02 August 2016

ஆடி 18




ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்புவரை வற்றிப்போன விவசாயிகளின் வயிறுகளைப்போல வறண்டு கிடக்கும் எங்கள் ஊர் பவானி காவிரி ஆறு
பாசனத்தின் பயனாகவோ ஆடிப்பெருக்கை முன்னிட்டோ மேட்டூர் அணை திறந்த பின் கால் முளைத்த நதியென ஓடி வரும்பொழுது இருகரைகளையும் தொட்டுக்கொண்டோடும் காவிரியைக் காணவே அத்தனை அழகாய் இருக்கும்.

வறண்டு போய் வெடித்துக்கிடக்கும் மண் தாரைகள் ஓடி வரும் நதியை உறிஞ்சியபடி ஈர மணம் வீசும் அந்த வாசத்தை நுகர நுகர ஜீவன்களில் புது உயிர் சில்லிட்டபடி மனமெங்கும் கிளை பரப்பும்.

பல நாட்களுக்குப் பிறகு பாறைகளை முழுக்கி தண்ணீர் நிரம்பி ஓடும் ஆற்றுக்குள் பவானி பழைய பாலத்தில் இருந்து குதிக்கும் பலசாலிகள் பாக்கியவான்கள், வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்களை மிக எளிதாய் மிக அழகாய் வாழ்ந்துவிட்டுப்போகிறார்கள்.

இந்த பண்டிகை புதுமணத்தம்பதிகளுக்கு தனி விசேஷம் என்றாலும் விவரம் தெரியாத, நீச்சல் தெரிந்த அந்த காலகட்டத்தில் தலையிலிருந்து காது வழியாய் கடைவாயில் ஒழுகும் எண்ணெய் வழிய வழிய பவானி கூடுதுறையில் குதித்து விளையாடிய நாட்கள் இன்னும் ஈரமாகவே இருக்கிறது. தலையில் காசு வைத்து முழுகி, வேறொரு காசை தேடியெடுத்து எண்ணைப்பிசுக்கு மிதக்கும் அந்த நீரில் குளித்து மேலேறுவது என்பது சாதனைகளின் மிச்சமென மினுங்கும்.

மாலையில் கடைவீதியில் அலைமோதும் கூட்டத்தின் நடுவே நீண்டிருக்கும் கடைகளில் சாவிக்கொத்துகளும் சாவி கொடுக்கும் பொம்மைகளும் கைநீட்டி அழைக்கும்.

அன்னாசிப் பழங்களின் வாசனை மூக்கு வழியாய் நுழைந்து மூளைக்குள் ருசியேற்றும் , வட்ட வட்டமாய் வெட்டிய பழங்களின் மேல் உப்பு மிளகாய்ப்பொடிகளைத் தூவவிட்டு வாசனையால் இழுப்பார்கள்.

சிறு வயதில் பெரும்கூட்டம் கூடினால் திருவிழாதான் என நம்பிக்கொண்டிருந்த நாட்களில் எல்லாக் கூட்டங்களுமே ஏதோ ஒரு திருவிழாவை மனதுக்குள் பதியம் போட்டுவைத்துவிட்டன.

ஆடி மாதம் பிரித்துவைத்த புதுமணத் தம்பதிகள் கைகோர்த்தபடி உலாப்போகும் அந்தக் கவிதையான காட்சிகளை அடைகாத்த சிறுவயது இப்போது அழகாய் அசைபோடுகிறது.

இந்த மாதிரியான உயிரில் நிறையும் பண்டிகைகளை பெருநகரங்கள் கொண்டாடாமல் போன அல்லது கொண்டாட முடியாமல் போன இன்றைய சூழலில் மனம் எதையெல்லாம் இழக்கிறதா அதையெல்லாம் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் காலம் திரும்பக்கொடுத்து விடாது.

அருகிலிருந்து பார்க்கவோ அந்த அன்னாசிப்பழ வாசனையில் மூழ்கிப்போகவோ முடியாத வாழ்க்கையை காலம் பரிசளித்திருக்கும் வேளையில் அந்த வரம் வாங்கியபடி உள்ளூரில் இருந்து கொண்டு இந்த ஆடியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 --- தனபால் பவானி

26 July 2016

உறக்கத்தில் ஒரு வருடம்


வள்ளுவன் எழுதிய குறள்களை 
வான்கடந்து அந்நிய காதுகளுக்குள் 
ஊற்றியது உங்கள் குரல் ...!

யாரும் சொல்லாத உயரத்தை 
கைநீட்டித் தொட கனவுகள் 
விதைத்தது உங்கள் விரல் ...!

