது பற்றிய ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. சரி பதிவு செய்யும் காலம் முடிவடையும் முன் பதிவு செய்து வைப்போம், அப்பறம் போக முடியலனா விதின்னு நெனைச்சி விட்டுடுவோம்னு தான் பதிவு செய்தேன். பிப்ரவரி பிறந்ததுமே கட்டாயம் போக முடியாதுன்னு ஒரு சூழல் உருவாச்சி, சரி அடுத்த வருசம் பார்த்துக்கலாம்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கும் போது தான், ஆழ்மனசு ஒன்னு சொல்லுச்சி. "இப்போ இருக்கும் இந்த சூழல் நாளைக்கோ, அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ கூட மாறிவிட வாய்ப்புண்டு, ஆனால் இந்த மாரத்தான் மறுபடியும் அடுத்த வருஷம் தான் வரும்." நான் ஆழ்மனசு சொன்னதை கேக்க முடிவு பண்ணிட்டேன், சென்னையிலிருந்து ஒருநாள் முன்னாடியே ஊருக்கு கிளம்பிட்டேன்.

சனிக்கிழமை மதியம் ஈரோட்டில் இருந்து ஆருத்ரா ரமேஷ் அவர்களுடைய காரில் நான், ரமேஷ், லதா அக்கா, மைதிலி மேடம், அவங்க பையன் ஸ்ரீகாந்த் ன்னு எல்லோரும் ஒருவழியா 4 மணிக்கு கிளம்பினோம். அதே நேரத்தில் கிருத்திகாவும் சக்திவேல் சாரும் பவானில இருந்து கிளம்பினார்கள். சங்ககிரி டோல் கேட்டில் காபி குடிக்க நிறுத்தும் போது நாங்கள் அனைவரும் சந்தித்துக்கொண்டு ஒன்றாக புறப்பட்டு சேலம் நோக்கி போனோம். போகும்போதே நேரம் ஆகிவிட்டபடியால் ஜெயஸ்ரீ கிட்ட சொல்லி எங்களுடைய BIB களை வாங்கி வைக்க சொல்லி இருந்தோம். 20 கொண்டை ஊசி வளைவுகளையும் கடந்து, கூகுள் மேப் காட்டிய வழியில் பயணித்து ஒருவழியாக மாரத்தான் நடக்கும் ரெட்ரீட் மைதானத்தை அடைந்தோம்.

BIB வழங்கும் இடத்தில் நம்ம U2 குழுமத்தின் ஜாம்பவான்கள் நிறைய பேரை பார்க்க முடிந்தது, முகநூலின் வழியாக என்னை அறிந்தவர்கள் தானாக வந்து பேசி அறிமுகமாகி அந்த பனி நிறைந்த இரவை கதகதப்பாக்கினார்கள். மனோகரன், சிந்துமனோகரன், பூங்கொடி மேடம்,  அவங்க வீட்டுக்காரர், மகேஸ்வரி மேடம், வித்யான்னு இன்னும் நிறைய பேரிடம் பேசிவிட்டு அப்படியே டீ ஷர்டை போட்டு அளவு பார்த்து, bib எண்ணில் பேரை சரிபார்த்து எல்லோரிடமும் விடைபெற்று சாப்பிட போலாம்னு பார்த்தா U2 மக்கள் அனைவரும் மைதானத்திற்கு வரவும் ன்னு அறிவிப்பு. அங்க போய் பார்த்தால் U2 மூலமாக பதிவு செய்து 2019ல் 100 நாட்கள் ஓட்ட சவாலை முடித்தவர்களுக்காக அழகான மெடலும், அருமையான சான்றிதழும் இருந்தன. நான் 100 நாள் சவாலை ஆரம்பித்து இடையில் உடல்நலம் சரியில்லாமல் நிறுத்தியிருந்தேன். ஆனாலும் நம்ம மக்கள் வாங்கும் போது நானே வாங்குவதாக உணர முடிந்தது. சில பல போட்டோக்களுக்கு பிறகு சாப்பிட போனோம். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் வேளையில் துரை சகோ, கோபி மற்றும் அவர்களோடு அவர்களின் நண்பர்களும் வந்திருந்தனர். சாப்பிட்டு முடித்த பிறகு கேசவன் சார் கேங் வந்தது, அவர்கள் அனைவரையும் பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன் வயது, பயணம், நம்பிக்கை, தொடர் மாரத்தான்கள், எப்போதும் புத்துணர்ச்சி, சின்ன பசங்களே தோற்றுப்போய்விடும் அளவு காமெடி சென்ஸ் னு அதற்கு பல காரணங்கள் உண்டு. பிறகு எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளை அடைந்தோம். (ஆனாலும் இந்த மூர்த்திதான், கொண்டு வந்த லக்கேஜ் லாம் ரூம்ல வெச்சிட்டு போலாம்னு சொல்லியும், அதற்கு ரொம்ப தூரம் போகணும் லேட் ஆகும்னு சொல்லி சொல்லி எல்லா இடத்துக்கும் அந்த லக்கேஜ்களை தூக்க வெச்சிட்டாப்பல, அப்பறம் பார்த்தா அவ்ளோ பக்கத்துல தான் ரூம்ஸ் இருக்கு.)

