31 July 2021

தலைக்கு மேலே..!

ஊரடங்கு காலம் தொடங்கியது முதற்கொண்டு அது முடியும் வரை பெண்களுக்கு பியூட்டி பார்லர்கள் பற்றிய கவலையைப்போலவே ஆண்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக இருந்தது சலூன் கடைகள். சேவிங், ட்ரிம்மிங் போன்ற விசயங்களுக்கு பிராண்டட் மெசினரிகள் வந்தாலும் கூட, சரியான முறையில் "கட்டிங்" என்பது எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. அதிலும் என்னைப்போல முடிதிருத்த மெசினரிகள் பயன்படுத்தாத, அல்லது பயன்படுத்த தெரியாத ஆட்களுக்குச் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு முடியா நாங்களே கோதிவிட்டுகிட்டே திரியனும்.

நடு ராத்திரியில் பாத்ரூம் போய்ட்டு கண்ணாடில முகத்தை பார்த்தா நமக்கே பயமா இருக்கும், அவ்ளோ கொடூரமா இருக்கும். தலைக்கு ஷாம்பூ போட்டு குளிச்சா வேணா கொஞ்சம் பாக்கற மாதிரி இருக்கும். ஆனா வண்டில வெளிய போய்ட்டு வந்தா கீரைக்கூடைய தலையில கவுத்து விட்ட மாதிரி முடியெல்லாம் அங்கேயும் இங்கேயும் தூக்கிட்டு நிற்கும்.

வீட்ல இருக்கும் குட்டி பசங்களுக்கு மெசின்ல கட்டிங் பண்ணலாம்னு முயற்சி பண்ணா, ஆரம்பத்துல நல்லாவே இருக்கும். அட நமக்கும் நல்லா கட்டிங் பண்ண வருதே, இது தெரியாம இவ்ளோ நாளா சலூன்ல போய் தேவையில்லாம நேரத்தையும் பணத்தையும் வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு தோணும். அப்படி நெனைச்சிகிட்டே பண்ணா கடைசில பசங்க தலை பரதேசி படத்துல வர அதர்வா மாதிரி ஆயிடும். ஏற்கனவே வெளில போக முடியாது இப்போ வெளியே போக சொன்னாலும் போக முடியாதேன்னு பசங்களுக்குத் தோணும், நம்ம தலைய இப்படி பண்ணி வெச்சிட்டாங்களே ஆன்லைன்ல என்னோட கேர்ள் பிரண்ட் பார்த்தா பங்கமா கலாய்க்குமேன்னு மூனாவது, நாலாவது படிக்கிற பசங்க நினைக்கும் போதுதான் நாம அப்படியே அங்கிருந்து மெதுவா நழுவுவோம், என்னமோ சங்கர் படத்துக்கு ஹேர் ஸ்டைல் பண்ணி முடிச்சமாதிரி ஒரு சீன் வேற போடுவோம்.

இப்போ இருக்கும் குட்டிப் குட்டி பசங்களாம் கூட அழகழகா ஹேர்கட் பண்ணிக்கிட்டு சைடுல கோடு போட சொல்றாங்க. சுத்தியும் கம்மியா கட் பண்ணி நடுவுல ஆலமரம் மாதிரி விட சொல்லிடறாங்க. கேட்டா ஏதேதோ ஸ்டைல்ன்னு சொல்லி நம்மள வெறுப்பேத்தறாங்க. பழைய தலைமுறை அப்பாக்களிடம் சிக்கி அவஸ்தை பட்டு வெளிவந்திருக்கும் இந்த தலைமுறை அப்பாக்கள் , தங்களால் செய்ய முடியாத, செய்து கொள்ள அனுமதிக்கப்பாடாத எல்லாவற்றையும் தங்கள் குழந்தைகளை செய்ய வைப்பதைப்போல, தங்களுக்கு கிடைக்காத பலவற்றை தங்கள் குழந்தைகளுக்கு தர தயாராகவே இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளை காலமும், வசதியும் இப்போது கொடுத்திருக்கிறது என்பது உண்மை.

