10 May 2017

தேர்வுகளும் - முடிவுகளும்


இன்னும் ஓரிரண்டு நாளில் +2 தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பினூடே கொஞ்சம் பதைபதைப்பும் பயமும் அதிகரிக்கிறது. காரணம் தேர்வில் தோல்வியும் அதன்மீதான காரணங்களால் தற்கொலைகளும் எப்போதும் தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. இன்னும் எத்தனை காலங்களுக்கு இந்த மாதிரியான இறுக்கமான சூழ்நிலைகளை "தலைவிதி" என்னும் ஒற்றைச்சொல்லோடு கடந்துபோகப் போகிறோமோ?

பயிலரங்கு வகுப்புகள், தன்னம்பிக்கை வகுப்புகள், ஆலோசனை வகுப்புகள் என எத்தனையோ அங்கங்கே நடந்துகொண்டே இருந்தாலும் கூட ஒரு பக்கம் தேர்வு தோல்விகளின் காரணமாய் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு அதில் முன்னிலையில் இருக்கிறது என்பது இன்னும் சோகம். அந்த பிஞ்சுகளின் தற்கொலைகளுக்கு வெறும் மதிப்பெண்கள் மட்டுமே காரணம் என அத்தனை எளிதாய் கடந்துவிடக் கூடாது, மதிப்பெண்களை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்யும் சில பள்ளிகள், இந்த சமூகம், சமூகத்திற்கு போட்டியாக தம் குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் எந்திரங்களாய் மாற்றிய சில பெற்றோர், அடுத்தவர்களோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தும் சில உறவுகள், தன்னால் முடியாத, தனக்கே வராத ஒன்றை தங்கள் பிள்ளைகளின் மீது வலுக்கட்டாயமாய் திணிக்கும் எல்லோருமே சேர்ந்துதான் இதற்கு பொறுப்பு.

போட்டிகள் நிறைந்த உலகில் நிம்மதியாகவும், சந்தோசமாகவும், வசதியாகவும் , என் பிள்ளைகள் வாழ  வேண்டாமா? நான் பட்ட கஷ்டத்தை என் பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளும் பட வேண்டுமா? என பலதரப்பட்ட கேள்விகளை பெற்றோர்களின் வாய்வழியாகவோ கனத்த மெளனத்தின் இறுகிய முகங்களின் வழியாகவோ கேட்கவும் உணரவும் முடிகிறது. அதே வேளையில் மதிப்பெண்கள் வெறும் "எண்கள்" மட்டுமே என்பதையும் நாம் உணரத்தான் வேண்டும்.

ஒரு சின்ன உதாரணம் சொல்லட்டுமா?

எல்லோரையும் போலவே பள்ளிக்கூடத்திற்கு பல கனவுகள் சுமந்தபடி போனவன்தான் அவனும், அரசுப்பள்ளிதான் எனினும் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத ஒரு சூழல், அப்பாவுக்கு வேலை போய்விட்டது, நெசவு நெய்யும் அம்மாவால் அவனோடு சேர்த்து மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாத தருணமொன்றில் பெருகும் கடனால் ஆசையாய் கட்டிய வீட்டை விற்று விட்டு ஒரு ஓலைக்குடிசையில் குடியேறுகிறார்கள். அண்ணனனும் தங்கையும் படிக்கட்டுமென 14 வயதில் அந்த குடும்பத்தின் சுமைகளை கொஞ்சமாய் தன் தோள்களில் சுமக்கத்தொடங்குகிறான். வருடங்கள் வேகமாய் ஓடுகிறது குடிசை வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறுகிறார்கள். அவன் அண்ணனும் தங்கையும் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் போகிறார்கள், அவன் இரவு வேலைகள் நிறைந்த ஒரு பட்டறையிலிருந்து பகல் வேலைகள் மட்டுமே கொண்ட ஒரு அலுவலகத்தில் சேருகிறான். படிப்பு முடித்த அவன் அண்ணன் வேலைக்கு வர குடும்ப நிலைமை கொஞ்சம் சீராகிறது, பாதியில் விட்ட படிப்பை தொடரச்சொல்லி அவன் அண்ணன் உற்சாகப்படுத்த 7 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் பாட புத்தகம் தொடுகிறான். வேலை செய்துகொண்டே பகுதி நேர படிப்பில் தனியார் தேர்வு மூலம் பத்தாவது தேர்வாகிறான். பிறகு முழுநேர கல்வியாக பட்டய படிப்பு அதில் முதல் வகுப்பில் தேர்வாகி பொறியியல் சேருகிறான் அதிலும் முதல் வகுப்பில் தேர்வாகிறான். பல தடைகளையும் தோல்விகளையும் சந்திக்கிறான் ஆனாலும், +2 வில் அதிக மதிப்பெண் பெற்று, நல்ல கல்லூரியில் படித்து வசதியான வாழ்வியல் பின்னணியில் இருந்து வந்தவர்கள் பணிபுரியும் ஒரு அயல்நாட்டு தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் அவர்களுக்கு நிகராய் அவனும் இருக்கிறான் இப்போது.

