Showing posts with label நெடுங்கவிதைகள். Show all posts
Showing posts with label நெடுங்கவிதைகள். Show all posts

24 November 2017

கிடைக்காமலே இருந்திருக்கலாம்

கிடைக்காமலே இருந்திருக்கலாம்
இந்த சுதந்திரம்...!

வெள்ளையர்கள் ஆண்டபோது கூட
இத்தனை அடிமைத்தனங்கள் இல்லை
இந்தக் கொள்ளையர்களால்
ஒவ்வொரு விடியலிலும் ஒரு
புது வரித்தொல்லை

வரி கொடுத்துவிட்டு
வாய்க்கரிசி போடு என
வரிசையில் நிற்கிறார்கள்

ஆதாரை காட்டிவிட்டு
அடக்கம் செய்யென
அனுப்பி வைக்கிறார்கள்

குடும்ப அட்டையை பிடுங்கி விட்டு
கோமாணத்தை கொடுக்கிறார்கள்
நாட்டை ஏலம் போட்டு விற்றுவிட்டு
கோடிகளில் திளைக்கிறார்கள்

குழந்தைகளைக் கொன்றுவிட்டு
மதங்களை வளர்க்கிறார்கள்
மாடுகளை அவிழ்த்துவிட்டு
அரசியல் நடத்துகிறார்கள்

விவசாயம் அழித்துவிட்டு
வேடிக்கை பார்க்கிறார்கள்
தண்ணீரை தடுத்துவைத்து
தத்துவம் சொல்கிறார்கள்

நெல் விளையும் நிலமெல்லாம்
மீத்தேனால் மிதக்கின்றன
விஞ்ஞான அறிவெல்லாம்
வீணாகப் போகின்றன

ஆணுறையை
இலவசமாய்க் கொடுத்துவிட்டு
நாப்கினுக்கு அதிகபட்ச வரியாம்
புதிய இந்தியா பிறப்பதற்கு
இவர்கள் செய்வதுதான் சரியாம்

சுதந்திரத்தை கொண்டாட
பல வெள்ளையர்களை வசைபாட வேண்டாம்
சில கொள்ளையர்களிடமிருந்து
மீட்டெடுத்தாலே போதும்

இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு
இந்த சுதந்திரம்
கிடைக்காமலே இருந்திருக்கலாம்....!


வாழ்க்கை மிளிர்கிறது

மனதின் ஓரங்களில்
அங்குமிங்கும் அலையும்
வார்த்தைகளை வடிகட்டி
கொஞ்சம் மகிழ்வும்
கொஞ்சம் வலியும்
கலந்து கோர்க்கிறேன்

அது வாக்கியங்களாகவும்
சில நேரங்களில்
யாரோ ஒருவருடைய
வாழ்க்கையாகவும் மிளிர்கிறது

கடந்து வந்த நாளை
காத்திருக்கும் நாளைகளோடு
சேர்த்து திரிக்கையில்
அது சிலநேரங்களில்
விருப்பக் குறியீடுகளாகவோ
விமர்சனங்களாகவோ மாறிவிடுகிறது

மொழியை நேசிக்குமொரு
தருணத்தில் வந்துவிழும்
சொற்களைப் பொருக்கி
புதிதாய் நெய்ய முயல்கிறேன்
அது சில நேரங்களில்
அனுபவமாகவோ
எதிர்பார்ப்பாகவோ அடங்கிவிடுகிறது

எனக்கென நேரமெடுத்து
பிரியங்களின் அன்பிலோ
பிரிவுகளின் துயரிலோ
வாழும் நொடிகளை
கவிதையாக்க நினைக்கிறேன்

அந்த எழுத்துக்களோ
என்னை இன்னும் வாசகனாகவே
வைத்திருக்கின்றன ....!!!


அங்கேயே நில்லுங்கள்


அருகில் வரவேண்டாம்
அங்கேயே நில்லுங்கள்

நீங்கள் சுமந்து வருவது
என் மீதான பரிவல்ல
என் வலியின் அடர்த்தியை
ஆய்வு செய்வதற்கான முயற்சி

வார்த்தைகளால் நலம் விசாரித்துவிட்டு
பின்சென்று புன்னகையால்
கைகுலுக்கிக்கொள்ளும்
உங்கள் கருணை எனக்கு வேண்டாம்

கண்ணீரைத் துடைக்க
நீளும் உங்கள் விரல்
என் கண்களைக் குத்தி
குருடாக்க முயல்வதாய்த் தோன்றுகிறதெனக்கு

குருதி வழிந்தோடும் காயத்தில்
கூர் தீட்டப்பட்ட ஆயுதத்தால்
மேலும் குடையும்
குரூரத்தை விடக் கொடுமையானது
பொய் முலாம் பூசிய உங்கள் அன்பு

ஆகவே ....
அருகில் வர வேண்டாம்
அங்கேயே நில்லுங்கள்
என் வாழ்வை நானே
வாழ்ந்து கொள்கிறேன் ....!!!


பொசுக்கென இறக்கிறாய்

இரக்கமில்லா உன்னால்
உறக்கமில்லை இரவுகளில்

ரத்தம் கசிய
முத்தங்கள் இடுகிறாய்

ஆடை மூடா இடங்களை
தேடித் தேடி ருசிக்கிறாய்

விளக்கணைத்த இடைவெளியில்
உற்சாகம் அடைகிறாய்

வெறிதீர்ந்த பின்னும் இன்னும்
வேண்டுமென துளைக்கிறாய்

விருப்பமற்ற போதும் கூட
ஏனென்னை வதைக்கிறாய்

தீராத பெருவலியில்
கத்த மனமில்லை

தீர்க்கமான முடிவுடன்
கிடைக்குமந்த இடைவெளியில்
கையாளும் திறமையில்
கைதட்டல் வாங்கியபடியே
பொசுக்கென இறக்கிறாய்

#கொசு_செத்துடுச்சி ;)


எப்படிச் சொல்ல...?


பெரு நகர பேருந்தில்
நரக பயணத்தில்
பெண்ணாய் படும்
அவஸ்தைகளை
எப்படிச் சொல்ல...?

இருக்கைகள் நிறைந்த
காலை வேளையில்
கிடைக்கும் இடைவெளியில்
என்னை நிறுத்திக்கொள்ள
முயலும் போராட்டத்தை
எப்படிச் சொல்ல...?

உடைக்குள் ஊடுருவி
உடல் தேடும் ஒருவனிடம்
உடலுக்குள் மனுசி என்ற
மனசொன்று இருப்பதை
எப்படிச் சொல்ல...?

மல்லிகை கருகும்படி
முதுகில் மூச்சுக்காற்றை
ஊசியாய் இறக்கும் ஒருவனிடம்
உனக்கும் என் வயதிலொரு
சகோதரி இருப்பாளென
எப்படிச் சொல்ல...?

கடக்கும் சாக்கில்
கம்பியை பிடித்தபடி
பின்னுரசும் ஒருவனிடம்
பிசுபிசுப்பின் ஈரக்கசிவை
எப்படிச் சொல்ல...?

வெக்கை தகிக்கும் வியர்வையில்
வழிந்திறங்கும் துளிகளில்
வாசம் நுகரும் ஒருவனிடம்
உதிரம் கசியும் வலியை
எப்படிச் சொல்ல...?

காலதாமதத்திற்கு காரணம் கேட்டு
கைப்பேசியில் வந்து குதறும் மேலாளருக்கு
"அந்த மூன்று நாட்களில்"
அலுவலகம் வர கொஞ்சம்
தாமதமாகுமென்பதை
எப்படிச் சொல்ல...???


23 November 2017

இரவுகள் பலவிதம்





தொலைதூர பயணங்களில் 
தூக்கமில்லாமல் நீள்கிறது 
ஓட்டுனர், நடத்துனரின் இரவு ....!

மீட்டருக்கு மேல் கேட்டு கேட்டு 
மீட்டருக்குல்லேயே முடிந்து விடுகிறது 
சில ஆட்டோக்காரர்களின் இரவு.....!

கண்களுக்கும் கணினிக்குமான யுத்தத்தில் 
விரல்களோடு விடியாமலே இருக்கிறது 
ஐ டி பொறியாளர்களின் இரவு.....!

மின்சாரம் இல்லாத நேரத்திலும் 
புத்தகங்களோடு போராடி போகிறது 
மாணவனின் இரவு ....!

அழுகின்ற குழந்தையை 
சமாதானப்படுத்தும் முயற்சியில் 
தொலைந்துபோய் விடுகிறது 
இளம் தாயின் இரவு.....!

திறக்காத பூட்டுகளோடு 
சண்டையிட்டு சமாதானம் அடைகிறது 
திருடனின் இரவு.....!

வாடிக்கையாளர் வராததால் 
வசைகளை சுமந்துகொண்டு நகர்கிறது 
விபச்சாரியின் இரவு.....!

குறட்டைகளாலும் 
மாமூல்களாலும்  நிரம்பி வழிகிறது
போலீஷ்காரர்களின் இரவு.....!

முத்தங்கள்  சுமந்த உதடுகளோடு 
போதையேறி உறங்கப்போகிறது 
நடிகையின் இரவு.....!

கறுப்புப்பணத்தில் கலர் கலர் 
கனவுகளாய் விரிகிறது 
அரசியல்வாதியின் இரவு....!

அடுத்தநாள் உழைப்பிற்காக 
நிம்மதியாய் தொடர்கிறது
ஏழையின்  இரவு....!

09 July 2017

நிறம் மாறும் முகங்கள்...!


பிரியங்களின் ஒரு துளியையோ
அன்பின் ஒரு துகளையோ
நம்மீது தெளிப்பவர்களைக்
கொண்டாடும் மனதுக்கு புரிவதேயில்லை
சிலசமயம் அவர்களின் முகங்கள்
நிறம் மாறுமென்பதை

பழகவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
தவிக்கும் தருணங்களில்
பழைய சொற்களின் மேல் விழுந்த
நம்பிக்கை மெல்ல நழுவும்

மகிழ்வைக் கொண்டாடிய நாட்களை
சந்தேகத்தின் துருப்பிடித்த நேசமொன்று கிளறிப்பார்க்கும்

பிரமிப்பின் உச்சியில் இருந்த கணத்தை
வெறுப்புகளின் அதள பாதாளத்தில்
போட்டு மூடச்சொல்லும்

ஒரு வரியோ
ஒரு வார்த்தையோ
சுட்டிக்காட்டும் நிகழ்வை
சொற்களின் கூர்மை சோதிக்கும்

மனம் திருந்தி
தவறுகள் திருத்தி
திரும்பி வந்து ரோஜாக்களோடு கைகுலுக்கும் பொழுதில்
முட்கள் மட்டுமே ஆழமாய்  இறங்கும்....!


01 June 2017

தெரிந்திருக்கக்கூடும்

கோவில் திருவிழாவின்
கொண்டாட்டத்தில்
உடம்பெல்லாம் சிவந்தபடி ஆடுகிறார்
காளி வேடமிட்டவர்

ஒப்பனைகளால் மூழ்கியவரை
கடவுளாகவே நினைத்து
காலில் விழுகிறார்கள்
அவரும் அழகாய் ஆசிர்வதிக்கிறார்

ஆட்டம் முடிந்ததும்
ஓய்வெடுக்கும் காளிக்கு உறுத்துகிறது
சுமக்கும் சூலாயுதமும் கிரீடமும்
பின்பக்கம் ஒட்டவைத்த கைகளும்

மிரட்டும் விழிகளோடும்
துருத்தும் நாக்கோடும்
நிற்கும் காளிகண்டு பயமற்று பக்கம்நின்று
புகைப்படம் எடுத்துக்கொண்ட சிறுவனிடம்
வேண்டுதல் வைக்கிறாள் காளி

அவன் கொண்டுவந்த தண்ணீரில்
தாகம் தீர்த்தபடி
ஒப்பனைகளைக் களையும் காளிக்கு தெரிந்திருக்கக்கூடும்
சிறுவன் ஒரு தெய்வமாய்...!


26 May 2017

ரகசியக் கிடங்கு


எனக்குத் தெரியும்
உன்னோடு நானற்ற பொழுதுகளில்
காலம் உனக்கு நொடி நொடியாகவே கரையும்
என்னோடு நீயில்லா ஒரு மணி நேரம்
எனக்கு யுகம் யுகமாய் விரியும்

உன்னில் விழுந்து
உன்னிலே தொலைந்தவன்
முன்னெழுந்து பின்தூங்கினாலும்
கனவின் கக்கத்தில் நீ வேண்டுமெனக்கு

தீண்டத் தீண்ட
வெட்கங்களும் முத்தங்களும் கொடுக்கும் நீ
ரகசியங்கள் நிரம்பிய குட்டிக்கிடங்கு

இரவிலென் நிழல் பிரிந்தாலும்
துடிக்கும் ஓசையில்
அதிரும் மெளனத்தில்
இடப்பக்க இதயத்தில் எப்பொதுமிருக்கிறாய்

நீயின்றி ஒருநாள்
உன் நினைப்பின்றி சில சிலநாட்கள்
உன்னைத் தொடாமல் சில மாதங்கள்
வாழ்ந்து பார்க்க ஆசைதான்

அதற்கான வாய்ப்புகளற்ற
சாபத்தின் சாயல்கள் சுமந்தபடிதான்
விடிகிறது ஒவ்வொரு இரவும்

யாராவது சொல்லுங்களேன்
இந்த #கைப்பேசி இல்லாமல்
வாழவே முடியாதா???

09 May 2017

மிஸ்டு கால்

படைப்பு
மாதாந்திர மின்னிதழ் -12 ல்
எனது "மிஸ்டு கால்" பற்றிய கவிதை.

படைப்பு குழுமம் சார்ந்த எல்லோருக்கும் அன்பும் நன்றிகளும் ..!



26 April 2017

ரகசியங்கள்

தொட்டுவிடும் தூரத்தில்
ஒன்றோடொன்று உரசியபடி
தொங்கிக்கொண்டிருந்தன
ஆயிரம் நட்சத்திரங்கள்

பட்டாம்பூச்சியை விட பெரியதாய்
பறந்து திரிகின்றன
கண்கூசும் மின்மினிப்பூச்சிகள்

வெளிச்சப்பூக்களை உதிர்த்தபடி
கிளைகளெங்கும் ஓடிப்படரும் ஒளியில்
விரிகிறதொரு பெருமரம்

சிறகுமுளைத்த தேவதைகள் சுமந்து
செல்கிறார்கள் குழந்தைகளுக்கான
குட்டி குட்டி வரங்களை

ரகசியங்களும் வியப்புகளும் நிறைந்த
பெரிய பெட்டியொன்றின் சாவியை
என் கைகளுக்குள் திணிக்கிறது
ஏதோ ஒரு பிம்பமில்லா உருவம்

மூன்று திருகுகள் கொண்ட பூட்டின்
முதல் திருகளின் முடிவில் ஓங்கி ஒலிக்கும்
அலாரத்தின் நடுவில் உடைந்து சிதறுகிறது
அந்த பெருங்கனவு

பெட்டி நிறைந்த ரகசியங்கள்
ரகசியங்களாகவே இருக்கின்றன...!


13 April 2017

நீங்களும் உங்க ஜனநாயகமும்

உங்களிடம் இன்னும்
லத்திகளும் துப்பாக்கிகளும்
மீதமிருக்கின்றன அதையும்
அப்பாவிகள் மீது பிரயோகியுங்கள்

பள்ளிகளுக்கும் கோவிலுக்கும்
அருகில் ஆட்சியரின் அனுமதியோடு
சாராயக்கடை திறப்புவிழா
நடத்துங்கள்

அம்மணமான விவசாயிகளிடம்
முண்டாசுகள் அவிழாமல் இருக்கின்றன
அதை பிடுங்க ஆயுதப்படையை அனுப்புங்கள்

உரிமைக்காக போராடும்
மாணவர்களின் மீது
உங்கள் கையாலாகாத்தனத்தை
கட்டவிழுங்கள்

பெண்களிடமும்
பெரியவர்களிடமும்
வன்முறையை நிகழ்த்தி
உங்கள் வீரத்தை
மெச்சிக்கொள்ளுங்கள்

இன்னும் வாகனங்களும்
வாழ்க்கையும் மிச்சமிருக்கின்றன
அதையும் தீயிட்டுக் கொளுத்துங்கள்

இறுதியில் இழப்பீடென
எதையாவது அறிவித்து அதையும்
உங்கள் சட்டைப்பையில்
திணித்துக்கொள்ளுங்கள்

விவசாயிகளை மதிக்காத நாட்டில்
மக்களை மதிக்காத மாநிலத்தில்
மனிதனாய் வாழ நாதியற்ற ஊரில்

தமிழ் புத்தாண்டென்ன
ஆங்கிலப் புத்தாண்டென்ன
போங்கடா நீங்களும்
உங்க ஜனநாயகமும் ...!



மெளனத்தின் சத்தம்

அன்பின் அடுக்குகளில்
என்னை இன்னும் இன்னும்
உயர்த்துகிறது படைப்பு ...!

மார்ச் மாதத்திற்கான
"மின் இதழ் - 11" (01.04.2017)இல்
எனது கவிதையும்

என் கவிதையை தேர்வு செய்த
படைப்பு குழுவுக்கு
அளவில்லா நன்றிகளும்
அழகான வடிவமைப்புக்கு
வற்றாத வாழ்த்துகளும் ...!
***************************
ரகசியங்கள் நிறைந்த
ராத்திரியின் நடுநிசியில்
அடர் மெளனத்தை குலைக்கிறது
கோடங்கியின் குடுகுடுப்பை சத்தம்

இரண்டு வீதி தாண்டி
நீளும் ஒரு குறுகிய சந்துக்குள் கேட்கிறது
ஊளையிடும் நாயின் சத்தம்

வெக்கை நிமித்தமாய்
வெளித்திண்ணையில் புரண்டு படுக்கிறது
ஒரு பெரியவரின் இருமல் சத்தம்

முக்கிய சாலையின் வழியே
சுழலும் விளக்கோடு வேகமாய் விரைகிறது
அவசர ஊர்தியின் அபாயச் சத்தம்

இரைதேடும் இரவில்
பறந்தபடியே பயமாய் கேட்கிறது
ஒரு ஆந்தையின் அலறல் சத்தம்

பாதிக்கதவு சாத்தியபடி
விற்கப்படும் தேநீர்க் கடையிலிருந்து சூடாய்க் கசிகிறது
இளையராஜாவின் பாட்டுச் சத்தம்

முழுதாய் மூடிய கதவுகளின்
சாவித் துவாரத்தின் வழியே
காற்றில் கசிகிறது ஒரு
முத்தச் சத்தம்

இத்தனையும் மீறி இப்போதும்
யாராவது வருவார்களென்ற நம்பிக்கையில் ஒலிக்கிறது
குல்ஃபி ஐஸ் விற்பவனின் சைக்கிள் மணிச்சத்தம் ...!



எப்படிச் சொல்ல...?


பெரு நகர பேருந்தில் 
நரக பயணத்தில் 
பெண்ணாய் படும் 
அவஸ்தைகளை 
எப்படிச் சொல்ல...?

இருக்கைகள் நிறைந்த 
காலை வேளையில் 
கிடைக்கும் இடைவெளியில் 
என்னை நிறுத்திக்கொள்ள
முயலும் போராட்டத்தை 
எப்படிச் சொல்ல...?

உடைக்குள் ஊடுருவி 
உடல் தேடும் ஒருவனிடம் 
உடலுக்குள் மனுசி என்ற 
மனசொன்று இருப்பதை 
எப்படிச் சொல்ல...?

மல்லிகை கருகும்படி 
முதுகில் மூச்சுக்காற்றை 
ஊசியாய் இறக்கும் ஒருவனிடம் 
உனக்கும் என் வயதிலொரு 
சகோதரி இருப்பாளென 
எப்படிச் சொல்ல...?

கடக்கும் சாக்கில் 
கம்பியை பிடித்தபடி 
பின்னுரசும் ஒருவனிடம்  
பிசுபிசுப்பின் ஈரக்கசிவை 
எப்படிச் சொல்ல...?  

வெக்கை தகிக்கும் வியர்வையில்
வழிந்திறங்கும் துளிகளில் 
வாசம் நுகரும் ஒருவனிடம் 
உதிரம் கசியும் வலியை 
எப்படிச் சொல்ல...?

காலதாமதத்திற்கு காரணம் கேட்டு 
கைப்பேசியில் வந்து குதறும் 
மேலாளருக்கு 
"அந்த மூன்று நாட்களில்"
அலுவலகம் வர கொஞ்சம் தாமதமாகுமென்பதை 
எப்படிச் சொல்ல...???


தவறிய அழைப்பு

ஆழ்ந்த உறக்கத்தின்
அர்த்த ராத்திரியில்
கைப்பேசிக்குள் விழுந்து கிடந்தது
ஒரு தவறிய அழைப்பு

நடுநிசியின்
பெரு மெளன அமைதியிலும்
என் செவிப்பறைக்கு எட்டாத நொடியில்
அது தன் சத்தத்தை
நிறுத்தியிருக்கக்கூடும்

சங்கீதம் வழிந்தபடி
எழுப்பிய அலாரம்
அரைக்கண்ணில் பார்க்க வைத்தது
அந்த தவறிய அழைப்பை

விபரங்கள் ஏதுமற்ற
அந்த புது எண்ணின் மீது
குவியும் கவனத்தில்
தொலைந்துபோன நட்பும்
உடைந்துபோன உறவுகளும்
வந்து போகின்றன

ஆர்வத்தோடும் அன்போடும்
திருப்பி அழைத்தபோது
"நீங்கள் அழைத்த எண் தற்போது
அணைத்து வைப்பட்டிருக்கிறதென" வரும்
பதிவுக்குரலால்

நீளும் சந்தேகத்தையும்
குமுறும் குறுகுறுப்பையும்
பெருகும் பயத்தையும்
எதைக்கொண்டு நிரப்புவது ...???

#குறிப்பு: புலிகேசி படத்தில் வரும் "ஒரு புறாவுக்கெல்லாம் போரா? பெரிய அக்கப்போராகவல்லவா இருக்கிறது" என்பதுபோல்...
"ஒரு மிஸ்டு காலுக்கெல்லாம் கவிதையா ..?" எனக் கொதிப்பவர்களுக்கு ....
"வேற வழியில்லை போற போக்குல அப்டியே படிச்சிட்டு போங்க என்ன இப்போ....!"


21 March 2017

கவிதை தினமாமே

மனதின் ஓரங்களில்
அங்குமிங்கும் அலையும்
வார்த்தைகளை வடிகட்டி
கொஞ்சம் மகிழ்வும்
கொஞ்சம் வலியும்
கலந்து கோர்க்கிறேன்

அது  வாக்கியங்களாகவும்
சில நேரங்களில்
யாரோ ஒருவருடைய
வாழ்க்கையாகவும் மிளிர்கிறது

கடந்த வந்த நாளை
காத்திருக்கும் நாளைகளோடு
சேர்த்து திரிக்கையில்
அது சிலநேரங்களில்
விருப்பக் குறியீடுகளாகவோ
விமர்சனங்களாகவோ மாறிவிடுகிறது

மொழியை நேசிக்குமொரு
தருணத்தில் வந்துவிழும்
சொற்களைப் பொருக்கி
புதிதாய் நெய்ய முயல்கிறேன்
அது சில நேரங்களில்
அனுபவமாகவோ
எதிர்பார்ப்பாகவோ அடங்கிவிடுகிறது

எனக்கென நேரமெடுத்து
பிரியங்களின் அன்பிலோ
பிரிவுகளின் துயரிலோ
வாழும் நொடிகளை
கவிதையாக்க நினைக்கிறேன்

அந்த எழுத்துக்களோ
என்னை இன்னும் வாசகனாகவே
வைத்திருக்கின்றன ....!!!

#எதோ கவிதை தினமாமே நாமளும் எதையாவது சொல்லி வைப்போம்.

13 March 2017

உச்சிமுதல் பாதம் வரை

அரிந்து வைத்த
ஆப்பிள் துண்டுகளைப்போல்
பளபளக்கும் கண்ணங்களில்
மினுக்குகிறது உன் நிறத்துக்கு
போட்டியாய் ஒரு ரோஸ் கலர்

கருப்பு திராட்சையாய்
உருளும் கண்களின்
மேல் புருவத்தில் புரள்கிறது
கொஞ்சம் மஞ்சள் நிறம்

ஜெர்ரிப்பழத்தின்
செதில்களைப்போல்
சேர்த்திருக்கும் உதடுகளின் கீழ்
உன்னை முத்தமிட துடிக்கிறது
ஒரு பச்சை வண்ணப்பொடி

உரித்து வைத்த ஆரஞ்சு சுளையாய்
நீளுமுன் மூக்கின் நுனியில்
சிவந்திருக்கிறது ஒரு சிவப்பு

உன்
பத்துவிரல்கள் தொட்டெடுக்க
வண்ணங்கள் பத்தாது
உன் உச்சிமுதல் பாதம் வரை
உச்சரிக்க பழங்கள் சிக்காது

நீ
ஹோலியை கொண்டாடவில்லை
அதுதான் உன்னைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறது



12 March 2017

குட்டி உலகத்தைக் கொண்டாடு

மந்திரக்கோலும் சிறகுகளும்
இல்லாமல் பிறந்த தேவதை நீ
கனவுகளாலும் வாஞ்சைகளாலும்
வளர்த்தெடுக்கப்பட்ட  பூவுந்தன் வயிற்றில்
வளர்கிறது மொட்டொன்று

பிரியங்களின் பெருவெளிச்சத்தை
பிரசவிக்கப்போகிறாய்
சுத்தம் செய்யப்பட்ட குட்டி சொர்க்கமொன்றை
உன் கைகளில் கொடுக்கும் போது
ஒட்டுமொத்த முத்தத்தையும்
ஒரேநாளில் கொடுக்க எத்தனிப்பாய்

பேறுவலியிலோ பேரானந்தத்திலோ
நீ கண்ணயரும் கனமொன்றில்
அழுகைமொழியோடு அக்குழந்தை
உன்னை அழைக்க நேரிடும்

சிரிப்பைப் போலவே அதன் அழுகையையும் ரசி
முதல் முறை சுரக்கும்
தாய்ப்பாலின் சுகம் உணர்
கைகால் முளைத்த
உன் குட்டி உலகத்தைக் கொண்டாடு
கடந்தகால காயங்களை மற
எதிர்கால கனவுகள் வளர்

போதும்
இனிமேல் தயவுசெய்து
என் கனவுகளில் வராதே
ஏனெனில்
எனக்கும் கல்யாணம் ஆகப்போகிறது.


07 March 2017

பெண்கள் சூழ் உலகு ..!



பேரன்பின் பிடியிலிருந்து
நழுவும் போதெல்லாம்
தாங்கிப்பிடிக்கும் கரங்களாய்
எப்போதும் இருக்கிறார்கள் சில பெண்கள்

துரோகங்களாலும்
ஏமாற்றங்களாலும் உடையும் போது
அன்பாலும் ஆறுதல்களாலும்
உயிர்ப்பிக்கிறார்கள்
தோழிகளாய் சில பெண்கள்

உண்மையாய் சண்டையிட்டு
பொய்யாய் கோபித்து
பொசுக்கென சமாதானம் ஆகிறார்கள்
அக்கா தங்கைகளாய் சில பெண்கள்

கனவுகளை பொசுக்கி
லட்சியங்களை நசுக்கி
மீளாத்துயரில் தள்ளிவிட்டு போகிறார்கள்
காதலிகளாய் சில பெண்கள்

திரும்ப முடியா பயணத்திலிருந்தோ
திருத்த முடியா பழக்கத்திலிருந்தோ
மிக இயல்பாய் மீட்டெடுக்கிறார்கள்
மனைவிகளாய் சில பெண்கள்

எத்தனைதான் நடந்தாலும்
எப்படிதான் இருந்தாலும்
இது என் குழந்தைதான் என
இப்போதும் நெகிழ்கிறார்கள்
அம்மாக்களாய் சில பெண்கள்

பெண்கள் சூழ் உலகில் வாழ்வது அறமெனில்
பெண்ணாய்ப் பிறப்பது வரம் ...!

#மகளிர்_தின_வாழ்த்துகள் :)


27 February 2017

சாக்லேட்டின் சுவை

வெளிநாட்டில் இருந்து
வாங்கி வரப்பட்ட நீளமான சாக்லேட் ஒன்று
என் கைகளுக்கு கிடைத்தது

உருகி குழைந்து போகாமல் இருக்க
பிரிட்ஜில் வைக்கவேண்டிய அதை
பிரம்மச்சாரிகள் வாழும் விடுதியின்
பீரோவுக்குள் வைத்திருந்தேன்

கதவு திறக்கும் போதெல்லாம்
வாசம் வந்து என்னை உசுப்பவில்லை அது
அழும் குழந்தையைப்போல
யாராவது எடுப்பார்களா என ஏங்கவில்லை அது

எழுதி முடித்துவிட்டு வைத்த முற்றுப்புள்ளியைப்போல
ஏதும் செய்யாமல் இருந்த அதை
இரண்டு நாள் கழித்து எடுத்து பிரிக்கையில்
மூலை மடிப்புகளில் ஒட்டியபடி வழிகிறது

எனக்கென கைநீட்டும் குழந்தையோ
எனக்கு வேண்டாமென சொல்லும் அம்மாவோ
பெரிய பீஸ் எனக்கென்னும் தங்கையோ
அடித்து பிடுங்கி தின்னும் நண்பனோ
இதழோரம் வழிய சுவைக்கும் காதலியோ இல்லாமல்

தனியாக உண்ணும்போது நாக்கில்
ஒட்டவே இல்லை அந்தச் சாக்லேட்டின் சுவை