நாளைக்கு நேரமா எந்திரிக்கணும் அதனால சீக்கிரமா தூங்கணும்னு எல்லோரும் அவங்க அவங்க ரூமை ரெடி பண்ணிட்டு இருந்தாங்க, ஆனா நம்ம கால் தான் சும்மா இருக்காதுல்ல, ரூம்ல எல்லாத்தையும் வெச்சிட்டு, அப்படியே ஒருநடை கீழ வரைக்கும் போய்ட்டு, என்னென்ன எங்கெங்கே இருக்குன்னு பார்த்துட்டு வந்தோம். கார்த்தியும் நந்தகுமாரும் அப்போதான் வந்தாங்க. நான், ரமேஷ், துரை, நந்தகுமார் ஒரு அறையிலும், கோபி, கார்த்தி, கோபியின் நண்பர்கள் ஒரு அறையில் என எதிர் எதிரில் 8 பேரும் செட்டில் ஆனோம், ஆனா 10 மணிக்கு மேல ஆகியும் தூக்கம் வரல, ரொம்ப நேரமா கதை பேசி கலாய்த்து, சிரித்து எப்படியோ தூங்கிப்போனோம். என்னத்த நினைச்சிட்டு படுத்தனோ தெரியல எனக்கு 2 மணிக்கே தூக்கம் தெளிஞ்சிருச்சி. சரி நாம எழுந்தா மத்தவங்களுக்கும் தூக்கம் போய்டும்னு அப்படியே படுத்திருந்தேன். நந்தகுமார் 25கிமீ ஓட்டத்துக்காக 3 மணிக்கு மேல எழுந்தார், நானும் அவர்கூட எழுந்து சும்மா அப்படியே வெளிய வந்து பக்கத்து ரூம்ல பார்த்தா 50கிமீ ஓடற அல்போன்ஸ் ஒரு மணப்பெண் ரெடி ஆக எடுத்துக்கொள்ளும் பாங்கைப்போல தனக்கு வேண்டியதை ஒவ்வொன்றாக எடுத்துவைத்து ரெடியாகிக்கொண்டிருந்தார். அப்பறம் ஒவ்வொரு நண்பர்களாக எழுந்து ரெடியாக, கடுங்குளிர் எங்களுக்கு முன்பாக ரெடியாகி வெளியே காத்திருப்பது தெரியாமல், ஸ்டார்டிங் பாயிண்டை நோக்கி (நடக்க) நடுங்கத்தொடங்கினோம் அல்லது தொடங்கி நடுங்கினோம்.

