27 February 2017

சாக்லேட்டின் சுவை

வெளிநாட்டில் இருந்து
வாங்கி வரப்பட்ட நீளமான சாக்லேட் ஒன்று
என் கைகளுக்கு கிடைத்தது

உருகி குழைந்து போகாமல் இருக்க
பிரிட்ஜில் வைக்கவேண்டிய அதை
பிரம்மச்சாரிகள் வாழும் விடுதியின்
பீரோவுக்குள் வைத்திருந்தேன்

கதவு திறக்கும் போதெல்லாம்
வாசம் வந்து என்னை உசுப்பவில்லை அது
அழும் குழந்தையைப்போல
யாராவது எடுப்பார்களா என ஏங்கவில்லை அது

எழுதி முடித்துவிட்டு வைத்த முற்றுப்புள்ளியைப்போல
ஏதும் செய்யாமல் இருந்த அதை
இரண்டு நாள் கழித்து எடுத்து பிரிக்கையில்
மூலை மடிப்புகளில் ஒட்டியபடி வழிகிறது

எனக்கென கைநீட்டும் குழந்தையோ
எனக்கு வேண்டாமென சொல்லும் அம்மாவோ
பெரிய பீஸ் எனக்கென்னும் தங்கையோ
அடித்து பிடுங்கி தின்னும் நண்பனோ
இதழோரம் வழிய சுவைக்கும் காதலியோ இல்லாமல்

தனியாக உண்ணும்போது நாக்கில்
ஒட்டவே இல்லை அந்தச் சாக்லேட்டின் சுவை


13 February 2017

இதற்கு பெயரும்



சின்னத்தம்பி குஷ்பு போல அத்தனை செல்லமாகவும் பெருமையாகவும் ஒரு இளவரசி போல வளர்க்கப்பட்ட பெண் அவள். அழகும் அமைதியும் அவள் எடையை விட அதிகமாகவே இருக்கும். கல்லூரிக்கும் கம்ப்யூட்டர் வகுப்புக்கும் போய்விட்டு வரும்போது மட்டுமே அவளை பார்க்க முடியும். சமயங்களில் வீட்டுக்கு எதிரில் உள்ள கோவிலுக்கு சென்று வருகையில் அந்த அம்மனே எழுந்து வருவதாய் தோன்றும். அன்பையும் சிரிப்பையும் இப்போதும் இருப்பு வைத்திருகிறாள் விதி அவளிடம் விளையாடிய போதும் கூட. அவள் அழகுக்கு எத்தனை பெரிய வரனும் எத்தனை பெரிய வாழ்க்கையும் காத்திருந்த போதும் அண்ணனின் நண்பனை நேசிக்கத் தொடங்கினாள், அவள் வாழ்க்கை அவள் விரும்பாத திசையை நோக்கி நகரப்போகிறது என்பதை சொல்லாமலே காலமும் அவளை அவனிடம் சேர்த்து வைத்தது. திருமணம் முடிந்து நாட்கள் நகர நகர அவளும் நகரத்தொடங்கினாள் ஒரு நரகத்தை நோக்கி. காதலித்த கணவனானவன் வேலைக்கு போகாமல் குடிக்கு அடிமையாகி இவளை வேலைக்கு அனுப்பி வலிகள் நிறைந்த ஒரு பள்ளத்தில் தள்ள, அவள் அப்பாவும் ஒரு அண்ணனும் அடுத்தடுத்து இறந்து போக குடும்ப சூழ்நிலைகள் மாற மகன் வளர வாழ்வின் போராட்டத்தை நேசிக்கத் தொடங்கி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறாள் அதே புன்னகையோடு.

பூப்போட்ட பாவாடையும் சந்தன நிற சட்டையும் அணிந்து அவள் தெருவில் இறங்கி நடந்து வந்தால் எல்லா வாலிபர்களையும் ஏக்கமாக பார்க்க வைத்து விடுவாள். திருவிழா நேரத்தில் தாவணி பாவாடையிலும் தீபாவளியில் சேலையிலும் அவளைக்காணும் அத்தனை பசங்களின் நரம்புகளிலும் சொல்ல முடியாத ஒரு படபடப்பு உடம்பில் பரபரவென ஓடும். நீண்ட நாளாய் அவளை பார்த்துக்கொண்டிருந்த நண்பனொருவன் அவள் பிறந்தநாளில் “தேவதைக்கு ஒரு மானுட உதாரணம் நீ” என்ற ஒற்றை வரியில் மொத்த நேசத்தையும் புகுத்தி ஒரு வாழ்த்து அட்டையை அவள் வீட்டுக்கு அனுப்ப அவள் அப்பன் தெருவில் நடக்கும் எல்லோருக்குமே வில்லனாக மாறினார். முயற்சியும் பயிற்சியும் அவர்களை சேர்த்து வைக்க இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிப்போனாள், நண்பனை கடனும் மதுவும் மூழ்கடிக்க, சேரக்கூடாத சேர்க்கை சிதறடிக்க, அவளும் நிலைகுலைந்து போனாள். கடைசியாய் அவளை பார்க்க நேர்ந்த போது காவிரி ஆற்றில் துவைத்த துணிகளை சுமந்தபடி ஈரம் சொட்ட சொட்ட அவள் மாரியம்மன் கோவிலைக் கடக்கையில் ஒரு தேய்ந்த தேவதையைப்போல கண்ணை விட்டு மறைந்து போனாள்.

