19 June 2012

பாப்பு பாட்டி...!

 பாட்டி .....!

அம்மா என்ற மூன்று எழுத்துக்குப்பிறகு மனித உறவுக்கு  முதுகெலும்பாய் இருக்கும் இன்னொரு மூன்றெழுத்து 
 அக்கா ,தங்கை , மனைவி , மகள்,பேத்தி என எல்லா  மூன்றெழுத்து  உறவுகளும் உள்ளடக்கியதாய் உள்ள இன்னொரு தாய்.

எங்கள் பாட்டியை நாங்கள் பாட்டி என்று அழைத்ததில்லை ,ஒரு உறவு முறைகுறித்த அறிமுகப்படுத்தலுக்கு மட்டுமே அந்த வார்த்தையை உபயோகிப்போம், மற்றபடி அம்மா என்றே அழைப்பது வழக்கமாய் இருந்து வரும் பழக்கம்.
 அப்பாவுடைய அம்மா எப்போதும் எங்களுடன்தான் இருப்பார், இருப்பார் என்பதைவிட இருந்தார் என்பதுதான் இங்கு சரியாய் இருக்கும்.

நான் சின்ன வயசில் இருந்தபோது பாட்டியிடம் அவ்வளவு நெருக்கமில்லை, எல்லாமே அம்மாவுடன்தான். என் பள்ளிப்படிப்பு முடிந்த போது பாட்டியுடனான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமானது. இறக்கும் அன்று கூட பாட்டி வேலைக்கு சென்றுவிட்டு வந்தார் என்பதை இப்போது நினைத்தாலும் என் பாட்டியின் மீதான மதிப்பு கூடுகிறது. விடாமுயற்சி, உழைப்பு , நம்பிக்கை, சேமிப்பு என எல்லாவற்றையும் பாட்டியும் அம்மாவும்தான்  நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

விடியக்காலையில் சூரியனுக்கு முன்பாய் எழுந்து விடும் பாட்டி எங்கள் தெருவில் இருக்கும் எல்லா ஜமக்காலக் கடைகளையும் கூட்டி தெளித்து , கோலம் போட்டு  சுத்தம் செய்வார் அதன்பின் காமாட்சியம்மன் கோவிலுக்குள் தொடங்கும் வேலை மதியம் வரை தொடரும். பெரும்பாலும் பாட்டியின் காலை உணவு ஒரு டீ யுடன் முடிந்து விடும். எப்போதும் தன் வேலைகளை தானே செய்துகொள்வார். மதிய உணவுக்குப்பிறகு ஓய்வெடுப்பது பாட்டிக்குப்பிடிக்கும். பாட்டியின் சாயங்கால சந்தோசங்கள் எங்கள் வீட்டு தொலைக்காட்சிப்பெட்டிக்குள் இருந்தது சீரியல்களாய்.

பண்டிகை தினங்களில் பாட்டி ஆசிர்வதித்துக்  கொடுக்கும் அந்த ஒரு நூறு ரூபாயை இனி எந்த காலத்திலும் சம்பாதிக்க முடியாது.
பாட்டியின் சுருக்குப்பைக்குள் தான் இருந்தது அதற்க்கான சுகம். நாலணா எட்டணா காசுகளோடு சலசலக்கும் அந்த பத்து பைசா இருபது பைசா செல்லாக்காசுகளோடு பாட்டி நடந்து வந்தால் ஒரு பழைய தேர் தானாய் வருவதுபோல் தோன்றும். 

எதிரிக்கும் சிரிப்பை மட்டுமே பரிசாய் கொடுத்தவள் என் பாட்டி. ஊரில் புதிதாய் பிறந்த குழந்தைகளை பாட்டி குளிப்பாட்டி விடுவது வழக்கம், ஒரு சிலர் தங்கள் குழந்தையை எங்கள் பாட்டிதான் குளிக்க வைக்கவேண்டுமென காரில் வந்து கூட்டிபோவதும்  உண்டு.
அப்படி ஒரு சுகம் பாட்டியால் குளிக்க வைக்கப்படுவது. தீபாவளி திருநாளில் எங்களுக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு பாட்டி குளிக்கவைத்தால் பண்டிகையை விட நல்லா இருக்கும்.

அடிபட்டு வந்தால் மருந்து போட்டு தேய்த்து விடுவதும், அசந்து வந்தால் மடியில் போட்டு தூங்க வைப்பதுமாய் பாட்டி எங்களுக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்திருக்கிறாள். நினைத்தாலே கண்ணிரண்டும்  நீரில் மூழ்குகிறது. ஜனவரி 6 2012 சொர்க்கவாசல் திறப்பன்று 
பாட்டி தூக்கத்திலேயே இறந்து போனாள், துக்கம் விசாரிக்க வந்தவர்கள் பாட்டி சொர்கத்திர்க்கே போய்  விட்டார் என சொன்னார்கள், அவர்களுக்கு தெரியாது ஒரு சொர்க்கம் எங்களை விட்டுப்போனது.

பாட்டியில்லாத வீடு சாமி இல்லாத கோவிலாய் தெரிகிறது, 
பண்டிகை நாட்கள் நெருங்கும் போதும்,
எங்கோ ஒரு சுருக்குப்பை திறக்கிற போதும் ,
தெருக்கூட்டும் சத்தம் கேட்க்கும் போதும்,
யாரோ ஒரு வயதான பாட்டி காசுக்காக கையேந்தும் போதும்,
காவி கலர் புடவை கட்டிய ஒரு பாட்டியை பார்க்கும்  போதும்.
அந்த காமாட்சியம்மன் கோவிலை கடக்கும் போதும் 
பாட்டியின் நினைவு வருவதை தவிர்க்கமுடிவதில்லை.....!
===========================================