எங்களுக்கு முன்னால் மைதானத்தில் கூடியிருந்தவர்கள் ஸ்ட்ரெச்சஸ் பண்ணிட்டு இருந்தாங்க நாங்களும் ஐக்கியமாகி கொஞ்சம் பண்ணிட்டு, குருஜிக்களோடு போட்டோஸ் எடுத்துட்டு சரியாக 6 மணிக்கு 12.5கிமீக்கான ஓட்டம் துவங்கியது. அதற்கு முன்னால் ஒவ்வொரு மணிநேர இடைவெளியில் 50கிமீ ஓட்டமும், 25கிமீ ஓட்டமும் தொடங்கி அவர்கள் தங்கள் பாதி தூரத்தை கிட்டத்தட்ட கடந்திருந்தார்கள். இந்த ஓட்டம் தொடங்குவதற்கு முன்னால் பாலமுரளி சகோவிடம் கேட்டது "எவ்ளோ நேரத்துல முடிக்கணும்?" அவர் சொன்னது "நாங்க ஈவெண்ட் முடிச்சிட்டு சாயங்காலம் இங்க இருந்து கிளம்பரத்துக்குள்ள வந்தாக்கூட போதும்". 2019 ஜனவரியில் சென்னை மாரத்தானில் 10கிமீ ஓடியதும், 2020 ஜனவரியில் குடியரசு தினம் அன்று ஈரோட்டில் விர்ச்சுவல் மாரத்தனாக 25கிமீ ஓடியதும் தான் எனது மாரத்தான் அனுபவங்கள். முறையாக சொல்ல வேண்டுமெனில், இது எனக்கு இரண்டாவது மாரத்தான் முதல் மலை ஓட்டம். சமதளத்தில் ஓடி கொஞ்சம் அனுபவம் இருந்தாலும், மலை ஓட்டம் பற்றி எந்த அனுபவமும் இல்லை இதற்கான முறையான பயிற்சியும் போதுமான அளவு இல்லை என்பதால் அத்தனை கேள்விகள், மற்றும் 25கிமீ தூரத்தை 4 மணி நேரத்தில் தான் முடித்தோம் இது அதில் சரிபாதி தான் ஆனாலும் மலை ஓட்டம், எப்படியும் 3 மணி நேரத்திற்குள்ளாவது முடித்துவிடலாம்னு எனக்கு நானே சமாதானமும் நம்பிக்கையும் சொல்லிக்கொண்டே ஓட இல்ல.. நடக்கத் தொடங்கினோம் காரணம் முதல் அரை கிமீ அவ்ளோ பெரிய மேடு கூடவே கும்மிருட்டு (கும்முரு டப்பருன்னு படிக்க கூடாது).

மேடு கடந்து, சமதளத்தில் ஓடி திடீரென பள்ளத்தில் இறங்கி, மெல்ல மெல்ல விடிந்த அழகான விடியலை ரசித்தபடி, காதுகளுக்குள் இறக்கும் குளிரின் சிலிர்ப்பை அனுபவித்து, இரண்டாவது கிமீ ல் ஆரஞ்சு சுளைகள், கடலமிட்டாய், எனர்ஜி ட்ரிங்க் ன்னு குடிச்சி U டர்ன் போட்டு வந்த வழியே ஓடி, வேற பாதைக்கு திரும்பி வழியெங்கும் சோர்ந்து நடப்பவர்களை உற்சாகப்படுத்தி, நாங்கள் சோர்ந்துவிடும் போது கைமாற்றப்படும் உற்சாகங்களை பெற்று, உதவி மைய நண்பர்களின் புதிய அறிமுகங்கள் சுமந்து, ஏற்காடு ஏரி மற்றும் அழகான இடங்களில் நின்று  படங்கள் எடுத்து, குளிருக்கு இதமாய் டீ/காபி  குடித்து, மீண்டும் மீண்டும் ஓடி தொடங்கிய இடத்தை அடையவும் 12.5 கி.மீட்டரை முடிக்கவும் இன்னும் 500 மீட்டர்கள் தான் என ஸ்ட்ராவா சொல்லியதை "நம்பி" தொடங்கிய இடத்தின் அருகே வந்த போது வேறு பாதைக்கு திருப்பிவிடப்பட்டோம். ஒருவேளை இது 25கிமீ ஓடும் பாதையாக இருக்குமோ என சந்தேகம் வர, எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தவர்களை கேட்டால் இது 12.5க்கான பாதை தான் என்பதை உறுதி செய்தார்கள். சரி இவ்ளோ தூரம் வந்துட்டோம் இன்னும் கொஞ்சம் தான் என ஒரு பள்ளத்தில் இறங்கி ஒரு மேட்டில் ஏறினால் முடிக்கும் இடம் கண்ணுக்கு தெரிந்தது, அதைவிட பேரழகாக ஏற்காடு மலையிலிருந்து கீழே பார்த்த அந்த இடம் அத்தனை அழகு. ஒருவழியாக முடிக்கும் போது 13.3கிமீ தூரமும் 1.50 மணி நேரமும் காட்டியது. ஒருவேளை சிலருக்கு ஸ்ட்ராவாவில் எங்கியோ தவறு நடந்திருக்கலாம். எண்ட் பாய்ண்ட்டில் கழுத்தில் போடப்பட்ட மெடலில் இருந்த களைப்பெல்லாம் காணாமல் போனது.

