05 February 2017

பவானி ஜமக்காளங்கள்


கோவில் திருவிழாக்கள் பற்றி பெரியவர்கள் கலந்தாலோசிக்கும் பேச்சு வார்த்தைகள், திருமண வீடுகளில் தாம்பூல தட்டுகள் மாற்றும் நிகழ்வுகள், நாட்டாமைகள் அமர்ந்து தீர்ப்பு சொல்லும் ஆலமர பஞ்சாயத்துகள், பூப்பு நன்னீராட்டு விழா வளைகாப்பு விழாக்களில் தட்டுகள் நிறைந்திருக்கும் பரந்த இடம், விசேச வீடுகளில் பந்தியில் அமரும் இடமென எல்லா இடங்களையும் இன்னும் இன்னும் அழகாய் அலங்கரிக்கின்றன பவானி ஜமக்காளங்கள்.

ஜமக்காளங்கள் எங்கள் ஊரின் மிகப்பெரிய அடையாளம். எங்களூரில் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரங்களில் பல ஊர்களிலும் அதை தயாரிக்கிறார்கள். ஏறக்குறைய எல்லா தெருக்களிலும் வகை வகையான ஜமக்காளங்கள் நெய்யும் தறிப்பட்டறைகள் இருக்கும், எல்லா வீடுகளிலும் வகை வகையான ஜமக்காளங்கள் இருக்கும். ஜமக்காளம் எங்கள் அடையாளம் மட்டுமல்ல அது எங்கள் வாழ்வோடும் வாழ்வாதாரத்தோடும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வேர் மறந்த வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்புடையது.

எங்கள் ஒட்டுமொத்த வாழ்வின் முதல் பட்டதாரியாக அண்ணனை உருவாக்கியதில் இந்த ஜமக்காள நெசவுக்கு முக்கிய பங்குண்டு. அம்மா பிறந்த ஊரில் ஐந்து வயதிலேயே வேலைக்கு சேர்க்கப்பட்டவர். பதினைந்து வயதில் பவானிக்கு வந்தவர் வெவ்வேறு வேலைகள் செய்து ஜமக்காளம் நெய்வதில் நிலைத்து நின்றவர். எங்கள் சிறு வயதில் அம்மா பல்வேறு பட்டறைகளில் வேலை செய்திருக்கிறார் அதன் மூலமாகவே எங்களை பட்டதாரிகளாகவும் ஆக்கினார்.

சீனாமுதலியார் கொட்டாய் (நெசவு பட்டறை), திருவேணி கொட்டாய், பழனியம்மாள் கொட்டாய், அலமேலு கொட்டாய் , அருணகிரி குமரேசன் கொட்டாய், கந்தன்கடை, கோபால் கொட்டாய் என பல இடங்களில் வேலை செய்தவர் கடைசி எட்டு வருடங்கள் சொந்தமாக தறி போட்டு ஜமக்காள சேம்பல் தடுக்கு நெய்தார். சேம்பல் தடுக்கு, சதுரம், சர்கோடு, பந்திபாய், நடுத்தரம், கட்டில் ஜமக்காளம், ஹால் கார்பெட், பட்டு ஜமக்காளம், டபுள் ஜக்கார்டு, உல்லன் ஜமக்காளம் என விதவிதமான வகைகளில், விதவிதமான அளவுகளில் நெய்யப்படும் ஜமக்காளங்கள் எத்தனையோ வகைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

ஒருவர், இருவர் மட்டுமல்லாமல் ஹால் கார்பெட் ஜமக்காளங்களை மூன்று பேர்வரை நெய்வார்கள், களைப்பு தெரியாமல் இருக்க யாரோ ஒருத்தர் பாடும் பாடல்களுக்கு தறியில் ஓடும் நாடாக்கள் இசையமைக்கும், கூடாரங்களில் தொட்டிலில் தூங்கும் குழந்தைகளுக்கு தறிச்சத்தமே தாலாட்டு பாடும். தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்திராத அந்த காலத்தில் தார் குச்சிகள் தான் எங்களின் விளையாட்டு பொருட்களாய் இருக்கும், ஒருபுறம் நீண்டிருக்கும் பாவு சுருங்க சுருங்க மறுபுறம் கலர் கலர் நூல்களால் ஜமக்காளம் உருவாகும். மழை பெய்த ஒரு மாலை வேளையில் கூடாரத்தின் ஓடுகளில் வழிந்த துளிகளை தீண்டியபடியே சூடாய் பஜ்ஜியும் தேநீரும் உள்ளிறங்கிய நிமிடங்கள் இன்னும் பசுமையாய் இருக்கின்றன. ஆயுதபூஜைக்கு அடுக்கிவைக்கும் நாடாக்களின் நடுவே தார் குச்சியில் செய்த எங்கள் பேனாக்களும் இடம்பிடிக்கும்.

பவானியின் பெரும்பாலான குடும்பங்களின் பின்புலம் நெசவினூடே பிணைந்திருக்கும், கடந்த தலைமுறையின் கால்கள் தறியின் மிதி பலகையை மிதித்ததினால் தான் இந்த தலைமுறையின் கைகள் கணினியின் விசைப்பலகையை தட்டிக்கொண்டிருக்கின்றன. தறியடித்து நெசவு செய்த கைகள்தான் இன்று தங்கள் மகன்களையும் மகள்களையும் பேனா பிடிக்கவும் மவுஸ் பிடிக்கவும் வைத்திருக்கின்றன. கடந்த தலைமுறை அப்பா அம்மாக்கள் தினக்கூலியாய் வாங்கி வரும் சொற்ப காசுகளில் தான் பெரும்பாலான குடும்பங்களின் தேவைகள் அரைகுரையாய் தீரும்.

படிப்பின் வாசனையறியாத நெசவாளிகளும் பாட்டாளிகளும் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் வேலைக்கு அனுப்பிவைத்து விட்டனர், நெசவில் தேய்ந்த கைகளைப்போலவே உலகப்புகழ் பெற்ற ஜமக்காள தொழிலும் தேயத்தொடங்கியுள்ளது. விவசாயம் போலவே இந்த தொழிலும் நலிவை சந்திக்கிறது, தங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே இந்த தொழிலையும் அதை நம்பியிருக்கும் தொழிலாளிகளையும், பவானியின் அடையாளத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அத்தனை அவசியமே.

பிளாஸ்டிக் பாய்களின் வரவுகள் ஜமக்காளங்களை சிதைத்தபோதும் இன்னும் தயாரிக்கும் முறையாலும் தரத்தாலும் பவானி ஜமக்காளங்கள் நிலைத்து நிற்கின்றன. எத்தனை விதமான மெத்தைகளில் தூங்கி எழுந்த போதும் ஜமக்காளங்கள் கொடுத்த உறக்கத்தை எந்த மெத்தையும் கொடுப்பதில்லை. மணமக்களின் பெயர் எழுதிய ஜமக்காளங்களை மணப்பெண்களுக்கு சீதனமாகவும் கொடுக்க தவறுவதில்லை. அது எங்களுக்கான அடையாளம் மட்டுமல்ல எங்கள் ஊருக்கான பெருமையும் கூட.


1 comment:

  1. intha katturaiyai nan payanbaduthi kollalama

    ReplyDelete