19 August 2017

செல்ஃபிக்களால் நிரம்பும் கைப்பேசிகள்


எல்லோருக்கும் எப்போதும் ஆறுதலாகவும் சில சமயங்களில் இம்சையாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன கைப்பேசிகள். தொழில்நுட்பங்கள் வளர வளர மனித மனம் குறுகிக் கொண்டிருப்பதை  கவனிக்க யாருக்கும் நேரமில்லை, நேரமிருந்தாலும் அதைப்பற்றிய அக்கறையும் கொஞ்சம் கொஞ்சமாய் மழுங்கிக்கொண்டு வருகிறது என்பதை மறுப்பதற்கும் இல்லை.

எங்கெல்லாம் செல்ஃபிகள் எடுக்கக்கூடாதோ அங்கெல்லாம் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இப்போது நம் கைப்பேசிகளில் நிரம்பி வழியும் அத்தனை செல்ஃபிக்களையும் அடுத்த வருடம் எடுத்து பார்ப்போமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. நான் உட்பட "வேண்டாத" செல்ஃபிகள் எடுப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சில நிமிட வசீகரத்திக்காக சிலர் உயிரைக்கூட விட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் இழந்தவர் கதறிக்கொண்டிருக்கும் போது, ஒட்டுமொத்தமாய் எரிந்துகொண்டிருக்கும் வீட்டிற்கு முன்னால் நின்று, சுனாமி அலைகள் சுருட்ட நெருங்கிவிட்ட தருணம், வேகமாய் வரும் ரயிலின் முன்னால் அது கடக்கும் நொடி, இறந்தவரின் உடலை சுமந்தபடி, வெற்று கட் அவுட்டுகளுக்கு முன்னால் என எத்தனை எத்தனை செல்ஃபிகள்? எல்லாவற்றுக்கும் மேலாய் கல்யாண மண்டபங்களில் கேமரா மேனை மறைத்துக்கொண்டு எடுக்கிறார்கள் பல செல்ஃபிகள் அவர் பாடு எத்தனை திண்டாட்டமென அருகில் இருந்து பார்த்திருக்கேன்.

தடித்த அட்டை போட்ட புகைப்பட ஆல்பம் ஒன்று எங்கள் வீட்டில் இருந்தது நான் சிறுவனாக இருந்த போது, அதில் பக்கவாட்டு வடிவில் நீண்ட ஒவ்வொரு கருப்பு அட்டையிலும் அங்கங்கே கருப்பு-வெள்ளை புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பார்கள். அம்மா அப்பாவின் கல்யாண ஆல்பம் அது. விவரம் தெரியாத அந்த வயதில் அதை வைத்துக்கொண்டு அதில் இருப்பது யார் யாரென அடையாளம் சொல்லுவார்கள். அதில் இருப்பவர்களுக்கும் இப்போது நேரில் பார்ப்பவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது முற்றிலும் வேறு மாதிரி இருப்பார்கள். பலர் இப்போது இல்லாமல் கூட இருக்கலாம். நாளடைவில் வாடகை வீடுகள் மாற மாற அந்த புகைப்படங்கள் பசையிழந்து விழுந்து கிழிந்தும் தொலைந்தும் விட்டன, ஆனால் எப்போதும் விழுந்துவிடாதபடி மனதின் எல்லா பக்கங்களிலும் கெட்டியாய் ஒட்டியிருக்கின்றன. அந்த தொலைதல் சம்பவத்திலிருந்து தப்பித்த சில புகைப்படங்கள் இன்னும் இருக்கின்றன கொஞ்சம் கரையான்கள் அரித்தபடியும் கொஞ்சம் காலங்கள் அரித்தபடியும். ஆனால் அவை சுமந்து கொண்டிருக்கும் நினைவுகள் என்பது எந்த கரையான்களாலும், எந்த காலங்களாலும் அழித்துவிட முடியாதவை.

பத்து வருடங்களுக்கு முன்பு வீட்டு விசேங்களுக்கும் கல்லூரி சுற்றுலாக்களுக்கும் தயாராகும்போது கையில் கிடைக்கும் ஒரு குட்டி கேமராவை வைத்துக்கொண்டு அந்த காலத்தில் பண்ணிய அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமா.? கேமராவை வைத்திருப்பவனைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். அதுக்கான செல், பிலிம் ரோல் என தேடித் தேடி வாங்க வேண்டும். இப்போது போல ஒரு போட்டோ எடுத்துவிட்டு பிடிக்கலைனா பட்டென அழித்துவிட முடியாது. தெரியாமல் கை ரிவர்ஸ் பட்டனில் பட்டுவிட்டால் அவ்வளவுதான் மொத்தமும் அவுட். மங்கிய பிலிம் ரோல் மட்டும்தான் மிஞ்சும். போட்டோ பிடித்து, அதை பத்திரமாய் பாதுகாத்து, ஊருக்கு வந்ததும் கடையில் கொடுத்து, நெகட்டிவ் ரெடியானதும் ஒருமுறை வெளிச்சத்தில் அதை உயர்த்திப்பார்த்து குட்டியாய் சந்தோஷப்பட்டு, வேண்டிய போட்டோக்களை பிரிண்ட் போட சொல்லி, அவர்கள் சொன்ன நேரத்திற்கு முன்பே போய் காத்திருந்து, புகைப்படங்களை கையில் வாங்கும் போது நல்லா வந்திருக்க வேண்டுமென வேண்டி, அந்த கவரை பிரித்து புகைப்படத்தை பார்க்கும் போது வரும் வெட்கம் கலந்த சந்தோசத்தை இன்று ஆயிரக்கணக்கில் பகிர்ந்துகொள்ளும் வாட்ஸ்அப் புகைப்படங்களில் ஒரு படம் கூட தருவதில்லை.