அவனுக்கு வாய்த்த அந்த வாழ்க்கை வெறும் மதிப்பெண்களால் மட்டுமே வந்ததல்ல, அவன்மேல் அவன் அண்ணன் வைத்த நம்பிக்கை, அவன் குடும்பம் கொடுத்த ஊக்கம், நண்பர்கள் கொடுத்த உற்சாகம், ஆசிரியர்களின் அரவணைப்பு, அவனால் முடியுமென அவன் மீது அவனே வைத்த சிறு தன்னம்பிக்கை அவனை ஒரு நல்ல இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. நம்பிக்கை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களை நினைத்து, அவர்களின் பெற்றோர்களின் அறியாமையை நினைத்து அவனை இதை எழுதவும் தூண்டியிருக்கிறது. ஆம் "அவன்" வேறு யாருமல்ல நான்தான்.

அந்த இடைப்பட்ட காலங்களில் நான் இழந்தது ஏராளமாய் இருக்கிறது ஆனால் இன்னும் "என்னை" இழக்காமல் பத்திரமாய் வைத்திருக்கிறேன்.  அதிக சொல்லடிகளை வாங்கியிருக்கிறேன் அதன் தழும்புகளை என் சிறு சிறு வெற்றிகள் மறைத்துவிடுகின்றன. நான் தவறி விழும்போதெல்லாம் தாங்கிப்பிடிக்க என் குடும்பம் இருந்தது, நான் உடைந்து விழுந்த போதெல்லாம் நம்பிக்கையால் ஒட்டவைக்க நண்பர்கள் இருந்தார்கள், அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர நல்ல ஆசிரியர்கள் இருந்தார்கள். உன்னால் முடியுமென உற்சாகப்படுத்த ஒரு கூட்டமே இருந்தது. இவைதான் நான் சம்பாதித்த மிகப்பெரிய சொத்துகள், இதை வெறும் மதிப்பெண் நிறைந்த கல்வி மட்டுமே கொடுத்துவிடாது, தோல்விகளும், வலிகளும், அவமானங்களும் நிறைந்த வாழ்க்கைதான் மிகப்பெரிய வெற்றிகளைக்கொடுக்கும்.

அதற்காக எல்லோரும் தோற்க வேண்டுமென அர்த்தமல்ல, தோல்விகள் வரும்போது  அதைத் தாங்கும் மனமும், அடுத்த வெற்றிகளுக்கான விடாமுயற்சிகளும் எந்த சூழலிலும் உடைந்துவிடாத நம்பிக்கையும் தொடர்ந்து போராடும் வலிமையையும் வேண்டும். இதையெல்லாம் மாணவ/ மாணவிகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் , உறவுகளும், நட்புகளும் கொடுக்க வேண்டும். தேர்வில் தோற்றால் என்ன இப்போ? உங்கள் பிள்ளைகள் உயிரோடு இருந்தால் அவர்களிடம் உள்ள தனித்திறமைகளைக் கண்டறிந்து சரியான விதத்தில் அவர்களை வழிநடத்தினால் பல வெற்றிகள் அவர்களைத்தேடி வருமென்று பெற்றோர்கள் முதலில் நம்ப வேண்டும்.

"சிறகுகள் எப்போதும்
பறக்கத்தான் விரியும்
அதன்மீது சுமைகளை ஏற்றாதீர்கள்
தோல்விகளில் துளிர்க்கும்
கண்ணீர்துளிகளைத் துடைத்து
நம்பிக்கையில் நனைந்த சொற்களை பரிசளியுங்கள்
எல்லோருக்குமே வாழ்க்கை ஒருமுறைதான்"

புரிந்துகொள்ளுங்கள் மதிப்பெண்கள் வெறும் “எண்கள்” மட்டுமே...!