24 September 2020

சொல்லப்படாத கதைகள்

"ஒரு ஊருல ஒரு ராஜாவாம்..." ன்னு தொடங்கும் கதைகளின் வழியே நாம் பார்த்திராத ராஜாக்களின் காலத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச்செல்ல நம் எல்லோருக்கும் கதை சொல்லிய தாத்தா பாட்டிகள் இருந்திருப்பார்கள், இப்போதும் இருப்பார்கள். இருள் கவ்விய இரவுகளில் சிம்னி விளக்கின் சிறு வெளிச்சத்தில் போர்வையை விட கதகதப்பான பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு  விக்ரமாதித்தன் வேதாளத்தின் கதைகள், தேவதையும்    கோடாரிகளும் கதை, பீர்பால் கதைகள், ராஜா ராணி கதைகள், காக்கா வடை "சுட்ட"   கதைகள்தாத்தாவின் குறும்புத்தனங்கள் சொல்லும் கதைகள் எனக் கேட்ட நாட்களை கடலுக்குள் தவறவிட்ட தங்க நாணயம் போல மனதின் ஆழத்தில் காலம் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறது.  அனுபவங்களை விவரிக்கவோ, அழகான கற்பனையை கதைகளாக மாற்றிக்கூறவோ எல்லோராலும் முடிந்துவிடுவதில்லை, அதற்கென ஒரு பொறுமையும் கேட்பவர்களைக்  கதையோடு சேர்த்துக் கட்டிப்போடும் வல்லமையும் வாய்த்திருக்க வேண்டும். அப்படிக்  கட்டுண்டு கிடந்த காலங்கள் இனி வாழ்வில் திரும்பக்கிடைக்குமா என்பதெல்லாம் பதில் தெரிந்த கேள்வி தான். கிடைக்காது என்பதே அதன் பதிலாகவும் இருக்கிறது.

 இந்த தொழில்ப  நுட்யுகத்தில் "கதை சொல்லி" என்னும் அடையாளத்தோடு நிறைய பேர் இருக்கிறார்கள். எதோ  ஒரு எழுத்தாளரின் கதையை படித்து, அந்தக் கதை சொல்ல வரும் கருத்தை அதன் சுவை குறையாமல் ஏற்ற இரக்கத்தோடு  விளக்கி அல்லது தங்களது கதை ஒன்றை கடந்துவந்த வாழ்வின் வலிகளோடும் அதன் மூலம் அடைந்த வெற்றிகளோடும் சேர்த்து அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியையும் பலர் அழகிய முறையில் செய்துகொண்டிருக்கிறார்கள்.                அதற்கென கட்டணம் வாங்கிக்கொண்டோ அதன் மூலம் லாபம் ஈட்டிக்கொண்டோ இருப்பதையெல்லாம் தாண்டி, அதை யாருக்கும் எளிதில் கைகூடிவிடாத  ஒரு அற்புதக்  கலையாக மாற்றி தங்களை இன்னும் மெருகேற்றி இன்னும் உயரத்தில் வைத்துக்கொண்டவர்கள் வாழ்வின் சூட்சமத்தைக்கூட மிக அழகாக கையாளுபவர்களாக தங்களை மாற்றிக்கொண்டதில் தான் இந்த வாழ்வின் மீதான ஈர்ப்பும் மனிதர்களின் மீதான காதலும் கொண்டவர்களாய்  நிறைந்திருக்கிறார்கள்.

