29 February 2020

90ஸ் கிட்ஸ்களும் காதலர் தினமும்


"கைகளைக் கோர்த்தபடி ஒரு நீண்ட நடை, தோள் சாய்ந்தபடி ஒரு நீண்ட பயணம், மடிமீது தலைசாய்த்து ஒரு விழித்த உறக்கம், முத்தங்களை தின்று கொஞ்சம் பசியாறுதல், வெட்கங்களை வென்று ஒரு வீடு திரும்புதல்" என வாழ்வின் அழகிய கணங்களை காதலியோடு அல்லது காதலனோடு கொண்டாட வேண்டுமென்பது மனிதர்களாய்ப் பிறந்த அத்தனை பேருக்கும் உண்டான பொதுவான கனவு. காதல் துளிர்க்கும் வயதை காதலின் சாரல் படாமல் கடந்து வந்துவிடுவது அத்தனை எளிதல்ல. ஆணுக்கு மீசை முளைக்கத்தொடங்கிய வயதிலோ பெண்ணுக்கு வெட்கம் பூக்கத்தொடங்கிய வயதிலோ உள்ளுக்குள் சுரக்கும் ஹார்மோன்கள் அதீத வேகமாய் வளர்ந்து வளர்ந்து டீன் ஏஜ் வயதை பூக்கள் நிறைந்த ஒரு அழகிய பாதாளத்திருக்குள் மெல்ல மெல்ல தள்ளுகிறது. சிலர் மிக வேகமாய் குதித்தும் விடுகிறார்கள். இன்னும் சிலர் வேகமாய் வெளியேறத்துடிக்கிறார்கள். சிலருக்கு அது பூக்கள் மட்டுமே நிறைந்ததாகவோ, சிலருக்கு முட்கள் மட்டுமே நிறைந்ததாகவோ இருக்க இன்னும் சிலருக்கு முட்களுக்கு நிகராய் பூக்களும், பூக்களுக்கு நிகராய் முட்களும் இருக்குமென்று தெரிந்தே குதிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது எப்போதும் தீராத காதலைச் சுமந்து கொண்டிருக்கும் காலம்.

80களின் பிற்பாதியில் காதல் அத்தனை வேகமாய் வளர்ந்து கொண்டிருந்ததை விபரங்கள் ஏதும் தெரியாத வயதில்  பார்த்திருக்கிறேன் என்று சொல்வதைவிட மிக அருகிலிருந்து சில காதல்களை கவனித்திருக்கிறேன் என்று சொல்லலாம். பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த வயதில் எதிர் எதிர் மாடிகளிலிருந்து சைகைகள் நிழல்களாய் விழுவதையும், தெருவெங்கும் காற்றில் மிதக்கும் பறக்கும் முத்தங்களையும்
பார்த்து வந்திருக்கிறேன். கோவில் பிரகாரத்தை சுற்றிவரும் போது அவன் சிற்பத்தின் நடுவே கொட்டிய குங்குமத்தை அவள் வெட்கத்தையும் கலந்து பூசிக்கொண்டதை, சைக்கிளில் அவள் வீட்டைக்கடக்கும் போது அவன் கொடுக்கும் பெல் சத்தத்தில் அவள் கதவுக்கு பின்னால் நின்று கையசைப்பதை, தீர்த்தகுடம் சுமந்து கூட்டத்தில் அவளுக்கு மட்டும் மஞ்சதண்ணியை கொட்டி அம்மனாய் நினைத்து நீராபிஷேகம் செய்ததை, உறியடிக்கும் நிகழ்வில் அவனுக்கு கொலுசொலியால் தடம் காட்டியதை, ஊர்திருவிழாவில் அவளுக்காக இவன் அக்னி சட்டி தூக்கியதை, அவள் அலகு குத்திக்கொண்டதை என ஊரெங்கும் நிரம்பி வழிந்த காதல்கள் இதயத்தின் ஆழத்தில்
மறக்கமுடியாத தூரத்தில் அப்படியே இருக்கின்றன. இப்போது வேறு கணவனுக்கோ, வேறு மனைவிக்கோ பிறந்த பிள்ளைகளோடு அவர்களைக் காணும் போதெல்லாம் காலம் நடத்தி வைத்த கண்ணாமூச்சி ஆட்டங்களில் எப்போதோ தொலைந்து போனவர்கள் இன்னும் மீண்டுவராமலே இருக்கிறார்களோ அல்லது யாரோ வாழ வேண்டிய வாழ்க்கையை இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்றே தோன்றும்.