எதிரெதிர் வீடாக இருந்ததாலும், எதிரெதிரே பார்த்துக்கொண்ட போது புன்னகைத்துக் கொண்டதாலும் வெகு சீக்கிரமே சிநேகமாகிப்போனார்கள் அவர்கள். பாதி திறந்தபடி இருக்கும் ஜன்னலின் வழியே மீதிக்காதலை மிகத் தெளிவாய் வளர்த்தார்கள் ஆனால் துணைக்கோ தூதுக்கோ அவர்களிடம் இருந்தது  "பள்ளிக்கூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த வாங்கலாமா" இந்த ஒரே ஒரு பாட்டு மட்டும்தான், ஒரு கேசட் முழுவதும் அந்த பாடலை மட்டுமே பதிவு செய்து வைத்திருந்தான். அவர்கள் சந்திக்க நினைக்கும் போது அந்த பாடல் அவன் வீட்டு இசைப்பெட்டியில் ஒலிக்கும் பல்லவி முடிந்தவுடன் அவன் முன்னால் நடந்து போக ஐந்து நிமிட இடைவெளியில்  மளிகைக்கடைக்கோ தண்ணீர் பிடிக்கவோ போவதாக சொல்லிவிட்டு இவள் பின்னால் போவாள், அருகில் உள்ள பள்ளிக்கூடத்தின் கிணற்றுக்கு பின்னால் காதல் வளர்ப்பார்கள். போன சுவடு தெரியாமல் வீட்டுக்கு திரும்பி விடுவார்கள் அவள் நடவடிக்கைகளில் மாற்றம் கண்டுபிடித்த அவள் அண்ணன் ஒருமுறை பின்னாலே போய் அவள் காதலையும் கண்டுபிடிக்க வழக்கம் போல் அடி உதை ரணகளம், அவன் வீடு மாறி போக, இவளுக்கு அவசர அவசரமாய் வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணமும் நடக்கிறது. இரண்டாவது பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்தவள் திரும்ப போகவே இல்லை, விவாகரத்து வாங்கிக்கொண்டு தன் பிள்ளைகளை வளர்த்தவள் மூத்த பெண்ணுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டாள். அவள் வீடு எவ்வளவோ மாறிய பின்பும் அந்த எதிர்வீட்டு ஜன்னலில் இருந்து இன்னும் சோகமாக கசிந்து கொண்டிருக்கிறது சந்தோசமான அந்த பாடல்.

ஆயிரம் பேருக்கு மேலாக பணியாற்றிய அந்த பெரிய நிறுவனத்தில் அடிக்கடி சந்திக்கும் அவன் அன்பும் அக்கறையும் பிடித்துப்போக மிக எளிதாகவும் இல்லாமல் மிகக் கடினமாகவும் இல்லாமல் ஒருவித மனோநிலையில் தான் அவள் சம்மதம் சொன்னாள், திருவிழாக்கால சந்திப்புகளும் திண்ணை பேச்சுகளும் இருவரையும் பிரிக்கவில்லை, தூரங்கள் பக்கமாக நட்புகள் பக்கபலமாக மாற சிறகடித்தார்கள். அவன் இவள் அன்புக்குள் பாய்ந்தவனாய் இருந்தாலும் அவனுடைய அப்பாவுக்கு பயந்தவனாய் இருந்தான், அக்காவுக்கு கல்யாணம், தம்பி படிப்பு என காரணங்கள் அதிகமாக அவர்கள் பிரிவும் அதிகமானது, சந்திப்புகள் குறைந்து போனது. பொசுக்கென இவள் அம்மா நோயில் படுக்க இடி விழுந்தவளாய் நொறுங்கிப்போகிறாள், மரணப்படுக்கையில் அம்மா அவளை “எல்லாம் தெரிந்த” தன் தாய்மாமனுக்கு மணமுடித்துவைத்து இறந்துபோக கண்ணீரோடு எல்லாவற்றையும் சுமந்தபடி ஊர் விட்டு வெளியேறுகிறாள். ஒரு வருடத்திற்குள் பழைய காதலை துருவியபடி அவள் கணவன் வார்த்தைகளால் சிதைக்க விவாகரத்து வாங்கிவிட்டு மீதமுள்ள வாழ்க்கையை வாட்ச்மேன் வேலைக்கு போகும் அப்பாவோடு வாழ்கிறாள், எத்தனையோ முறை அழைத்தும் இன்னும் இந்த ஊருக்கு வராமலே.

