14 March 2020

காணாமல் போன தேவதைகள்



கற்பனைகளின் மீள முடியாத ஆழங்களில் தேவதைகள் என்பவர்கள் வெள்ளை உடைகளை அணிந்தும், பெரிய  பெரிய சிறகுகள் பொருந்தியும், எப்போதும் புன்னகை சுமந்தும், பறக்கும் வல்லமை கொண்டும், எதைக்கேட்டாலும் கொடுக்கும் மந்திரக்கோலுடனும் இருப்பார்கள் என்றுதான் மூளையின் மடிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால்.. உண்மையிலேயே தேவதைகள் அப்படிதான் இருக்கிறார்களா?

ஒழுகும் மூக்கை குட்டிப்பாவாடையை தூக்கித் துடைத்தபடி, அம்மாவின் முந்தானைக்குள் மறைந்துகொண்டு கைசூப்பியபடி, ஊர்க்கோவில் பிள்ளையாரிடம் எதையோ வேண்டி முணுமுணுத்தபடி , ஓவியமென்ற பெயரில் மீன்களை தரையிலும் நிலவை நதியிலும் வரைந்தபடி, பாலத்திற்கு கீழே தம்பிக்கு புட்டிப்பால் புகட்டியபடி, பாவாடை தாவணியில் தண்ணீர் குடம் சுமந்தபடி, ஜாக்கெட் தைத்துக்கொண்டே ரேடியோவில் கசியும் பாடலை பாடியபடி, விலகி ஓடும் மகளை இழுத்து ஜடைபின்னியபடி, புள்ளிகளை கோலத்தால் இணைத்தபடி, வேலைக்கு போகும் கணவனுக்கு டாட்டாவையும் பள்ளிக்கு போகும் குழந்தைக்கு முத்தத்தையும் கொடுத்து வழியனுப்பியபடி, சும்மாடு கட்டிய தலையில் வீடுபெருக்கும் விளக்கமாறுகளை விற்றபடி, பற்களில்லாத வாய்க்கு வெற்றிலையை உரலில் இடித்தபடி தேவதைகள் வீடெல்லாம், தெருவெல்லாம், ஊரெல்லாம் நிறைந்தே இருக்கிறார்கள் அவர்களை தேவதைகளாய்ப் பார்க்கும் கண்களும் மனமும்தான் எல்லோரிடத்திலும் இருப்பதில்லை.

குழந்தைப்பருவத்திலிருந்து பால்யத்தின் படிக்கட்டுகளில் பயணிக்கத் தொடங்கிய காலங்களில் கடந்துபோன தேவதைகள் தான் எதார்த்தமான தேவதைகளாக இன்னும் நிரம்பியிருக்கிறார்கள். ஊர்திருவிழாக்களில் எட்டு பெட்டிகள் பத்து பெட்டிகள் கொண்ட  குடை ராட்டிணங்கள் இருக்கும். தோழிகளோடு ஒரு பெட்டியில் ஏறும் பெண்கள், அதற்கு நேரெதிரான பெட்டிகளில் அமரும் மாமா பையன்களிடமோ மனசுக்கு பிடித்த பையன்களிடமோ பந்தயம் கட்டி கைக்குட்டையோ, கால் கொலுசையோ கீழே வைத்துவிட்டு ராட்டிணம் சுழல சுழல அதை எடுக்க வேண்டுமென ஒரு விளையாட்டு விளையாடுவார்கள். கீழிறங்கும் பெட்டியில் பாதி வெளியே தொங்கியவாறு அதை எடுக்கும் போட்டிகள் அத்தனை சுவாரஸ்யமானவை. ஒரு சுற்றில் யார் எடுக்கிறார்களோ அவர்கள் மேலே போயிட்டு கீழே வரும்போது அதை வைக்க வேண்டும், அடுத்த சுற்றில் யார் எடுக்கிறார்கள் என போட்டி நடக்கும். எத்தனை சுற்றுகளில் யார் அதிகம் எடுக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள். பெண்ணுக்காக ஆணும், ஆணுக்காக பெண்ணும் மாறி மாறி விட்டுக்கொடுத்துக்கொண்டாலும் போட்டியென வந்தபின்பு ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை எல்லாப் போட்டிகளிலும் நிரூபித்துக்கொண்டே இருப்பார்கள். பந்தயம் கட்டிய பரிசாக குச்சி ஐஸோ, சர்பத்தோ வசதியைப்பொறுத்து தோடு, வளையல், பாசின்னு திருவிழா கடைவீதிகளில் தாவணி பாவாடைகளில் அத்தனை தேவதைகள் சுற்றி வருவார்கள்.