என்னோடு படித்த சில பசங்க மேற்படிப்பு படிக்க முடியாம இடையில் தங்களது குடும்ப வேலை, குலத்தொழில் ன்னு போய்ட்டாங்க அப்படி போனதுல முடிதிருத்தும் தொழில் செய்வது இரண்டு பேர். ஒருத்தன் ரங்கநாதன், இன்னொருத்தன் ரவி. ரங்கநாதன் இடையில் மாமனார் ஊரோடு செட்டில் ஆகிவிட. நான் எப்பவும் ரவி கிட்ட தான் போய் முடிவெட்டிக்குவேன். தனது மாமா கடையில் வேலை பழகிவிட்டு ஒரு கட்டத்தில் நம்பிக்கையோடு தனியாக கடை எடுத்து வேலை செய்ய தொடங்கினான். நல்ல வேலைக்காரன், பொறுமையா நாம கேட்பது போலவும் வெட்டுவான், நம்ம முடிக்கு என்ன செட் ஆகுமோ அதையும் செய்வான். முடிவெட்டிக்க போய்ட்டு அவன் இல்லனாவோ லேட்டானாவோ வீட்டுக்கே வந்துட்டு மறுபடியும் போவனே தவிர வேற கடைக்கு போக மாட்டேன். ஏன்னா பொண்ணுங்களுக்கு டைலர் அமையறதும், பசங்களுக்கு சலூன்காரர் அமையறதும் ரொம்ப கஷ்டம். அப்படி அமைந்தால் அதை மாற்றுவது அதைவிட கஷ்டம். டைலர்கிட்ட துணிய கொடுத்து தப்பா தைத்து கொடுத்துட்டா வேற துணிய கூட போட்டுக்கலாம் ஆனா வேற சலூன்காரர்கிட்ட தலைய கொடுத்து அவரு தாறுமாறா கட்டிங் பண்ணிட்டா வேற தலைக்கு எங்க போறது?

ரவி கடை பவானில தான் இருக்கு. நான் பெங்களூர், சென்னைலலாம் வேலை செய்யும் போது கட்டிங் பண்றதுக்காகவும், பரோட்டா சாப்டறதுக்காகவுமே கூட பவானி வருவேன். பெங்களூர், சென்னையிலும் எல்லா கடைகளும் இருக்கலாம் ஆனாலும், மனத்திருப்தி என்பது நமக்கு விருப்பமானவை நமக்கு பிடித்த இடங்களில் நடக்கும் போதுதானே கிடைக்கும். பவானில அவன் கடை ரொம்ப சின்னது தான் ஆனா அவ்ளோ சுத்தமா இருக்கும். ரெண்டு ரோலிங் சேர், ஒரு நீண்ட மரப்பெஞ்சு, ஒரு ரேடியோ செட், தண்ணி பானை என பெரும்பாலும் பழைய பொருட்கள் தான். ஆனாலும் அந்த சூழல் கொடுக்கும் நெருக்கத்தை, சந்தோசத்தை பெரிய பெரிய ஏசி சலூன்கள் கொடுக்குமான்னு தெரியாது.

முடிவெட்டி, சேவ் பண்ண அதிகபட்சமா ஒரு மணி நேரம் ஆகும் அந்த ஒரு மணி நேரத்தில் பேச்சு கிரிக்கெட், சினிமா, அரசியல், இழவு, காதல், பள்ளி வாழ்க்கை, நண்பர்கள் வரவு, ரியல் எஸ்டேட் நிலவரம் ன்னு எங்கியோ தொடங்கி எங்கியோ முடியும். பெரிய சலூன்களில் அப்படி இருக்குமான்னு தெரியல. அங்கேயெல்லாம் வெளிமாநில ஆட்கள் வேலை செய்வார்கள், அவர்களுக்கான உரையாடலில் மொழி ஒரு தடையாக இருக்கும். அதனால் ஒரு டிவி, இல்லனா wifi கனெக்ஷன் கொடுத்துட்டா யாரும் யார்கிட்டயும் பேசாம அவங்கவங்க வேலைகளை பார்த்துட்டு இருப்பாங்க. ஊருக்குள்ள இருக்கும் சின்ன சின்ன சலூன்களில் கைகளில் எடுத்து புரட்டி படிக்கும் நாளிதழ்களும் வார இதழ்களும் கொடுக்கும் சுகத்தை அவை கொடுக்காது.

