13 May 2017

தனிமை

விடுமுறை தினங்களின்
விடியல்களில் பொதிந்திருக்கும் வெறுமையின் அடர்த்தி
மிகக் கொடியவை

ஒடிந்த சிறகோடு
உலவும் பறவையொன்று
இரைதேட பறக்கும் அவஸ்தையைப்போல்
வலி நிறைந்தவை

பிரியங்களின் கோப்பையில்
நிரம்பி வழியும் காதலை
மெளனத்தின் மூடிகொண்டு
அடைக்கும் கணங்களில்
அது இன்னும் பொங்கி வழியும்

நீளும் கரங்களைத் தொடவும்
கசியும் முத்தங்களைப் பகிரவும்
அன்பின் அணைப்பில் உருகவும்
சாயும் மடியில் உறங்கவும்
வாய்ப்புகளற்ற பொழுதொன்றில்
முளைக்கும் கேள்வியும் பதிலுமாய்

"தனிமை"
சில நேரங்களில் மிகச்சிறந்த வரம்
சில நேரங்களில் மிகக்கொடிய சாபம்....!


யாழ்

யாரும் மீட்டாத
யாழென நீயும்
யாரும் திறக்காத
புத்தகமாய் நானும்
ஒரே கூரையின்
இரு மூலைகளில்
சிறையிருக்கிறோம்

நீயிருக்கும் கண்ணாடி
பேழைக்குள்ளும்
நானிருக்கும்  அலமாரிக்குள்ளும்
படிந்துகிடக்கும் எச்சத்தில்
இன்னும் மிச்சமிருக்கக்கூடும்

அருகருகே அமர்ந்து
கூடிக்களித்த பொழுதுகளின்
புதைக்க முடியா நொடிகள் ...!


அங்கீகாரம்



படைப்பு குழுமம் சார்ந்த அனைவருக்கும் பேரன்பும் நன்றிகளும்... என் எழுத்து பயணத்தின் அடுத்தகட்டம் நோக்கி என்னை நகர்த்தி இருக்கிறது இந்த அங்கீகாரம். நம்பிக்கையூட்டும் அனைவருக்கும் நன்றிகள்.