26 April 2020

இசைதனில் தொலைதல்

அழுத குழந்தைக்கான தாலாட்டு முதல் இறந்த உயிருக்கான ஒப்பாரி வரை இந்த மண்ணில் பாட்டும், இசையும் எப்போதும் இருக்கின்றன. இசையை ரசிக்காமல் எந்த உயிரும் வந்து போனதில்லை. வாழ்வின் ஆகச்சிறந்த கணங்களில் எல்லாம் சந்தோசமாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும் இசை அதை இரட்டிப்பாக்கி கொடுத்திருக்கிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. உயிர் ஒடுங்கிக்கிடக்கும் தருணங்களில் உள்ளுக்குள் நுழைந்து ஏதோ ஒரு மாயாஜாலத்தை எப்போதும் இசை செய்துகொண்டே இருக்கும். அப்போதெல்லாம் வாங்கி வந்த வாழ்வு சாபமாக இருந்தாலும் அதை வரமாக மாற்றிவிடும் வல்லமை இசைக்கு எப்போதுமுண்டு. காலங்கள் மாற மாற இசையும் பாடல்களும் மக்களுக்கு தகுந்தவாறு அவர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. இதைத்தான் நீ ரசிக்க வேண்டுமென்றோ இதைத்தான் நீ கேட்க வேண்டுமென்றோ யாரும் யாரையும் சொல்லிவிட முடியாத காலங்களில் இசை தன்னை இன்னும் இன்னும் மெருக்கேற்றியே வைத்திருந்தது.

ஒவ்வொரு தலைமுறையிலும் இசை ஒவ்வொரு மாதிரியாக உருமாறி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இசைக் கடவுளென கொண்டாட யாரையாவது காலம் அனுப்பிக்கொண்டே இருக்கவும் செய்கிறது. MSV, இளையராஜா, ரகுமான் இன்னும் பலர் இல்லையெனில் இந்த மனித குலத்தின் பாதி ஏதோ ஒரு சிக்கலுக்குள் குமைந்து வாழ்வில் மிச்சமிருக்கும் நாட்களுக்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கும். இவர்கள் வாழ்ந்த, வாழும் காலத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என்பதே வாழ்வு வழங்கிய வாய்ப்புதான். தாலாட்டு, தெம்மாங்கு, நாடுப்புறப்பாடல்கள், பக்திப் பாடல்கள், திரைப்பாடல்கள், ஒப்பாரி என 50க்கும் மேற்பட்ட பாடல் வகைகளும் அதற்குத் தோதான இசைக்குறிப்புகளும் உள்ளடங்கிய தொகுப்பாய் மிகச்சிறந்த ஒரு பொழுதுபோக்காக இசை தன்னை வேறொரு வடிவத்தில் வார்த்துக்கொண்டு தொழிநுட்பத்தையும் சேர்த்துக்கொண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து வந்திருக்கிறது.

என் சிறுவயதுகளில் பக்கத்து வீட்டு ரேடியோவில் பாடல்கள் ஒலிபரப்பும் போதெல்லாம் யாரோ அதற்குள் இருந்து பாடுகிறார்கள் எனவும் அதற்குள் இருக்க வேண்டுமெனில் அவர்கள் எத்தனை குட்டியாக இருக்க வேண்டும், எப்படி உள்ளே போவார்கள், எப்படி வெளியே வருவார்கள் என பல கேள்விகள் வந்து போனதுண்டு, இந்த முரண்பாடான  சிந்தனைகளுக்கு செய்தி வாசிப்பாளர்களும் தப்பியதில்லை. வளர்ந்த பின்பு விபரம் தெரியத்தொடங்கிய காலங்களில் எங்கள் வீட்டில் படுக்க போட்ட வாக்கில் ஒரு டேப் ரெக்கார்டர் இருந்தது. ஒரு பெட்டி முழுவதும் டேப் கேசட்டுகள் இருந்தன அதில் பெரும்பாலும் டி ராஜேந்தர் பாடல்கள், எம்ஜிஆர், சிவாஜி, பழைய ரஜினி, கமல், மோகன் பாடல்கள் இருந்தன. எனக்கு அந்த டேப்பில் பாடல்கள் கேக்கும் போதெல்லாம் வேறொரு அழகிய உலகத்தில் இருப்பதாக தோன்றும். அந்த டேப்பை இயக்கத் தெரிந்த போது ஒரு தேவலோகத்தில் இருப்பதாகவே நினைத்திருக்கிறேன். பக்கத்தில் அமர்ந்து கேக்கும் போது பாடல் வரிகளில் கவனமில்லாமல் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, பள்ளிக்கூடத்தில் பாடங்களுக்கு நடுவே பாட்டு புத்தகங்களை வைத்து வரிகளை மனப்பாடம்  செய்ததுண்டு. தொலைக்காட்சிகளில் வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும் பாடல்களில் பிடித்த பாடல்களின் வீடியோவை பார்த்து பிரமித்துப்போய் இருக்கிறேன். புதுப்பாடல்கள் எப்போது எங்கள் டேப் ரெக்கார்டருக்குள் வருமென நினைத்து ஏங்கியதுண்டு.

