22 January 2021

நட்பின்றி அமையா வாழ்க்கை

 நடக்கத் தொடங்கி வீட்டுக்கு வெளியே போய் விளையாட எத்தனிக்கையில் தொடங்கியிருக்கலாம், பள்ளிக்கூட வாழ்வின் முதல்நாள் பக்கத்திலிருந்தவனின் புன்னகையில் பூத்திருக்கலாம், சத்துணவுக்கூடத்தின் அருகில் அடிபம்பில் தண்ணி பிடிக்க உதவியவனிடமிருந்து ஒட்டிக்கொண்டு வந்திருக்கலாம், தன் பணத்தில் முதல் சினிமாவை பார்க்க வைத்தவனிடமிருந்து  கசிந்திருக்கலாம், தன் சைக்கிளில் முதல் சவாரியாக கூட்டிப்போனவன் காட்டியிருக்கலாம், தேர்வு நேரத்தில் காப்பியடிக்க காட்டி மாட்டிக்கொண்டவன் காப்பாற்றியபோது கண்டிருக்கலாம், வேலை தேடி அலைந்த நாட்களில் ஒரு தேநீரில் பசி போக்கியவன் புகட்டி இருக்கலாம், இப்போதும் எப்போதாவது ஊரிலிருந்து அழைத்து நலம் விசாரிப்பவனாய் இருக்கலாம் இந்த எல்லா தருணங்களிலும் நனைந்து, கலந்து, கசிந்துருகி, பிரிந்து, எதிர்பார்த்து, ஏங்கி, நசுங்கி, இன்னும் தொலைந்துவிடாமல் தொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு நிஜம் "நட்பு". 

வாழ்வில் ஆதிமுதல் அந்தம் வரை எந்த உறவும் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம்  நட்பு இல்லாமல் வாழ்வதென்பது அத்தனை சுலபமல்ல. வாழ்வின் ஆகப்பெரும் உறவாய் நல்ல நட்புகள் அமைந்துவிடுவது வரம். வகுப்புத்தலைவனாய் பேசிக்கொண்டிருந்தவர்களின் பெயர்களை கரும்பலகையில் எழுதிவிட்டு வெளியே வந்ததும் தோள்மேல் கைபோட்டுக்கொள்ளும் நண்பனாய் அவதாரமெடுப்பதும், நகராட்சி பள்ளிகளின் மத்தியான வேளையில் சத்துணவு வாங்கும் வரிசையில் நமக்காக இடம் பிடித்து காத்திருப்பதும், மீசை முளைக்காத சிறுவயதில் தெருவில் போகும் அக்காக்களை தேவதைகளாய் நினைக்க சொல்லித்தருவதும்,  ஆசைப்பட்ட பெண்ணுக்கு கடிதம் கொண்டு போகும் தூதுப்புறா வேலையை ரசித்து செய்வதும், நிரம்பி வழியும் கூட்டத்தில் கசங்கி, சட்டையை நனைத்துக்கொண்டு சினிமா டிக்கெட் வாங்கி தந்ததும், நம் வீட்டு விசேஷங்களில் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வதும் நமது நண்பர்களே. போடா என கோவித்துக்கொள்ள தோழர்களும், போடி என கொஞ்சிப்பேச தோழிகளும் நிறைந்த நிமிடங்களில் இதயத்தின் இசைதட்டில் சுழலும் பாடல்கள் இதமானவை. பல வருடங்களுக்கு பிறகு பழைய காதலியையோ/காதலனையோ பார்க்கும் நொடிகளில் வார்த்தைகளை தடுத்துவிட்டு கண்ணீர் முதலில் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் நட்பில் இதயத்தின் ஆழத்திலிருந்தி பழைய முகம் அதே புன்னகையோடு மிதந்து மிதந்து மேலே வரும். தொட முடியாத தூரத்தில் இருந்தாலும், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாலும் எப்போதும் தொட்டுக்கொண்டே இருப்பது நட்பின் விரல்கள் மட்டுமே.