70களில் தொடங்கி 80களின் இறுதிவரை இளையராஜாவும், டி.ராஜேந்தரும் இல்லையெனில் இங்கு பலருக்கு காதல் கைகூடி இருக்காது. பலரின் காதல் தோல்விகளுக்கு மருந்து கிடைத்திருக்காது. ஒருதலைக்காதல்களெல்லாம் தற்கொலையோடு சேர்ந்து கொலைகளாகவும் முடித்திருக்க வாய்ப்புண்டு. ஜாதி, மதங்களைக் கடந்து கடவுளாகத் தெரிந்தது காதல் மட்டுமல்ல, இந்த இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் கூடத்தான். இன்று இத்தனை வசதிகள் இருந்தும் ஒரு சிலருக்கு பெண்களிடம் நேரடியாய் போய் பேசவோ, தன் காதலை தெரிவிக்கவோ தயக்கமும், பயமும் இருக்கிறது. எங்கிருந்தோ எடுத்த அல்லது யாரோ எழுதிய வரிகளை போட்டு இன்பாக்சிலோ, இன்ஸ்டாவிலோ தட்டி விடுகிறார்கள். அவர்களுக்கு எல்லா வசதிகளையும் இந்த இண்டர்நெட், அறிவியல் தொழில்நுட்பங்கள் கொடுத்திருக்கிறது. இப்போது போல எந்த சோசியல் மீடியாக்களும் இல்லாத காலகட்டங்களில் ஒரு பெண்ணிடம் தங்கள் காதலை நேரடியாகவோ, தூது விட்டோ தைரியமாக சொன்னவர்கள் அதிகம். அவர்களுக்கெல்லாம் அந்தக்கால பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களில் ஒளிந்திருக்கும் காதல் ததும்பும் வரிகளும், வசனங்களும் போதுமானதாகவே இருந்தது. ஒரு இன்லேண்ட் லெட்டரில் புளு கலர் பேனாவில் இதயம் வரைந்து அம்பு விட்டு சிவப்பு கலர் பேனாவில் ரத்தம் கசிவதைப்போல வரைந்து, தனக்கு தெரிந்த வார்த்தைகளை, தான் படித்த கவிதைகளை பிழைகளோடு எழுதி, யாருக்கும் தெரியாமல் பத்திரப்படுத்தி, எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொண்டு அந்த பெண்ணிடம் சேர்ப்பித்துவிட்டு அதற்கு நிகரான பதைப்பதைப்போடு அந்த பெண்ணிடம் பதில்களை எதிர்பார்த்து காத்துக்கிடப்பதையும், தூரத்தில் அவளைப்பார்த்ததும் வழக்கத்திற்கு மாறாக நடுங்கி, வெட்கப்பட்டு, வெளியே குதித்துவிடும் அளவுக்கு துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை கட்டுப்படுத்தி அவளிடமிருந்து பதில் வருவதற்குள் பாதி செத்தே விடுவார்கள். இப்போது 2K கிட்ஸ்களிடம் இருப்பதைப்போல ஒரு எமோஜியில் காதலைச் சொல்லி இன்னொரு எமோஜியில் அதை அக்ஸ்சப்ட் பண்ணி உடனே காதல் வளர்த்துவிடுவதில் அத்தனை சுவாரஸ்யங்கள் இருப்பதில்லை.