கல்யாணம், பொங்கல், தீபாவளி போன்ற பெரிய விசேஷங்களுக்கு ரெடிமேடாக கடைகளில் விற்கும் மெகந்தி கோன்களை வாங்கி வைத்துக்கொள்வதில் எங்கோ ஒளிந்திருக்கும் வெட்கமும் கொஞ்சம் புன்னகையும் கூடுதலாக வந்துவிடுகின்றன இன்றைய பெண்களுக்கு. அம்மாக்களிடம் திட்டு வாங்கிக்கொண்டே சில்வர் பாத்திரத்தில் குங்குமத்தைக்கொட்டி சில பல பொருட்களையெல்லாம் சேர்த்து அடுப்புல வெச்சி நல்லா காய்ச்சி, அந்த பாத்திரத்தை வேற எதுக்கும் பயன்படுத்த முடியாதபடி பண்ணி, மெல்லிய குச்சி வெச்சி கைகளில் வைத்துக்கொள்ளும் வடிவங்களில் ரத்தமே வழிந்து வருவதாக அத்தனை சிவப்பாக இருக்கும் கைகளில் சந்தோஷமும் கொஞ்சம் நிரம்பிவழியும். நாலு வீட்டுக்கு ஒரு மருதாணிச்செடி இருக்கும், அதுல மருதாணி இலைகளை பறித்துவந்து, எலுமிச்சை பழ சாறு சேர்த்து நல்லா நெகு நெகுன்னு அரைத்து கொழ கொழன்னு வளித்து திண்ணைல உக்காந்து கதைகள் பேசிக்கிட்டே கைகளில் வெச்சிக்கிட்டு உன்னோடது அழகா என்னோடது அழகான்னு திருப்பித்திருப்பி பார்த்துகிட்டு தூக்கத்துல அரிக்கும் மூக்கை மருதாணி கையோடவே சொறிஞ்சிகிட்டு தூங்கிப்போன தேவதைகள் எல்லார் வீட்லயும் இருந்தாங்க. காலைல எழுந்து கைகளைக்கழுவி கொஞ்சம் தேங்காய் எண்ணெய் போட்டு தேய்த்து பார்க்கும் போது அந்த தேவதைகளின் வெட்கத்தில் கொஞ்சத்தை வாங்கிக்கொண்டு மருதாணி வைத்த கைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலாய் சிவக்கும்.



