20 December 2021

வீடென்பது வாழமட்டுமல்ல

பறவைகள் இரைதேடி முடித்தபின்னே மாலை நேரங்களில் கூடடைவதைப்போல வாழ்வைத்தேடி தினம் தினம் எங்கெங்கோ பயணிக்கும் மனிதர்கள் இரவுகளில் வந்து அடைந்துகொள்ளும் இடமாக இருப்பது வீடுகள்தான். மனிதர்களுக்கு வீடுகள் தரும் பாதுகாப்பையும், ஓய்வையும், நினைவுகளை அசைபோடும் நேரத்தையும் வேறெதுவும் அத்தனை சுலபத்தில் கொடுத்துவிட முடியாது. வீடற்ற மனிதர்கள் பாதுகாப்பையும், ஓய்வையும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

குகைகளிலும், மரங்களிலும் ஆதி மனிதர்கள் வாழ்ந்து வந்த காலங்களில் வீடுகள் தேவைப்படவில்லை. காலங்கள் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியதிலிருந்து தான் தங்கிக்கொள்ளும் இடங்களும் மாறத்தொடங்கின. அப்போதிருந்து இந்த நிமிடம் வரை எத்தனை எத்தனை மாற்றங்களை வீடுகளின் பொருட்டு மனித சமுதாயம் கட்டமைத்திருக்கின்றன. இன்றைய தலைமுறை பிள்ளைகளிடம் இருக்கும் பெருங்கனவுகளில் ஒன்று "சொந்த வீடு" கட்டவேண்டுமென்பது. சொந்த வீடென்பது தேவைக்கென்பதைத்தாண்டி ஒரு கெளரவமாக, லட்சியமாக மாற்றியதின் பெரும்பங்கு "சொந்தக்காரர்களுக்குண்டு".

சொந்த வீடு கட்டிமுடித்த பின்புதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன சில பையன்களுக்கும், சொந்த வீடு இருக்கும் பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன சில பெண்களுக்கும் இன்னுமே கூட கல்யாணம் நடக்காமல் இருக்கலாம். ஆசை ஆசையாய் கட்டிய வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்காமலே சிலருக்கு வாழ்க்கையே முடிந்திருக்கலாம். வீடுகட்டுவதென்பது சிலருக்கு கனவாகவே போயிருக்கலாம். இன்னும் சிலர் வீட்டையும் கட்டி, கல்யாணமும் பண்ணி, கனவுகளையும் நிறைவேற்றி ஒருகட்டத்தில் அந்த வீட்டையே பாழடைந்து போகவும்  விட்டிருக்கலாம்.

மனிதர்கள் யாரும் வசிக்காமல் பாழடைந்து கிடக்குமொரு வீட்டில் நுழைந்து பார்த்திருக்கிறீர்களா? ஒருகாலத்தில் எல்லோருக்கும் எல்லாமுமாக இருந்த வீடு இப்போது யாருக்கும் எதுவுமில்லாமல் இருப்பதை யோசித்திருக்கிறீர்களா? உங்களுக்கு சிறுதுளி கூட தொடர்போ, சொந்தமோ இல்லாத அந்த வீட்டுக்குள் என்னென்ன நிகழ்ந்திருக்கும் என்பதை கற்பனை செய்திருக்கிறீர்களா? அந்த வீடு பல காலங்களாக சுமந்து கொண்டிருக்கும் கதைகளை கேட்டிருக்கிறீர்களா? காலம் எல்லோருக்கும் அந்த வாய்ப்பை கொடுத்துவிடுவதில்லை, ஆனாலும் கடக்கும் இடமெங்கிலும், நடக்கும் தடமெங்கிலும் எதுவோ ஒன்றை தேடிக்கொண்டே இருப்பவர்களை காலம் ஏமாற்றுவதும் இல்லை. 

மூன்று தலைமுறைகள் முழுதாய் வாழ்ந்து நான்காம் தலைமுறை நகரங்களை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்துவிட்டதால் பாழடைந்து கிடக்கும் அந்த வீட்டின் வயது கிட்டத்தட்ட 100 வருடங்களாகிறது. கோவில்களின் மதில் சுவர்களைப்போல அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட மதில் சுவர்கள் இப்போதும் கம்பீரமாய் நிற்கின்றன. உடைந்த கதவுகளின் வழியே அவ்வப்போது வரும் ஆடுகள் பசியாற வீடெங்கிலும் முளைத்து நிற்கின்றன செடி கொடிகள். நெசவுத்தறிகள் பூட்டியிருந்த கூடத்தின் மேற்கூரையில் ஒருபக்க ஓடுகள் விழுந்து வானத்தின் நீலம் நீள்கிறது. வீட்டுக்குள் படரும் கொடிகளின் நுனிகள் வேருக்குள் மறைந்துவிட்ட நினைவுகளை கொஞ்சம் கீறிவிட முயல்கின்றன.