80ஸ் கிட்ஸ்களும் 2k கிட்ஸ்களும் வெவ்வேறு வகை எனில் இந்த 90ஸ் கிட்ஸ்கள் தனிவகை. படிப்பில் ஓரளவுக்கு கெட்டிக்காரர்களாய் இருக்கும் இவர்களுக்கு டாக்டர் சீட், என்ஜினியர் சீட், ஜன்னல் சீட் லாம் கூட சுலபமாக கிடைத்துவிடுகிறது. யார் விட்ட சாபமா காதலுக்கு பெண்ணோ / ஆணோ கிடைப்பது அத்தனை சுலபமான விஷயமாக இருப்பதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாக கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் இந்த 90ஸ் கிட்ஸ்களாகத்தான் இருக்க முடியும். தங்களை விட மூத்தவர்கள் காதலிப்பதில் இவர்களுக்கு ஒன்றும் வெறுப்போ, பொறாமையோ வந்துவிடுவதில்லை. தங்களை விட வயது குறைந்தவர்கள், தங்களுக்கு அடுத்த தலைமுறை பிள்ளைகள் என அழைக்கப்படும் 2K கிட்ஸ்கள் பண்ணும் அலப்பறைகளைத்தான் இவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதற்காக இவர்கள் வெறுப்பையோ கோவத்தையோ காட்டுவதில்லை மாறாக "நாங்கள் எந்த வகையில் குறைந்து போய் விட்டோம், நாங்களும் அழகாகத்தான் இருக்கோம், படிச்சிருக்கோம், நல்லா ட்ரஸ் பண்றோம், நெறைய சாம்பாரிக்கறோம், ஆனாலும் எங்களை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை" என்னும் கேள்விகள் நிறைய இருக்கு. இந்தக்கேள்விகளை இந்த சமூகத்தை நோக்கி இவர்கள் வீசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பதில் சொல்வதற்குத்தான் இங்கு யாரும் இல்லை. ஒரு பத்துவருட காலங்களுக்குள் பிறந்த பிள்ளைகளிடமும் பதின்பருவ வயதுக்கு உண்டான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும், கனவுகளும் இருக்கத்தானே செய்யும். அவர்களை மட்டும் எதுவுமற்ற ஜடங்களாகவோ, தைரியமற்றவர்களாகவோ, பயந்தாங்கொள்ளிகளாகவோ, காதலிக்க தகுதியற்றவர்களாகவோ சித்தரிப்பதில் இந்த சமூகத்தின் கொடூர முகமொன்று தைரியமாய் எட்டிப்பார்க்கிறது.

90ஸ் கிட்ஸ்கள் தூக்கி சுமக்கும் காதலை கிடைக்கப்பெறாதவர்கள் தான் உண்மையில் கொடுத்து வைக்காதவர்கள். பொண்ணோ, பொருளோ, வேலையோ, வசதியோ எதுவாக இருந்தாலும் நேசிக்கும் ஒரு விஷயம் சுலபமாக கிட்டியர்வர்கள் அதனை அதே காதலோடு எப்போதும் அணுகுவார்கள் என்று சொல்ல முடியாது ஆனால் காத்திருந்து காத்திருந்து, தேடித் தேடி கிடைக்காமல் போகும் ஒரு விஷயத்தை கிடைக்கப்பெற்றவர்கள் அதை எப்போதுமே ஒரு பொக்கிஷம் போலவே பாதுகாப்பார்கள். காதல் வந்தவுடன் சம்மந்தப்பட்ட பெண்ணிடம் சட்டென சொல்லி, புன்னகைத்து, பரிசுகள் கொடுத்து, ஊர் சுற்றி, முத்தங்கள் பரிமாறி, வாட்ஸப் செல்பிகளில் சலிப்படைந்து, வீடியோ கால்களில் சண்டையிட்டு பொசுக்கென பிரிந்துவிடும் 2K கிட்ஸ்களுக்கு நடுவே தனக்கே தனக்கென ஒரு தோழி/தோழன், ஒரு கிரஸ், ஒரு பெஸ்டி, ஒரு மறக்க முடியாத நினைவுகளின் தொடக்கம், இவள் எனக்கானவள், இவன் எனக்கானவன் என்றும், எந்த நிலையிலும் இதை நான் உயிர்ப்போடே வைத்திருப்பேன் என வாழ்க்கை முழுக்க தேவையான காதலை சுமந்து கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ்கள் இருக்கிறார்கள். இதயம் முரளியைப்போல தன் காதலைச் சொல்லாதவர்கள் எல்லாம் காதலிக்க தகுதியற்றவர்கள் இல்லை மாறாக இன்னும் இன்னும் அதிகமாய் காதலை எப்போதும் இளமையோடும் புரிந்துணர்வுகளோடும் வைத்திருப்பவர்கள் அவர்கள் தான். 80ஸ் கிட்ஸ்களுக்கு இளையராஜா கடவுள் எனில் 90ஸ் கிட்ஸ்களுக்கு யுவன்சங்கர்ராஜா தான் கடவுள். யுவனுக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்குமான லிரிக்கள் பந்தமும் பேக்ரவுண்ட் இசையும் ரத்தமும் சதையுமாக இவர்களை பிணைத்திருக்கின்றன.

