24 November 2017

கிடைக்காமலே இருந்திருக்கலாம்

கிடைக்காமலே இருந்திருக்கலாம்
இந்த சுதந்திரம்...!

வெள்ளையர்கள் ஆண்டபோது கூட
இத்தனை அடிமைத்தனங்கள் இல்லை
இந்தக் கொள்ளையர்களால்
ஒவ்வொரு விடியலிலும் ஒரு
புது வரித்தொல்லை

வரி கொடுத்துவிட்டு
வாய்க்கரிசி போடு என
வரிசையில் நிற்கிறார்கள்

ஆதாரை காட்டிவிட்டு
அடக்கம் செய்யென
அனுப்பி வைக்கிறார்கள்

குடும்ப அட்டையை பிடுங்கி விட்டு
கோமாணத்தை கொடுக்கிறார்கள்
நாட்டை ஏலம் போட்டு விற்றுவிட்டு
கோடிகளில் திளைக்கிறார்கள்

குழந்தைகளைக் கொன்றுவிட்டு
மதங்களை வளர்க்கிறார்கள்
மாடுகளை அவிழ்த்துவிட்டு
அரசியல் நடத்துகிறார்கள்

விவசாயம் அழித்துவிட்டு
வேடிக்கை பார்க்கிறார்கள்
தண்ணீரை தடுத்துவைத்து
தத்துவம் சொல்கிறார்கள்

நெல் விளையும் நிலமெல்லாம்
மீத்தேனால் மிதக்கின்றன
விஞ்ஞான அறிவெல்லாம்
வீணாகப் போகின்றன

ஆணுறையை
இலவசமாய்க் கொடுத்துவிட்டு
நாப்கினுக்கு அதிகபட்ச வரியாம்
புதிய இந்தியா பிறப்பதற்கு
இவர்கள் செய்வதுதான் சரியாம்

சுதந்திரத்தை கொண்டாட
பல வெள்ளையர்களை வசைபாட வேண்டாம்
சில கொள்ளையர்களிடமிருந்து
மீட்டெடுத்தாலே போதும்

இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு
இந்த சுதந்திரம்
கிடைக்காமலே இருந்திருக்கலாம்....!


வாழ்க்கை மிளிர்கிறது

மனதின் ஓரங்களில்
அங்குமிங்கும் அலையும்
வார்த்தைகளை வடிகட்டி
கொஞ்சம் மகிழ்வும்
கொஞ்சம் வலியும்
கலந்து கோர்க்கிறேன்

அது வாக்கியங்களாகவும்
சில நேரங்களில்
யாரோ ஒருவருடைய
வாழ்க்கையாகவும் மிளிர்கிறது

கடந்து வந்த நாளை
காத்திருக்கும் நாளைகளோடு
சேர்த்து திரிக்கையில்
அது சிலநேரங்களில்
விருப்பக் குறியீடுகளாகவோ
விமர்சனங்களாகவோ மாறிவிடுகிறது

மொழியை நேசிக்குமொரு
தருணத்தில் வந்துவிழும்
சொற்களைப் பொருக்கி
புதிதாய் நெய்ய முயல்கிறேன்
அது சில நேரங்களில்
அனுபவமாகவோ
எதிர்பார்ப்பாகவோ அடங்கிவிடுகிறது

எனக்கென நேரமெடுத்து
பிரியங்களின் அன்பிலோ
பிரிவுகளின் துயரிலோ
வாழும் நொடிகளை
கவிதையாக்க நினைக்கிறேன்

அந்த எழுத்துக்களோ
என்னை இன்னும் வாசகனாகவே
வைத்திருக்கின்றன ....!!!


அங்கேயே நில்லுங்கள்


அருகில் வரவேண்டாம்
அங்கேயே நில்லுங்கள்

நீங்கள் சுமந்து வருவது
என் மீதான பரிவல்ல
என் வலியின் அடர்த்தியை
ஆய்வு செய்வதற்கான முயற்சி

வார்த்தைகளால் நலம் விசாரித்துவிட்டு
பின்சென்று புன்னகையால்
கைகுலுக்கிக்கொள்ளும்
உங்கள் கருணை எனக்கு வேண்டாம்

கண்ணீரைத் துடைக்க
நீளும் உங்கள் விரல்
என் கண்களைக் குத்தி
குருடாக்க முயல்வதாய்த் தோன்றுகிறதெனக்கு

குருதி வழிந்தோடும் காயத்தில்
கூர் தீட்டப்பட்ட ஆயுதத்தால்
மேலும் குடையும்
குரூரத்தை விடக் கொடுமையானது
பொய் முலாம் பூசிய உங்கள் அன்பு

ஆகவே ....
அருகில் வர வேண்டாம்
அங்கேயே நில்லுங்கள்
என் வாழ்வை நானே
வாழ்ந்து கொள்கிறேன் ....!!!