மழுங்கிய மூளை மடிப்புகளை 
அறிவுக்குச்சியால் திருகி 
திருத்தி அமைத்தவர் நீங்கள் ...!

புத்தகங்கள் சொல்லித்தராத 
அறிவியலை அன்பால் அழகாய் 
கற்றுக்கொடுத்தவர் நீங்கள் ...!

உங்களை விதைத்த மண்ணில் 
இன்னும் இன்னும் மிச்சமிருக்கிறது 
எங்கள் எல்லோருக்குமான கனவுகள் ...!

இன்று 
உங்கள் நினைவு தினமல்ல
நீண்ட உறக்கத்தில் ஒரு வருடம் 
முடிந்திருக்கிறது ...!

நீங்கள் இன்னும் வாழ்கிறீர்கள் 
இரவுகளில் மூடும் 
எங்கள் எல்லா கண்களிலும் 
பகல்களில் திறக்கப்படும் 
உங்கள் எல்லா சிலைகளிலும் ...!!!



14 July 2016

சில ரகசியங்கள்





யாருக்கும்
சொல்லிவிடக்கூடாதெனவோ
தெரிந்துவிடக்கூடாதெனவோ
எல்லோருக்குள்ளும் ஒளிந்து கிடக்கின்றன
சில ரகசியங்கள்

வாய்வரை வந்துவிட்டு
உதடுகளை உச்சரிக்க விடாமல்
உள்சென்று ஒடிந்து விழுந்து விடுகின்றன
சில ரகசியங்கள்

காக்கப்படுமென
நம்பியதை உடைத்து
காற்றில் மிதந்து வந்து
நம் காதுக்குள்ளே நுழைகின்றன
நாமே சொன்ன
சில ரகசியங்கள்

தொடுதிரையில்
வார்த்தைகளைக் கோர்த்து
கவிதையெனவோ கட்டுரையெனவோ
தலைப்புகளைத் தாங்கி வருகின்றன
சில ரகசியங்கள்

யாருக்குமே சொல்லாமல்
நிழலுக்கும் தெரியாமல்
எரியூட்டப்பட்ட உடலோடு
சாம்பலாகிப் போயிருக்கின்றன
சில ரகசியங்கள் ...!



09 July 2016

உள்ளத்தனைய உடல்

#உள்ளத்தனைய உடல்
#21DaysChallenge
#Completed

இந்த குழுவில் இணைவதற்கு முன்னால் நானும் சோம்பேறிதான்
ஆனாலும் எப்போதாவது நண்பர்கள் கிடைத்தால் உடற்பயற்சி செய்வதுண்டு,  துணைக்கு யாருமில்லையென்றாலோ தூக்கம் என்னை எழ விடவில்லையென்றாலோ பெங்களூர் குளிருக்கு கதகதப்பாய்  போர்வைக்குள் புதைந்துவிடுவதுண்டு.

எதேச்சையாய் இந்த குழுவில் இணைந்து ஒரு ஆர்வத்தில் முதல் நாளே ஓவராக ஓடிவிட்டேன்.  நீண்ட நாள் இடைவெளியோ அல்லது திடீரென அதிகமாய் உடலுக்கு வேலை கொடுத்ததாலோ காய்ச்சல் வந்து மூன்று நாளாய் பெரும் அவஸ்தை.  இனி இதை முயற்சிக்க வேண்டாமெனவும் குழுவிலிருந்து வெளியேறி விடலாமெனவும் தோன்றியது. அதே சமயம் இன்னொரு முறை முயற்சித்துதான் பார்ப்போமே என ஏதோ ஒரு உள் மனம் சொல்ல மீண்டும் தொடங்கினேன் .

முதலில் எடுத்ததும் ஓடாமல் மெதுவாய் நடைப்பயிற்சியில் தொடங்கி 3km நடந்து பின் ஒவ்வொருநாளும் தூரத்தை அதிகப்படுத்தி வேகமாய் நடந்து மெதுவாய் ஓடி உடலை ஒரு புதிய பழக்கத்துக்கு கொண்டு வந்தேன்.
தினமும் எதாவது ஒரு வகையில் என் பயிற்சியை தொடர்ந்தேன்

பக்கத்திலிருக்கும் கடைக்கு கூட பைக் எடுத்துக்கொண்டு போகும் நான் இப்போதெல்லாம் 7 அல்லது 8 KM தூரமானாலும் சிரமமில்லாமல் யார் துணையுமில்லாமல் நடக்க முடியுமென நம்புகிறேன். பவானியிலிருந்து சித்தோடு-ஈரோடு வரைகூட  நடந்து போக முடியும்.