கூட்டத்தின் நடுவே புத்தகம் படித்துக்கொண்டு, ஜோடியாக போகும் போவோர் வருவோரை ஏக்கமாய் பார்த்துக்கொண்டு, பீச்மணலில் மடியில் படுத்துக்கொண்டு காதல் வளர்ப்போரை கடைக்கண்களால் கடந்து, ஒரு பெண்ணை விட தன் பைக்கை அதிகமாய் காதலிப்பதாய் காட்டிக்கொண்டு, தியேட்டர்களில் கார்னர் சீட்டில் இருப்பவர்களை காணாதது போல நடந்து, டீக்கடைகளுக்கு பசங்களோடு போகும் பசங்களும், பியூட்டி பார்களுக்கு பெண்களோடு போகும் பெண்களும் பார்ப்பதற்கு சந்தோசமாய் கவலைகள் ஏதுமின்றி இருப்பதாக தோன்றும் ஆனால் காதல் குறித்து அவர்கள் தாங்கிக்கொண்டிருக்கும் வலி என்பது சொற்களால் சொல்லிவிடவோ, மருந்திட்டு ஆற்றிவிடவோ முடியாதவை. காதல் எல்லோருக்கும் பொதுவானதெனினும் இவர்களுக்கு மட்டும் அந்தக்காதல் கிட்டாதது முயற்சிக்காமல் இருப்பதால் அல்ல, ஒவ்வொரு முறை முயற்சிக்கும் போதும் பெண்களை ஆண்களும் ஆண்களை பெண்களும் ஒரு விதமான தாழ்வுமனப்பான்மையோடே அணுகுகிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. எங்கே தவறாக நினைத்துவிடுவார்களோ, சத்தம் போட்டு கூட்டத்தை கூட்டிவிடுவார்களோ, நீயெல்லாம் அக்கா தங்கச்சியோடு பிறக்கலயான்னு கேட்டு விடுவார்களோ என்னும் பயமும், கூச்சமும் இவர்களிடத்தில் கொஞ்சம் இருக்கவே செய்கிறது. அதேசமயம் பெண்களை அதீதமாய் மதிக்கும், நேசிக்கும் ஆண்கள் 90ஸ் கிட்ஸ்களாகத்தான் இருக்கிறார்கள். என்னதான் "மொரட்டு சிங்கிள்" என்று தங்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திக்
கொண்டிருந்தாலும் இவர்களுக்குள்ளும் ஒரு கனமான காதல் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

தயக்கங்களை உடைத்து நம்பிக்கையுடன் காதலைச் சொல்லுங்கள் உண்மையான காதலை எந்த சமரசங்களுமின்றி ஏற்றுக்கொள்ள 90ஸ்களின் ஆண்களும் பெண்களும் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களை அதே அன்போடு அரவணைத்துக்கொள்ள காதலும் தயாராகவே இருக்கிறது. இந்த பிப்ரவரி முதல் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளையும் ஒரு ஸ்பெஷல் டேவாக கொண்டாடுபவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை உண்மையாக காதலித்தால் வருடம் முழுவதும் காதலர் தினம் தான் என்பது.

அன்பால் இணைந்திருக்கும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்..!

---தனபால் பவானி
14.02.2020

#காதலர்_தின_வாழ்த்துகள்
#காதலர்_தினம்_2020
#HappyLoversDay2020
#LoversDay #90sKids_Love

No comments:

Post a Comment