தொடக்கத்தில் 12.5கிமீ அதுவும் மலையில் ஓடிவிட முடியுமா என எனக்குள் ஒரு சந்தேகம் இருந்தது, ஆனால் முடிவில் 12.5கிமீ ஓடியதற்கான எந்த வலியும் தெரியவில்லை. 25கிமீ தூரத்தைக் கூட தாராளமாக ஓடியிருக்கலாம் காரணம், சேலம் ரன்னர்ஸ் செய்திருந்த ஏற்பாடுகள், உதவி மையங்கள், புகைப்படக்காரர்கள், ஓட்டம் முடிந்ததும் கிடைத்த பிசியோதெரபி, ஈவெண்ட் ஒருங்கிணைப்பு, டீசர்ட், மெடல் என எல்லாமே அற்புதம்.  பாலமுரளி, ராஜ்குமார், ஜெயஸ்ரீ, மூர்த்தி, இதை இத்தனை அழகாய் நடத்தி முடித்த நண்பர்கள் மற்றும் சேலம் ரன்னர்ஸ் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளும் நன்றிகளும். முதல் மலை ஓட்டமே மறக்க முடியாத ஓட்டமாக மாறி மனதின் ஓரத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இனி எத்தனை மலை ஓட்டங்கள் ஓடினாலும் இந்த ஏற்காடு மலை ஓட்டம் தான் மனதில் முதலில் வந்து நிற்கும்.

ஓடி முடிச்சதும் என்னை புகைப்படங்கள் எடுக்க கூட்டிட்டு போய்ட்டாங்க அதனால நெறைய பேர்கிட்ட சரியா பேசவே முடியல, ஒருசிலரை பார்க்க கூட முடியல. நெறைய U2 நண்பர்களை சந்திக்க முடிந்தது. நெறைய புது நட்புகளும் கிடைத்தன. U2 நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மிஸ் பண்ணின ஒரே விஷயம் ஷான் அண்ணா தான்.

இந்த மாதிரி செலவு பண்ணிட்டு, ஊர் ஊரா போய் மாரத்தான் ஓடறதால என்ன வருதுன்னு நெறைய பேர் கேக்கறாங்க அவங்களுக்கெல்லாம் சொல்றது ஒன்னுதான். புது இடங்கள், புது மனிதர்கள், புது பாதைகள், இயற்கையின் ஒரு துளி, முன்பின் அறிமுகமில்லாமல் கிடைக்கும் திடீர் நட்பு, எதையும் எதிர்பார்க்காமல் கிடைக்கும் அதீத அன்பு ன்னு எவ்வளவோ விஷயங்கள் இருக்கு அதையெல்லாம் வீட்டுக்குள்ள உக்காந்து மொபைல் நோண்டறதாலயோ, டிவி சேனல்களை மாற்றுவதாலயோ வாங்கிட முடியாது என்பதே.