இந்த சவாலை நான்  பெங்களூரில்  தொடங்கியபோது வெளியூர் பயணம் , சுற்றுலா திட்டம் , சொந்த ஊர் பயணம் என பல இடஞ்சல்கள் வந்தன , அதையெல்லாம் சமாளித்து  போகும் இடங்களிலெல்லாம் பயிற்சியை எதோ ஒருவகையில் தொடர்ந்தேன்.  நடக்க, ஓட முடியாத போது சைக்கிள், வெளியூர் போனால் நடைபயிற்சி தடைபடும்  நேரங்களில் நிறுத்தத்திற்கு 5km முன்னாடியே இறங்கி நடப்பது , மழை காரணமாக வெளியே போக முடியாத தருணங்களில் ஜிம்மில் அல்லது தங்கியிருந்த அறைக்குள் பயிற்சி செய்வதென நான் தோற்கப்போகும் தருணங்களில் எல்லாம் என்னை நானே வென்றெடுத்தேன் .

ஒவ்வொரு முறையும் என் தூரத்தையும் என் நேரத்தையும் அதிகமாக்கி என்னால் முடிந்தவரை இந்த 21 நாட்களாய் மிகச்சரியாக  பயன்படுத்தினேன் . இந்த 21 நாட்களில் நான் இழந்தவையென  பார்த்தால் ..
இடையும்-எடையும் அலுப்பும்-கொழுப்பும் உணவும்-வியர்வையும் துக்கமும்-தூக்கமும்

கிடைத்தவையெனப் பார்த்தால்
அன்பும் நட்பும்
உந்துதலும் பாராட்டுக்களும்
அறிவுரைகளும் ஆலோசனைகளும்
வாழ்த்துக்களும் வரவேற்புகளும்
முயற்சிகளும் வெற்றிகளும்
என இன்னும் இன்னும் நிறைய.

வழக்கமாய் அலுவலகம் விட்டு வந்தவுடன் கதவைத் தாழிட்டு கைப்பேசியோடு கடினமாய் கடக்கும்  என் சாயங்கால நேரங்கள் இந்த நாட்களில் எத்தனையோ புது உறவுகளை புது இடங்களை புது வ(லி)ழிகளை புது நம்பிக்கைகளை புது வெற்றிகளைக் கொடுத்திருக்கிறது.  இதெல்லாம் இந்தக் குழுவிலுள்ள ஒவ்வொருவராலுமே சாத்தியம் .

இதை இன்னும் இன்னும் தொடரனும் இன்னும் பல தடைகளை இன்னும் பல இடங்களைக் கடந்து பயணிக்கணும் ... பயணிப்பேன்.

என் சின்னச் சின்னப் பதிவுகளுக்கும் லைக் போட்டு என்னை ஊக்கப்படுத்தி என்னை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் இதயம் நிரம்பிய நன்றிகள்.

குறிப்பாக குருநாதர் ஷான் கருப்பசாமி
அவர்களுக்கும் , ஈரோடு கதிர் அண்ணன் அவர்களுக்கும் குறையாத நன்றிகள் .

---தனபால் பவானி
#பெங்களூரிலிருந்து

சிறகைப் பறக்கவிடு

உன் மீதான வெறுப்பு
இன்னும் கூட கூடியிருக்கலாம்
இல்லையெனினும் குறையாமல்
பார்த்துக்கொள்கிறேன்

நினைவுகளில்
அலைந்து கொண்டிருக்கும்
நிறைவேறாத ஆசைகளைக் கூட்டிவந்து
தீயிட்டுக் கொளுத்துகிறேன்

கடந்தகால பரண்களின்மேல்
மடித்து வைத்திருக்கும்
நம் நாட்களின் மீதுபடிந்த தூசிகளை
தவறியும் தட்டுவதில்லை

சுவாசப்பையின் பள்ளத்தாக்கிலிருந்து
சுத்தமாய் துடைத்தெறிந்த உன் வாசனையை
மீண்டும் நிரப்ப முயற்சிப்பதில்லை

கனவுகளில் தோன்றி மறையும்
உன் முக பிம்பத்தை உடைக்க மனமில்லை
தடைகளில்லை உன் திசையில் பயணி
தேடல்களுண்டு என் சிறகைப் பறக்கவிடு

வேண்டாமென
விலகிச்செல்லும் உறவுகளை
என்ன செய்வது
மறப்பதையும் மன்னிப்பதையும் தவிர