எண்பதுகளின் இறுதி காலகட்டத்தில் எங்க வீட்டு பக்கத்துல ஒரு அக்கா வாக்மேன் வைத்திருந்தார்கள், அவங்க மாமா வெளிநாட்ல இருந்து வாங்கிக்கொடுத்ததாக கூறும்போது, "வெளிநாடுனா மெட்ராசா?" ன்னு கேட்டதையெல்லாம் இப்போது நினைக்கும் போது பால்யத்தின் மீதான பிரியங்கள் கூடுகிறது. இரண்டு செல்கள் போட்டு, பஞ்சு வைத்த ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு அவங்க தலைய தலைய ஆட்டும்போது என்னமோ அவங்கதான் இந்த உலகத்துல ரொம்ப சந்தோஷமா இருக்கிறதா தோணும். நிறைய சின்ன பசங்களை கூட்டி வெச்சிக்கிட்டு ஒவ்வொருத்தர் காதுலயும் ஹெட்போனை மாட்டிவிட்டு டக்குனு எடுத்துருவாங்க, என்னிடம் வைத்து எடுக்கும் போது எனக்கே எனக்கு மட்டுமே கேட்ட முதல் இசையாய் அது இருந்தது.
அதை நாங்களாக தொட்டால் அவங்களுக்கு கோபம் வந்துரும் அப்பறம் கிட்ட சேர்க்க மாட்டாங்க. அந்த வாக்மேனும் ஹெட்போனும் இன்னும் நினைவுகளில் இசைத்துக்கொண்டே இருக்கின்றன. என்கிட்டயும் இன்னும் ஒரு வாக்மேன் ரிப்பர் ஆகி சரி செய்யப்படாமல் அப்படியே இருக்கு.

என் தாத்தா வீட்டில் மாமாக்கள் வாங்கி வைத்திருந்த ஒரு டேப் ரெக்கார்டரில் தான் முதன் முதலாக பேசி "ரெக்கார்ட்" செய்து பார்த்தோம். "ஹலோ ஹலோ" ன்னு சம்மந்தமே இல்லாம எதையாவது பேசி அதை போட்டு மீண்டும் கேட்கும் போது கரகரப்பான குரலில் யாரோ கிணத்துக்குள்ள இருந்து பேசுவது போல கேட்கும் போது கிடைத்த மகிழ்வு இப்போது இருக்கும் மொபைல்களில் பேசி கிடைப்பதில் வரவில்லை.
எட்டாவது படிக்கும்போது தான் டிவிகள் அதிகம் புலங்கத்தொடங்கிய காலம். ஆனாலும் எங்கள் வீட்டில் டிவி இல்லை அதற்கு பதிலாக சிகப்பு கலர் டேப் ரெக்கார்டர் இருந்தது. (பழுதான நிலையில் இப்போதுமிருக்கிறது) 80களில் இருந்து 90களின் முடிவு வரை வெளிவந்த பாடல்களை தேடித் தேடி பதிவு செய்து திகட்ட திகட்ட கேட்டிருக்கிறேன். ஒரு கேசட் முழுவதும் மான் என்ற சொல் வரும் பாடல்கள், ஒரு கேசட் முழுவதும் நிலா சொல் பாடல்கள், ஒரு கேசட் முழுவதும் காதல் சொல் பாடல்கள் என ஒரு தாளில் படம் பேரையும் பாடல் பேரையும் எழுதிக்கொடுத்து பதிவு செய்யும் கடைக்கு நடையாய் நடந்து வாங்கிவந்த பின் ரசித்து ரசித்து கேட்டதெல்லாம் மறக்க முடியா காலங்களின் நினைவுக்குவியல்கள்.