 நான் சின்ன பையனா இருந்தபோது எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு தாத்தா இருந்தார். ஆண்டு, அனுபவிச்சு, ஓய்வு எடுக்கும் வயதிலும் கூட அத்தனை கம்பீரமாய் முறுக்கு மீசையோடு இருந்தார். சாயங்கால நேரங்களில் விளையாடிக்களைத்து வீட்டுக்கு திரும்பும் முன் அந்த தாத்தா அமர்ந்திருக்கும் கயிற்றுக்கட்டிலின் ஓரத்தில் என் வயது பெண்களும் பசங்களும் வரிசையாக  நிற்போம். அவர் வேட்டைக்கு போகும் பரிவார ராஜா போல மெல்ல மெல்ல கதை சொல்ல தயாராவர். வெத்தலையை துப்பிவிட்டு சுண்ணாம்பு கையை கழுவிவிட்டு வேட்டியை இறுக்கிக்கட்டிக்கொண்டு தொழில் போட்டிருக்கும் துண்டை உதறி சரியாக போட்டுக்கொண்டு "ரெடியா போலாமா?"ன்னு கேப்பார். சில சமயங்களில் முந்தைய    நாள் பாதி கதையை சொல்லி முடித்திருந்தால் "நேத்து எதோட விட்டோம்?" ன்னு கூட்டத்தில் கேப்பார், அதை சொல்வதற்கே போட்டியாக இருக்கும். சில சமயங்களில் புதுக் கதைகள் சொல்லுவார், அந்த கதைகள் அவர் தாத்தா அவருக்கு சொல்லியதாகவோ, வேறொருவர்  மூலமாக  அவர் வாய்வழியா கேட்ட கதையாகவோ, அவருடைய சிறு வயதில் நடந்த கதையாகவோ கூட இருக்கலாம். ஆனால் எந்த கதையாக இருந்தாலும் அதை சொல்வதில் அத்தனை நேர்த்தி இருக்கும். இடையில் யாராவது சேர்ந்து கொண்டால் மறுபடியும் அவர்களுக்காக முதலில் இருந்து சுருக்கமாக ஒருமுறை சொல்லுவார். 

 அந்த தாத்தா கதை சொல்லும் விதத்தில் அத்தனை உயிர்ப்பு இருக்கும். கதையை வெறுமனே சொல்லாமல் கொஞ்சம் கொஞ்சம் நடித்துக்காட்டவும் செய்வார். மழை நேரத்து இரவுகளில், மின் இணைப்பு துண்டிக்கப்படும் நேரங்களில் கூட அவர் வீட்டு திண்ணையில் அவரோடு உட்கார்ந்து மழைச்சாரல் தெறிக்க தெறிக்க கதைகள் கேட்ட நியாபகங்கள் இன்னும் மனதோரங்களில் நிழலாடுகிறது. குழந்தைகளைக் காணவில்லை என தேடிக்கொண்டு வரும் பெற்றோர்களோடு அத்தனை எளிதில் எங்களை அனுப்ப மாட்டார். யாரோட அம்மா வராங்களோ அவங்ககிட்ட ஒரு விடுகதை போடுவார் அந்த விடுகதைக்கான பதிலை சரியாக சொன்னா தான் குழந்தையை அனுப்புவார் இல்லனா கதையை முழுசா சொல்லி முடிச்சபிறகு வந்து கூட்டிட்டு போங்கன்னு சொல்லிடுவார். அவரு சொல்ற விடுகதைகளுக்கு பதில் சொல்வது அத்தனை சுலபமல்ல, இந்த விடுகதைக்கு பயந்துகொண்டே கதை கேட்கும் எங்களை கூட்டிப்போக யாரும் வராமல் இருப்பதுதான் எங்களுக்கான அதீத சுதந்திரம். அவரு கதை சொல்ல சொல்ல நாங்க "ம்ம் ம்ம்" ன்னு கேக்கணும் அந்த "ம்ம்" அவருக்கு நல்லா கேக்கலைனா கதை சொல்லுவதை நிறுத்திட்டு குறுகுறுன்னு எல்லா முகங்களையும் பார்ப்பார் அப்பறம் திட்டிட்டு மறுபடியும் கதை சொல்லுவார். விடியத்தொடங்கியிருந்த ஒரு அதிகாலையில் தூக்கத்திலேயே இறந்து போனதாய் சொன்னார்கள். தெரு முழுக்க ஒரு தாத்தா இறந்ததாக மட்டும் தான் தெரிந்தது. எங்களுக்கு மட்டும் தான் தெரியும் "அந்த கதைகளின் நாயகனோடு சேர்ந்து எங்களுக்கு சொல்வதற்காக சேர்த்து வைத்திருந்த அத்தனை கதைகளும் கூட செத்துப்போய்விட்டன" என்பது.