பம்பரத்திற்கு ஆணி அடிக்கவும், கிட்டிப்புள்ளின் முனை செதுக்கவும், கிரிக்கெட்டில் கேட்ச் பிடிக்கவும், காவிரியில் நீச்சல் அடிக்கவும், கை விட்டபடி சைக்கிள் ஓட்டவும், மாரியம்மன் திருவிழாவில் ஆட்டம் ஆடவும், கண்ணாமூச்சியில் கண்டுபிடிக்கவும், பாட்டில் கொடுத்து ஐஸ் வாங்கவும், பட்டாசு வெடிக்க பயம் போக்கவும், உண்டிவில்லில் குறி பாக்கவும், உண்டியல் உடைத்து காசு எடுக்கவும், கன்னித்தீவின் கதை படிக்கவும், தேநீரில் பசி போக்கவும், தேடிவந்து ருசிகூட்டவும், வாழ்வின் வெற்றிகளில் பக்கமிருப்பதும், தோல்விகளில் துணையிருப்பதும் எந்தவித சொந்தமுமில்லாத நட்பு மட்டுமே. அவர்களால் மட்டும் தான் நம் கைவசம் இருந்துதொலைத்துவிட்ட தருணங்களையெல்லாம் எந்த சேதாரமுமின்றி அப்படியே கொடுக்க முடியும். காதல் மட்டுமல்ல, நட்பும் அதுவாக அமையும்போது அதற்கு கிடைக்கும் மதிப்பு உயரியதாய் இருக்கும். ஆண் பெண் என்கின்ற பேதங்களில்லாமல் எல்லா மனிதர்களுக்கும் பெரும்பாலும் படிக்கும் காலங்களில் தான் நட்புகள் அமையும். ஆரம்பப் பள்ளிகளில் ஒருவகை, மேல்நிலைப்பள்ளிகளில் ஒருவகை, கல்லூரிகளில் ஒருவகையென வெவ்வேறு காலகட்டங்களில் அமையும் நட்புகளில் எது எதுவரை வருமென்பதை கணிக்கவே முடியாது. இவனோடு /இவளோடு சண்டையே வராது என நினைத்துக்கொண்டிருக்கும் போது சட்டென முட்டிக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு, இவனை/இவளை பார்த்தாலே கோவமா வருதுன்னு நினைக்கறவங்க கடைசிவரை எந்த நிலையிலும் கூடவே வரும் வாய்ப்புகளும் அமைவதுண்டு. யாருமற்ற தனிமையில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் எதோ ஒரு நட்புதான் மனதுக்குள் தோன்றி குளத்தில் எறிந்த கல்லைப்போல அலையலையாய் பல நினைவுகளைக் கிளறிவிட்டுச்செல்லும். அப்படிப்பட்ட நட்புகள் எல்லோரிடத்திலும் எப்போதுமுண்டு.

பவானி நகராட்சி வடக்குப்பள்ளியில் தான் தமிழ்வழிக்கல்வி மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். முதல்நாள் கைநிறைய இனிப்புகளோடும் கண்கள் நிறைய பயத்தோடும் வகுப்புக்குள் நுழைந்து மிரள மிரள விழித்த நியாபகங்கள் இப்போதும் அப்படியே இருக்கிறது. எல்லோரும் சீருடையில் இருக்க முதல்நாள் என்பதால் எனக்கு மட்டும் வண்ணத்தில் உடையணிய அனுமதி கூடவே நாளை முதல் சீருடையில் வரவேண்டுமென உத்தரவும், கோவில் மாடு மாதிரி தலையை ஒரு மாதிரி ஆட்டிவிட்டு உட்கார இடம் தேடுகையில் யாரோ ஒருவன் தன் பக்கத்தில் இடமிருந்தும் போட்டுவைத்த சம்மனத்தை பெரிதாக்கி அந்த கொஞ்சூண்டு இடத்தையும் கொடுக்க மறுத்தான் அவன் இப்போது மிகப்பெரிய அரசியல்வாதியாக இருக்கலாம். அவனுக்கு பின் வரிசையில் புன்னகைத்தபடி ஒருவன் அழைக்க அவனிடம் அடைக்கலமானேன். வகுப்புகள் மாற மாற நண்பர்களும் சேர்ந்துக்கொண்டே இருந்தார்கள். எல்லோரும் ஒரே தெரு, பக்கத்துக்கு தெருக்கலாக இருந்ததால் கூடுதல் சந்தோஷமென்பது ஒன்றாக விளையாட பள்ளிக்கூடம் முடிந்தும் கூட வாய்ப்புகள் அமைந்தது. 