பதினாறு வயதிலேயே காதலிக்க தொடங்கி அடுத்த வருடமே கல்யாணம் பண்ணி பிறந்த குழந்தையை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு கல்லூரி போனவள், காதல் கணவனின் செயல்களால் தினமும் செத்து செத்து பிழைக்கிறாள் முட்டல் மோதல்கள் முற்றிப்போக பிறந்தவீட்டுக்கே திரும்புகிறாள். மீதமுள்ள படிப்பை அப்பா படிக்க வைக்க மீதமுள்ள கண்ணீரை அம்மா கொட்டிவிட படித்து முடித்து ஆசிரியை ஆகிறாள். பன்னிரண்டு வருட கல்லூரி பாடங்கள் சொல்லிக் கொடுக்காததை, இரண்டுவருட சொந்த வாழ்க்கை சொல்லிக்கொடுக்க சோகத்தின் சுவடுகளை புன்னகையால் துடைத்தபடி எடுத்துக்காட்டாய் தன் வாழ்க்கையை எல்லோருக்கும் பாடமாக கற்றுக்கொடுக்கிறாள் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டிருக்கிறாள்.

இதெல்லாம் நான் பார்த்து கடந்துவந்த எங்களூர் காதல் கதைகளின் ஒரு பகுதி. இதில் பெண்கள் மட்டுமே பாவமென்றோ ஆண்களெல்லாம் மோசமென்றோ கருத்து சொல்ல முன்வரவில்லை அதில் உடன்பாடுமில்லை. பதின் பருவத்திலிருந்து இப்போது வரை எத்தனையோ விதமான காதல்களைப் பார்த்து வளர்ந்தாலும் நெருக்கமான நட்பின் தோல்வியுற்ற காதல்களை மறப்பதென்பது அத்தனை சுலபமல்ல. ஆனாலும் கூட இப்போதும் அவர்களின் மனதின் பாசி படிந்த பழைய நினைவுகளில் அந்த காதலின் ஒரு இழையாவது உயிரோடிருக்குமென்பது உண்மை. எத்தனை நேரம் பேசினாலும், எத்தனை காலம் வாழ்ந்தாலும், எத்தனை பிறவிகள் எடுத்தாலும், எத்தனைதான் எழுதினாலும் “காதல்” தீராத ஒன்று என்பதும் அத்தனை உண்மையே.
வாழ்வின் அவசரத்தில் பொசுக்கென காதலிக்க முடிகிற நம்மால் அந்த வாழ்வை ஒரு சிலரைத் தவிர கடைசி வரை காதலாகவே நகர்த்த முடியவில்லையென்பது எவ்வளவு சோகம்.? இங்கே எல்லோருக்கும் ஜெயிக்க வேண்டும், உயர வேண்டுமென ஆசையிருக்கிறது ஆனால் விட்டுக்கொடுக்க வேண்டும், பிரிவு நெருங்கும் நேரத்தில் இன்னும் அதிகமாய் நேசிக்க வேண்டுமென்ற மனம் நிச்சயம் இல்லை. அதனாலேதான் இத்தனை பிரிவுகளும் இழப்புகளும்.

காதலிப்பதைவிட காதலிக்கப்படுவதில் தான் கூடுதல் அன்பிருக்கிறது. வெறுப்பதைவிட மன்னிப்பதில் தான் அதிக காதல் இருக்கிறது. ஒரே காதல் தான் எல்லோரையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இதயத்தில் தடித்திருக்கும் தழும்புகளை தடவிக்கொண்டு, நினைவுகளில் தேங்கியிருக்கும் வலிகளை சுமந்துகொண்டு வாழும் வாழ்க்கையில் எதை பெரிதாய் அனுபவித்துவிடப்போகிறோம்.? காதலர் தினத்தை மட்டுமல்ல அன்பால் நகரும் ஒவ்வொரு நொடியையும் கொண்டாடுங்கள்.