இந்த ஓட்டத்திற்கு அடுத்தநாள் (17.02.2020) தான் எங்களோட முதல்வருட கல்யாண நாள். இந்த மறக்கமுடியாத ஓட்டத்தை என் மனைவிக்கும், மகனுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

---தனபால் பவானி
21.02.2020

#ஏற்காடு_மாரத்தான்
#முதல்மலைஓட்டம்
#YHU_2020
#U2_FamilyMeetAtYercaud

90ஸ் கிட்ஸ்களும் காதலர் தினமும்


"கைகளைக் கோர்த்தபடி ஒரு நீண்ட நடை, தோள் சாய்ந்தபடி ஒரு நீண்ட பயணம், மடிமீது தலைசாய்த்து ஒரு விழித்த உறக்கம், முத்தங்களை தின்று கொஞ்சம் பசியாறுதல், வெட்கங்களை வென்று ஒரு வீடு திரும்புதல்" என வாழ்வின் அழகிய கணங்களை காதலியோடு அல்லது காதலனோடு கொண்டாட வேண்டுமென்பது மனிதர்களாய்ப் பிறந்த அத்தனை பேருக்கும் உண்டான பொதுவான கனவு. காதல் துளிர்க்கும் வயதை காதலின் சாரல் படாமல் கடந்து வந்துவிடுவது அத்தனை எளிதல்ல. ஆணுக்கு மீசை முளைக்கத்தொடங்கிய வயதிலோ பெண்ணுக்கு வெட்கம் பூக்கத்தொடங்கிய வயதிலோ உள்ளுக்குள் சுரக்கும் ஹார்மோன்கள் அதீத வேகமாய் வளர்ந்து வளர்ந்து டீன் ஏஜ் வயதை பூக்கள் நிறைந்த ஒரு அழகிய பாதாளத்திருக்குள் மெல்ல மெல்ல தள்ளுகிறது. சிலர் மிக வேகமாய் குதித்தும் விடுகிறார்கள். இன்னும் சிலர் வேகமாய் வெளியேறத்துடிக்கிறார்கள். சிலருக்கு அது பூக்கள் மட்டுமே நிறைந்ததாகவோ, சிலருக்கு முட்கள் மட்டுமே நிறைந்ததாகவோ இருக்க இன்னும் சிலருக்கு முட்களுக்கு நிகராய் பூக்களும், பூக்களுக்கு நிகராய் முட்களும் இருக்குமென்று தெரிந்தே குதிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது எப்போதும் தீராத காதலைச் சுமந்து கொண்டிருக்கும் காலம்.

80களின் பிற்பாதியில் காதல் அத்தனை வேகமாய் வளர்ந்து கொண்டிருந்ததை விபரங்கள் ஏதும் தெரியாத வயதில்  பார்த்திருக்கிறேன் என்று சொல்வதைவிட மிக அருகிலிருந்து சில காதல்களை கவனித்திருக்கிறேன் என்று சொல்லலாம். பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த வயதில் எதிர் எதிர் மாடிகளிலிருந்து சைகைகள் நிழல்களாய் விழுவதையும், தெருவெங்கும் காற்றில் மிதக்கும் பறக்கும் முத்தங்களையும்
பார்த்து வந்திருக்கிறேன். கோவில் பிரகாரத்தை சுற்றிவரும் போது அவன் சிற்பத்தின் நடுவே கொட்டிய குங்குமத்தை அவள் வெட்கத்தையும் கலந்து பூசிக்கொண்டதை, சைக்கிளில் அவள் வீட்டைக்கடக்கும் போது அவன் கொடுக்கும் பெல் சத்தத்தில் அவள் கதவுக்கு பின்னால் நின்று கையசைப்பதை, தீர்த்தகுடம் சுமந்து கூட்டத்தில் அவளுக்கு மட்டும் மஞ்சதண்ணியை கொட்டி அம்மனாய் நினைத்து நீராபிஷேகம் செய்ததை, உறியடிக்கும் நிகழ்வில் அவனுக்கு கொலுசொலியால் தடம் காட்டியதை, ஊர்திருவிழாவில் அவளுக்காக இவன் அக்னி சட்டி தூக்கியதை, அவள் அலகு குத்திக்கொண்டதை என ஊரெங்கும் நிரம்பி வழிந்த காதல்கள் இதயத்தின் ஆழத்தில்
மறக்கமுடியாத தூரத்தில் அப்படியே இருக்கின்றன. இப்போது வேறு கணவனுக்கோ, வேறு மனைவிக்கோ பிறந்த பிள்ளைகளோடு அவர்களைக் காணும் போதெல்லாம் காலம் நடத்தி வைத்த கண்ணாமூச்சி ஆட்டங்களில் எப்போதோ தொலைந்து போனவர்கள் இன்னும் மீண்டுவராமலே இருக்கிறார்களோ அல்லது யாரோ வாழ வேண்டிய வாழ்க்கையை இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்றே தோன்றும்.