எங்கள் வீட்டில் இருந்த டேப் ரெக்கார்டரில் ஸ்பீக்கர்கள் அதிலேயே இருக்கும். அதனால வெளியே வெச்சி கேக்குமளவுக்கு எஸ்ட்ரா ஸ்பீக்கர்கள் தேவைப்படல அப்போ, பவானி ஆத்துக்கு குளிக்க போகும்போதெல்லாம் மூனு நாலு பேச்சிலர்ஸ் தங்கி இருக்கும் வீட்டைக் கடந்துதான் போவோம், அவர்கள் வீட்டு படுத்தாவில் "சீறி வரும் பாம்பை நம்பினாலும் சிரித்து வரும் பெண்ணை நம்பாதே" ன்னு எழுதி இருக்கும் ஏனோ அந்த வாக்கியத்தின் மூலம் நட்பாகிப்போனவர்கள் சகஜமாக பழகத் தொடங்கிய போது அவர்கள் வீட்டினுள் இருந்த இரண்டு ஆளுயர
ஸ்பீக்கர்களைக் காட்டினார்கள். ஹிட்டான ஒரு மெலடி பாட்டை போட்டு ரொம்ப கொஞ்சமா சவுண்ட் வெச்சாங்க நான் ஸ்பீக்கரில் காதை வைத்து கேட்கும் போது திடீரென அதிகரித்த சவுண்டில் உடம்புக்குள் ஒரு இடி இறங்கியது போல இருந்தது. அந்த அறையின் பெரிய அலமாரி முழுவதுமே 90வகை கேசட்டுகள். அப்போது 60 வகை 90 வகை ன்னு கேசட்டுகள் இருக்கும். 60 வகையில் 12 பாட்டுகள் பதிஞ்சா 90 வகையில் 18 பாட்டுகள் பதியலாம். அந்த கேசட்டுகளைப் பார்த்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன். அவர்கள் வீட்டில், அந்த சவுண்டில் பாடல்கள் கேட்பதற்காகவே அங்கு அடிக்கடி போவோம். பிறகு அவர்களில் இரண்டு பேர் காதல் கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டாங்க. படுத்தாவில் இருந்த வசனம் அந்த படுத்தாவைப்போலவே ஒரு கட்டத்தில் மக்கிப் போய்விட்டது. எல்லாவற்றையும் மாற்றும் சக்தி பெண்மைக்கு உண்டுதானே.

வழக்கமா மெயின் ரோட்ல இருக்கும் RSP, புது பஸ் ஸ்டாண்ட் ல இருக்கும் ராகதேவ் ரெக்கார்டிங் ன்னு நெறைய இடங்களில் பாடல்களை பதிவு பண்ணுவோம் அங்கெல்லாம் ஒரு செட்ல ஒரிஜினல் கேசட் போட்டு இன்னொரு செட்ல புது கேசட்டைப் போட்டு பதிவு பண்ணி தருவாங்க. எங்களுக்கு வேண்டிய தேதியில் அவர்களால் கொடுக்க முடியலனா தான் வேறு கடைகளுக்கு போவோம். நானும் நண்பர்களுமாக சேர்ந்து வெவ்வேறு பாடல்களை பதிவு செய்து கேசட்டுகளை மாற்றிக்கொண்டு கேட்போம். செலவும் குறைவு, நிறைய பாடல்களும் கேட்ட