இப்பலாம் சின்ன பசங்களை சலூக்கடைகளுக்கு கூட்டிட்டு வரும் அப்பாக்களிடம் கடைக்காரர் "எப்படிங்க வெட்டணும்"னு கேட்பார். அதுக்கு அந்த அப்பா "பையன் எப்படி சொல்றானோ அப்படி வெட்டி விடுங்க"ன்னு சொல்லிடுவார். அதை பாக்கும்போதே கொஞ்சம் பொறாமையா இருக்கும். நான்லாம் சின்ன பையனா இருக்கும் போது வார இறுதியில் காவிரி ஆத்துக்கு போகும்போது ஒரு சலூனுக்கு கூட்டிட்டு போவாங்க. அங்க சலூன்காரர் கேப்பார் "எப்படிம்மா வெட்டணும்"னு. அதுக்கு அம்மா "நல்லா ஒண்ட ஒண்ட வெட்டி விடுங்க, முடி சீக்கிரம் வளரவும் கூடாது, கைல முடிய பிடிச்சிக்கிட்டு அவனை அடிக்கவும் வசதியா இருக்கணும்"னு சொல்லிட்டு துணி துவைக்க ஆத்துக்கு போவாங்க, நான் முடிவெட்டிக்கிட்டு ஆத்துக்கு போய் குளிச்சிட்டு, துவைத்த துணிகளை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வரணும். ரோலிங் சேர் மேல ஒரு பலகையை போட்டு கடைக்காரர் அதுமேல ஏறி உட்கார சொல்லுவார். ஏறி உட்கார்ந்ததும் அரதப்பழசான ஒரு அழுக்கு துணியை எடுத்து போர்த்துவார். அப்பறம் பிளீச்ன்னு தண்ணிய மூஞ்சில அடிச்சி ஆடு மாதிரி துளுக்க வைப்பார். "தம்பி ஆடாத, தலைய இங்க திருப்பு, மேல பாரு, தலைய கீழ குனி" அப்படி இப்படின்னு தான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் நம்மமேல இறக்குவார். எப்படா இந்த சேர்ல இருந்து எழுந்திருப்போம்னு இருக்கும் அதுமட்டுமில்லாம கழுத்து காதெல்லாம் குட்டி குட்டி முடிங்க முள்ளு மாதிரி அப்படி குத்தும். சைடுலாம் கட் பண்ணி கழுத்து, காதெல்லாம் காலாவதியான ஒரு பவுடரை பூசிவிடுவார். ஆத்துல போய் குளிச்சு அந்த அவஸ்தைகளில் இருந்து மீளுவதற்குள் போதும் போதும்னு ஆயிடும். அடுத்த ஒருவாரம் கரண்டி விட்ட கரடி மாதிரியே சுத்திட்டு இருப்போம்.

சென்னைல என்கூட ரூம்ல தங்கி இருந்த ஒரு பையன் கட்டிங் பண்ண போறேன்னு சொல்லிட்டு போவான், திரும்பி வரும்போது எப்படி போனானோ அப்படியே வருவான். "ஏண்டா கடை லீவா"ன்னு கேட்டா, "இல்லையே கட்டிங் பண்ணிட்டு வந்துட்டனே" ன்னு சொல்லுவான். "என்னடா சொல்ற அப்படியே இருக்கு, இதுக்கு எவ்ளோ"ன்னு கேட்டா "450ரூபாய்"னு சொல்லுவான். அடேய் இதுக்கு எதுக்குடா அவ்ளோ காசு, பேசாம நீயே கத்தரிக்கோல் எடுத்து கட் பண்ணி இருக்கலாமேன்னு தோணும். ஆனா இந்த மாதிரி விஷயங்கள் தான் 90ஸ் கிட்ஸ்களுக்கும் 2K கிட்ஸ்களுக்கும் உள்ள பெரும் வித்தியாசங்களில் ஒன்று.  2K கிட்ஸ்லாம் அவர்கள் முடி வெட்டிக்கொள்வதில் தொடங்கி அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர்கள் விருப்பத்திற்கு செய்யலாம். ஆனால் அதற்கு முந்தைய தலைமுறை அப்படி எதையும் செய்துவிட முடியாது. அது ஒருவகை சாபமாக இல்லையெனினும் எல்லாவற்றையும் அடிமட்டத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும், வரமாகவுமே இப்போதுவரை இருக்கிறது. 

சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட அடிவாங்கி, உதைவாங்கி ஆசைகளை மனதிலேயே புதைத்துக்கொண்டு கைகளில் கிடைத்ததை பொக்கிஷங்களாய் உணர்ந்து, எல்லாவற்றிலும் இருந்து எதையாவது ஒன்றை கற்றுக்கொண்டு வாழும் காலம் முழுவதும் நினைத்து நினைத்து ரசிக்கும் அந்த காலத்தை விட,பிடித்த விஷயங்கள், கேட்ட பொருட்கள் சட்டென கிடைத்துவிடுவதில் என்ன சுவாரஸ்யம் இருந்து விடப்போகிறது.?