காலப்பெருவெளி எல்லோரையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைப்பதில்லையே, ஆறாம் வகுப்பிலிருந்து எல்லோரும் வேறு வேறு பள்ளிகளுக்கு, ஒரே பள்ளியின் வேறு வேறு வகுப்புகளுக்கு மாறிப்போனோம். ஆனால் விளையாட்டுகளும் அதையொட்டிய சந்தோஷங்களும் சாயங்காலங்களில் கைகூடியது வரம். பின்னாளில் காலம் சுழற்றிய சவுக்கில் படிப்பை பாதியில் நிறுத்தி நான் மட்டும் தனித்து விடப்பட்டேன். நாட்கள் மாதங்களாக வருடங்களாக உருமாறி பத்துவருடங்களை வேகமாக விழுங்கியிருந்தது. நண்பர்களும் திசைக்கொருவராய் மாறிப்போயிருந்தனர். சிறகு வளர்ந்த பறவைகள் கூட்டை விட்டுப் பறந்துபோனால் மரங்கள் வருத்தப்படுவதில்லை, மாறாக வேறு பறவைகள் வந்து கூடு கட்டிக்கொள்ள தன் கிளைகளைத் தயாராகவே வைத்திருக்கும் என்பதைப்போல என மனக்கூட்டில் வேறு வேறு நண்பர்கள் வந்து கூடு கட்டினார்கள். ஆண்டுகள் பல கழிந்தபின்பு என திருமணத்தையொட்டி ஆட்டோகிராப் சேரனைப்போல நண்பர்களைத்தேடி தேடி என் திருமண அழைப்பிதழை அனுப்பியும் நேரில் சேர்ப்பித்தும் எனக்குள் வற்றிப்போயிருந்த நட்பின் குளத்தை அவர்களின் அன்பால் நிரப்பிக்கொண்டேன். நேரில் வந்து வாழ்த்தியவர்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாய் நெருங்கியிருந்தார்கள்.

எழுதத் தொடங்கிய காலங்கள் என்னை இன்னும் நெறைய நண்பர்களிடம் சேர்த்திருக்கிறது நெறைய நண்பர்களையும் என்னிடம் சேர்த்திருக்கிறது. பயணிக்கும் வழிகளெங்கும் ஏதோ ஒரு நட்பின் அன்பில் திளைக்கவும் அவர்களோடு சேர்த்து ஒரு நல்ல திசையில் பயணிக்கவும் பணித்திருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் கடந்து வந்த வாழ்வில் சந்தித்த காயங்களும் அதை ஆற்றிக்கொள்ள அவர்கள் கையாண்ட விதங்களும், அடைந்த தோல்விகளும் அதிலிருந்து கற்றுக்கொண்ட வழிகளும் சரியான பாதையை தேர்ந்துடுக்க இழந்தவைகளும் என அத்தனை கதைகள் இருக்கின்றன. இந்த மாதிரியான கதைகள் எல்லோரிடத்திலும் ஏகமாய் இருப்பது உண்மை, அதை காது கொடுத்து கேட்பதற்கு யாருமில்லை என்பதுதான் அதிலிருக்கும் சோகம். ஆனாலும் இந்த வாழ்க்கையை நாம் வாழ்த்துதானே ஆகவேண்டும்.

ஏதோ ஒரு நொடியில், ஏதோ ஒரு அவசரத்தில், ஏதோ ஒரு புரிதலின்மையில் பல நாட்களாக பழகிய நட்புகளிடத்திலிருந்து நம்மை வேரோடு பிடுங்கிக்கொண்டு வந்திருப்போம். அதனால் இழப்புகள் என்பதும் இருபக்கமுமாகத்தானே இருக்கும்? அந்த கணத்திலிருந்து இப்போது வரை யோசித்துப்பார்த்தால் எத்தனை அழகான நினைவுகளை தருணங்களை இழந்திருப்போம்? அதையெல்லாம் எ எந்தக்காலம் இனி நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்? அதற்கு ஒரு துளி அளவுகூட வாய்ப்பில்லை தானே? வெறுப்புகளின் முனைகளை கொஞ்சம் கிள்ளிப்போட்டுவிட்டு, கோபத்தின் கொடுக்குகளை கொஞ்சம் ஒடித்துப்போட்டுவிட்டு, மறந்துபோன நட்பையும், பிரிந்துபோன நட்பையும் கொஞ்சம் மயிலிறகால் வருடிவிட, பிரியங்களின் சொற்களை கொஞ்சம் சலவை செய்து புன்னகையில் நனைத்து பரிமாறிக்கொள்ள, கவலைகளால் நிறையும் கணங்களை கொஞ்சம் நட்பின் வார்த்தைகளால் நிரப்பிக்கொள்ள, கடக்கும் காலங்களில் எங்கிருந்த போதும் நல்ல நட்புகளை புரிந்துகொள்ள, புதுப்பித்துக்கொள்ள ஒரு பூங்கொத்தை இப்போதே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பிரிந்து போன நட்பை பார்க்க நேரும்போது சட்டென எந்த ஈகோவும் இல்லாமல் நீட்டிவிடுங்கள் அல்லது அவர்கள் நீட்டினாள் அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்.