27 June 2020

வியர்வையில் பூக்கும் மலர்கள்

உழைப்பதற்கு வயது எப்போதும்
ஒரு பொருட்டல்ல என்பதை மனிதர்கள் எல்லா தருணங்களிலும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்திலிருந்து வீடு திரும்பும் வழியெங்கும் அருகருகே கடை விரித்தபடி  அமர்ந்திருக்கும் வயதான மனிதர்களை கவனித்திருக்கிறீர்களா? பொங்கல், தீபாவளி, கோவில் திருவிழா போன்ற நாட்களில் முக்கிய சாலைகளில் முளைக்கும் வாழைக்கன்று, கலர் கோலப்பொடி, மஞ்சக்கோம்பு, கரும்பு, சேமியா சர்பத், குடைதூரி, கட்டில் துணிக்கடை, பலூன் கடை என வரிசையாக புதுப்புது கடைகள் அழகழகாய் முளைத்திருக்கும். இவர்களெல்லாம் கடைவிரித்து ஒரே நாளில் பெரும் பணக்காரர்களாகவோ, செல்வச் சீமான்களாகவோ, சீமாட்டிகளாகவோ மாறிவிடப்போவதில்லை, மாறாக உழைத்து உழைத்து களைத்தாலும் மீண்டும் உழைப்பின் மூலமாக மட்டுமே ஓய்வெடுக்கவும் கற்றுக்கொண்டவர்கள் தான் அந்த வயதான தலைமுறை மனிதர்கள்.

வாழ்க்கை எப்போதெல்லாம் புரட்டிப்போட்டு அடிக்கிறதோ, எப்போதெல்லாம் என்னடா வாழ்க்கையிது என புலம்ப வைக்கிறதோ, எப்போதெல்லாம் ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என கேட்க வைக்கிறதோ அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொள்வது வாழ்வின் வழிகளெங்கும் பார்த்து பார்த்து மனமெங்கும் நிரப்பி வைத்திருக்கும் இந்த வயதான உழைப்பின் மனிதர்களைத்தான். வண்டியை எடுத்துக்கொண்டு ஊருக்குள் ஒரு சுற்று வருவேன், கடக்கும் சாலைகளெங்கும் காணும் வயதான உழைப்பாளிகள் தங்கள் புன்னகை மூலமோ, தோற்றத்தின் மூலமோ, அணிந்திருக்கும் உடைகளின் மூலமோ வாழ்க்கை எப்போதும் ரசிக்கக்கூடிய ஒன்று எனவும், எந்த நிலையிலும் வாழ்ந்தே தீர வேண்டும் என்றும் உணர வைப்பார்கள்.

அப்படி ஒரு நாள் வண்டியில் சுற்றிக்கொண்டிருக்கும் போதுதான் பவானி மேற்குத்தெரு நான்கு சாலையின் சந்திப்பில் 60 வயதுகளைக் கடந்த அந்த இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் நான் சிறு வயதிலிருந்தே பார்க்கும் சேமியா சர்பத் விற்பவர், இன்னொருவர் குழந்தைகளுக்கான குட்டி ராட்டினம் சுற்றுபவர்.

எல்லோரும் ஓய்வெடுக்கும் அந்த ஞாயிற்றுக்கிழமையில் கொஞ்சம் மழை மேகம், கொஞ்சம் இளம் வெய்யில் சுமக்கும் அழகிய காலையை தங்கள் உழைப்புக்காக வார்த்திருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை வார்த்துக்கொடுக்கும் சர்பத் வண்டியையும் குடை ராட்டின தூரியையும் வெவ்வேறு திசைகளை நோக்கி நிறுத்தியிருந்த போதும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவசரத்தில் அவர்களை பலமுறை கடந்துபோனதுண்டு, அதுவொரு ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெதுவாக அவர்களிடம் நெருங்கி பேச்சு கொடுத்தேன்.

"இப்போ எவ்ளோங்க அண்ணா தூரிக்கு?"