இரண்டு பேர் சேர்ந்து எழுதிய 
ஹைக்கூ நீ


பிரியங்களின் வலி




பிரியங்களின் பெருவாசலில்
தனித்திருப்பது அத்தனை சுலபமல்ல

தனிமை போர்த்தியபடி
மெல்ல நகரும் பொழுதுகள்
நரகத்தை நினைவூட்டும்

துக்கம் மிகுந்து தூக்கம் துறந்த
இரவுகளை தலையணைக்கடியில்
ஒளித்து வைக்கச் சொல்லும்

பசி நிறைந்த பகல்கள்
மெளனத்தை சமைத்து
உணவாய்த் திண்ணும்

பெயரற்ற உருவங்கள்
மூளை மடிப்புகளில்
முன்னும் பின்னும் மின்னும்

அழகிய முரண்களோடு
அர்த்தமற்ற சண்டைகளால்
மனம் திணறி பிரிந்திருப்பதை விட
தனித்தே இருந்துவிடலாமென்றும்
தோன்றும் ....!

எஞ்சி நிற்கும் வருத்தம்

கனவால் செய்த பலூனொன்று
சொற்கள் குத்தியதால்
பெரிதாய் சத்தமிட்டு உடைகிறது

திட்டங்களின் நூலறுந்து
அந்தரத்தில் தொங்குகிறது
தொகுத்த வார்த்தைகள்

பிம்பங்களுக்குள் வந்துபோன
சந்தோச நிமிடங்கள்
சட்டென மறைந்து காணாமல் போகின்றன

சுமந்து வைத்திருந்த
பிரியங்களின் கூடையில்
இப்போது முட்கள் மட்டுமே
நிரம்பி வழிகிறது

எனக்கு ஆறுதல் தேவைப்படவில்லை
உனக்கு கொடுத்து வைக்கவில்லையென்ற
வருத்தம் மட்டுமே எஞ்சி நிற்கிறது...!


நுரைப்பெண்


குடம் தீர்க்கும் தாகமெனக்கு
நீ சங்கடையில் நீட்டுகிறாய்

கரும்புதின்ன வந்தவனிடம்
பல்குச்சியை திணிக்கிறாய்

பெரும்பசியில் இருப்பவனுக்கு
ஒரு பருக்கை கொடுக்கிறாய்

அடைமழைக்கு காத்திருப்பவனுக்கு
பன்னீர் மட்டும் தெளிக்கிறாய்

வார்த்தைகளில் நனைய வந்தவனுக்கு
மெளனக்குடை பிடிக்கிறாய்

உதடுகள் குவிந்த நொடியில்
முத்தத்தடை விதிக்கிறாய்

சுமக்கமுடியா காதலும்
எழுதமுடியா கவிதைகளுமாய்
நிரம்பி வழியும்
நானென்ற கோப்பைக்குள்
நீ நுரையாய்த் ததும்புகிறாய்....!


தீராத முத்தங்கள்


என் தலையணை உறைக்குள்
நிறைந்து கிடக்கும் முத்தங்களில்
நேற்றைய கனவில் நீ கொடுத்ததை
தேடி எடுத்தேன்

உன் உதடுகளின்
ஈரப் பிசுபிசுப்பில் இன்னும்
உறையாமல் இருந்தது அம்முத்தம்

இதையெனக்கு கொடுத்தபோது
எத்தனை விதமான வெட்கத்தில்
நீ இருந்தாய் என நானறிவேன்

உன் கண்களில் விழுந்து
கழுத்தடியில் தொலைந்து
உயிர்ப்பள்ளத்தில்
நான் காணாமல் போனதை நீயறிவாய்

உதடுகள் பிரிந்த அந்த நொடியில்
உள்ளுக்குள் வயதின் பெருங்காடொன்று
பற்றியெரிந்ததை நாமறிவோம்

கொடுக்க கொடுக்க தீராத
முத்தங்கள் உன்னிடத்திலும்
தின்ன தின்ன பசியாறாத உதடுகள்
என்னிடத்திலும் இருக்கின்றன

முத்தங்களின் நினைவுகளை
எடுத்துப்பார்க்க இரவுகளும்
எழுதிப்பார்க்க கவிதைகளும்
இருக்கும் வரை நீயும் நானும்
நாமாகவே இருப்போம்.