காதலையும் காலத்தையும் சுமந்தபடி பந்தாவாக நிற்கிறது ஒரு பழைய ஸ்கூட்டர், வெட்கத்தையும், புன்னகையையும் ஏந்தியபடி கிடக்கிறது ஒரு பழைய புகைப்படம், அடுக்குபானைகளில் மிஞ்சிய கடைசி பானையில் தேங்கியிருக்கிறது ஒரு துண்டு வானம் எப்போதோ பெய்தமழை நீராய், ஏதோ ஒன்றின் பொருட்டு எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டே இருந்த மண்அடுப்பு நெருப்பைத் தின்று பல வருடங்கள் ஆகின்றன, ஆட்டுக்கல், அம்மிக்கல், குளியல் தொட்டி, பழைய சுவிட்ச்கள், வண்ண மாடங்கள், பனைமரத்தூண் தாங்கிய பட்டாசாலை, கையோடு வேய்ந்த கூரைகள் என அத்தனையிலும் பழமைகள் சுமந்திருக்கும் வீட்டில் இப்போது மறக்க முடியாத நினைவுகள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன.

அந்த காலத்தில் இந்த பொடக்காலிலதான் (பாத்ரூமில்) பாட்டி 11 பிள்ளைகளையும் பெத்தெடுத்தாள், இங்கதான் தாத்தா தறி நெய்வார், இந்த வராந்தாவுல தான் நாங்க விளையாடுவோம், இது தான் சாமி ரூம், இந்த பானைல இருந்துதான் நாங்க அரிசி அள்ளி அள்ளி திம்போம், இந்த இடத்துல தான் நாள் கீழ விழுந்துட்டேன், இங்கதான் பெரிய பாட்டி எல்லோரையும் வரிசையா உக்கார வெச்சி நிலாச்சோறு   உருட்டி கொடுப்பாங்க, இங்கதான் பெரிய ஜமக்காளத்தை விரிச்சி போட்டு வரிசையா படுப்போம், பாட்டி நிறைய கதைகள் சொல்லுவாங்கன்னு அவங்க பக்கத்துல படுக்க ஒரு சண்டையே நடக்கும், நடு சாமத்துல ஒன்னுக்கு போக சின்னவ எழுப்புவா அப்போன்னு பார்த்து தெருநாய் குரைக்க அவளும் பயந்து என்னையும் பயப்படுத்துவான்னு எத்தனையெத்தனை கதைகள்.

மனிதர்கள் வசிக்காத எல்லா வீடுகளிலும் சொல்லிக்கொள்ள அத்தனை கதைகள் இருந்தும். இப்போது அங்கெல்லாம் நினைவுகள் மட்டுமே குடியிருக்கின்றன. தலைமுறைகள் கடந்து நீளும் நினைவுகளின் தொகுப்பை சேமித்து வைக்க எல்லோருடைய மனங்களின் மூலைகளிலும் சில அடுக்குப் பானைகள் உள்ளன, அவற்றைக் கிளறி உள்ளிருக்கும் பழமையின் ருசியை பரிமாறத்தான் யாருமில்லை. சமீப காலங்களில் எல்லா ஊர்களையும் போல எங்கள் ஊரிலும் சில பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இடிக்கப்படும் முன்னே வெளியிலிருந்து பார்த்த சிலவீடுகளின் முகப்புத் தோற்றங்கள் எதையெதையோ நினைவுகளுக்குள் உருட்டிவிடுகின்றன.


ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம்தான் மாமனார் வீடு. அவர் வீடு இருக்கும் தெருவில் முன்னொரு காலத்தில் கம்பீரமாய் இருந்து இப்போது பயன்படுத்தாத சூழலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பெரிய வீடு உள்ளது. இந்த வீட்டைக்கடக்கும் போதெல்லாம் கடவுளின் மீது அதீத பக்தி உள்ளவர்கள் எந்தவொரு கோவிலைக்கடக்கும் போதும் அனிச்சையாய் கன்னத்தில் போட்டுக்கொள்வார்களே அப்படி என் கண்கள் அனிச்சையாக அந்த வீட்டை நோக்கி போகும். சாலையின் ஓரத்தில் அமைந்திருக்கும் அந்த வீடு பழங்காலத்தில் கட்டியிருக்க வேண்டும். நுழைவுவாயிலின் இரண்டு பக்கமும் மிகப்பெரிய ஜன்னல்கள், பட்டாசாலை என்று சொல்லக்கூடிய இடத்தில் ஓடுகள் இல்லாத சட்டங்கள், சுவரெங்கும் கருப்பு வெள்ளையில் அந்தக்கால புகைப்படங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மேஜை நாற்காலி, முதல் மாடியில் தூண்கள் வைத்த பால்கனி, இரண்டு பக்கமும் மாடங்கள், வெளியில் திண்ணைகள் என இந்த வீடு இப்போது யாரும் படிக்காத கவிதை போல இருக்கிறது.