"ஊருக்குள்ள வந்தா 5 ரூபாய் தம்பி கோவில் விசேஷம், திருவிழானா 10, 20 வாங்குவோம்"

"இப்போ எப்படி அண்ணே இருக்கு இந்த தொழில், வாழ்க்கை எல்லாம்?"

"முன்ன மாதிரி இல்ல, ஏதோ போகுது தம்பி, வேற வேலை தெரியாதுன்னு பண்ணிக்கிட்டு இருக்கேன்"

அவரிடம் பேசிக்கொண்டே ராட்டினத்தை போட்டோ எடுக்கிறேன், "இந்தா.. அப்டியே இதையும் போட்டோ எடேன்.." என்கிறார் சர்பத் வண்டிக்காரர். கண்டிப்பா எடுப்பேன்னு சொல்லி ஆயத்தமானதும், "இரு இரு நானும் நிக்கறேன்னு" ஒரு குழந்தையின் குதூகலத்தோடு சொல்லி ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து சர்பத் போட்டு நீட்டுவதைப்போல புன்னகைத்தபடி போஸ் கொடுக்கிறார். அதுதான் அந்த நாளில் அவரின் முதல் புன்னகையாக கூட இருக்கலாம்.

"இப்போ சர்பத் எவ்ளோங்க அண்ணா"

"20 ரூபாய்"

"முன்ன விட இப்போ இந்த தொழில் எப்படி இருக்குங்க"

"நெறைய கூல்ட்ரிங்ஸ் வந்துருச்சு இப்போலாம் ரொம்ப கம்மியாதான் வியாபாரம் ஆகுது, பாரு காலைல இருந்து இன்னும் யாரும் வாங்கல, இனிமேல் தான் ஊருக்குள்ள போவேன்... ஏதோ போகுது தம்பி" என்றார்.

"சரிங்கண்ணே... போய்ட்டு வரேன் பார்த்துக்கோங்க..!" என்று சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து நகர்ந்ததும் பின்னோக்கி சுழன்ற என் வாழ்வின் ராட்டினத்தில் 25 வருடங்களுக்கு முன்னால் இதே சர்பத்காரர் வண்டியை சுற்றி அத்தனை பேர் நின்றிருப்பார்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் இவரின் வருகைக்காவே காத்திருந்தவர்களும் உண்டு.  வாங்கி திங்க வாரம் முழுவதும் கொடுக்கும் காசுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து, இந்த தூரிக்காக காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். தெரு முனையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் இவர்களை கடந்து போகும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை, இவர்களிடம் பேசிக்கொண்டே புகைப்படம் எடுத்த என்னை ஒருமாதிரி பார்த்தவாறே கடந்து போனார்கள். இந்த சேமியா சர்பத்தையும், குடை ராட்டினத்தையும் இப்போது இருக்கும் நகரத்து பிள்ளைகள் அனுபவிக்க முடியுமா? அல்லது நகரங்கள் நோக்கி நகர்ந்துவிட்ட கிராமத்து பிள்ளைகளிடம் இதன் நினைவுகள் எஞ்சி இருக்குமா? நாமே நினைத்தாலும் இத்தனை வயதுக்குப் பிறகு அந்த குடை ராட்டினத்தில் அமர்ந்து விளையாடத்தான் முடியுமா?  வாழ்க்கை சிரித்தபடி வழங்கிவிட்டு முறைத்தபடி வாங்கி வைத்துக்கொள்ளும் பல விஷயங்களில் இவைகளும் இருக்கத்தான் செய்கின்றன.