நனையும் மனம்



உன் முத்தங்களைப் போலவே
பொசுக்கென பொழியும் மழையில்
நனைகிறது மனம்

இரவில் பொழியும் மழையில்
நீ அருகில் இல்லை
முந்தானை குடை பிடிக்க

ஜன்னலில் தெறிக்கும் துளிகளில்
சிதறுகிறது உன் சிரிப்பை போல
சில குட்டி மழைகள்

கன்னத்தில் விழுந்து
கழுத்திலிறங்கும்
ஒரு துளி பயணிக்கிறது

உன் விரல்களைப்போல
உன்னை நனைக்கும் மழைத்துளிகள்
தேனாய் மாறலாம்
என்னை நனைக்கும் மழைத்துளிகள்
நீயாய் மாறலாம்

இருளில் மிதக்கும் இரவைப்போல்
உன் நினைவில் மிதக்க வைக்கிறது
இந்த மழை...!

வாசித்துப் போ

ரோஜாக்களாலும்
சந்தனத்தாலும் செய்த
துளைகளற்ற இரட்டைப் புல்லாங்குழல்
உன் உதடுகள்

நான் வாய் வைத்து ஊதுகையில்
சங்கீதத்தோடு சேர்ந்து வெளிவருகிறது
உன் வெட்கமும்

வாசிப்பவன் திறந்திருக்க
புல்லாங்குழல் கொண்ட பூ உடலே
நீ ஏன் கண் மூடுகிறாய்

ராகங்கள் தடுமாறி
பாதைகள் தடம் மாறினாலும்
சம்மதம்

ஒருமுறை என்னைப் புல்லாங்குழலாக்கி
உன் உதடுகளால் முழுமையாய் வாசித்துவிட்டுப் போ ...!


என்னவாகும் வார்த்தைகள்


உன் குழிவிழும் கன்னத்தில்
இட்டு நிரப்ப நிறைய
முத்தங்கள் சுமந்து வருகிறேன்
நீயோ சிரிக்க மறுக்கிறாய்

உன் மடிமீது உறங்குமொரு
தருணத்தை நோக்கி தவமிருக்கிறேன்
நீயோ வரம் தராமல் விரதமிருக்கிறாய்

யாருமற்ற சாலையில்
உன் விரல் கோர்த்தபடி
நெடுந்தூரம் நடக்க நினைக்கிறேன்
நீயோ எதிர் திசையிலேயே பயணிக்கிறாய்

கவிதைகளோடு நானும்
கவிதையாய் நீயும்
பேச நினைக்கையில்
நீ மௌனத்தை துணைக்கு அழைக்கிறாய்

சொற்கள் நிறைந்த ஒரு சூழலில்
பிரியங்களின் விரல் பிடித்தபடி
உன்னை நானும்
என்னை நீயும்
தேடுமொரு நாளில்
நம் இருவருக்குமே நாம் கிடைக்காமல் போகலாம்
அப்போது சேர்த்துவைத்த வார்த்தைகள் என்னவாகும்...???


பொசுக்கென இறக்கிறாய்

இரக்கமில்லா உன்னால்
உறக்கமில்லை இரவுகளில்

ரத்தம் கசிய
முத்தங்கள் இடுகிறாய்

ஆடை மூடா இடங்களை
தேடித் தேடி ருசிக்கிறாய்

விளக்கணைத்த இடைவெளியில்
உற்சாகம் அடைகிறாய்

வெறிதீர்ந்த பின்னும் இன்னும்
வேண்டுமென துளைக்கிறாய்

விருப்பமற்ற போதும் கூட
ஏனென்னை வதைக்கிறாய்

தீராத பெருவலியில்
கத்த மனமில்லை

தீர்க்கமான முடிவுடன்
கிடைக்குமந்த இடைவெளியில்
கையாளும் திறமையில்
கைதட்டல் வாங்கியபடியே
பொசுக்கென இறக்கிறாய்

#கொசு_செத்துடுச்சி ;)


எப்படிச் சொல்ல...?


பெரு நகர பேருந்தில்
நரக பயணத்தில்
பெண்ணாய் படும்
அவஸ்தைகளை
எப்படிச் சொல்ல...?

இருக்கைகள் நிறைந்த
காலை வேளையில்
கிடைக்கும் இடைவெளியில்
என்னை நிறுத்திக்கொள்ள
முயலும் போராட்டத்தை
எப்படிச் சொல்ல...?