எல்லா ஊருக்குமென பிரத்தியேகமான போட்டோகிராபர் எப்போதுமிருப்பார், அவர் படம் எடுத்தால் கல்யாணம் நல்லபடியா நடக்குமென்ற நம்பிக்கை கூட இருந்திருக்கிறது. அதே போல இறந்தவர்களைக் கூட ஒரு சிலர் மிக அழகாக படமெடுப்பார்கள். எங்கள் ஊரில் பழைய மோகன் தியேட்டர் எதிரில் சாந்தி ஸ்டுடியோ என்னும் புகைப்படக்கூடம் இருந்தது இப்போது அந்த கடையை மெயின் ரோட்டுக்கு மாற்றிவிட்டார்கள். அவர் கடைக்கு சிறு வயதில் பள்ளிக்கூடம் சேர்க்க போட்டோ எடுக்க கூட்டிப்போனார்கள் ஒருமுறை. கடைக்கு வெளியே கலர் கலர் சட்டங்களில் கருப்பு வெள்ளையில் பல நடிகர்களும், பல நடிகைகளும் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.
அதையெல்லாம் அவரே நேரில் சென்று எடுத்திருப்பாரோ என்ற ஆர்வமும், வியப்பும் அப்போது வந்ததுண்டு. என்னை உள்ளே அழைத்து சில ஒப்பனைகள் செய்து, ஒரு இடத்தில் நிற்க வைத்து என் உடலுக்கான சில பல நெளிவு சுழிவுகளை சொல்லிக்கொடுத்து சொல்லும் வரை ஆடாதே என சொல்லிவிட்டுப்போனார். கேமராவை கையிலெடுத்து என்னென்னவோ சொல்லி, திட்டி, புலம்பி, சலித்து ஒரு படம் எடுத்தார். ஆனால் அந்த புகைப்படம் வாங்கி பள்ளியில் சேர்த்துவிட்டு நெகட்டிவ் வாங்காமல் விட்டுவிட்டோம். இப்போது அது எப்படி இருக்குமென்ற கற்பனைக்குள் கூட அது வரவில்லை. பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்திருப்பேன். இப்போதும் புகைப்படங்களின் மீதான காதல் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் பள்ளிக்கூடங்களில் எடுத்ததாய் ஒரு படம் கூட இன்றுவரை என்னிடமில்லை.  இது ஒரு வகையில் வருத்தமாய் இருந்தாலும் கூட அதன் நினைவுகள் நெஞ்சுக்கூட்டில் கதகதப்பாய் இருக்கிறது.

படத்தில் நீங்கள் பார்ப்பது வேறு யாருமல்ல நானேதான். அப்படித்தான் என்னையும் நம்ப வைத்திருக்கிறார்கள். அண்ணனுக்கு பிறகு நானும் பையனாக பிறந்துவிட்டதால் மொட்டையடிக்கும் முன் பெண் வேடமிட்டு புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்கள். நின்றபடியும், கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடியும், பூச்சாடிக்கு அருகில் இருந்தபடியும் என பல விதங்களில் இருந்த படங்கள் ஒவ்வொன்றாய் தொலைந்து இப்போது இதுமட்டும் கைப்பேசிக்குள் பத்திரமாய் கிடக்கிறது. இந்த படம் எடுக்கும் போது என்னென்ன நடந்தன என நினைவில் இல்லை. ஆனால் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எல்லோருக்குள்ளும் இந்தமாதிரி மிகப்பிடித்த புகைப்படங்கள் நிறைய இருக்கும் அது சார்ந்த கதைகளும் நினைவுகளும் கூட இன்னும் பசுமையாய் இருக்கக்கூடும். அது காலங்கள் கடந்தும் நம்மை இன்னும் சிறு குழந்தையாகவே வைத்திருக்க உதவும் ஒரு அழகான வரம்.

எத்தனை காலமானாலும் ஒரு புகைப்படத்தைப் பார்க்கும் போது மனசு மிகவேகமாய் கடந்த காலத்தில் சுழன்று அந்த படம் எடுத்த நிமிடத்தில் போய் குத்தி நிற்கும், அதுமட்டுமல்லாமல் அந்த நொடிகளில் நடந்த அழகான நினைவுகளை இன்னும் அழகாய் ஒரு ஏக்கத்தோடு அசைபோடும். மீண்டும் பின்னோக்கிச் செல்ல முடியா வாழ்க்கை எல்லோரையும் ஒரு வழிப்பாதையிலேயே வழிநடத்திச் செல்கிறது. அவரவர் வீடுகளில் சட்டங்களுக்குள் சிரித்துக்கொண்டிருக்கும் பழைய முகங்களைப் பார்க்கும்போது அவர்களின் கோபமும், குரூரமும் வெளிப்படும் அதே வேளையில் இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள் மெலிதான ஒரு அன்பும், யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத பல ஏக்கங்களும் ஆசைகளும் அந்த முகங்களில் ஓடும். அதை இப்போது யார் நினைத்தாலும் நிறைவேற்றிவிட முடியாது. ஆனால் நம் முகங்கள் அந்த மாதிரியான மாலையிட்ட சட்டங்களுக்குள் செல்லும் வரை
மிச்சமிருக்கும் வாழ்வில் கொஞ்சமேனும் கொடுத்து செல்வோம் கையிலிருக்கும் நிறைய அன்பை...!



#WorldPhotographyDay
#Photography

No comments:

Post a Comment