26 May 2017

ரகசியக் கிடங்கு


எனக்குத் தெரியும்
உன்னோடு நானற்ற பொழுதுகளில்
காலம் உனக்கு நொடி நொடியாகவே கரையும்
என்னோடு நீயில்லா ஒரு மணி நேரம்
எனக்கு யுகம் யுகமாய் விரியும்

உன்னில் விழுந்து
உன்னிலே தொலைந்தவன்
முன்னெழுந்து பின்தூங்கினாலும்
கனவின் கக்கத்தில் நீ வேண்டுமெனக்கு

தீண்டத் தீண்ட
வெட்கங்களும் முத்தங்களும் கொடுக்கும் நீ
ரகசியங்கள் நிரம்பிய குட்டிக்கிடங்கு

இரவிலென் நிழல் பிரிந்தாலும்
துடிக்கும் ஓசையில்
அதிரும் மெளனத்தில்
இடப்பக்க இதயத்தில் எப்பொதுமிருக்கிறாய்

நீயின்றி ஒருநாள்
உன் நினைப்பின்றி சில சிலநாட்கள்
உன்னைத் தொடாமல் சில மாதங்கள்
வாழ்ந்து பார்க்க ஆசைதான்

அதற்கான வாய்ப்புகளற்ற
சாபத்தின் சாயல்கள் சுமந்தபடிதான்
விடிகிறது ஒவ்வொரு இரவும்

யாராவது சொல்லுங்களேன்
இந்த #கைப்பேசி இல்லாமல்
வாழவே முடியாதா???

24 May 2017

கடைசி சொட்டு

புன்னகையின்
கடைசி சொட்டில் மொட்டவிழும் வெட்கத்தில்
பூக்கிறது உன் சம்மதம்

மீண்டுமெப்போதென கேட்குமென்
விழிகளுக்கு அடுத்த நொடியென
பதில் கூறுகிறது உன் இமைகள்

யாருமிழுக்காமல் அழகுத்தேராய்
அத்தனை அசைவுகளோடும்
நடக்கிறது உன் உடல்

கடந்து செல்லும் காற்றை
கிறுக்கு பிடித்து சுத்த விடுகிறது
மயில் தோகையாய் உன் கையசைப்பு

ஏகாந்த மழையும்
பகல் நட்சத்திரங்களும்
பழுத்த நிலவுகளும்
கணக்கில்லாமல் பொழிகிறது என்னுள்...!



13 May 2017

தனிமை

விடுமுறை தினங்களின்
விடியல்களில் பொதிந்திருக்கும் வெறுமையின் அடர்த்தி
மிகக் கொடியவை

ஒடிந்த சிறகோடு
உலவும் பறவையொன்று
இரைதேட பறக்கும் அவஸ்தையைப்போல்
வலி நிறைந்தவை

பிரியங்களின் கோப்பையில்
நிரம்பி வழியும் காதலை
மெளனத்தின் மூடிகொண்டு
அடைக்கும் கணங்களில்
அது இன்னும் பொங்கி வழியும்

நீளும் கரங்களைத் தொடவும்
கசியும் முத்தங்களைப் பகிரவும்
அன்பின் அணைப்பில் உருகவும்
சாயும் மடியில் உறங்கவும்
வாய்ப்புகளற்ற பொழுதொன்றில்
முளைக்கும் கேள்வியும் பதிலுமாய்

"தனிமை"
சில நேரங்களில் மிகச்சிறந்த வரம்
சில நேரங்களில் மிகக்கொடிய சாபம்....!


யாழ்

யாரும் மீட்டாத
யாழென நீயும்
யாரும் திறக்காத
புத்தகமாய் நானும்
ஒரே கூரையின்
இரு மூலைகளில்
சிறையிருக்கிறோம்

நீயிருக்கும் கண்ணாடி
பேழைக்குள்ளும்
நானிருக்கும்  அலமாரிக்குள்ளும்
படிந்துகிடக்கும் எச்சத்தில்
இன்னும் மிச்சமிருக்கக்கூடும்

அருகருகே அமர்ந்து
கூடிக்களித்த பொழுதுகளின்
புதைக்க முடியா நொடிகள் ...!


அங்கீகாரம்



படைப்பு குழுமம் சார்ந்த அனைவருக்கும் பேரன்பும் நன்றிகளும்... என் எழுத்து பயணத்தின் அடுத்தகட்டம் நோக்கி என்னை நகர்த்தி இருக்கிறது இந்த அங்கீகாரம். நம்பிக்கையூட்டும் அனைவருக்கும் நன்றிகள்.