வீடுகளில் தெருக்களில் இருக்கும் தேவதைகள் ஒரு ரகம் எனில், பள்ளிக்கூட தேவதைகள் இன்னொரு ரகம். தேர்வு நேரங்களில் சொல்லிக்கொடுப்பதை, உடைந்து போன பென்சில்களுக்கு வேறு தருவதை, இரண்டு சொட்டு இங்க் கொடுப்பதையெல்லாம் தாண்டி, நமக்கென எடுத்துவரும் உணவில் ஒரு அதீத அன்பும் கலந்தே இருக்கும். ஜாமெண்ட்ரி பாக்ஸை வாயில் வைத்து பற்களால் கடித்து உப்பு மிளகாயில் உருண்டுகொண்டிருக்கும் நெல்லிக்காய்களை எடுத்து வாஞ்சையோடு நீட்டும் நேசத்தில், காக்காய் கடி கடித்து கொய்யாக்காயை கொடுத்துவிட்டு கூடவே சேர்ந்து சாப்பிடும் நேரத்தில், பாவாடையின் உள்பக்கமாக வைத்து பீடா மிட்டாயை சரிபாதியாய் கடித்து கொடுக்கும் வேளையில், வாங்கிக்கொடுக்கும் தேன்மிட்டாயை தேவாமிர்த மிட்டாயாக நினைத்து சாப்பிடும் நேரத்தில் அவர்கள் தேவதைகளின் தேவதைகளாக தெரிவார்கள்.
தெரு முக்கில் இருக்கும் மாரியம்மன் பண்டிகைக்கு தீர்த்தக்குடம் எடுக்க வரும் தேவதைகள் பாவாடை சட்டையோடும், தாவணி பாவாடையோடும் சமயங்களில் சேலைகளிலும் வரும்போதெல்லாம் அந்த அம்மனே இறங்கி இவர்கள் வடிவில் வருவதாய் தோன்றும். இப்போது போல சுடிதாரிலோ, சல்வார்கம்மீஸ்களிலோ யாரும் வந்ததில்லை. நெற்றி நிறைய திருநீறும், நடுவில் பெரிதாக குங்குமமும், தலையில் கொஞ்சம் மல்லிகைப்பூவோ, கனகாம்பரமோ, ஊதா நிற டிசம்பர் பூவையோ வைத்துக்கொண்டு வரும்போதெல்லாம் வாய் பிளந்து பார்த்த நியாபகங்கள் அவர்களுக்கு முன் வரிசையில் நின்று இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. வாங்கிய விபூதியை தம்பிக்கோ தங்கைக்கோ வைத்துவிட்டு கண்களுக்குள் விழுந்துவிடாதவாறு கைகுவித்து ஊதிவிடும் அழகில் மந்திரக்கோலுக்கு பதிலாக புல்லாங்குழலை உதடுகளில் வைத்திருக்கும் நவீன தேவதைகளாகவே தெரிவார்கள்.

சிறுவயது ஆண் பிள்ளைகளின் விளையாட்டுகள் ஆர்வத்தில் தொடங்கி சண்டைகளில் முடிந்துவிடும். பெண் பிள்ளைகளின் விளையாட்டுகள் பெரும்பாலும் அன்பில் தொடங்கி அன்பிலேதான் முடியும். சின்னச் சின்ன தேவதைகள் கண்ணாமூச்சி ஆடும் போது கண்களைக் கட்டிவிட்டு "கண்ணாமூச்சி ரே ரே, கண்டுபுடி யாரு, ஊள முட்டையை தின்னுபுட்டு, நல்ல முட்டையை கொண்டு வா " ன்னு சொல்லி அனுப்பும் இடத்தில் எப்போதும் ஒரு பெரிய தேவதை உட்கார்ந்திருக்கும். அந்த பெரிய தேவதைதான் கண்ணாமூச்சி விளையாட்டின் ஆணிவேராய் தெரிந்ததெல்லாம் பால்யத்தின் வரம்.  சைக்கிள் பந்தயத்தில், முங்கு நீச்சல் போட்டிகளில், கோலப்போட்டிகளில், லெமன் ஸ்பூன் போட்டிகளில் என தேவதைகள் விளையாடியதை பார்க்கவும், தேவதைகளோடு சேர்ந்து விளையாடவும் வாய்த்த வாழ்க்கையில் தான் அத்தனை ஆனந்தமும் நிறைந்தே இருந்தன. இப்போது இருப்பதைப்போல எந்தக் குழந்தைகளோடும் விளையாடாமல் கைப்பேசிக்குள் மூழ்கியபடி எந்த பெண்களும் இருந்ததில்லை, "அப்போ மொபைல் இல்ல அதனால விளையாடினார்கள், அந்த காலத்திலும் மொபைல் போன் இருந்திருந்தால் இப்படி விளையாடி இருப்பீர்களா?" என்னும் கேள்வி எழுந்தாலும் கூட குழந்தைகளோடு விளையாட தொடங்கும்போதுதான் உண்மையான தேவதைகளும் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.