அந்த வீட்டைப்பற்றிய வரலாறை தெரிந்து கொள்ள விசாரித்த போது பழைய தலைமுறை மனிதர்கள் மறைந்த பின்பு, பிள்ளைகள் வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் இருந்ததால் கொஞ்ச காலங்களுக்கு முன்புவரை ஊர் பொறுப்பில் விடப்பட்டு  பள்ளிக்கூடமாகவும் அதன் பிறகு தபால் நிலையமாகவும் இருந்திருக்கிறது. தபால் நிலையத்தில் வேலை செய்பவர்கள் தங்கிக்கொள்ள மாடியில் வசதி இருந்திருக்கிறது. அதன்பின் வீட்டு உரிமையாளர்களின் வாரிசுகள் வந்திருக்க வேண்டும், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஏதோ ஒரு தருணத்தில் இப்படி கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. 

ஒருகாலத்தில் இங்கு வசித்தவர்கள் எப்படியெல்லாம் இருந்திருப்பார்கள், சொந்த பந்தங்களோடு, குழந்தைகளோடு கூடிக்களித்திருப்பார்கள், பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடி இருப்பார்கள், திருவிழாக்களில் திளைத்திருப்பார்கள். மொட்டை மாடி நிலாச்சோறு, ஆடிமாத தூரியாட்டம், முற்றத்து ஊஞ்சலாட்டம், திண்ணையில் அமர்ந்து வேடிக்கை, கல்யாண வீடாய் தடபுடல் விருந்து, புதிதாய் பிறந்த குழந்தையின் அழுகுரல், வயதான பாட்டியின் பொக்கை வாய் சிரிப்பென எத்தனை எத்தனை விஷயங்களை இந்த வீடு பார்த்திருக்கும் தானே. இப்போது யாராலும் திறக்கப்படாத கதவுகள் மக்கிப்போய், ஜன்னல் கம்பிகள் துருப்பிடித்து, தூண்கள் சிதைந்து, ஓடுகள் உடைந்து, பக்கச்சுவர்கள் இடிந்து, மாடங்கள் அழகிழந்து, தன் இறுதி மூச்சை இழுத்துக்கொண்டிருக்கிறது அந்த வீடு.

இன்னும் கொஞ்ச காலத்தில் அது முற்றிலுமாக இடிக்கப்பட்டு அங்கு பெரிய அடுக்குமாடி வீடுகள் கட்டப்படலாம், பல குடும்பங்கள் வந்து வாழலாம். ஆனால் அது போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த வீட்டை யாராலும் கட்ட முடியாது, கட்ட மாட்டார்கள். வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்தை நோக்கி நகரும்போதெல்லாம் இந்த மாதிரி பழமையான பல விஷயங்களை நம் தலைமுறைகள் இழந்து கொண்டிருக்கிறோம், கூடவே பல மனிதர்களையும். எங்கள் ஊரிலும் பல வீடுகள் அந்த மாதிரி இருக்கின்றன. எல்லா ஊர்களிலும் அந்த வீடு மாதிரி பழைய வீடுகள் இன்னும் தன் கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும். அதன் பின்னும் சொல்லப்படாத கேட்கப்படாத பல கதைகளும் இருக்கும். நாமதான் வாழ்க்கை துரத்தும் அவசரத்தில் அதையெல்லாம் நின்று ரசிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

எப்போதாவது அந்த வீட்டைக் கடந்து செல்பவர்களுக்கு இதுவொரு பாழடைந்த பங்களாவாக, பேய் வீடாக, சபிக்கப்பட்ட இடமாக, வழி சொல்லும் குறியீடாக தோன்றலாம் ஆனால் அதில் தான் ஆகச்சிறந்த மனிதர்களும் வாழ்ந்திருப்பார்கள். ஆத்மார்த்தமான அன்போடு கலையோடு பார்த்தால் அந்த வீட்டில் இன்னும் கூட குழந்தைகளின் கொலுசு சத்தங்களும், பெண்களின் வெட்கச்சிரிப்புகளும், ஆண்களின் வீரமும், வயதானவர்களின் அன்பும் எதிரொலித்துக்கொண்டே இருக்கலாம். 

வீடென்பது பலருக்கு சொத்தாக, கெளரவமாக, மூலதனமாக இருக்கலாம். சிலருக்கு சொந்த வீடென்பது வாழ்ந்துவிட்டுப்போவதற்கு மட்டுமல்ல வாழ்ந்துகாட்டவும் தேவைப்படுகிறது.

4 comments:

  1. அருமை கவிஞரே அடுக்கு பானையில் நிரம்பியிருந்த நினைவுகளை அசை போட வைத்ததற்க்கு, பாரட்டுக்கள்

    ReplyDelete
  2. அருமை தனபால், என்னை மீண்டும் பழைய நினைவுகளை அசைபோடும் செய்தமைக்கு

    ReplyDelete