23 November 2017

உன் விரல் நுழையும்
வரத்திற்க்காகவே..
மோதிரங்களின் தவம் ...!!!


பயணம் முடிந்தாலும்
பத்திரமாய் இருக்கிறது
நீ வாங்கிக்கொடுத்த பயணச்சீட்டு ..!


என்னோடு  வர மறுக்கிறது
கரையில் படுத்திருக்கும்
உன் பாதச்சுவடுகள்.....!



உன் மடி தந்த சுகத்தை 
இனி எந்த தலையணையாலும் 
தந்து விட முடியாது....!


வண்ணங்களற்ற ஒரு வானவில்
உன் வெள்ளை துப்பட்டா....!


அடை மழையில் நனைந்து
அதிராத உடம்பு
உன் துப்பட்டா தீண்டலில்
தீப்பிடித்து எரிகிறது...!



நீ உறக்கத்தில் புரண்டுபடுக்கிறாய்  
ஓரமாய் நின்று ரசித்துக்கொண்டிருக்கிறது 
நிலா .....!


இரவுகள் பலவிதம்





தொலைதூர பயணங்களில் 
தூக்கமில்லாமல் நீள்கிறது 
ஓட்டுனர், நடத்துனரின் இரவு ....!

மீட்டருக்கு மேல் கேட்டு கேட்டு 
மீட்டருக்குல்லேயே முடிந்து விடுகிறது 
சில ஆட்டோக்காரர்களின் இரவு.....!

கண்களுக்கும் கணினிக்குமான யுத்தத்தில் 
விரல்களோடு விடியாமலே இருக்கிறது 
ஐ டி பொறியாளர்களின் இரவு.....!

மின்சாரம் இல்லாத நேரத்திலும் 
புத்தகங்களோடு போராடி போகிறது 
மாணவனின் இரவு ....!

அழுகின்ற குழந்தையை 
சமாதானப்படுத்தும் முயற்சியில் 
தொலைந்துபோய் விடுகிறது 
இளம் தாயின் இரவு.....!

திறக்காத பூட்டுகளோடு 
சண்டையிட்டு சமாதானம் அடைகிறது 
திருடனின் இரவு.....!

வாடிக்கையாளர் வராததால் 
வசைகளை சுமந்துகொண்டு நகர்கிறது 
விபச்சாரியின் இரவு.....!

குறட்டைகளாலும் 
மாமூல்களாலும்  நிரம்பி வழிகிறது
போலீஷ்காரர்களின் இரவு.....!

முத்தங்கள்  சுமந்த உதடுகளோடு 
போதையேறி உறங்கப்போகிறது 
நடிகையின் இரவு.....!

கறுப்புப்பணத்தில் கலர் கலர் 
கனவுகளாய் விரிகிறது 
அரசியல்வாதியின் இரவு....!

அடுத்தநாள் உழைப்பிற்காக 
நிம்மதியாய் தொடர்கிறது
ஏழையின்  இரவு....!

தூரத்தில் நாம் இருப்போம்

தூரத்தில் பெய்யும் 
மழையின் சாரலாய் 
எப்போதும் மனதை ஈரமாகவே 
வைத்திருக்கிறது உன் நினைவுகள் ....!

அறை முழுவதும்  நிறைந்து கிடக்கும் 
அமைதியை அறுக்கும் 
கடிகாரத்தின் முட்களைப்போல
எப்போதும் இசைத்துக்கொண்டிருக்கிறது 
உன் மௌனங்கள் ....!

இருளை விரட்டும் 
மெழுகுவர்த்தியின் வெளிச்சம் போல் 
உறக்கத்தை விரட்டி 
உட்கார்ந்து விடுகிறது 
கண் வழி புகும் உன் கனவுகள் ...!

யாருமற்று தவிக்கும் தனிமையில் 
என்னோடு பேசியபடி 
நிழலாய் கைகோர்த்து நடக்கிறது 
உன் விரல்கள் ...!

தேனில் நனைந்து 
பூக்களில் தவழ்ந்து 
காதுக்குள் வந்து குதிக்கிறது 
காற்றில் மிதந்து வரும் 
 உன் குரல்கள்...!

என் வாழ்க்கைப்  புத்தகத்தின் 
எல்லா பக்கங்களிலும் 
பிழையில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது 
உன் பெயர் ....!

நேசிக்கவும் வாசிக்கவும் 
நானிருக்கிறேன் .....
காதல் தொட்டுக்கொண்டே இருக்கும் 
தூரத்தில் நாம் இருப்போம்...!


உன் உள்ளங்கைச் சூடு 
உசுப்பேற்றி விடுகிறது 
விரதமிருக்கும் விரல்களை ....!



கா ... த ...ல்



உன்னை நனைத்து
என்னை துவட்டுகிறது ...

நீ நடக்க
எனக்கு குடைவிரிக்கிறது ...

உன்னை கவிதையாக்கி
என்னை மொழிபெயர்க்கிறது ...

நீ உறங்க
எனக்கு தாலாட்டுகிறது ...

உன்னை சிரிக்கவைத்து
என்னை நிரப்புகிறது ...

நீ சிவக்க
எனக்கு சிலிர்க்கிறது ...

உன்னைப் படைத்து
என்னைப் படுத்துகிறது ...

உன்னில் தொடங்கி
உன்னிலே முடியும்
ஒரு வாழ்வின் மீதிப் பாதியில்
இன்னும் மிச்சமிருக்கிறது ...

கா ... த ...ல்