70களில் தொடங்கி 80களின் இறுதிவரை இளையராஜாவும், டி.ராஜேந்தரும் இல்லையெனில் இங்கு பலருக்கு காதல் கைகூடி இருக்காது. பலரின் காதல் தோல்விகளுக்கு மருந்து கிடைத்திருக்காது. ஒருதலைக்காதல்களெல்லாம் தற்கொலையோடு சேர்ந்து கொலைகளாகவும் முடித்திருக்க வாய்ப்புண்டு. ஜாதி, மதங்களைக் கடந்து கடவுளாகத் தெரிந்தது காதல் மட்டுமல்ல, இந்த இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் கூடத்தான். இன்று இத்தனை வசதிகள் இருந்தும் ஒரு சிலருக்கு பெண்களிடம் நேரடியாய் போய் பேசவோ, தன் காதலை தெரிவிக்கவோ தயக்கமும், பயமும் இருக்கிறது. எங்கிருந்தோ எடுத்த அல்லது யாரோ எழுதிய வரிகளை போட்டு இன்பாக்சிலோ, இன்ஸ்டாவிலோ தட்டி விடுகிறார்கள். அவர்களுக்கு எல்லா வசதிகளையும் இந்த இண்டர்நெட், அறிவியல் தொழில்நுட்பங்கள் கொடுத்திருக்கிறது. இப்போது போல எந்த சோசியல் மீடியாக்களும் இல்லாத காலகட்டங்களில் ஒரு பெண்ணிடம் தங்கள் காதலை நேரடியாகவோ, தூது விட்டோ தைரியமாக சொன்னவர்கள் அதிகம். அவர்களுக்கெல்லாம் அந்தக்கால பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களில் ஒளிந்திருக்கும் காதல் ததும்பும் வரிகளும், வசனங்களும் போதுமானதாகவே இருந்தது. ஒரு இன்லேண்ட் லெட்டரில் புளு கலர் பேனாவில் இதயம் வரைந்து அம்பு விட்டு சிவப்பு கலர் பேனாவில் ரத்தம் கசிவதைப்போல வரைந்து, தனக்கு தெரிந்த வார்த்தைகளை, தான் படித்த கவிதைகளை பிழைகளோடு எழுதி, யாருக்கும் தெரியாமல் பத்திரப்படுத்தி, எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொண்டு அந்த பெண்ணிடம் சேர்ப்பித்துவிட்டு அதற்கு நிகரான பதைப்பதைப்போடு அந்த பெண்ணிடம் பதில்களை எதிர்பார்த்து காத்துக்கிடப்பதையும், தூரத்தில் அவளைப்பார்த்ததும் வழக்கத்திற்கு மாறாக நடுங்கி, வெட்கப்பட்டு, வெளியே குதித்துவிடும் அளவுக்கு துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை கட்டுப்படுத்தி அவளிடமிருந்து பதில் வருவதற்குள் பாதி செத்தே விடுவார்கள். இப்போது 2K கிட்ஸ்களிடம் இருப்பதைப்போல ஒரு எமோஜியில் காதலைச் சொல்லி இன்னொரு எமோஜியில் அதை அக்ஸ்சப்ட் பண்ணி உடனே காதல் வளர்த்துவிடுவதில் அத்தனை சுவாரஸ்யங்கள் இருப்பதில்லை.