 அவன் பேரு மோகன், எங்களை விட இரண்டு வயது மூத்தவன் ஆனாலும் அவனை அண்ணா என்று அழைப்பதைவிட மோகன் என்றே அழைக்க எங்களை பழக்கப்படுத்தி இருந்தான். எண்பதுகளின் இறுதியில் பன்னிரண்டு வயதில் ஒருவன் கதைசொல்லியாக மாறி எல்லோரையும் தான் பார்த்த படங்களில் இருந்து, தான் படித்த புத்தகங்களில் இருந்து, தான் கேட்ட மொழிகளில் இருந்து அத்தனை கதைகளை எங்களுக்காக சுமந்து வருவான். ஜேம்ஸ்பாண்ட் படத்தை பார்த்துவிட்டு வந்து அதன் கதையை விவரித்து சொல்லுவதில் அவனுக்கு அத்தனை ஆர்வமும், அதை கண்கொட்டாமல் கேட்பதில் எங்களுக்கு அத்தனை ஆச்சரியங்களும் இருந்தன. அந்த படத்தில் வரும் கார் சத்தத்தில் இருந்து, துப்பாக்கி சத்தம், வெடிகுண்டு சத்தம்ன்னு என்னென்ன இருக்கோ எல்லாத்தையும் கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்தற மாதிரி கதை சொல்லுவான்.

 அந்த தெருவில் மூனு படிக்கட்டு வெச்சி, நீளமான திண்ணை ஒன்னு இருக்கும் அதுதான் எங்களின் கதைக்களம். அவன் நடு படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்லுவான் அப்பத்தான் எல்லோருக்கும் நல்லா கேட்கும். திண்ணையின் பக்கவாட்டில் ரெண்டு பக்கமும் திறந்திருக்கும் சாக்கடையில் ஓரங்களில் நின்றுகொண்டு அவன்  சொன்ன கதைகளைக்கேட்ட நாட்கள் தான் அப்போது கிடைத்த வாரஇதழ் மாதஇதழ் புத்தகங்களில் இருந்த சின்ன சின்ன கதைகளை படிக்கத்தூண்டியது. ஜாக்கிஜான் படங்களின் மீதான ஆசைகளும் ஆங்கிலப்படங்களின் மீதான மோகங்களும் வரக் காரணமாக இருந்த மோகன் திடீரென படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பாவோடு சொந்த தொழிலுக்கு போய்ட்டான். பல ஆண்டுகள் கழித்து எதிரெதிரே பார்த்துக்கொண்ட போது மெல்லிய புன்னகையை கசியவிட்டு அப்பாவின் பின்னாடி அமைதியாக நடந்துகொண்டிருந்தான். அத்தனை சொற்களைக்கொண்டு பல கதைகள் சொல்லியவனிடமிருந்து ஒற்றை சொல்கூட உதிராத காரணம் என்னவாக இருக்குமென அவன் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நாளில் உடல்நிலை சரியில்லாமல் திடீரென இறந்து விட்டதாக சொன்னார்கள். அவனோட அப்பாவை எப்போதாவது அந்த தெருவில் பார்க்க நேரிடும், அப்போது அவரிடம் அவனைப்பற்றி கேட்க பல கேள்விகள் முளைக்கும் ஆனாலும் அவன் சொல்லிய கதைகளின் வழியே இப்போதும் எங்களோடு வாழ்ந்துவிட்டுப் போகட்டுமென அமைதியாய் கடந்துவிடுவேன்.

இப்போதும் பாட்டி, அம்மா பெரியம்மா, சின்னம்மான்னு சந்திக்கும் எல்லோரும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை, பட்ட சிரமங்களை, அனுபவிக்க மறந்த சந்தோசங்களை, சேமித்து வைத்திருக்கும் கனவுகளை கதைகளைப்போல சொல்லுவதுண்டு. அவை வாழ்வியல் அனுபவங்களின் அடர்த்தியாக இருக்கின்றன. மனிதர்களின் மனங்களில் குவிந்து கிடக்கும் கதைகள் பலவுண்டு. கேட்பதற்கு காதுகள் கிடைக்கும் தருணங்களில் தான் அவை வெடித்துக்கிளம்புகின்றன. சொல்லப்படாத கதைகளில் மறைந்திருக்கும் சோகங்களை சொல்லாமல் புரிந்துகொள்ளும் மனங்கள் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை. ஆணோ பெண்ணோ அப்படி வாழ்வின் வலிகளை விளக்கும்போது கைப்பேசியை நோண்டாமல், தொலைக்காட்சிக்குள் தொலைந்துவிடாமல், சமையலுக்குள் மூழ்கிப்போகாமல், குழந்தையைக் காரணம் காட்டி நகராமல் கொஞ்ச நேரம் காதுகொடுத்துக்கேட்கும் துணை தான் வாழ்வின் ஆகச்சிறந்த வரம்.