தெருக்களுக்குள் புகுந்து விற்கும் பொருளின் பெயரை  ராகமாய் பாடி, காந்தக்குரலில் வீட்டுக்குள் இருப்பவர்களை வீதிக்கு வரவைத்து விற்பவர்கள் பெரும்பாலும் நம்ம ஊரில் மட்டும் தான் இருப்பார்கள். அவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும், அவரு மனைவிக்கு 65கிட்ட இருக்கும் ரெண்டு பேரும் கோலப்பொடியை மூட்டை மூட்டையாய் எடுத்துக்கிட்டு ஒற்றை மாட்டு வண்டியில் ஊருக்குள் வருவார்கள். அவர் வண்டியை ஓட்டுவார் அந்தம்மா கோலப்பொடியை படியில் அளந்து விற்பார்கள். அவர் அந்த கோலப்பொடியை விற்க கூவும் அழகுக்கே வாங்கலாம் அப்படி இருக்கும் அவர் குரல். அந்த குரலில் அத்தனை கம்பீரம் இருக்கும், இன்னும் நான் எவனையும் நம்பி இல்லை என்னும் கர்வம், உழைப்பாளி என்னும் ஆற்றல், எனக்கு இன்னும் வயசாகல என்னும் நம்பிக்கை, இந்த வயதிலும் உழைக்க வேண்டுமென்ற ஆர்வம் என அவ்வளவு வசீகரத்தை வைத்திருக்கும் அவரை நான் வெகுவாக ரசித்ததுண்டு. கண்ணாடி போட்டபடி அழுக்கு வெள்ளை வேட்டி, கிழிந்த பனியன், முண்டாசு என ஒரு அய்யனார் குதிரையில் போவது போல அவர் மாட்டு வண்டியை ஓட்டி வரும் அழகே தனிதான். அந்தம்மா வருபவர்களிடம் கோலப்பொடியை கொடுத்து காசை வாங்கி சுருக்குப்பையில் வைத்துக்கொண்டு "போலாம்"னு சொல்லி நகருவதை இப்போது நினைத்தால் தேவைதைகளுக்கு அழகென்பது வயதில் இல்லை என்பது புரிகிறது.

வாழைப்பழம், மைதா மாவு, ஏலக்காய், டால்டா எல்லாம் போட்டு அரைத்த மாவை கட்டம் கட்டமாக நிறைந்திருக்கும் மூடிய பணியார கல் போன்றதொரு பாத்திரத்தில் ஊற்றி இரண்டுபக்கமும் மாற்றி மாற்றி திருப்பி வேகவைத்து ஓரங்களை வெட்டிக்கொடுப்பார் அந்த அண்ணா. ஒவ்வொரு தெரு முக்கிலும் அவர் வந்து நின்றுவிட்டால் கூட்டமாக வந்து காத்திருந்து வாங்கிட்டு போவாங்க. பாலம் பாலமாக வெந்து நான்கு பாகமாக உப்பியிருக்கும். இதன் பெயரோ என்னென்ன பொருட்கள் சேர்ப்பார்கள் என்ற விவரங்களெல்லாம் தெரியாமல் இது வரும் போதெல்லாம் அடம்பிடித்து வாங்கி தரச்சொல்லி ஒவ்வொரு கட்டமாக கடித்து ரசித்து ருசித்த நியாபகங்கள் நிழலாடுகின்றன.
ஆண்டுகள் பல கழிந்தபின் மேலை நாடுகளில் மிகவும் பிரபலமான உணவாக கருதப்படும் இதன் பெயர் "வாஃப்பில்" எனச் சொல்கிறார்கள்.



நினைவுகளின் அலமாரியில் இருந்து தொலைந்து போன அவரையும் அவர் விற்கும் தின்பண்டத்தையும் பல வருடங்கள் கழித்து பார்க்க நேர்ந்தது ஒருமுறை, அவரிடம் பேச்சு கொடுத்ததில் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் இழப்புகளும், வலிகளும் இவருக்கும் இருந்ததை அவர் குரல் உணர்த்தியது. முப்பத்தைந்து ஆண்டுகளாகவே இதே தொழிலை அவர் அத்தனை நேசித்து செய்கிறார். அதனால் தானோ என்னவோ 25 வருடங்கள் கழித்தும் அந்த ருசி மாறாமல் அப்படியே இருந்தது. இரண்டு ரூபாய்க்கு விற்ற அது 15 ரூபாயாக மாறியிருந்தது. ஆனால் மாறாத அந்த ருசிக்கும், மனக்குளத்தில் தூண்டில் போட்டு நினைவுகளை மீட்டுக்கொடுத்ததற்கும் என்ன விலை கொடுப்பது.?