உடைக்குள் ஊடுருவி
உடல் தேடும் ஒருவனிடம்
உடலுக்குள் மனுசி என்ற
மனசொன்று இருப்பதை
எப்படிச் சொல்ல...?

மல்லிகை கருகும்படி
முதுகில் மூச்சுக்காற்றை
ஊசியாய் இறக்கும் ஒருவனிடம்
உனக்கும் என் வயதிலொரு
சகோதரி இருப்பாளென
எப்படிச் சொல்ல...?

கடக்கும் சாக்கில்
கம்பியை பிடித்தபடி
பின்னுரசும் ஒருவனிடம்
பிசுபிசுப்பின் ஈரக்கசிவை
எப்படிச் சொல்ல...?

வெக்கை தகிக்கும் வியர்வையில்
வழிந்திறங்கும் துளிகளில்
வாசம் நுகரும் ஒருவனிடம்
உதிரம் கசியும் வலியை
எப்படிச் சொல்ல...?

காலதாமதத்திற்கு காரணம் கேட்டு
கைப்பேசியில் வந்து குதறும் மேலாளருக்கு
"அந்த மூன்று நாட்களில்"
அலுவலகம் வர கொஞ்சம்
தாமதமாகுமென்பதை
எப்படிச் சொல்ல...???


வானத்தை அடையும் திசை

உனது
முத்தங்களின் பசிக்கு அழாமல்
கொஞ்சல்களுக்கு ஏங்காமல்
தாலாட்டுக்கு காத்திருக்காமல்
உறங்குமொரு குழந்தையென
அமைதியாய் இருக்கிறதுன் நினைவுகள்

மீன்களில்லா குளத்தில் போடும்
தூண்டிலைப்போல சமயங்களில்
வெறுமை சிக்கிக்கொள்ளும்
கொக்கிகளாய் நகர்கிறது நாட்கள்

தவறியும் அவிழ்த்துவிடாத
நம் சிநேகத்தின் முடிச்சுகளில்
இறுக்கம் இன்னும் கூடியிருக்கலாம் 
உன்மீதான காதலைப்போலவே

மிகச்சரியாய் எய்யப்பட்ட அம்பில் 
காயப்பட்ட பறவையின் 
சிறகுகளுக்கு வலுவிழந்து போகலாம்... 
அது வானத்தை அடையும் திசையை நோக்கி 
மீண்டும் பறக்கும்...!


புதிதாய்க் கட்டியிருக்கும்
உன் வீட்டிற்குள் நுழைந்த எல்லோரும்
வீட்டை சுற்றிப் பார்த்து
சந்தோசப்படுகையில்
நான் மட்டும் வருத்தப்படுகிறேன்

நீ சுற்றிச் சுற்றிப் பார்க்கும்
அந்த கண்ணாடியாய்
நான் இருந்து தொலைத்திருக்கக்கூடாதா ...?


ரொம்ப நேரமாக
யோசனை செய்தும்
எழுதவே முடியவில்லை
உன்னைவிட அழகான
ஒரு கவிதையை


சின்ன வயதில்                                                                                                                  
பலூன் வாங்கித்தரச்சொல்லி                                 
அழுது அடம்பிடித்ததுபோல்

இப்போது அழுது
அடம்பிடிக்க வேண்டும்போல் உள்ளது
என்னைக்கடந்து போகும்

உன்னை வாங்கித்தரச்சொல்லி ...!


உன் கைப்பேசி அழைப்பிற்குள்
சுருங்கிக்கிடக்கிறது    
என் உலகம் ..!


23 November 2017

உன் விரல் நுழையும்
வரத்திற்க்காகவே..
மோதிரங்களின் தவம் ...!!!


பயணம் முடிந்தாலும்
பத்திரமாய் இருக்கிறது
நீ வாங்கிக்கொடுத்த பயணச்சீட்டு ..!


என்னோடு  வர மறுக்கிறது
கரையில் படுத்திருக்கும்
உன் பாதச்சுவடுகள்.....!



உன் மடி தந்த சுகத்தை 
இனி எந்த தலையணையாலும் 
தந்து விட முடியாது....!


வண்ணங்களற்ற ஒரு வானவில்
உன் வெள்ளை துப்பட்டா....!


அடை மழையில் நனைந்து
அதிராத உடம்பு
உன் துப்பட்டா தீண்டலில்
தீப்பிடித்து எரிகிறது...!



நீ உறக்கத்தில் புரண்டுபடுக்கிறாய்  
ஓரமாய் நின்று ரசித்துக்கொண்டிருக்கிறது 
நிலா .....!