மாதிரி இருக்கும். ஒருமுறை ஒருரூபாய் காயின் போன்ல பேசிக்கிட்டு இருந்தேன் அப்போ பக்கத்துல எங்கியோ பாட்டு சத்தம் கேட்டது நொடி நேரத்தில் சட்டென வேற பாட்டு பாடியது, அடுத்த நொடி வேற பாட்டு இப்படியே மாறி மாறி கேட்டது, ஒரு பாட்டிலிருந்து இன்னொரு பாட்டுக்கு மாற ஒன்னு ரிவர்ஸ் பிளே பண்ணனும், இல்ல பார்வர்டை பிளே பண்ணனும் அதுக்கு எப்படியும் கொஞ்சம் நேரம் பிடிக்கும் இது எப்படி உடனுக்குடன் மாறுதுன்னு குழப்பத்தோடு வெளியே வந்து பாட்டு சத்தம் வந்த கடையை நோக்கி போனேன் அப்போதான் முதன் முதலா கம்ப்யூட்டர் மூலமா பாட்டு பதிவு செய்யும் தொழிநுட்பத்தை பார்த்தேன். பவானில மிஸ்டர்.ரோமியோ ஆடியோ ரெக்கார்டிங் அண்ட் ஸ்டிக்கர்ஸ் ன்னு இருந்த அந்த கடை நடத்திய கண்ணன் அண்ணா ஒரு சாயலில் மின்சார கனவு பிரபுதேவாவை நியாபகப்படுத்துவார். அங்குதான் எனக்கு CD கேசட்டுகள் அறிமுகமாயின.  ரேடியோவில் பிடித்த பாடல்களைக் கேட்க காத்திருந்தது முதல் CD யில் வேண்டிய பாடல்களை நூற்றுக்கணக்கில் பதிவு செய்து கேட்கும் காலம்வரை நடந்தவைகள் எல்லாம் இசையின் மீதான ஆர்வத்தையும் தாண்டி மனதுக்கு ஆத்மார்த்தமான நண்பனாக, தனிமையின் துணைவனாக, கற்பனைக் காதலியாக, கனவு மனைவியாக என எத்தனையோ வடிவங்களில் இசையும் பாடல்களும் எனக்குள் ஊறியிருக்கின்றன.

கோவித்துக்கொண்ட மாடிவீட்டு காதலி படியேறும் போதெல்லாம் "கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோவமா" என்னும் பாடலை ஓட விட்டவனும், காதல் சொல்லி பல நாட்கள் ஆகியும் பதில் வராத போது "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" ன்னு பாட்டு போட்டவனையும், "ஊருசனம் தூங்கிடுச்சி ஊத காத்தும் அடிச்சிடுச்சி" ன்னு மாமாவுக்கு பாட்டு மூலம் தூது விட்ட பெண்ணும், அவர்களையே கல்யாணம் செய்தார்களான்னு தெரியல. எந்த பாடலாக இருந்தாலும் வரிக்கு வரி மாறாமல் பாடி ஒரே குரலில் ஜானகி, சுசீலா, சித்ரான்னு பெண்குரல்களை மட்டுமல்லாமல் எல்லா ஆண் குரல்களையும் தன் குரலுக்குள்ளும் எல்லா வரிகளையும் தன் மனதுக்குள்ளும் வைத்திருந்த பரமேஸ் அக்கா இப்பவும் வரிக்கு வரி பாடுறாங்களான்னு தெரியல.

எல்லோருக்குள்ளும் எல்லா சூழ்நிலைகளுக்கும் தேவையான, அழகாக பொருந்தக்கூடிய, நமக்காகவே எழுதி இருப்பார்களோ என்று எண்ணக்கூடிய பாடல்களும் வசனங்களும் ஆயிரம் ஆயிரமாய் இருக்கின்றன. குடிக்கும் தண்ணீரைத் தவிர்த்து எப்படி வாழ முடியாதோ அப்படி இசையையும் பாடல்களையும் தவிர்த்து ஒரு வாழ்க்கையை வாழவே முடியாது. அப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதில் என்ன பலன் இருந்துவிடப்போகிறது.
நினைவுகளை விட்டு நீங்காமல் உதடுகளை விட்டு இறங்காமல் எத்தனையோ பாடல்கள் நமக்காகவும் நமக்குள்ளும் இருக்கத்தான் செய்கின்றன அவற்றையெல்லாம் பிளே பண்ணிக்கொண்டே இருக்கும் நேரங்களில் சிறுவயது அழகிய வாழ்க்கையொன்று ரிவர்ஸில் பிளே ஆகி கண் முன்னே காட்சிகளாக வந்து  போகிறது இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாக.