15 December 2010

சின்ன உலகம்


முதல் இரண்டு நாள்
முழுதாய் இருந்தது...

மூன்றாவது நாள் வலது கையின்
நான்கு விரல்கள் காணாமல் போயிருந்தன...

அடுத்த நாள் தரைதேய்த்து இழுத்ததில்
ஆங்காங்கே சில சிறாய்ப்புகள்...

உடைந்துபோன கால்கள் இன்னும்
ஊனமாகவே இருக்கின்றன ....

நகம் கிழித்த வயிற்றுப்பகுதியில் இருந்து
சரிந்து கிடக்கிறது கொஞ்சம் குடல்கள் ...

சாயம்போன உடையின்
எல்லா இடங்களிலும் காயங்கள் ....

கலைந்துபோன கூந்தலால்
அலங்கோலமாய்  கிடக்கிறது தலை ....

ஒரு காதும் ஒரு கண்ணும்
லேசான காயங்களோடு தப்பியிருந்தன ....
மூக்கு முட்டும் முழுதாய் இருந்தது ....

ஆனாலும் ....!

இன்னும் இரவு நேரங்களில்
அந்த பொம்மையை கட்டிப்பிடித்துக்கொண்டுதான்
தூங்குகிறாள் எங்கள் வீட்டு இளவரசி ...! 

சிற்பம்

நீ
நகம்  கடிக்கும் அழகைப்பார்த்து
நினைத்துக்கொண்டேன்....!
ஒரு சிற்பம் தன்னைத்தானே
செதுக்கிகொள்கிறதென...!

வெறுமை




நீ இல்லாத வாழ்க்கை 
வெறுமைதான் 
எழுதப்படாத
வெள்ளைப்பக்கங்களைப்போல..!

துளசிச்செடி



தினமும் நீ சுற்றி சுற்றி வருகிறாய்
அதனால் தான் துளிர்விடுகிறது
உன் வீட்டு முற்றத்தில் இருக்கும்
துளசிச்செடி ...!

ஒரு சில மழைகள்


ஒரு அழகான சாயங்கால வேளை..
வானம் தண்ணீர் துளிகளை அனுப்பி
பூமியின் நலம் விசாரிக்கிறது ....

ஜன்னலோர கம்பிகலோடு
நானும் நனைந்து கொண்டிருக்கிறேன் ...
முகத்தில் தெறிக்கிறது
ஒரு சில சாரல்கள் ...
வானவில்லில் வந்து போகிறது
அவள் வெட்க்கத்தின் நிறம் ...
கூடுகளைத்தேடி ஓடுகிறது
ஒரு சில பறவைகள் ....
குடைகள் தேடி அலைகிறது
ஒரு சில கண்கள் ...
தேநீர் தேடி அலைகிறது
ஒரு சில உதடுகள் ....
ஒழுகும் வீடுகளை அடைக்க
பொருள்தேடி அலைகிறது
ஒரு சில கைகள் ...
மழைநீரை வாரி இறைத்து விரைகின்றன
ஒரு சில நகர பேருந்துகள் ...
நனைந்த படி நகர்கின்றன
ஒரு சில கிராமத்து மாட்டுவண்டிகள் ...
கோணிப்பைகளில் குருகிக்கிடக்கிறது
ஒரு சில உயிர்கள் ....

எல்லாவற்றுக்கும் நடுவே
இந்த வருடமாவது வறுமை தீரவேண்டுமென
வருத்தமுடன் வேண்டிக்கொண்டிருக்கிறான்
எங்கோ ஒரு விவசாயி ....!

ஆனாலும் ..
இன்னும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறது
ஒரு சில மழைகள் ....

நீ .....நீ .....நீ .....


நீ பூமிக்கு வந்த தேவதை ...
நடைபழகும் நிலா ...
நட்சத்திரங்களின் தோழி ...
பூக்களின் ராணி ...
இப்படியெல்லாம் சொல்லி
உன்னை அந்நியப்படுத்த
விரும்பவில்லை...!
நீ .....
என் நிழலின் பாதி
நிஜத்தின் மீதி ...
என் விரலின் நகம் ...
நகத்தின் நிறம் ...
இதயத்தின் பாதை ...
துடிப்புகளின் ரேகை ...
இமைகளின் கண்கள் ...
கண்களின் பார்வை ...
நடமாடும் உடல்...
உடலுக்குள் ஒளிந்திருக்கும் உயிர்..!!!

திருக்கோவில்


உன் வீட்டு திண்ணை கூட
திருக்கோவில் தான் ...
தங்கச் சிலையாய்
நீ அமர்ந்திருக்கும் வேலைகளில் ..!

மகிழ்ச்சியின் உயரம்



நான் தனியாக போகும்
என் இரு சக்கர வாகனம் ...
நீ ஏறியவுடன்
விமானமாகிவிடுகிறது...!

வெட்கம்




நீ இறங்கிப்போய்விட்டாய்
ஆடிய ஊஞ்சலில்
உட்கார்ந்திருக்கிறது ...
உன் வெட்கம் ....

காத்திருப்பு



புகைவண்டியின் பயணத்திற்க்காக
வாகனங்கள் காத்திருக்கிறது ....
நீ பயணிக்கிறாய் என்றதும்
புகைவண்டி காத்திருக்கிறது ......!

உன் பிறந்தநாளுக்காக




என் நிழலின் விரல் பிடித்து
நீண்ட தூரம் நடக்க இருப்பவளே......
ஒவ்வொரு அணுவிலும்
என் உயிரோடு கலந்திருப்பவளே ......
பெரிதாய் பெய்யும் மழையில்
துளித் துளியாய் நனைவது போல் .....

உன் பெரிய அன்பில்
சின்ன சின்னதாய் நனைகிறேன்....

ஒரு தேவதையின்
எல்லா அம்சங்களோடும்
அழகாகவே இருக்கிறாய் ....

உன் புன்னகை
உன் வெட்க்கம்
உன் கண்ணீர்
உன் கோபம்
உன் சிணுங்கள்
உன் கெஞ்சல்
உன் கொஞ்சல்
உன் சோம்பல்
எல்லாம் ....
எல்லாம் ...
உன்னைப்போலவே
அழகாக இருக்கின்றன ...

அவைதான் உன்னை
இன்னும் அழகாக மாற்றுகின்றன....

எல்லா கண்களும்
உன்னையே பார்ப்பது போல் .....
எல்லா புகைப்பட கருவிகளும்
உன்னையே படம் பிடிக்க நினைக்கிறது ......
இன்று நீ அணிந்து அழகு பார்த்தது
ஒரு உடைதான்...
உன்னை அணிய முடியாமல்
அழுது கொண்டிருக்கின்றன
பல உடைகள்...

உன் விரல் பிடித்து நடக்க விண்மீன்களும்
உன் முகம் பார்த்துக்கிடக்க முழுநிலவும் ...
உன் சுவடுகள் ஏந்த கடற்க்கரையும் ...
உன் பாதம் நனைக்க கடல் அலையும் ...
உன் கூந்தல் பிடிக்க பூக்கடையும் ...
உன் குறும்பை ரசிக்க நானும்
காத்திருக்கிறோம் ....

நீ வந்து ஏற்றாமல் தீபங்கள் எரியாது ..
நீ வந்து பார்க்காமல் கடவுளும் கிடையாது ...

உலகப் பூக்களெல்லாம்
ஒன்று கூடினாலும்
உன் புன்னகை தோற்காது ....

உன் விரல்களின் ரேகை
மறையாமல் இருப்பது போல்...
உன் உதடுகளின் புன்னகை
குறையாமல் இருக்கட்டும் ...

உன் எல்லா பிறந்த நாளிலும்
உலகம் சிரிக்கட்டும்.........
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... !!

வெட்கத்தின் நிறம்



எந்த தூரிகையாலும்
தீட்டிவிட முடியாது ...
அம்மாவுடைய வெட்கத்தின் நிறத்தை ....!

நினைவுகள் ....


நானும்..! நீயும்..!
தொட முடியாத தொலைவில் இருக்கிறோம்..!
தொட்டு தொட்டு
விளையாடிக்கொண்டிருக்கிறது
நம் நினைவுகள்...!

தொட்டில்



உன் இரவு பயணத்தின் போதெல்லாம்
ஒரு தேவதையை தாலாட்டி தூங்க வைக்கும்
மிகப்பெரிய தொட்டிலாய் மாறிவிடுகிறது
புகைவண்டி .....!!!

நீ இல்லாத இரவுகள்....!


வெறுமையாகவே விடிகிறது
நீ இல்லாத இரவுகள்.....!

கனவில் பேசிய வார்த்தைகள் கூட
காலையில் மறந்து போகிறது
மனப்பாட பகுதிகளைப்போல ...

நீ கொடுத்த முத்தங்கள்........
அலைபேசியின் எந்த பகுதியில்
ஒளிந்து கிடக்கிறதோ இப்போது ....!
மவுனத்தின் நிசப்தங்களில்
எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள் ....

எங்கிருந்தாலும் என்னை
நெட்டித்தள்ளி
இழுத்துக்கொண்டு போகிறது
உன் நினைவுகள் ....

உன்னைப்பற்றி எழுதும்போதெல்லாம்
இளமையை கொட்டுகிறது
என் பேனா....!

வீதியில் போகும் பலூன்காரனை
வேடிக்கை பார்க்கும் குழந்தையைப்போல்
வேடிக்கை பார்க்கிறேன்
என்னைக்கடந்து போகும்
காதல் ஜோடிகளை .....!

கடை வாசலில் தொங்கும்
உடையை உனக்கு போட்டு
அழகு பார்க்கிறேன்
கற்பனையில்....

எங்கோ கேட்கும் ரயிலின் சத்தம்
நினைவுபடுத்துகிறது
நீ வழியனுப்பி வைத்த நிமிடங்களை ...!

வானம் பார்த்து படுத்திருக்கும்
மொட்டைமாடி இரவுகளில்
நிலவு நினைவுபடுத்துகிறது
ஒப்பனையற்ற உன் முகத்தை ....!

ஒட்டைக்குடிசையில் ஒழுகும்
மழைத்துளிகளைப்போல்
உள்ளுக்குள் சில்லிடுகிறது
சில நிமிடங்கள் ......!


உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.....!

ரசனை


தவறுகள் கூட
ரசனைக்குரியதாகிவிடுகிறது ...!
குழந்தைகள் பேசும் போது...!