ஓடிப்பிடித்து விளையாடி, சிறகுகள் இன்றி பறந்து, சிறு சிறு வெற்றிகளில் திளைத்து, அன்பில் கசிந்து, அன்பால் அணைத்து, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் குலதெய்வமாக, கூடப்பிறந்தவர்களுக்கு இன்னொரு அம்மாவாக,  உறவுகளுக்கு வழிகாட்டியாக, ஊருக்கே செல்லமாக, தெருவோர சிறுவர்களுக்கு தேவதைகளாக தெரிந்த பெண்கள் ஏராளம். ஏதோ ஒரு சந்தோசத்தில், ஏதோ ஒரு வெற்றியில், ஏதோ ஒரு சாதிப்பில், ஏதோ ஒரு மகிழ்வில் தனித்து சிரித்துக்கொண்டிருந்த தேவதைகளை பார்க்க வாய்த்த வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்து, ஏதோ ஒன்றில் தொலைந்து, ஊரைவிட்டு கடந்த போகும்போதெல்லாம் கண்ணீரால் மூழ்கிய தேவதைகளையும் பார்க்க வாய்த்ததுதான் இந்த வாழ்வின் கொடுமைகளுள் ஒன்று.


இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேவதைகள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனாலும் தான், தன்குடும்பம், தன் உறவுகள், தனது உலகம் மட்டும் என்று சுயநலமாய் மாறிப்போன பெண்கள் ஏராளமாக இருப்பதாக, அவர்கள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டதாக, அவர்களுக்குள் இயற்கையாகவே இருக்க வேண்டிய தேவதைகள் காணாமல் போய்விட்டதாக தோன்றுகிறது. தாவணி பாவாடை கட்டியரெட்டைஜடை போட்டு கனகாம்பர பூவைத்த, மருதாணியை விட வெட்கத்தில் சிவந்த, குழந்தைகளோடு சேர்ந்து விளையாடிய, கடிதமெழுதி தூதுவிட்ட, காத்திருந்து நகம் கடித்த, இலவசமாக டியூசன் எடுத்த, கண்களை மூடியபடி கடவுளிடம் வேண்டுதல்களை முணுமுணுத்து, எப்போதும் கம்பீரம் குறையாத தேவதைகளைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன.


காலம் எல்லாவற்றையும் ராட்டிணமாய் சுழற்றிக்கொண்டிருக்கிறது ஆனால் மேலே போன பெட்டிகள் கீழே அப்படியே வருவதில்லை மாறாக முன்னேற்றம், டெக்னாலஜி, மாற்றம் என்னும் பெயர்களில்  புதுப்புது பெட்டிகளாக தன்னை மாற்றிக் கொண்டு கீழே வருகிறது. எல்லா பெண் குழந்தைகளுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷி இருப்பது போல எல்லா பெரிய மனுஷிகளுக்குள்ளும் ஒரு பெண் குழந்தை இருக்கத்தான் செய்கிறது. அதை குழந்தையாகவோ , பெரியமனுஷியாகவோ வைத்திருப்பதும் அவ்வப்போது தேவதையாக மாற்றிக்கொள்வதும் பெண்களின் கைகளில் தான் இருக்கிறது. அப்படி மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் காணாமல் போன தேவதைகளைக் கண்டுபிடிப்பதில் ஒரு சிரமமும் இருக்காது.




2 comments:

  1. அழகான தேவதைகள் கண்முன் வந்து போனார்கள்.

    ReplyDelete