30 May 2016

நந்தி மலை பயணம்




மிகப்பிடித்த பாடலொன்றையோ
படமொன்றையோ ரசித்துப்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் " கொஞ்சம் கடைக்குப்போய் பால் வாங்கிட்டு வா " என வீட்டில் யாராவது சொல்லும்போது பக்கத்து தெருவுக்கு போக கொஞ்சம் வெறுப்புடனும் நிறைய கோவத்துடனும் பைக்கை அப்படி உதைக்க நேரிடும், நடந்து போகும் தூரத்தில் இருக்கும் கடைக்குப்போக பைக்கோ சைக்கிளோ தேவைப்படுகிறது.

சில கிலோமீட்டர்கள் நடந்தே ஒரு பயணம் போக வேண்டுமென  வருகிற போது அந்த சூழ்நிலையை கையாளும் பக்குவத்தை எது கொடுக்கிறது? அந்த இலக்கை அடைய எது தூண்டுகிறது? அடைந்த பின்பு வரும் ஒரு பெருமிதத்தை புத்துணர்ச்சியை எது தக்கவைக்கிறது?

எங்கள் அலுவலகம் பெங்களூரில் உள்ள நந்தி மலை உச்சியை நடந்தே அடைய வேண்டுமேன ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மலை அடிவாரத்திலிருந்து உச்சி வரை 7 கிலோமீட்டர்கள் தான், பாதை வழியாக முதலில் உச்சி தொடும் முதல் மூன்று ஆண்களுக்கும் முதல் மூன்று பெண்களுக்கும் பரிசென அறிவித்திருந்தார்கள் பரிசுக்கென இல்லையெனினும் ஒரு பயண அனுபவமாக இருக்கட்டுமென நண்பர்களோடு பயணிக்க தொடங்கினோம் உச்சியை நோக்கி.

பவானியிலிருந்து பழனிவரை கூட பாதயாத்திரை போய் வந்திருக்கிறோம் வயதும் மனதும் ஒத்துழைத்த நாட்களில்.
இப்போதைய சூழலில்  நானெல்லாம் இரண்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதே கடினமென நினைத்தபடிதான் நடக்கத் தொடங்கினேன் ஆனால் இயற்கையை ரசித்தபடியும் இலக்கை துரத்தியபடியும் நடக்க  நடக்க தூரங்கள் குறையத்தொடங்கின. புகைப்படங்களெடுத்தபடி முன்னேறுகிறோம் எங்களுக்கு நிகராய் மேகங்களும் முன்னேறுகின்றன.

கால்கள் நடக்க நடக்க காலங்களில் பின்னோக்கி  கேள்விகளால் நிரம்புகிறது மனது அந்த காலத்தில் இத்தனை உயரத்தை எத்தனை குதிரைகளில் அடைந்திருப்பார்கள்?
இந்த மரங்களில் எத்தனை பறவைகள் கூடுகட்டியிருக்கும்?
எந்த விதையில்  இந்த மரம் இப்படி வளர்ந்திருக்கும்? மலை உச்சியின் கோட்டை கட்டவும் அந்த பெரிய குளம் கட்டவும் எத்தனை கழுதைகள் கல் சுமந்திருக்கும்? இங்கு வாழும் குரங்குகளுக்கு போதுமான உணவு கிடைத்துவிடுமா? அந்த பெரிய தேன்கூட்டை யாரும் தொல்லை செய்யாமல் அப்படியே விட்டுவிடுவார்களா? தலைக்குமேல் போகும் மேகம் பொசுக்கென மழை பொழியுமா? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் பதில் கிடைக்காமலே அடிமனதின் பள்ளத்தாக்கில் விழுந்து தொலைந்துவிடுகின்றன.

ஒருவழியாய் உச்சியை அடைந்த போது வாழ்க்கை ஒரு உண்மையை உணர்த்தியது , "முயற்சியோடு முன்னேற நினைப்பவர்களையும் வலிதாங்கி தடைதாண்ட துடிப்பவர்களையும் வாழ்க்கை உயரத்திற்கு கொண்டு செல்கிறது".

இன்னும் இன்னும் பயணிக்கணும்
புது உயரங்களைத் தொடவும்.
புது அனுபவங்களைப் பெறவும்.

பயணிப்போம் ...!

---தனபால் பவானி