80ஸ் கிட்ஸ்களும் 2k கிட்ஸ்களும் வெவ்வேறு வகை எனில் இந்த 90ஸ் கிட்ஸ்கள் தனிவகை. படிப்பில் ஓரளவுக்கு கெட்டிக்காரர்களாய் இருக்கும் இவர்களுக்கு டாக்டர் சீட், என்ஜினியர் சீட், ஜன்னல் சீட் லாம் கூட சுலபமாக கிடைத்துவிடுகிறது. யார் விட்ட சாபமா காதலுக்கு பெண்ணோ / ஆணோ கிடைப்பது அத்தனை சுலபமான விஷயமாக இருப்பதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாக கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் இந்த 90ஸ் கிட்ஸ்களாகத்தான் இருக்க முடியும். தங்களை விட மூத்தவர்கள் காதலிப்பதில் இவர்களுக்கு ஒன்றும் வெறுப்போ, பொறாமையோ வந்துவிடுவதில்லை. தங்களை விட வயது குறைந்தவர்கள், தங்களுக்கு அடுத்த தலைமுறை பிள்ளைகள் என அழைக்கப்படும் 2K கிட்ஸ்கள் பண்ணும் அலப்பறைகளைத்தான் இவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதற்காக இவர்கள் வெறுப்பையோ கோவத்தையோ காட்டுவதில்லை மாறாக "நாங்கள் எந்த வகையில் குறைந்து போய் விட்டோம், நாங்களும் அழகாகத்தான் இருக்கோம், படிச்சிருக்கோம், நல்லா ட்ரஸ் பண்றோம், நெறைய சாம்பாரிக்கறோம், ஆனாலும் எங்களை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை" என்னும் கேள்விகள் நிறைய இருக்கு. இந்தக்கேள்விகளை இந்த சமூகத்தை நோக்கி இவர்கள் வீசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பதில் சொல்வதற்குத்தான் இங்கு யாரும் இல்லை. ஒரு பத்துவருட காலங்களுக்குள் பிறந்த பிள்ளைகளிடமும் பதின்பருவ வயதுக்கு உண்டான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும், கனவுகளும் இருக்கத்தானே செய்யும். அவர்களை மட்டும் எதுவுமற்ற ஜடங்களாகவோ, தைரியமற்றவர்களாகவோ, பயந்தாங்கொள்ளிகளாகவோ, காதலிக்க தகுதியற்றவர்களாகவோ சித்தரிப்பதில் இந்த சமூகத்தின் கொடூர முகமொன்று தைரியமாய் எட்டிப்பார்க்கிறது.

90ஸ் கிட்ஸ்கள் தூக்கி சுமக்கும் காதலை கிடைக்கப்பெறாதவர்கள் தான் உண்மையில் கொடுத்து வைக்காதவர்கள். பொண்ணோ, பொருளோ, வேலையோ, வசதியோ எதுவாக இருந்தாலும் நேசிக்கும் ஒரு விஷயம் சுலபமாக கிட்டியர்வர்கள் அதனை அதே காதலோடு எப்போதும் அணுகுவார்கள் என்று சொல்ல முடியாது ஆனால் காத்திருந்து காத்திருந்து, தேடித் தேடி கிடைக்காமல் போகும் ஒரு விஷயத்தை கிடைக்கப்பெற்றவர்கள் அதை எப்போதுமே ஒரு பொக்கிஷம் போலவே பாதுகாப்பார்கள். காதல் வந்தவுடன் சம்மந்தப்பட்ட பெண்ணிடம் சட்டென சொல்லி, புன்னகைத்து, பரிசுகள் கொடுத்து, ஊர் சுற்றி, முத்தங்கள் பரிமாறி, வாட்ஸப் செல்பிகளில் சலிப்படைந்து, வீடியோ கால்களில் சண்டையிட்டு பொசுக்கென பிரிந்துவிடும் 2K கிட்ஸ்களுக்கு நடுவே தனக்கே தனக்கென ஒரு தோழி/தோழன், ஒரு கிரஸ், ஒரு பெஸ்டி, ஒரு மறக்க முடியாத நினைவுகளின் தொடக்கம், இவள் எனக்கானவள், இவன் எனக்கானவன் என்றும், எந்த நிலையிலும் இதை நான் உயிர்ப்போடே வைத்திருப்பேன் என வாழ்க்கை முழுக்க தேவையான காதலை சுமந்து கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ்கள் இருக்கிறார்கள். இதயம் முரளியைப்போல தன் காதலைச் சொல்லாதவர்கள் எல்லாம் காதலிக்க தகுதியற்றவர்கள் இல்லை மாறாக இன்னும் இன்னும் அதிகமாய் காதலை எப்போதும் இளமையோடும் புரிந்துணர்வுகளோடும் வைத்திருப்பவர்கள் அவர்கள் தான். 80ஸ் கிட்ஸ்களுக்கு இளையராஜா கடவுள் எனில் 90ஸ் கிட்ஸ்களுக்கு யுவன்சங்கர்ராஜா தான் கடவுள். யுவனுக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்குமான லிரிக்கள் பந்தமும் பேக்ரவுண்ட் இசையும் ரத்தமும் சதையுமாக இவர்களை பிணைத்திருக்கின்றன.

கூட்டத்தின் நடுவே புத்தகம் படித்துக்கொண்டு, ஜோடியாக போகும் போவோர் வருவோரை ஏக்கமாய் பார்த்துக்கொண்டு, பீச்மணலில் மடியில் படுத்துக்கொண்டு காதல் வளர்ப்போரை கடைக்கண்களால் கடந்து, ஒரு பெண்ணை விட தன் பைக்கை அதிகமாய் காதலிப்பதாய் காட்டிக்கொண்டு, தியேட்டர்களில் கார்னர் சீட்டில் இருப்பவர்களை காணாதது போல நடந்து, டீக்கடைகளுக்கு பசங்களோடு போகும் பசங்களும், பியூட்டி பார்களுக்கு பெண்களோடு போகும் பெண்களும் பார்ப்பதற்கு சந்தோசமாய் கவலைகள் ஏதுமின்றி இருப்பதாக தோன்றும் ஆனால் காதல் குறித்து அவர்கள் தாங்கிக்கொண்டிருக்கும் வலி என்பது சொற்களால் சொல்லிவிடவோ, மருந்திட்டு ஆற்றிவிடவோ முடியாதவை. காதல் எல்லோருக்கும் பொதுவானதெனினும் இவர்களுக்கு மட்டும் அந்தக்காதல் கிட்டாதது முயற்சிக்காமல் இருப்பதால் அல்ல, ஒவ்வொரு முறை முயற்சிக்கும் போதும் பெண்களை ஆண்களும் ஆண்களை பெண்களும் ஒரு விதமான தாழ்வுமனப்பான்மையோடே அணுகுகிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. எங்கே தவறாக நினைத்துவிடுவார்களோ, சத்தம் போட்டு கூட்டத்தை கூட்டிவிடுவார்களோ, நீயெல்லாம் அக்கா தங்கச்சியோடு பிறக்கலயான்னு கேட்டு விடுவார்களோ என்னும் பயமும், கூச்சமும் இவர்களிடத்தில் கொஞ்சம் இருக்கவே செய்கிறது. அதேசமயம் பெண்களை அதீதமாய் மதிக்கும், நேசிக்கும் ஆண்கள் 90ஸ் கிட்ஸ்களாகத்தான் இருக்கிறார்கள். என்னதான் "மொரட்டு சிங்கிள்" என்று தங்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திக்
கொண்டிருந்தாலும் இவர்களுக்குள்ளும் ஒரு கனமான காதல் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

தயக்கங்களை உடைத்து நம்பிக்கையுடன் காதலைச் சொல்லுங்கள் உண்மையான காதலை எந்த சமரசங்களுமின்றி ஏற்றுக்கொள்ள 90ஸ்களின் ஆண்களும் பெண்களும் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களை அதே அன்போடு அரவணைத்துக்கொள்ள காதலும் தயாராகவே இருக்கிறது. இந்த பிப்ரவரி முதல் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளையும் ஒரு ஸ்பெஷல் டேவாக கொண்டாடுபவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை உண்மையாக காதலித்தால் வருடம் முழுவதும் காதலர் தினம் தான் என்பது.

அன்பால் இணைந்திருக்கும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்..!

---தனபால் பவானி
14.02.2020

#காதலர்_தின_வாழ்த்துகள்
#காதலர்_தினம்_2020
#HappyLoversDay2020
#LoversDay #90sKids_Love