02 August 2016

ஆடி 18




ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்புவரை வற்றிப்போன விவசாயிகளின் வயிறுகளைப்போல வறண்டு கிடக்கும் எங்கள் ஊர் பவானி காவிரி ஆறு
பாசனத்தின் பயனாகவோ ஆடிப்பெருக்கை முன்னிட்டோ மேட்டூர் அணை திறந்த பின் கால் முளைத்த நதியென ஓடி வரும்பொழுது இருகரைகளையும் தொட்டுக்கொண்டோடும் காவிரியைக் காணவே அத்தனை அழகாய் இருக்கும்.

வறண்டு போய் வெடித்துக்கிடக்கும் மண் தாரைகள் ஓடி வரும் நதியை உறிஞ்சியபடி ஈர மணம் வீசும் அந்த வாசத்தை நுகர நுகர ஜீவன்களில் புது உயிர் சில்லிட்டபடி மனமெங்கும் கிளை பரப்பும்.

பல நாட்களுக்குப் பிறகு பாறைகளை முழுக்கி தண்ணீர் நிரம்பி ஓடும் ஆற்றுக்குள் பவானி பழைய பாலத்தில் இருந்து குதிக்கும் பலசாலிகள் பாக்கியவான்கள், வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்களை மிக எளிதாய் மிக அழகாய் வாழ்ந்துவிட்டுப்போகிறார்கள்.

இந்த பண்டிகை புதுமணத்தம்பதிகளுக்கு தனி விசேஷம் என்றாலும் விவரம் தெரியாத, நீச்சல் தெரிந்த அந்த காலகட்டத்தில் தலையிலிருந்து காது வழியாய் கடைவாயில் ஒழுகும் எண்ணெய் வழிய வழிய பவானி கூடுதுறையில் குதித்து விளையாடிய நாட்கள் இன்னும் ஈரமாகவே இருக்கிறது. தலையில் காசு வைத்து முழுகி, வேறொரு காசை தேடியெடுத்து எண்ணைப்பிசுக்கு மிதக்கும் அந்த நீரில் குளித்து மேலேறுவது என்பது சாதனைகளின் மிச்சமென மினுங்கும்.

மாலையில் கடைவீதியில் அலைமோதும் கூட்டத்தின் நடுவே நீண்டிருக்கும் கடைகளில் சாவிக்கொத்துகளும் சாவி கொடுக்கும் பொம்மைகளும் கைநீட்டி அழைக்கும்.

அன்னாசிப் பழங்களின் வாசனை மூக்கு வழியாய் நுழைந்து மூளைக்குள் ருசியேற்றும் , வட்ட வட்டமாய் வெட்டிய பழங்களின் மேல் உப்பு மிளகாய்ப்பொடிகளைத் தூவவிட்டு வாசனையால் இழுப்பார்கள்.

சிறு வயதில் பெரும்கூட்டம் கூடினால் திருவிழாதான் என நம்பிக்கொண்டிருந்த நாட்களில் எல்லாக் கூட்டங்களுமே ஏதோ ஒரு திருவிழாவை மனதுக்குள் பதியம் போட்டுவைத்துவிட்டன.

ஆடி மாதம் பிரித்துவைத்த புதுமணத் தம்பதிகள் கைகோர்த்தபடி உலாப்போகும் அந்தக் கவிதையான காட்சிகளை அடைகாத்த சிறுவயது இப்போது அழகாய் அசைபோடுகிறது.

இந்த மாதிரியான உயிரில் நிறையும் பண்டிகைகளை பெருநகரங்கள் கொண்டாடாமல் போன அல்லது கொண்டாட முடியாமல் போன இன்றைய சூழலில் மனம் எதையெல்லாம் இழக்கிறதா அதையெல்லாம் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் காலம் திரும்பக்கொடுத்து விடாது.

அருகிலிருந்து பார்க்கவோ அந்த அன்னாசிப்பழ வாசனையில் மூழ்கிப்போகவோ முடியாத வாழ்க்கையை காலம் பரிசளித்திருக்கும் வேளையில் அந்த வரம் வாங்கியபடி உள்ளூரில் இருந்து கொண்டு இந்த ஆடியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 --- தனபால் பவானி