அவனையோ / அவளையோ மட்டுமல்லாமல் சக உயிரை நேசிக்கும் எல்லாவற்றுக்கும் காதலென்றே பெயர்.

#காதலர்_தின_வாழ்த்துகள்

---தனபால் பவானி
13.02.2017

















05 February 2017

பவானி ஜமக்காளங்கள்


கோவில் திருவிழாக்கள் பற்றி பெரியவர்கள் கலந்தாலோசிக்கும் பேச்சு வார்த்தைகள், திருமண வீடுகளில் தாம்பூல தட்டுகள் மாற்றும் நிகழ்வுகள், நாட்டாமைகள் அமர்ந்து தீர்ப்பு சொல்லும் ஆலமர பஞ்சாயத்துகள், பூப்பு நன்னீராட்டு விழா வளைகாப்பு விழாக்களில் தட்டுகள் நிறைந்திருக்கும் பரந்த இடம், விசேச வீடுகளில் பந்தியில் அமரும் இடமென எல்லா இடங்களையும் இன்னும் இன்னும் அழகாய் அலங்கரிக்கின்றன பவானி ஜமக்காளங்கள்.

ஜமக்காளங்கள் எங்கள் ஊரின் மிகப்பெரிய அடையாளம். எங்களூரில் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரங்களில் பல ஊர்களிலும் அதை தயாரிக்கிறார்கள். ஏறக்குறைய எல்லா தெருக்களிலும் வகை வகையான ஜமக்காளங்கள் நெய்யும் தறிப்பட்டறைகள் இருக்கும், எல்லா வீடுகளிலும் வகை வகையான ஜமக்காளங்கள் இருக்கும். ஜமக்காளம் எங்கள் அடையாளம் மட்டுமல்ல அது எங்கள் வாழ்வோடும் வாழ்வாதாரத்தோடும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வேர் மறந்த வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்புடையது.

எங்கள் ஒட்டுமொத்த வாழ்வின் முதல் பட்டதாரியாக அண்ணனை உருவாக்கியதில் இந்த ஜமக்காள நெசவுக்கு முக்கிய பங்குண்டு. அம்மா பிறந்த ஊரில் ஐந்து வயதிலேயே வேலைக்கு சேர்க்கப்பட்டவர். பதினைந்து வயதில் பவானிக்கு வந்தவர் வெவ்வேறு வேலைகள் செய்து ஜமக்காளம் நெய்வதில் நிலைத்து நின்றவர். எங்கள் சிறு வயதில் அம்மா பல்வேறு பட்டறைகளில் வேலை செய்திருக்கிறார் அதன் மூலமாகவே எங்களை பட்டதாரிகளாகவும் ஆக்கினார்.

சீனாமுதலியார் கொட்டாய் (நெசவு பட்டறை), திருவேணி கொட்டாய், பழனியம்மாள் கொட்டாய், அலமேலு கொட்டாய் , அருணகிரி குமரேசன் கொட்டாய், கந்தன்கடை, கோபால் கொட்டாய் என பல இடங்களில் வேலை செய்தவர் கடைசி எட்டு வருடங்கள் சொந்தமாக தறி போட்டு ஜமக்காள சேம்பல் தடுக்கு நெய்தார். சேம்பல் தடுக்கு, சதுரம், சர்கோடு, பந்திபாய், நடுத்தரம், கட்டில் ஜமக்காளம், ஹால் கார்பெட், பட்டு ஜமக்காளம், டபுள் ஜக்கார்டு, உல்லன் ஜமக்காளம் என விதவிதமான வகைகளில், விதவிதமான அளவுகளில் நெய்யப்படும் ஜமக்காளங்கள் எத்தனையோ வகைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