பீட்ஸாக்களும் பர்க்கர்களும் இப்போது வந்தவை, 35 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு தின்பண்டத்தை தயாரித்துக்கொடுத்த இது போன்ற எளிய மனிதர்களின் வாழ்க்கைத்தரம் அத்தனை பெரிதாய் மேம்படவில்லையென்றாலும், சொற்ப வருமானமே வந்தாலும் கூட தனக்குத் தெரிந்ததை மிக நியாயமாக நேசித்து செய்யக்கூடியவர்கள் எல்லா ஊர்களிலும் வலம் வந்துகொண்டே இருக்கிறார்கள்.  வளர்ச்சி என்ற பெயரில் இது போன்ற எத்தனையோ சிறு வியாபாரிகளை, உழைப்பாளிகளை, எதார்த்தமான மனிதர்களை, உடலுக்கு நல்லது செய்தும் தீனிகளை இழந்துவிட்டோம். அந்த வகையில் இழப்பு நமக்கு மட்டுமல்ல நம் அடுத்த தலைமுறைகளுக்கும் தான்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க தெருவுல ஒரு பாட்டு சத்தம். சத்தம்னா "சத்தமா", எங்கியோ கேட்ட பாட்டு சத்தம் காற்றில் கலந்து கலந்து பெரிதாகி வருது, "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா" ன்னு பாட்டு சத்தம் வந்த வாசலை எட்டிப்பார்த்தால் எழுபது வயசு பெரியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கூடையில் வைத்து அம்மாவிடம் வெள்ளரிக்காய் விற்றுக்கொண்டிருந்தார். படித்த பெரிய பெரிய ஆளுமைகள் உள்ள கடைகளின் விளம்பரங்களை கேசட்டில் குரல்பதிவு செய்து கோவில் திருவிழா நேரங்களில், பண்டிகை காலங்களில்,  முக்கிய விசேச தினங்களில் ஒளிபரப்புவது வழக்கம். அதுபோலவே இவர் இந்த வயதில் அறிவியல் தொழில்நுட்பத்தை எத்தனை அழகாய் பயன்படுத்துகிறார் என்பதை நினைத்த போது ஆச்சரியமாக இருந்தது. அவர் வெள்ளரிக்கா மட்டுமல்லாமல இன்னும் பலவற்றை விற்பனை செய்வார் சீசனுக்கு தகுந்தமாதிரி. இப்போதும் என்னென்ன விற்பனை செய்கிறாரோ அதற்கு தகுந்த பாடலை அல்லது குரல்பதிவை ஒளிபரப்பி வண்டியில் போய் விற்றுவிட்டு வருவார்.

உழைப்பின் மீது பெரும் காதல் வைத்திருக்கும் இந்த எளிய மனிதர்களின் வாழ்வுதான் எத்தனை அழகானது. தான் செய்யும் தொழிலை எத்தனை நேசிக்கிறார்கள். இத்தனை வயதில் இப்படி உழைக்கிறார்களென்றால் இவர்களின் சின்ன வயதில் எப்படி இருந்திருப்பார்கள், மனைவியின் பிரிவோ, மகன்களின் கோபமோ, மருமகள்களின் பிடிவாதமோ,  தொழிலின் மீது விழுந்து பெருத்த நஷ்டமோ, சொந்த பந்தங்களின் கைவிடலோ என  ஏதோ ஒன்று இவர்களை நகர்த்தி நகர்த்தி இந்த உழைப்பின் மீது கொண்டுவந்து ஓய்வெடுக்க வைத்திருக்கலாம். கடந்து வந்த வாழ்வை ஒருகணம் திரும்பிப்பார்க்கும் வேளையில் இவர்களின் வழிகளெங்கும் வியர்வையில் நனைந்த உழைப்பின் வேர்கள் நம்பிக்கை கிளைகளெங்கும் வெற்றியின் பூக்களை மலரவிட்டிருக்கும்.

#உழைப்பு
#எளிய_மனிதர்கள்
#பவானிமக்கள்

1 comment:

  1. உழைக்கும் மனம் என்றும் ஓய்வதில்லை💐

    ReplyDelete