இரவுகள் பலவிதம்





தொலைதூர பயணங்களில் 
தூக்கமில்லாமல் நீள்கிறது 
ஓட்டுனர், நடத்துனரின் இரவு ....!

மீட்டருக்கு மேல் கேட்டு கேட்டு 
மீட்டருக்குல்லேயே முடிந்து விடுகிறது 
சில ஆட்டோக்காரர்களின் இரவு.....!

கண்களுக்கும் கணினிக்குமான யுத்தத்தில் 
விரல்களோடு விடியாமலே இருக்கிறது 
ஐ டி பொறியாளர்களின் இரவு.....!

மின்சாரம் இல்லாத நேரத்திலும் 
புத்தகங்களோடு போராடி போகிறது 
மாணவனின் இரவு ....!

அழுகின்ற குழந்தையை 
சமாதானப்படுத்தும் முயற்சியில் 
தொலைந்துபோய் விடுகிறது 
இளம் தாயின் இரவு.....!

திறக்காத பூட்டுகளோடு 
சண்டையிட்டு சமாதானம் அடைகிறது 
திருடனின் இரவு.....!

வாடிக்கையாளர் வராததால் 
வசைகளை சுமந்துகொண்டு நகர்கிறது 
விபச்சாரியின் இரவு.....!

குறட்டைகளாலும் 
மாமூல்களாலும்  நிரம்பி வழிகிறது
போலீஷ்காரர்களின் இரவு.....!

முத்தங்கள்  சுமந்த உதடுகளோடு 
போதையேறி உறங்கப்போகிறது 
நடிகையின் இரவு.....!

கறுப்புப்பணத்தில் கலர் கலர் 
கனவுகளாய் விரிகிறது 
அரசியல்வாதியின் இரவு....!

அடுத்தநாள் உழைப்பிற்காக 
நிம்மதியாய் தொடர்கிறது
ஏழையின்  இரவு....!

தூரத்தில் நாம் இருப்போம்

தூரத்தில் பெய்யும் 
மழையின் சாரலாய் 
எப்போதும் மனதை ஈரமாகவே 
வைத்திருக்கிறது உன் நினைவுகள் ....!

அறை முழுவதும்  நிறைந்து கிடக்கும் 
அமைதியை அறுக்கும் 
கடிகாரத்தின் முட்களைப்போல
எப்போதும் இசைத்துக்கொண்டிருக்கிறது 
உன் மௌனங்கள் ....!

இருளை விரட்டும் 
மெழுகுவர்த்தியின் வெளிச்சம் போல் 
உறக்கத்தை விரட்டி 
உட்கார்ந்து விடுகிறது 
கண் வழி புகும் உன் கனவுகள் ...!

யாருமற்று தவிக்கும் தனிமையில் 
என்னோடு பேசியபடி 
நிழலாய் கைகோர்த்து நடக்கிறது 
உன் விரல்கள் ...!

தேனில் நனைந்து 
பூக்களில் தவழ்ந்து 
காதுக்குள் வந்து குதிக்கிறது 
காற்றில் மிதந்து வரும் 
 உன் குரல்கள்...!

என் வாழ்க்கைப்  புத்தகத்தின் 
எல்லா பக்கங்களிலும் 
பிழையில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது 
உன் பெயர் ....!

நேசிக்கவும் வாசிக்கவும் 
நானிருக்கிறேன் .....
காதல் தொட்டுக்கொண்டே இருக்கும் 
தூரத்தில் நாம் இருப்போம்...!


உன் உள்ளங்கைச் சூடு 
உசுப்பேற்றி விடுகிறது 
விரதமிருக்கும் விரல்களை ....!



கா ... த ...ல்



உன்னை நனைத்து
என்னை துவட்டுகிறது ...

நீ நடக்க
எனக்கு குடைவிரிக்கிறது ...

உன்னை கவிதையாக்கி
என்னை மொழிபெயர்க்கிறது ...

நீ உறங்க
எனக்கு தாலாட்டுகிறது ...

உன்னை சிரிக்கவைத்து
என்னை நிரப்புகிறது ...

நீ சிவக்க
எனக்கு சிலிர்க்கிறது ...

உன்னைப் படைத்து
என்னைப் படுத்துகிறது ...

உன்னில் தொடங்கி
உன்னிலே முடியும்
ஒரு வாழ்வின் மீதிப் பாதியில்
இன்னும் மிச்சமிருக்கிறது ...

கா ... த ...ல்