ஒருவர், இருவர் மட்டுமல்லாமல் ஹால் கார்பெட் ஜமக்காளங்களை மூன்று பேர்வரை நெய்வார்கள், களைப்பு தெரியாமல் இருக்க யாரோ ஒருத்தர் பாடும் பாடல்களுக்கு தறியில் ஓடும் நாடாக்கள் இசையமைக்கும், கூடாரங்களில் தொட்டிலில் தூங்கும் குழந்தைகளுக்கு தறிச்சத்தமே தாலாட்டு பாடும். தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்திராத அந்த காலத்தில் தார் குச்சிகள் தான் எங்களின் விளையாட்டு பொருட்களாய் இருக்கும், ஒருபுறம் நீண்டிருக்கும் பாவு சுருங்க சுருங்க மறுபுறம் கலர் கலர் நூல்களால் ஜமக்காளம் உருவாகும். மழை பெய்த ஒரு மாலை வேளையில் கூடாரத்தின் ஓடுகளில் வழிந்த துளிகளை தீண்டியபடியே சூடாய் பஜ்ஜியும் தேநீரும் உள்ளிறங்கிய நிமிடங்கள் இன்னும் பசுமையாய் இருக்கின்றன. ஆயுதபூஜைக்கு அடுக்கிவைக்கும் நாடாக்களின் நடுவே தார் குச்சியில் செய்த எங்கள் பேனாக்களும் இடம்பிடிக்கும்.

பவானியின் பெரும்பாலான குடும்பங்களின் பின்புலம் நெசவினூடே பிணைந்திருக்கும், கடந்த தலைமுறையின் கால்கள் தறியின் மிதி பலகையை மிதித்ததினால் தான் இந்த தலைமுறையின் கைகள் கணினியின் விசைப்பலகையை தட்டிக்கொண்டிருக்கின்றன. தறியடித்து நெசவு செய்த கைகள்தான் இன்று தங்கள் மகன்களையும் மகள்களையும் பேனா பிடிக்கவும் மவுஸ் பிடிக்கவும் வைத்திருக்கின்றன. கடந்த தலைமுறை அப்பா அம்மாக்கள் தினக்கூலியாய் வாங்கி வரும் சொற்ப காசுகளில் தான் பெரும்பாலான குடும்பங்களின் தேவைகள் அரைகுரையாய் தீரும்.

படிப்பின் வாசனையறியாத நெசவாளிகளும் பாட்டாளிகளும் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் வேலைக்கு அனுப்பிவைத்து விட்டனர், நெசவில் தேய்ந்த கைகளைப்போலவே உலகப்புகழ் பெற்ற ஜமக்காள தொழிலும் தேயத்தொடங்கியுள்ளது. விவசாயம் போலவே இந்த தொழிலும் நலிவை சந்திக்கிறது, தங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே இந்த தொழிலையும் அதை நம்பியிருக்கும் தொழிலாளிகளையும், பவானியின் அடையாளத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அத்தனை அவசியமே.

பிளாஸ்டிக் பாய்களின் வரவுகள் ஜமக்காளங்களை சிதைத்தபோதும் இன்னும் தயாரிக்கும் முறையாலும் தரத்தாலும் பவானி ஜமக்காளங்கள் நிலைத்து நிற்கின்றன. எத்தனை விதமான மெத்தைகளில் தூங்கி எழுந்த போதும் ஜமக்காளங்கள் கொடுத்த உறக்கத்தை எந்த மெத்தையும் கொடுப்பதில்லை. மணமக்களின் பெயர் எழுதிய ஜமக்காளங்களை மணப்பெண்களுக்கு சீதனமாகவும் கொடுக்க தவறுவதில்லை. அது எங்களுக்கான அடையாளம் மட்டுமல்ல எங்கள் ஊருக்கான பெருமையும் கூட.


டிசம்பர் மாத மின் இதழ்-8

படைப்பு குழுமம் வெளியிட்ட
டிசம்பர் மாத மின் இதழ்-8 ல்
எனது கவிதையும்.
தேர்வுக்குழுவிற்கும் 
மிக அழகாய் வடிவமைத்த 
கமல் காளிதாஸிற்கும் அன்பும் நன்றிகளும்


கடவுளுக்கு உயிர் வந்தது

உடைந்து கிடந்த 
சாக்பீஸ் துண்டுகளால் 
தெருவோரத்தில் வரையத் தொடங்குகிறான் 
அவன் ஒரு கடவுளை

கையில் கடாயுதத்தோடு 
நிற்கும் கடவுளை
கைப்பேசியில் தற்படம் எடுப்பவர்கள் 

கவனமாய் தவிர்த்து விடுகிறார்கள் ஓவியனை

வேகமாய் விரைந்து செல்பவர்கள்
வீசிவிட்டு செல்கிறார்கள்
சில சில்லறைகளை

ஒரு வழியாய் கோடுகளால்
முடிவுக்கு வந்த கடவுள்
மகிழ்ச்சியில் உதிர்க்கிறார்
பெருமூச்சொன்றை

ஓவியத்தை கடக்கும் முன்
குழந்தை ஒன்று கையெடுத்து
கும்பிட்ட போதுதான் உயிர் வந்தது
கடவுளுக்கு ...!